அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தை(த் துணை)க் கொண்டு.1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
- பி’ஸ்மில்லாஹ் என்னும் சொல்லுக்கு “அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு” என்று நேர் பொருள் சொல்லலாம்: விளக்கமாக, “அல்லாஹ்வின் துணையை ஆதாரமாக வைத்துக்கொண்டு” என்றும் விரித்துரைக்கலாம். பே’ என்னும் அரப் ஓரெழுத்துச் சொல்லுக்கு நேர்பொருள், “கொண்டு” என்றிருப்பினும், பின்னே சூழ்நிலைக்கு ஏற்ப இதை “மீது” என்றும் நாம் வழங்கி யிருக்கிறோம். “இறைவனது திருநாமத்தைத் துணையாய் நாடியவாறே நான் இதை ஓதத் தொடங்குகிறேன்,”என்னும் பரவலான கருத்து பி’ஸ்மில்லாஹ் என்னும் தொடரில் பொதிந்து கிடப்பதால்தான் ஒவ்வொரு முஸ்லிமும் எந்த வேலையைத் தொடங்கும்பொழுதும் இதை உச்சரிக்கிறார். “பி’ஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீம்” என்னும் காப்புவசனத்தின் வியாக்கியானம், “அருளாளனும் அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தின் துணையை நான் நாடிக் கொண்டு இதைத் தொடங்குகிறேன்,” என்பதாகும்.
இறைவனின் மூன்று பெயர்களாகிய அல்லாஹ், ற’ஹ்மான், ற’ஹீம் என்பன இத் தொடரில் வருகின்றன. இவற்றுள் இடுகுறிப் பெயராகிய அல்லாஹ் என்னும் அழகிய திருநாமத்துக்கு, தானே தோன்றிய சுயம்புவாய், சகலவகைச் சம்பூரணங்களையும் தன்னகத்தே நிரப்பமா யுடையவனாய், சுத்தசைதன்ய மென்னும் பரிசுத்த நிரப்பமான ஞானமுடைய நித்தனாய், (என்றென்றும் தரித்து நிலையாய் நிற்கும் பரம்பொருளாய்), நோயற்ற நிராமயனாய், எவ்விதக் குறைவுமற்ற பூரணனாய், களங்கமே சிறிதுமில்லா நிரஞ்சனனாய் நிற்கும் ஒப்பேனும் உவமையேனு மில்லாத ஏக பராபரப் பெரும் பொருள் என்று மிக விரிவாக வெல்லாம் வியாக்கியானம் வரைகிறார்கள் ஞானமேதைகள். சத்வநிர்க்குண பரப்பிரம்மத்துக்கு– (‘தாத்துக்கு) உரிய இடுகுறிப் பெயர் அல்லாஹ். எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கும் தன்மை “சர்வவியாபித்துவம்” என்று அழைக்கப் படுகிறது. இந்தத் தன்மை வெளியிலிருந்து வந்து அல்லாஹ்வுக்குள் புகுந்துகொள்ள வில்லை; ஆனால், அவனுக் குள்ளேயே அது தோன்றி, அவனை விட்டுப் பிரிக்க முடியாதிருக்கும் தானான நிலையாகு மென்று ஞானவான்கள் நவில்கின்றனர். “அல்லாஹ்” என்பது, “அல் இலாஹ்” என்பதன் திரிபென்று வேறு ஒரு சாரார் கூறுவது தவறாகும். ஏனென்றால், அல்லாஹ் என்பதும், அல் இலாஹ் என்பதும் இரு வெவ்வேறு சொற்களாகும். மேலும், அல்லாஹ் என்னும் பதத்திலுள்ள அல் என்பதைத் தனியே பிரித்து, ஓர் அடைமொழியாக ஒதுக்க முடியாது. என்னெனின், அல்லாஹ் என்னும் சொல்லே ஒரு முழுமையான தனிப் பெயராக இருக்கிறது. இச் சொல் ஆதியந்தம் இல்லாத அந்த ஏக பராபரனுக்கு மட்டுமே சுயமாகவும் சொந்தமாகவும் இடுகுறிப் பெயராக வழங்கப்பட்டு வருகிறதே யல்லாமல், உலகில் வேறெந்தப் பொருளுக்கும் எந்தக் காலத்திலும் எங்குமே வழங்கப்பட்டதில்லை. பலதெய்வ வழிபாட்டில் முழுக்க முழுக்க ஊறிப் போய்க் கிடந்த அந்தகார அரபிகள் எண்ணிலடங்காத விக்கிரஹங்களை–(படிமங்களை) வைத்துப் பூஜை நைவேத்தியம் செய்துவந்த காலத்தில் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு பெயரைச் சூட்டினார்கள். ஆனால், அவர்கள் என்றைக்குமே எந்த ஒரு சாமியின் உருவத்துக்குமே “அல்லாஹ்” என்னும் பெயரைச் சூட்டியதே கிடையாது. இஸ்லாத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அல்லாஹ் என்னும் அழகிய திருநாமம் சுத்த சத்திய ஏகபராபர தாத் தாகிய அந்த ஏக இறைவ னொருவனுக்கு மட்டுமே சிறப்புப் பெயராக–இடுகுறிப் பெயராக–விளங்கி வருகிற தென்பதை மறவாதீர்கள். அல்லாஹ் என்னும் அரப் சொல்லுக்கு நேர் பொருள் வழங்கக் கூடிய வேறொரு சொல் மற்றெம் மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழிலும் அல்லாஹ்வை ‘அல்லாஹ்’ என்று மட்டுமே குறிப்பிட முடியும்.
இறைவனின் மற்றிரு நாமங்களாகிய அர்ற’ஹ்மான்–(கிருபாநிதி) அர்ற’ஹீம்–(கருணாகரன்) என்னும் இரு காரணப் பெயர்களும் ற’ஹ்மத் என்னும் மூலத்திலிருந்து தோன்றியவை யாகும். றஹ்மத் தென்றால், அருளும் அன்பும் கலந்த இரக்கத்தன்மை என்று தாற்பரியம் கொள்ளும். இறைவன் தன்னுடைய அடியார்களிடம் காண்பிக்கும் அளவற்ற அபிமானமே றஹ்மத் தாகும். அர்றஹ்மான், அர்றஹீம் என்பனவற்றிலுள்ள சுட்டடைச் சொல்லாகிய ”அல்” என்பதை நீக்கி, றஹ்மான் றஹீம், என்று பிரித்து விளக்கங் காண்போம்: அதிகமான றஹ்மத்தைச் சொரிபவன் றஹ்மான். “கரை கடந்து கருணையை வரம்பிலாது சொரிபவன்” என்னும் தாற்பரியம் இதில் பொதிந்திருக்கிறது. இச்சொல் அரப் இலக்கண ‘பஃ’லான் என்னும் வாய்பாட்டின்படி பிறந்துள்ளது. ஆனால், றஹீம் என்னும் சொல் ‘பஈ’ல் என்னும் வாய்பாட்டின்படி பிறந்து, “அடிக்கடி அதிகமாகத் திருப்பித்திருப்பிச் சொரிதல்” என்ற கருத்தை வெளியிடுகிறது. சுருங்கச் சொல்லின், றஹ்மான் வரையறாது நிரம்பவும் அருள் சொரிபவன்; றஹீம் அந்த அருளைத் திரும்பத் திரும்ப அன்புடன் வழங்குபவன் என்று ஒருவாறு குறிப்பிடலாம். வாய்ப்பாட்டிலக்கணம் அவ்வாறா யிருப்பினும், றஹ்மானும் றஹீமும் ஒரே மூலமாகிய றஹ்மத்தி லிருந்தே தோன்றியுள்ளன என்பதை என்றும் மறக்க லாகாது. நபிகள் திலகம் அவர்களே வழங்கியுள்ள இது சம்பந்தமான வியாக்கியானத்தில், “அர்றஹ்மான் என்னும் பெயர், இக் குவலயத்தைச் சிருஷ்டிக்கும் விஷயத்தில் மஹா கிருபையையும் தயையையும் பெருக்கிக் காட்டக்கூடிய அருளாளனைக் குறிக்கும்; அர்றஹீம் என்னும் பெயர், இனி வரவிருக்கும் மறுமையில் மிக்க கருணையையும் இரக்கத்தையும் அதிகம் காட்டக்கூடிய அன்புடையவனைக் குறிக்கும்,” என்று விளக்கம் தந்திருப்பதாக ப’ஹ்ருல் மு’ஹீத் சான்று பகர்கிறது. எதைப் பெற்றுக் கொள்ள அடியானுக்கு ஒருவித அருகதையும் இல்லையோ அதை அவனுக்கு வழங்குகிறானே, அவனே அர் றஹ்மான். எதைப் பெற்றுக் கொள்ள ஓர் அடியான் அருகதையுள்ளவனா யிருக்கிறானோ, அவனுக்கு அதை அதிகமாக வழங்குகிறானே, அவனே அர் றஹீம். யாதொரு தொடர்புமில்லாத நிலையிலே இறைவனின் உள்ளத்துள் சுயமே சுரப்பது றஹ்மானுக்குரிய இலட்சணம்; ஆனால், றஹீமுக்குரிய இலட்சணமோ, அடியாருடைய நற்செய்கையின் நிமித்தமாக அவர்மீது அன்புடன் தயை சொரிகிற கரிசனத்தைக் குறிப்பிடுகிறது. றஹ்மா னளித்த றஹ்மத்தைப் பெற்ற மானிடன் தனது ரக்ஷகன்மீது பக்தியைக் காண்பித்தால், அவன் றஹீமாகத் தன் றஹ்மத்தைப் பெருக்கிவிடுகிறான். எனவே, றஹ்மான் முஸ்லிம் முஸ்லிமல்லாதார் ஆகிய யாவர்மீதும் சொரிகிற அருளையும், றஹீம் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிற அன்பையும் குறிக்கின்றமையால், இறைவன் இம்மையின் றஹ்மானாகவும் மறுமையின் றஹீமாகவும் இருந்து வருகிறான் என்றும் நபிகள் திலகம் (சல்) நவின்றருளி யுள்ளார்கள். என்ன இருந்தாலும், அர் றஹ்மான், அர் றஹீம் என்னும் அரபுச் சொற்களின் முழுக் கருத்தையும் உள்ளடக்கித் தமிழில் ஒருசொல் கொண்டு வெளியிடல் முடியாது. ↩︎
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License