1. அனைத்துப் புகழும் சகல லோகங்களுக்கும்1 ரக்ஷகனாய்2 விளங்கும் அல்லாஹ்வுக்கே உரியன;–

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

2. (அவன்) அருளாளன், அன்புடையோன்;

ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

3. கூலிகொடுக்கும் நாளின்3 ஏகாதிபதி.4

مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னம், உன்னையே நாங்கள் உதவி கோருகிறோம்.5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

5. எங்களை நீ நேரான பாதையில் (சீராக) நடாத்திச் செல்லக் கடவாய்;6

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

6. எவர்கள் மீது நீ அருட்கொடை சொரிந்தனையோ, அவர்களுடைய பாதையிலே;7

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

7. எவர்கள்மீது (உனது) கோபம் இறக்கப்பட்டதோ அவர்களேனும், வழிசறுகிப் போனவர்களேனும், (சென்ற பாதை) அல்ல.8

غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّنَ


  1. ஆலமீன் என்னும் சொல்லைச் “சகல லோகங்களுக்கும்” என்று மொழிபெயர்த் திருக்கிறோம். ஆ’லம்–(உலகம்) என்பது ஒருமை. “இல்ம்” என்னும் மூலத்தின் அடிப்படையில் தோன்றிய சொல் இது. அறிந்துணர்தல் இல்ம் எனப்படும். எனவே, எவனொருவன் எதன் உதவியைக் கொண்டு ஒரு பொருளை அறிகிறானோ அதற்கு ஆலம் என்று பதவுரை வழங்கப்படுகிறது. பூமி என்னும் கோளம் ஒன்றன்றி, வான வெளியில் இப்புவியினும் பெரிதான, சிறிதான எத்தனையோ கோளங்கள் சுழன்று வருகின்றன. இத்தனை கோளங்களையும், சூரியனையும், நக்ஷத்திரங்களையும் படைத்த இறைவனின் தன்மையை நாம் அவற்றை உற்றுநோக்கி அறிவதன் மூலம் உணர்கிறோம். (எனவே, இறைவனைச் சிந்திக்கக் கற்பனை உருவில் ஒரு படிமம் அவசியமில்லை.) இந்தச் சிருஷ்டிப்பொருள்களை உய்த்துணர்வதன் வாயிலாக இவற்றுக்குரிய சிருஷ்டி நாதனை நாம் அறிந்து கொள்வதால், ஆலமீன் என்பது சகல வானலோக கோளங்களையும், கோள்களையும், விண்மீன்களையும் குறிக்கிறது. எனினும், 2:47; 21:107; 45:16 முதலிய இடங்களில் வரும் “ஆலமீன்” மண்ணுலக ஜாதியார்களை மட்டுமே குறிப்பிட்டுக் காட்டும் சுருக்கப் பொருளில் (சந்தர்ப்ப நிலைக் கேற்பப்)பிரயோகமாகியிருப்பது கவனிக்கற் பாலது. ↩︎
  2. றப்’ என்னும் சொல் எத்துணை ஆழிய பொருளுள்ள தென்றும், தமிழில் இதை எப்படி ஒரு சொல் கொண்டோ அல்லது பலசொல் கொண்டோ விளக்க முடியா தென்றும் மேலே தோற்றுவாயிலேயே குறிப்பிட்டிருக்கிறோம். தாஜுல் அ’ரூஸ் அச் சொல்லின் விளக்கம் “ஒவ்வொன்றையும் ஒழுங்கு செய்து ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஏகுதற்கு வேண்டிய துணையைப் புரிவதுடன், அது சம்பூரணத்தைப் பெற்றுக்கொள்ளும் யோக்கியதாம்சத்தையும் அதற்குக் கொடுத்தருளல்” என்று கூறுகிறது. உலகமே படிப்படியாக முன்னேறும் ஒரு பரிணாமம்: மனிதனும் தாயின் கருக்குழிக்கு முன்னிருந்து மண்ணுள்ளே மீட்டும் புதைகிறவரை பற்பல பரிணாமங்களுக்கு உள்ளாகிறான். (பின்னே அ.கு. 52-இல் குறிப்பிடப்படும் டார்வின் சித்தாந்தப் ‘பரிணாமம்’ வேறு; இந்தப்பரிணாமம் வேறு. ஒன்றுடன் மற்றொன்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.) இந்தப் பரிணாம வித்தையை வினாடிக்கு வினாடி மேலோங்கி யெழுந்து வளரச் செய்பவனே றப் என்று அழைக்கப்படுகிறான். நேற்று முளையா யிருந்தது இன்று தளிராகவும் இலையாகவும் பரிணாம மடைகிற தல்லவா? அந்த முளை நேற்றே அழிந்துவிடாவாறு காப்பாற்றி, இன்று அடுத்த கட்டத்தைத் தனது வளர்ச்சியில் பெற்றுக் கொள்ளுமாறு இயற்கை விதியை இயக்குவிப்பவனே றப்! ஒவ்வொரு நிலையிலும் ஒன்றைக் காத்து, அடுத்த நிலையை எட்டுதற்குப் போதிய வல்லமையை அதற்கு அளித்து, மறு நிலையை எட்டியதும் மீட்டும் காத்துப் படிப்படியாய் உயர்த்திவிடும் அத்தனை பண்புகளையும் றப் என்னும் சொல் தன்னகத்தே அடக்கிக்கொண் டிருக்கிறது. இப்படிப்பட்ட றப் அனைத்து உலக, எல்லா ஜீவராசி களுக்குமே ரக்ஷகனாக–(றப்பாக) விளங்குவதால் தான் இவன் “றப்புல் ஆலமீன்” என்று குறிப்பிடப்படுகிறான். ஸ்தூலம் ஸூக்ஷமம் ஆகிய இரண்டு பரிணாமங்களுக்குமே இவனே காரணம். ஸ்தூலம் வளர்ச்சி யும் பரிணாமமும் அடைய உண்டியும் ஊக்கமும் அளிப்பதேபோல், ஸூக்ஷுமம் வளரவும் இவன் தனது திருவசனங்களை அளித்துவிட் டிருக்கிறான். அப்பன் என்றும் அத்தன் என்றும் பித்தன் என்றும் பேயன் என்றும் பரமன் என்றும் தேவன் என்றும் கர்த்தன் என்றும் மிகக் குறுகிய செல்லப் பெயரிட்டழைப் பதினும், ஆழமுடைத்தாத லென்னும் இலக்ஷணம் மிக்க பரந்த கருத்தைச்சொரிகின்ற “றப்பனா!”–(எங்கள் றப்பே!) என்று தொடங்கப்படும் (பின்னேவரும் பல) பிரார்த்தனைகள் எவ்வளவு பொருள் செறிந்த விளி யாக விளங்குகின்றன, பார்க்கிறீர்களா? இப்படிப்பட்ட றப் மானிடஇன வளர்ச்சிக்காகவும், பரிணாம உயர்வுக்காகவும், அகிலமெங்குமுள்ள சகல மக்களுக்காகவு மென்று பற்பல நபிமார்களை அனுப்பி வைத்தானே, அந்தச் செயலும் இவனுடைய மாட்சிமையையே மகிமைப் படுத்துகிறது. சகல ஜீவராசிகளின், சகல ககோளங்களின், சகல படைப்புக்களின் கர்த்தாவும், காப்போனும், பராமரிப்போனும், போஷித்து ரக்ஷிப்போனும், பக்குவமடையச் செய்வோனுமாகிய அவனுக்கே எல்லாப் புகழும் உரியனவாகுக என்னும் துதியைத்தான் இதன் முதல் திருவாக்கியம் சில சொற்களால் சிறப்புற விளக்கிவிட் டிருக்கிறது. ↩︎
  3. யவ்ம் என்னும் அரப் வார்த்தைக்கு எவ்வளவு பரந்த அர்த்தமிருக்கிற தென்றால், ஒரு வினாடி முதல் 50,000 ஆண்டுகள் வரையுள்ள காலத்துக்கு உட்பட்ட எந்தப் பெரும் பகுதியும், சிறு பகுதியும் “யவ்ம்” என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கே கதிரவனெழுந்து மேற்கே மறையும் வரையுள்ள பகற் பொழுதே சாதாரணமான மக்களால் “யவ்ம்” என்று குறிப்பிடப்பட்டு வருகிற தென்றாலும், இந்த அரப் சொல் ஒரு குறிப்பிட்ட கால எல்லையை மட்டும் சுட்டிக்காட்டும் சொல்லாயில்லை. 55:29 மிகக் குறுகிய காலத்தையும், 70:4 மிகப் பரந்த காலத்தையும் “யவ்ம்” என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடுவதைக் கவனிக்க. எனவே, எவ்வளவு நீண்ட, எவ்வளவு குறுகிய காலமும் யவ்ம் தான்! ஒவ்வோர் ஆன்மாவும் தான் இம் மண்ணுலகில் ஒவ்வொரு வினாடியும் என்ன நன்மை தின்மையைப் புரிந்தது என்பதை நிர்ணயிக்க வென்று பின்னே வரவிருக்கும் “இறுதித் தீர்ப்புநாள்”–(யவ்முல் :கியாம்) மட்டுமே இங்கே சுட்டிக்காட்டப் படவில்லை. அவனவனும் ஒவ்வொரு வினாடியும் புரிகின்ற எல்லாக் காரியங்களுக்கான பலாபலன்களும் உடனுக்குடனே நேர்முகமாகவும் மறைமுகமாகவும் விளைந்து விடுகின்றன. இந்த நியதியும் கண்ணுக்கு மெய்யாக நிகழ்வதால் பல சமயங்களில் நற்கூலியோ கெட்ட தண்டனையோ கைம்மேல் கிட்டிவிடுகிறது. எனினும், வேறுசில செயல்களின் கூலி இறுதித் தீர்ப்புநாளில் வழங்கப்பட வென்று காத்திருக்கிறது. இறைவனின் இயற்கைச் சட்டம் ஒவ்வொரு வினாடியும் செயலாற்றுவதுடன், இறுதித் தீர்ப்பு நாளளவும் அதற்குப் பின்னருங்கூட நில்லாமலே இயங்கி வருமென்பது கருத்து. எனவே, புரிகிற பாவங்களை யெல்லாம் புரிந்து விட்டு, மாளுந் தறுவாயில் அல்லது அதற்குச் சற்றுமுன்னே மட்டும் “நல்ல பிள்ளை”யாகி விட்டால் போதும் என்பதன்று இஸ்லாம். ஒவ்வொரு வினாடியும்–(ஏனென்றால், மரணம் எப்பொழுது வருமென்பது எவரு மறியா இரகசியம்) நல்லதான சற்கருமங்களைப் புரிந்து, அவற்றுக்கான நற்கூலியைப் பெற ஒவ்வொருவனும் ஒழுகிக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் போதிக்கும் ஞானமாகும்.
    தீ’ன் என்னும் சொல் உருவகமாக ஷரீஅ’த் என்று பொருள் பயக்கும் “மார்க்கம்” என்பதைக் குறிக்கு மென்றாலும், இதன் அசல் அர்த்தம் “பதிலுக்கு பதில் செய்தல்” என்று மு’ப்ரதாத் றாகிப்’ வரைகிறது. இறைவனின் நியாய பிரமாணத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதே தீன் ஆகும். ↩︎
  4. மாலிக் என்பது வேறு. மலிக் என்பது வேறு. அரப் மொழியில் ‘மலிக்’ என்றால் மன்னன் (அல்லது சக்கரவர்த்தி) என்று அர்த்தம். ஆனால், ‘மாலிக்’ என்றால் மன்னர்கள், சக்கரவர்த்திகள் போன்ற அழியும் உடல் படைக்கப்பெற்ற வேந்தர்களுக்கும் மேலெல்லாம் மாபெரியவனாகிய பேரதிபதி, ஏகாதிபதி, மஹோன்னத சாசுவதப் பெரும்பேரதிகாரி என்றே பொருள்படும். இரு சொற்களின் மூலமும் ஒன்றென் றாலும், மலிக் சின்னாட்களுக்குத்தான் பிரஜைகட்கு மட்டும் தலைவனாக விளங்குபவன் என்னும் கருத்தையும், மாலிக் என்றென்றும் நிரந்தரமாய் எல்லா ஜீவன்களும், அத்தனை மலிக்குகளும் உட்பட்ட அனைவர்க்கும் பேரதிகாரியாக நிரந்தரமாய் விளங்குபவன் என்னும் கருத்தையும் வெளிப்படுத்துகின்றன. மண்ணுலக மலிக்கென்னும் வேந்தன் தனது குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட ஞானத்தாலும், தண்ணளியாலும் சிறிதளவே தன்னுடைய குடிமக்களுக்குக் கருணையை, நீதியை, நேர்மையை வழங்குவான்; ஆனால், சர்வலோக சரண்ய மாலிக் என்னும் ஏகாதிபதியின் தன்மை எப்படிப்பட்ட தென்பதைத்தான் முன்னே வந்துள்ள சொற்களான அல்லாஹ், றஹ்மான், றஹீம், றப் என்பன விளக்கிவிட் டிருக்கின்றனவே! எனவே, “மாலி(க்)கி யவ்மித்’ தீ’ன்” என்னும் சொற்றொடர், “சம்மானமும் சிக்ஷையும் விதிக்கப்பட வேண்டிய நேரத்தின் ஏகாதிபதி’ என்று கருத்துக் கொள்கிறது. அருளும் அன்பும் வழங்கிவிடும் ரக்ஷகனே மாலிக்காகவும் இருப்பதால், அவனிடம் மேலும் தகுந்த நற்கூலியை இறுதித் தீர்ப்பு நாளிலே பெற்றுக்கொள்ளத் தக்க யோக்கியதாம்சங்க ளுடையவனாகத் தன்னைச் செய்துகொள்ள வேண்டுவது ஒவ்வோர் அடியானுக்கும் இன்றியமையாக் கடமை யாகும். இன்றேல், மாறான கூலியே கிடைக்கும். றஹ்மான் றஹீமாக உங்களுக்கு அன்பெனும் மழையைப் பொழியவேண்டு மானால், அவன் உங்களுக் களித்துள்ள சத்திய இஸ்லாத்தை ஏற்று நியமமாய் ஒழுகிக் கொள்ளுங்கள் என்பது உள்ளுறை கருத்தாகும். சத்தியத்தை நிராகரிப்போர் றஹ்மானின் றஹ்மத்தை இவ்வுலகில் பெற்றுக் கொள்வதாகத் தோன்றிடினும், மாலிக்காகிய அவன் றஹீமாக அன்பு சுரக்கும் தருணத்தை இறுதி நாளில் பெற்றுக் கொள்ளத் தவறிவிடுவர் என்பது உறுதி. எனவே, நிலையிலாதன ஆகிய பொன்னும் பொருளும் மண்ணும் மணியும் பெறுவதன்று மானிட லட்சியம்; இவை கானல்நீருக்கு ஒப்பானவை; இவையே இவனைத் தீச் செயல்களிலும் பாபங்களிலும் இறக்கிவிட்டுப் பாதகக் கூலியாகிய நரக நெருப்பை அடையச் செய்திடும். ஆனால், றஹ்மான் அருளிய சுத்த சத்தியமே நித்தியமானது. இதையே ஏற்று நடக்க ஒவ்வொருவரும் முற்படல் வேண்டும். எனவே, பொல்லாதவனா யிருந்து அநித்திய சுகத்துக்காக இழிவாக ஒழுகும் புல்லனா யிராமல், நல்லவனா யிலங்கி நித்திய சுகத்துக்காக உன்னதமாக நடக்கும் உத்தமனா யிருப்போர்க்கு இந்த மாலிக் எப்படிப்பட்ட நித்தியசுக சாசுவதப் பேரானந்தப் பெருவாரிதியை வழங்கப் போதுமானவன் என்பதைப் பின்னே வரவிருக்கும் திருவாக்கியங்கள் விளக்கிவைக்கப் போகின்றன. அவற்றுக்கு இஃது ஒரு முன்னோடி யாகும். ↩︎
  5. முஸ்லிம்களின் ஏகதெய்வ வழிபாட்டுக்கு முதல் எடுத்துக் காட்டு இதுவாகும். றப்பும், றஹ்மானும், றஹீமும், மாலிக்குமாகிய அவன் ஒருவனையே–(ஏனென்றால் அவனுக்கிணை வேறொருவன், வேறொன்றில்லை; அவனை யொப்பவனோமிக்கவனோ, அல்லது அவனுடன் கூட்டாளியாயிருப்பவனோ வேறொருவன் எவனுமே அறவே கிடையாதாகையால்) வணங்கி வழிபட்டுக் குறையிரந்து உதவிதேட வேண்டியவனா யிருக்கிறான் ஒரு முஸ்லிம். இத் திருவாக்கியத்தி லுள்ள இரு தேற்றேகாரத்தின் கருத்தை ஓர்க. விக்கினம் வராமல் காப்பவ னொருவன், படைத்தவ னொருவன், பாதுகாப்பவ னொருவன், மாளச் செய்பவ னொருவன், மீளச் செய்பவ னொருவன் என்னும் மதக்கோட்பா டுடையவர்கள் இந்தத் திருவாக்கியத்தின் கருத்தை நுகர முடியாமையால்தான் திணறுகிறார்கள், தங்கள் “தெய்வவழிபாட்டுத்” தோத்திரங்களுக்குப்பொருத்த மான பொருளுரைக்க இயலாமல். ஆனால், திரிமூர்த்தி வணக்கக்காரர்களும், திரியேகத்துவக்காரர்களும், 1+1+ 1 = 1 என்று குதாக்கம் புரிவதையே இந்தத் திருவாக்கியம் கண்டித்து, 1 = 1 என்று உறுதிப்படுத்துகிறது இங்கே. மேலும் மழையைத் தரும் கடவுள், காற்று நிலவச் செய்யும் கடவுள், நெருப்பு மூளச் செய்யும் கடவுள், ஒளிவீசும் சூரியக் கடவுள், இன்னம் கல்வி செல்வம் முதலியன அளிக்கும் பெண் தெய்வங்கள் ஆதிய ஆதிய ஒவ்வொன்றையும் அதுவே கடவுளெனக் கொண்டு கையேந்தி, “நீயே உதவிபுரிவாய்!” என்று பூஜிப்பவரின் கண்களைத் திறக்கச் செய்வது இந்தத் திருவாக்கியம். ↩︎
  6. “நேரான வழியைக் காண்பிப்பாயாக!” என்பதற்கும், “நேரான வழியில் (இறுதிவரையில் ஒழுங்காக) நடாத்தி வைப்பாயாக!” என்பதற்கும் நிரம்ப வேற்றுமை யிருக்கிறது. இறைவன் நபிமார்களையும் வேதங்களையும் பன்னெடுங்காலமாக மண்ணிடை யனுப்பி, மனித குலத்துக்கு எப்பொழுதோ நல்வழி காட்டி விட்டான்; ஆனால் மனிதர்களே அந் நல்வழியில் நடக்கத் தவறிவிட்டார்கள். இவ்வாறு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடாமல் இறுதிமட்டும் அந்த நல்வழியில் –நேர்வழியில்– மானிடன் உறுதியாய் நடந்து செல்ல இறைவன் துணை நல்க வேண்டும் என்பது கருத்து. ஹிதாயத் என்னும் சொல் நேர்வழிகாட்டி என்று பொருள்படும். இறைவனின் ஹிதாயத் இறுதிவரை உடனிருக்குமாக! ↩︎
  7. எவரெவர்மீது இறைவனின் அருட்கொடை நிரம்ப வழங்கப்பட் டுள்ளது என்பதை இனி வரும் 4:69 திருவாக்கியத்தில் (அ.கு.627) காண்க. நபிமார்கள், சித்தீக்குகள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் ஆகிய அந்நால்வகை நல்லடியார்களுக்கு முரிய கூட்டரவினாலே கிடைக்கக்கூடிய சகலவிதப் பேறுகளையும் ஒவ்வொரு முஸ்லிமும் விழைந்து அடையத்தக்க யோக்கியதையைப் பெற்றுள்ளார். பெரிய மஹான்கள் விஷயம் வேறு, சாதாரண மனிதனது விஷயம் வேறு என்று பிரித்துக் காட்டி, உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டிய அவசியமே இல்லாது, அந்த நால்வகை இனத்தினரும் பெற்ற அருட்கொடையை –(இன்ஆ’மை) அவனவனும் பிரார்த்தித்து, ஒழுக்கங் குன்றாது ஒழுகி அவர்களுடைய கூட்டரவில் கலந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பது போதனை. ↩︎
  8. குர்ஆனும், இறுதி நபியும் மண்ணுலகில் தோன்றுவதற்கு முன் இறைவனின் வெறுப்புக்கு இலக்காகியவர் பலர். அவர்கள் நேரான பாதையைத் துறந்து சீரழிந்து அவனுடைய கோபத்துக்கும் சாபத் துக்கும் இரையாகிப் போயினார்கள். அத்தகைய கதியை முஸ்லிம்கள் எட்டி விடாவாறு அவனே காப்பானாக! என்னும் இத்திருவாக்கியததை நன்கு நோட்டமிடுங்கள். ஒருவன் தன்னை முஸ்லிம் என்று அழைத்துக் கொள்வதால் மட்டும் இறைவனது கருணைக்கு இலக்காகிவிட முடியாது. ஆனால், அவனுடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் இரையாகா முறையிலே ஒவ்வொருவனும் ஒழுக வேண்டும். பின்னே வரும் 2:61,90; 3:111; 5:60 முதலிய ஆயாக்கள் எஹூதிகள் –(யூதர்கள்) இறைவனின் கோபத்துக்கு இரையானவர்கள் என்று துலக்கிவிட்டிருக்கின்றன. 5:77 நசாராக்கள் –(கிறிஸ்தவர்கள்) வழிசறுகிப் போனவர்கள் என்று குறிப்பிடுகிறது. “கோபத்துக்கு இரையானவர்” என்பதற்கு நபிகள் திலகமும் இங்ஙனமே வியாக்கியானம் வழங்கியிருப்பதாகத் திர்மிதீ அறைகிறது. யூதர்கள் இறைவனனுப்பிய ஒரு தூதரை –(ஈ’ஸா நபியை)ப் பொய்ய ரென்று தூற்றி, அவனுடைய கோபத்தைப் பெற்றார்கள்; கிறிஸ்தவர்கள் அதே தூதரைத் “தேவகுமார”னாக்கி, தேவனாயுயர்த்தி, வழிசறுகி விட்டார்கள். இவ் உதாரணங்களில் கூறப்பட்டிருப்பதேபோலெல்லாம் நாம் தவறிழைத்தோ முரட்டுத்தனமாக நடந்து கோபத்தைப் பெற்றோ கோணிவிடாமல் நேரேசெல்லும் சரியான நடுமத்திபத்தை ஒழுங்குமுறை பிறழாமல் பின்பற்ற ஹிதாயத் புரிந்து இனாம் வழங்கி நடாத்திச்செல்ல ஏக இறைவனை வழுத்தி வழிபடுவோமாக.
    மக்கள் ஒன்றுகூடித் தங்களுக் கென்று வகுத்துக்கொண்டிருக்கும் சமுதாய ஆட்சியில், என்ன என்ன தவறுகளை மனிதன் புரியக்கூடா தென்று ஒரு நியதியை வரையறுத்துக்கொண் டிருக்கிறார்கள். மீறித் தவறு செய்தால், அதன் விளைவாக என்ன தண்டனைகளை எந்த அளவுக்கு ஒருவன் பெற்றுக் கொள்வா னென்பதையும் அந்தச் சட்டதிட்டங்கள் விவரிக்கின்றன. எனவே, இவற்றுக்கு முரண்செய்து நேர்மாறாக நடப்பவன் அரசாங்கத்தின் கோபத்துக்கு இயற்கையாகவே இரையாகி விடுகிறான். உலக நியதியே இங்ஙன மிருக்கையில், அகில பிரபஞ்சத்துக்கும் ஏகாதிபதியாக இலங்குகின்ற இறைவன் வகுத்திருக்கும் சட்டங்களுக்கு மாற்றம் விளைப்பவர்கள், அவனது கோபத்துக்கு இரையாவதில் வியப்பென்ன இருக்கிறது? பின்னே வரும் சூறாக்களின் சகல திருவாக்கியங்களுமே மிகவும் துலக்கமாக இறைவனின் சட்டங்களையும் வரை துறைகளையும் விளக்கி வைக்கின்றன. இடையிடையே, இந்தச் சட்டங்களை மீறி நடந்தவர்கள் பட்ட பாட்டையும், இவற்றைக் கேலி செய்து மாறு புரிந்தவர்கள் அடைந்த கதியையும் உதாரணங்களாக இறைவன் எடுத்தியம்புவதைக் காணலாம். அறியாமையாலோ அகம்பாவத்தாலோ ஒரு மனிதன் இந்தச் சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக நடந்துவிடலாம். அப்படிப்பட்டவனும் தான் புரிந்த தவற்றை யுணர்ந்து திருந்தி, பாவ மன்னிப்புக்கோரி, இனிமேல் இவ்வாறு தவறிழைப்பதில்லை யென்று உறுதி பூண்டு, பக்தனாக ஒழுகிக் கொண்டால் அவன் நிச்சயம் கடைத்தேறுவான் என்பதற்கு நிரூபணமேதான் இந்த ஆரம்ப அத்தியாயமாகும். இறைவன் தண்டிக்கத் தவறுவதில்லை – எவரை? எவர் துரோக மிழைத்தாரோ அவரை. ஆனால், அதே சமயத்தில் அவன் வெகுமதி வழங்கத் தவறுவதில்லை –எவருக்கு? –எவர் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நியம நியதியுடன் எக்காலமும் ஒழுகிக் கொள்கிறாரோ, அவருக்கு. இறைவனுக்குரிய சாத்விகமான பண்புகள் மட்டுமே இந்த சூறாவில் றப், றஹ்மான், றஹீம், மாலிக், ஹிதாயத் அளிப்பவன், சிராத்துல் முஸ்தகீமில் நடத்திவைப்பவன் என்றெல்லாம் வழங்கப்பட் டிருப்பதையும், அவனது மற்றப் பண்புகளாகிய தண்டனை வழங்கும் பெயர்கள் இடம்பெறா திருப்பதையும் கவனியுங்கள். தண்ணளி மிக்க உன்னத தயாளனாகிய இப்படிப்பட்ட இறைவனை முறைப்படி வழுத்தி முக்தி பெறக் கற்றுக் கொடுக்கும் இந்த சூறாவின் தன்மைமையை உணர மாட்டாதவர்களே அவனுடைய கோபத்துக்கு இரையாக நேரும் என்பது கடைசி ஆயத் வழங்கும் குறிப்பாகும். இஸ்லாமிய தத்துவத்தை விளக்கப் புகுந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், “நம்பிக்கையேதும் இல்லாமல் அஞ்ஞான இருளில் பல்லாண்டுகள் சிக்கி முன்னேற வழி புலப்படாது தத்தளிக்கும் பலகோடி மக்களை ஈசுவரன் துன்புறுத்துகிறா னென்று கருதுவது அவனுடைய அன்புக்கும் கருணைக்கும் ஏற்ற தாகாது,” என்று வரைந்திருப்பது, இந்த சூறாவை அவர் நன்கு நோட்ட மிடாமையாலேதான் என்பது வெள்ளிடை விலங்கல். ↩︎

Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment