4. (ஏ நபீ!) இன்னம், அன்னவர்கள் நும்பால் அருளப்பட்டதன் மீதும், நுமக்கு முன்னே அருளப்பட்டதன் மீதும்1 ஈமான் கொள்பவர்கள்; (இன்னம்) இறுதி (வாழ்க்கை)யின் மீதும்2 அன்னவர்கள் உறுதி பூணுகிறார்கள்.

وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ

5. இவர்களே தங்கள் ரக்ஷகன்பாலிருந்து வந்துள்ள நேர் வழியிலே இருக்கிறார்கள்; இவர்களேதாம் ஜெயசீலர்களும்3 ஆவார்கள்.

أُو۟لَـٰٓئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

6. நிச்சயமாக, நிராகரித்து நிற்பவர்கள், – அன்னவர்களை (ஏ நபீ!) நீர் அச்சமூட்டி எச்சரித்த போதினும், அல்லது நீர் அவர்களை எச்சரியாது விட்ட போதினும், அஃது (இரண்டும்) அவர்களுக்குச் சரி(சரி)யாயிருக்கும் காரணத்தால் – அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.4

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

7. அல்லாஹ் அன்னவர்களுடைய இருதயங்கள் மீதும் அவர்களுடைய செவி(ப் புலன்)மீதும் முத்திரை யிட்டும் விட்டான். இன்னம், அன்னவர்களின் நேத்திரங்கள் மீதும் திரையொன்று ஏற்பட்டிருக்கிறது; (ஆகவே) அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰٓ أَبْصَـٰرِهِمْ غِشَـٰوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ


  1. இஸ்லாத்தின் மூலாதாரக் கொள்கையில் நான்காவதாக விளங்குவது, ஒருவன் இந்த வேதத்தையும் இதைக் கொணர்ந்த திரு நபியையும் மட்டும் நம்பிவிடுவது போதாது; ஆனால், இதற்கு முன் வந்த சகல வேதங்களையும், அவற்றை வஹீவாயிலாய்ப் பெற்றுப் புவியிடை விட்டுச்சென்ற அத்தனை நபிமார்களையும் (10:47) நன்னம்பிக்கையுடன் (ஈமானாக) ஏற்றுக்கொள்வது அவசியம் என்பதாகும். இவ்வாறு அத்தியாவசியமாக ஈமான் கொள்வதன் விளக்கம் அ. கு. 141-இல் தரப்பட்டிருக்கிறது. உலகில் நிலவும் வேறெந்த மதமும் தனது கோட்பாட்டை இத்துணைப் பரவலாக விரித்துரைத்து, அம்மதத்தைச் சார்ந்தவர் மற்றெல்லா மதத் தீர்க்கதரிசிகளையும்–(நபிமாரையும்) மற்றெல்லா வேதங்களையும்–(கித்தாபுகளையும்) மெய்ந்நம்பிக்கையுடன் அவசியம் ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தவே கிடையாது. இஸ்லாம் முழு அகிலத்துக்கும் அருளப்பட்டுள்ள சரியான நேரிய சன்மார்க்கமாகையால், இஃது ஏனை நபிகள் மீதும் வேதங்கள் மீதும் ஈமான் கொள்வது அவசியமென்று வலியுறுத்துகிறது. 35:24 ஆயத் அச்சமூட்டி எச்சரிப்பவர் தோன்றாத ஜாதியினரே எவருமில்லையென்று நவில்வதாலும், 4:164ம், 40:78ம் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், பெயர் குறிப்பிடப்படாதிருக்கும் நபிமார்கள்–(தூதர்கள்) இவ் அவனியில் முஹம்மத் (சல்) தோன்று முன்னே அவதரித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதாலும், நாம் அனைத்து ஜாதியாரின் அத்தனை நபிமார்மீதும், அவர்கள் பெற்றுத் தந்த வேதங்கள் மீதும் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும். ஆனாலும், குர்ஆனுக்கு முன்னே தோன்றிய எந்த ஒரு வேதமும் அப்பட்டமான முறையில், மனித சேஷ்டையுடன் கூடிய கலப்படமும் விஷமத்தனமும் புகுத்தப்படாமல் காப்பாற்றப்படவில்லையாகையால் அந்தத் திரிபுண்டுகிடக்கும் வேதங்களின்மீது நாம் (செயல்புரிய)நம்பிக்கைவைக்க வேண்டுமென்ப தன்று கருத்து; ஆனால், அவை அப்பட்டமாயிருந்தன. நபிமார்களால் வஹீ மூலம் இறக்கித் தரப்பட்டன, அவர்களனை வருமே இறைவன் அனுப்பிய தூதர்கள் என்பதை யெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் மனம் வாக்குக் காயத்தால் ஏற்கக் கட்டுப்பட்டிருக்கின்றார். ‘இறைவெனொருவன் இருக்கிறான்’ என்பது அவனனுப்பும் வஹீயின் வாயிலாகத்தான் அறியப் படுகிறது. இவ்வாறாய அறிவிப்பு இப்பாருலக மக்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டுள்ள தென்பதுதான் குர்ஆனின் கூற்று. இத்துணைப் பரந்த விரிவான கோட்பாடுடைய மார்க்கமாக இஸ்லாம் விளங்குவதால்தான் இதன் பெருமை மற்றெம் மதத்தினும் தலை சிறந்து உயர்ந்தோங்கி நிற்கிறது. மேலும், இதற்குமுன் தோன்றிய நபிமார்களும், அவர்கள் கொணர்ந்த வேதங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டுமே சொந்தமாவர். இஸ்லாமோ எல்லாக் காலத்துக்கும் அனைத்து உலகுக்கும் பொதுவானது. எனவே, நிரப்பமான இது, தாற்காலிகமாய்த் தோன்றிய பழையனவற்றின் மீது, அவையனைத்தும் இறையருளிய வேதங்களேயென ஈமான் கொள்ளுமாறு ஏவுகிறது. ↩︎
  2. ஐந்தாவது மூலக்கொள்கை மரணத்துக்குப் பின் ஒவ்வோர் ஆன்மாவும் மறுவுலக வாழ்க்கைக்கு உட்பட்டே தீரும் என்னும் மெய்ந் நம்பிக்கையாகும். மனிதன் கண்மூடிச் செத்துப்போய்விட்டால், அத்துடன் அனைத்தும் முற்றுப்பெற்று விட்டதாகக் கூறுவோர் சிலருண்டு இவ்அவனியில். இவ்வாறே, செத்த பிணத்துக்குள்ளே அதுவரை ஊசலாடிக் கொண்டிருந்த உயிர் அந்தச் சடலத்தைவிட்டுத் தாவி மற்றொரு சரீரத்துள் புகுந்து கொள்வதாக வாதிடுவோர் பலருண்டு; இதற்கு இறைவன் சான்று ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாம் இயம்புவது என்னவென்றால், மனிதன் அவனவனும் தன் தன் மண்ணுலக வாழ்க்கையில் புரிந்த அத்தனை செயல்களுக்கும் தான் தானே உத்தரவாதியா யிருப்பதால், அவன் புரிந்த அத்தனை செயல்களுக்கும் ஏற்றதான நற்கூலியையோ அன்றித் தண்டனையையோ மறுவுலகில் இறுதித் தீர்ப்பு நாளன்று (1:3) பெற்றுத்தான் தீருவான் என்பதாகும் (34:3). அரசாங்கம் கிரிமினல் சட்டத்தை இயற்றுகிறது. இன்னகுற்றம் புரிந்தால் இத்தகைய தண்டனை விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. எனவே, அந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட பிரஜையாயிருப்பவன் தண்டனைக்கஞ்சி குற்றமிழைக்காமல், தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். மீறிக் குற்றம்புரிந்து விடுவானானால், அவன் பிடித்துத் தண்டிக்கப்படுகிறான். மனிதனியற்றிக்கொள்ளும் சட்டத்துக்கே இந் நியதியென்றால், இறைவனளித்த சட்டத்துக்கு மாறுசெய்பவன் எப்படித் தப்பமுடியும்? எனவே, இவ்வுலகில் புரியும் சகல நடக்கைகளின் பலாபலன்களுக்கேற்ப அவ்வுலகினில் சரியானகூலி கிடைக்குமென்பதை ஒருவன் மனமார ஏற்றுத்தான் தீரவேண்டும். மறுவுலக வாழ்க்கை உண்டென்பது பகுத்தறிவுக்குப் பொருந்தியதே; அல்லாஹ்வே இதை உறுதிப்படுத்துகிறான். இம் மெய்ந்நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவன் நன்மையான செயல்களை ஏற்றும் தின்மையான செயல்களை விலக்கியும் நடக்கமுடியும். தன் நடக்கைகளுக்குத் தானே ஜவாப்தாரி என்பதை மனிதன் உணரச் சரியான கொறடா இறுதிநாள் மீது உறுதி வைப்பதேதான். எவனொருவன் ஒவ்வொரு வினாடியும் தன் அகக்கண்ணெதிரே இறுதிநாளை நிறுத்திக் கொள்கிறானோ. அவன் மறந்தும் தின்மை புரியான்; இறைவனுக்கு மாறு நினையான். அல்ஆகிரத் தென்றால், இறுதித் தீர்ப்பு நாள் தான் என்று அடுத்துவரும் எட்டாவது ஆயத்தும், குர்ஆன் நெடுகப் பல ஆயாத்களும் திட்டவட்டமாய் விளக்கி விட்டிருக்க, “மிர்’ஜாயிகள்” என்னும் ஒரு கூட்டத்தினர் தங்கள் முரட்டுத் தனமான விடாப்பிடியை வலியத் துருத்துவதற்காக, “அல் ஆகிரத் தென்றால், இத் திருமறைக்குப் பின்னால் வரும் வஹீ அல்லது தூதுச்செய்தி” என்று விபரீதமாக அனர்த்தம் கற்பித்து, கண்கட்டு வேலைசெய்து. திரித்துரைப்பதைச் செவியேற்காது ஒதுக்கித் தள்ளுவதன்றி வேறென் செய்வது? (ஆயத்தின் கடைப்பகுதிக்கு முன் அரைப் புள்ளி அடையாளம் இடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதற்கேற்பப் பொருள் கொள்ளுங்கள்.) குர்ஆன் இறுதியான சட்டதிட்ட மடங்கிய வேதம்; அந்தச் சட்டங்களுக்குப் பங்கம் விளைத்தால் இறுதித் தீர்ப்பு நாளில் தக்க தண்டனை கிடைக்கும்; சட்டங்களை ஏற்று நடந்தால் தக்க பரிசு கிடைக்கும் என்பதுதான் பொருள். இதையே உறுதியாகக் கடைப்பிடிப்போமாக. இப்படிப்பட்ட இறுதித்தீர்ப்பு நாளின் பேரெஜமானன்–(ஏகாதிபதி) எப்படிப்பட்டவன் என்பதை முன் அ. கு. 5-இல் காண்க. இவ்வுலகில் ஒருவன் செய்யும் காரியங்களின் பலா பலனை அவன் மறுஜன்மம் எடுத்தே அனுபவிக்க வேண்டுமென ஹிந்து நண்பர்கள் நம்புகிறார்கள். இஃது அவர்களின் சொந்த அபிப்பிராயம். குர்ஆன் மஜீத் கூறும் மறுவுலக சித்தாந்தம் இறைவனால் வஹீயின் வாயிலாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ↩︎
  3. பின்வரும் 31:5ம் பார்க்க. மத நம்பிக்கை மூன்று, அனுஷ்டானங்கள் இரண்டு, ஆகிய இவ் ஐந்தையும் ஏற்று நடப்பவரே நேர்வழியில் இருப்பவராவார். தங்களைத் தகுதியுடையவர்களாகச் செய்து கொண்டமையால், அன்னவர்கள் ஜெயசீலர்களாகத் திகழ்வார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். எனவேதான். 23-ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப ஆயத்தே மூமின்கள் நிச்சயமாக ஜெயசீலர்களாகி விட்டார்க ளென்று உறுதிப்படுத்துகிறது. நபிபிரானின் தோழர்களாகிய சஹாபாக்கள் கண்ணுக்கு மெய்யான தங்கள் நடவடிக்கைகளின் மூலம் இந்தத் திருவாக்கியங்களின் உண்மையினை அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இறுதியுலக வாழ்க்கையிலும் ஜெயசீலர்களாகவே திகழ்வார்கள் இவர்கள். ↩︎
  4. இந்த ஆயத்தில் ஓர் ‘இடைப் பிறவரல்’ இருப்பதைக் கவனித்துப் பொருள் கொள்ளவேண்டும். மேற்போக்காய் நுனிப்புல் மேய்ந்தால், விபரீத மாற்றுப் பொருள் ஏற்பட்டு விடும். ஸவா’உன் அ’லைஹிம் அ’அன்’தர்த்தஹும் அம்லம் துன்’திர்ஹும் என்னும் தொடரே முற்சொன்ன இடைப் பிறவரலாகும். இவ்வாறு இடைப்பிறவரலாகக் கொள்ளாவிடில், “(ஏ நபியே!) நிச்சயமாக, நிராகரித்து விட்டவர்கள், நீர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாலும் செய்யாவிட்டாலும், இரண்டும் ஒன்றேதானாகையால், அவர்கள் ஒரு காலம் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்,” என்னும் முரணான கருத்தே பிறக்கும். ஈமானை நிராகரிப்பவன் கடைசிவரை நிராகரிப்பாளனாகவே விளங்குவான் என்பதோ, ஒருமுறை ஈமான் கொள்ளாதவன் பிறகெப்பொழுதுமே ஈமான் கொள்ள மாட்டான், அவன் என்றைக்குமே சன்மார்க்கத்தின் பக்கல் முகம் திரும்பவே மாட்டான் என்பதோ அன்று அக்கூற்று. ஆனால், அவனவனும் தன் தன் சொந்த அறிவைச் செலவிடுவதில் உரிமையான ஜவாப்தாரித்தனத்தைப் பெற்றிருக்கிறான் என்று சற்றுமுன்னே இறைவன் விளக்கியிருக்கும் விளக்கத்தைக் கொண்டு கணிக்குமிடத்து, காபிராயிருப்பவன் (சத்தியத்தை நிராகரிப்பவன்) தனது மனமாட்டுத் தனத்தைத் தானே உறுதிப்படுத்திக் கொள்கிறா னாகையால், அவ்வாறு அவன் அப்பொல்லாங்கைக் களைந்து கொள்கிற வரையில் நபிபிரானின் எச்சரிக்கை அவனுக்கேதும் நற்பயன் நல்காது என்பதே கருத்து. அம் மகான் இஸ்லாமிய பிரசாரம் புரிகிற காலத்தில் மக்கத்துக் காபிர்கள் அத்தனைபேருமே ஈமான் கொள்ளாமற் போகவில்லை. எவரெவர் தத்தம் மனத்தைச் செலுத்தி மாசு மறு அகற்றிக்கொண்டனரோ. அவரவரும் முஸ்லிமாகிவிட்டனர். அபூ ஜஹ்ல், அபூலஹப் என்பவர்களை உள்ளிட்ட எத்தனை போக்கிரிகள் தங்கள் மனமுரட்டுத்தனத்தை விட்டுக் கொடுக்கவில்லையோ, அத்தனை பேரும் இறுதிவரை காபிர்களாகவே சீரழிந்து செத்தார்கள். அத்தகையோருக்கு நபிபிரான் (சல்) எச்சரிக்கை செய்தும் பயனில்லை, செய்யாமலிருந்தும் ஒன்றுமில்லை என்பதே இத்திருவாக்கியத்தின் பொழிப்பாகும். எத்தனை நன்மைகளை உபதேசித்தாலும் கன்னெஞ்சக் காபிர்களின் உள்ளத்துள் கொஞ்சமும் அவை பதியமாட்டா என்பதைப் பின்வரும் 7:179 எத்துணை அழகாக விவரித்திருக்கிறது பாருங்கள். அன்றியும், நபிகணாதர் (சல்) எச்சரித்தாலும், எச்சரிக்காவிட்டாலும், வன்னெஞ்சராயுள்ள காபிர்கள் ஏன் மனம் திரும்பமாட்டார்கள் என்னும் காரணத்தை அடுத்த ஆயத் (2:7) தொகுத்துரைப்பதைப் படித்துப் பாருங்கள். காபிர்கள் பகுத்தறி வென்னும் ஞானத்தின் மூளை வாயிலயும், சத்தியத்தை நாடிச் செல்லல் என்னும் நல்வழியில் உளவாயிலையும் சாத்தித் தாழக்கோலிட்டுக் கொண்டார்கள். அவர்களே தங்கள் சொந்த நடக்கையான் தங்கள் ஜவாப்தாரித் தனத்தைக்கொண்டு கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு விட்டமையால், இறைவன் அந்த மூடப்பட்ட கபாடங்களின்மீது தன் முத்திரையை இட்டுவிட்டான்: திறந்திருந்தும், நேத்திரங்களுக்குத் திரையிட்டு மறைத்து விட்டான். அவனவன் புரியும் செயலுக்கான முடிவை அவனவனும் அவசியம் அடைந்தே தீர்வான் என்பது இறைநியதி யாகையால், இறைவனே காபிர்களைக் கண் திறக்க வொட்டாமல் செய்துவிடுகிறா னென்று வாதிப்பதோ, அவன் நாடினால் எல்லாக் காபிர்களையும் மூமின்களாக உயர்த்தி விட முடியாதா? என்று வினவுவதோ அறிவுடைமை யாகாது. அல்லாஹ் மனிதனைப் படைத்து. அவனுக்கொரு பகுத்தறிவையும் அளித்து, நல்லவழி இன்னது, தீயவழி இன்னதென்று வகுத்தும் கொடுத்திருக்கிறான். மனமுரணில்லாமல் ஒழுகிக் கொள்ள வேண்டுவது அடியான் பொறுப்பு. இன்றேல், தான் புரிந்த செயலின் விபரீத விளைவாக இதயம் “ஸீல்” இடப்பெறுகிறான்; கண்ணிருந்தும் குருடனாகி விடுகிறான்; காதிருந்தும் செவிடனாகிவிடுகிறான். அதனால், நல்வழியைப் பார்க்கும் சக்தியையுங்கூடத் தானே–(சுயமே) இழந்துவிடுகிறான். இந்த ஆயத்தை ஊன்றிப் படித்துத் தேர்ந்து தெளிந்து மெய்யை யுணர்வீர்களாக. இறைவன் எவரையும் (தானே) வழிகெடுப்ப தில்லை; அவனவனே தன்னைத் தானே கெடுத்துக் கொள்கிறான். அவ்வாறு தன்னைத் தானே கெடுத்துக் கொண்ட காரணத்தால் இவ்வுலக வாழ்வில் குர்ஆனைப் பார்க்கும் பெற்றியையும், இது போதிக்கும் ஞானத்தைச் செவியேற்கும் பாக்கியத்தையும், அதனால் இதயம் தெளிவு பெறும் வீடெனும் பேற்றையும் பெறும் அருகதையை இழந்து, மறுவுலக வாழ்வில் மகத்தான நோவினையுண்ணும் தண்டனைக்கு இலக்காகிவிடுகிறான். 7:193; 36:10ம் பார்க்க. இந்த அத்தி.யின் முதற்பிரிவாகிய ஏழு ஆயாத்களும் ஏற்போர், நிராகரிப்போர் ஆகிய இருசாராரின் குணாகுணங்களையும், அவர்கள் பெறும் பலா பலன்களையும் எத்துணை யழகாகத் திரட்டி முதற்கண் ஊட்டிவிடுகின்றன பாருங்கள்! குர்ஆனுக்கு முன்னே தோன்றியதாகக் கூறிக் கொள்ளும் வேதங்களையும், ஆகமங்களையும். புதிய, பழைய ஏற்பாடுகளையும், கீதை, உபநிஷதுகளையும் திறந்து பார்த்தால், இப்படிப்பட்ட தோற்றுவாய்–சாராம்சத் தாய்ச்சரக்கு அமைந்தே இருக்கவில்லை யென்பதைக் கண்கூடாய்க் கண்டுகொள்ளலாம். ↩︎

Image courtesy: SalatTimes.com


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment