79. மன்னர் நூருத்தீனின் மரணம்
உலக ஆதாயம், தற்பெருமை, புகழ், சுயநலம் போன்ற அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, தூய நோக்கம், மக்கள் நலன், எளிமை, பிரதானமாக ஏகனின் அச்சம் கொண்டவர்கள் மட்டுமே தலை சிறந்த தலைவர்களாகின்றார்கள்; சாதிக்கின்றார்கள்; வரலாற்றில் பொன்னெழுத்துப் பக்கங்களுக்கு உரியவர் ஆகிவிடுகின்றார்கள். நூருத்தீன் மஹ்மூது ஸெங்கி அவர்களுள் ஒருவர்.
ஹி. 569 ஷவ்வால் 1 (கி.பி. 1174 மே 5), ஞாயிற்றுக்கிழமை. ஈதுல் ஃபித்ரு பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார் நூருத்தீன். விழா நிகழ்வுகளாகக் குதிரை சவாரி, அம்பு எய்தல், ஈட்டி எறிதல், போர்ப்பயிற்சி விளையாட்டுகள் களை கட்டின. மன்னர் நூருத்தீனும் அவற்றில் சுறுசுறுப்பாகப் பங்கெடுக்க, நகரில் மகிழ்ச்சிப் பெருக்கு! பின்னர் அவர் கோட்டைக்குத் திரும்பிய பின், அங்கு அனைவருக்கும் பெருநாள் விருந்து தடபுடல் பட்டது.
மறுநாள் நூருத்தீன் முக்கியஸ்தர்கள் சிலருடன் உரையாடியபடி நடந்துகொண்டிருந்த போது அவர்களுள் ஒருவர், “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அடுத்த ஆண்டு, இதே நாள் நாம் இங்கு இருப்போமா?” என்று பொத்தாம் பொதுவாக வினவினார். ஆயுளின் அநிச்சயத்தைக் குறித்து எழுந்த யதேச்சையான கேள்வி அது.
“ஓர் ஆண்டு என்பதெல்லாம் வெகு தொலைவு. அடுத்த மாதம் நாம் இருப்போமா?” அதுவே கேள்விக்குறி எனும் பொருள்பட பதிலளித்தார் நூருத்தீன்.
அந்தக் கூற்று மெய்யாகி விட்டது. இறைவிதியின்படி அது அப்படியே நடந்தது. அடுத்த ஒரு மாதம் வரைகூட நூருத்தீனின் ஆயுள் நீடிக்கவில்லை. வினவிய அந்த முக்கியஸ்தரோ ஓராண்டிற்குள் மரணமடைந்தார்.
அன்று (ஷவ்வால் 2 ) நூருத்தீன் டமாஸ்கஸ் நகருக்கு வெளியே போலோ விளையாடும்போது சுகவீனம் ஏற்பட்டு, உடனே கோட்டைக்குத் திரும்பிவிட்டார். அங்கு ஓர் அறையில் தனிமைப்படுத்திக்கொண்டார். சாதாரண தொண்டை வலி, ஓய்வெடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் மருத்துவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ஆனால் அவரைத் தொற்றியிருந்ததோ தீவிரமான தொண்டை அழற்சி நோய். தொண்டையில் புண்கள் ஏற்பட்டு, சீழ் கட்டி, தொண்டை வீங்கி சுவாசப் பிரச்சினையில் கொண்டுபோய் விட்டது. கிருமியின் தாக்கம் உடல் முழுவதும் பரவியது. அவ்விதம், நிலைமை மோசமடைந்த பிறகுதான், வரலாற்று ஆசிரியரும் நூருத்தீனின் மருத்துவருமான இப்னு அதீருக்கும் மேலும் சில மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ரதீயுத்தீன் யூஸுஃப் இப்னு ஹைதர அல்-ரஹ்பி (Radi al-Din Yusuf ibn Haydara al-Rahbi) நூருத்தீனின் மருத்துவர். பின்னர் அய்யூபிகளுக்கு மருத்துவராக இருந்தவர். திறமையானவர். அவர் அன்றைய நிகழ்வைத் தெரிவித்துள்ளார். ஸலாஹுத்தீனின் தலைமை நிர்வாகியும் வரலாற்று ஆசிரியருமான பஹாவுத்தீன் இப்னு ஷத்தாதும் அந்நிகழ்வை விவரித்து எழுதி வைத்துள்ளார்.
“நூருத்தீன் என்னையும் இதர மருத்துவர்களையும் அழைத்தார். தொண்டை அழற்சி நோயினால் தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு, அது அடைபட்டுப் போய் அவர் மிகவும் தவித்தபடி இருந்தார். டமாஸ்கஸில் ஒரு கோட்டையில் சிறியதொரு அறையில் அந்நோயின் பிடியில் அவர் படுத்திருப்பதைப் பார்த்தோம். அந்த அறை அவர் தனிமையில் தொழ ஒதுங்குமிடம். நாங்கள் அதனுள் நுழைந்தோம். அவரது நிலையைக் கண்டோம். அந்த மரணத்தறுவாயில் அவரால் நாங்கள் கேட்கும் அளவிற்குக்கூடப் பேச இயலவில்லை; நகரவும் முடியவில்லை. அந்தளவு நோயின் தாக்கம் தீவிரமாகியிருந்தது. நாங்கள் அவரிடம், ‘இந்தளவு நிலைமை மோசமாகும் வரை நீங்கள் காத்திருந்திருக்கக் கூடாது. எங்களை அழைப்பதைத் தாமதப்படுத்தி இருக்கக் கூடாது. உங்களை உடனே வெளிச்சம் நிறைந்த அறைக்கு மாற்ற வேண்டும். இவ்வகையான நோய்க்கு அது மிகவும் முக்கியம்’ என்று கூறினோம்.
நாங்கள் அவரைச் சுற்றிக் குழுமிப் பரிசோதித்தோம். (Phlebotomy) குருதி வடிப்பு மருத்துவத்தைப் பரிந்துரைத்தோம். ஆனால், அதற்கு நூருத்தீன் உடன்படவில்லை. ‘அறுபது வயதை நெருங்கியவனிடம் இரத்தத்தை உறிஞ்சாதீர்கள்’ என்று அந்த சிகிச்சையை மறுத்துவிட்டார். அவரை எதிர்த்து வற்புறுத்தும் துணிச்சல் அங்கு எங்களில் யாருக்கும் இல்லை. அதனால் வேறு சில சிகிச்சைகளை முயன்றோம். மருந்துகள் அளித்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. நிலைமை மோசமடைந்தது. நூருத்தீன் மரணமடைந்தார்! (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக, திருப்தி கொள்வானாக).”
அவ்வளவுதான். முடிந்தது. ஒரு சகாப்தம் தன் முடிவை எட்டியது. விடைபெற்றது.
ஹி.511, ஷவ்வால் 17 (கி.பி. 1117), அன்று பிறந்த நூருத்தீன் மஹ்மூது பின் ஸெங்கி, ஹி. 569 ஷவ்வால் 11 (15 மே கி.பி. 1174) புதன்கிழமையன்று மறுமையை நோக்கிப் பயணமானார்.
வீரமரணத்திற்கு ஏங்கிய நூருத்தீன் அடிக்கடி, “நான் எத்தனை முறை உயிர்தியாகி ஆக முனைந்தேன். ஆனால் அதை அடையவில்லை” என்று கூறுவது உண்டு. இமாம் அத்-தஹபீ நூருத்தீனின் மரணத்தைக் குறித்து ‘உயிர்தியாகம் அவரை அவரது படுக்கையில் எட்டியது. நூருத்தீன் ஓர் உயிர்தியாகி’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
முதலில் டமாஸ்கஸ் கோட்டையில் அந்த அறையிலேயே நூருத்தீனின் நல்லடக்கம் நடைபெற்றது. இமாம் அபூஹனீஃபாவின் வழித்துறையினருக்காகக் கல்விக்கூடம் ஒன்றைப் பழைய டமாஸ்கஸ் நகரின் மையத்தில் அவர் கட்டியிருந்தார். பின்னர் அவரது சடலம், அங்குள்ள கல்லறைக்கு மாற்றப்பட்டது.
oOo
அவரது புறத்தோற்றம் குறித்து, ‘உயரமானவர், மாநிறம், பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், கன்னங்களில் ரோமம் இருந்தது, தாடையில் தாடி இல்லை, அழகிய தோற்றம்’ என்று வர்ணித்துள்ளார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள்.
அவரது பெயர் மக்கா, மதீனா, யெமன் வரை குத்பாவில் இடம்பெற்றிருந்தது; கலீஃபா உமர் பின் அப்துல்-அஸீஸ் அவர்களின் ஆட்சிக்குப் பிறகு நூருத்தீனின் இராஜாங்கத்தில் நீதியும் நல்லாட்சியும் சிறந்தோங்கின. இவை இரண்டிற்கும் இடையில் அதைப் போன்ற வேறு ஆட்சியைக் கண்டதில்லை என்று குறிப்பிடுகின்றார் வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர். அக்கூற்று மிகையன்று.
ஒருவருக்கு நூருத்தீனுடன் ஏதோ ஒரு சொத்து பிரச்சினை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நூருத்தீனும் நீதிமன்றத்திற்குச் சென்றார். அதற்கு முன் (நீதிபதி) காழீ கமாலுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார்.
‘ஒரு வழக்கிற்காக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிறரிடம் நீங்கள் எப்படி நடப்பீர்களோ அதே விதமாக எவ்வித சலுகையும் பாரபட்சமும் இன்றி என் வழக்கிலும் செயல்படுங்கள்’.
வழக்கு விசாரணையில் நூருத்தீனின் தரப்பே நியாயம் என்று அறியப்பட்டது. ஆனால், நூருத்தீன் தமது உரிமையை வழக்குத் தொடுத்தவருக்கே அளித்துவிட்டார்.
“இதை அவர் வழக்குத் தொடுத்தபோதே கொடுத்துவிடத்தான் நினைத்தேன். ஆனால், பெருமையிலும் அகங்காரத்திலும் நீதி மன்றத்திற்கு வராமல் இருந்துவிட்டேன் என்றாகிவிடுமோ என்று எனக்குள் அச்சம் ஏற்பட்டது. ஆகவே வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்தேன்”
நூருத்தீனின் ஆட்சியில், வழக்கு விசாரணைகளில், சொந்த பந்தம், பிரபல்யமான அமீர், முஸ்லிம், யூதன் என்ற எந்தப் பாகுபாடும் முன்னுரிமையும் இருந்ததில்லை. சம நீதி பிரதானம். அவரது துலாக்கோலுக்கு அது மட்டுமே முக்கியம். ஆளுநர்களைப் பற்றிய புகார்கள் வந்தால் அவை விசாரிக்கப்படும். அநீதி களையும்படி கட்டளையிடப்படும். இணங்க மறுப்போர் பதவி நீக்கம் செய்யப்படுவர். நீதி தவறாத சிறந்த ஆட்சியாளராகவும் கடுமையான பக்திமானாகவும் திகழ்ந்த அவருக்கு அவை யாவும் வெகு இயல்பாக மதிப்பையும் மரியாதையும் ஈட்டித் தந்தன. மக்களிடம் அவருக்குப் புகழ் பெருகப் பெருக, பரங்கியர்களுக்குத் திகில் அதிகரித்தது.
இறை பக்தியும் வழிபாடும் கடமையே என்றில்லாமல் அவற்றில் உள்ளார்ந்த ஈடுபாடும் இரவில் அதிகமதிகம் உபரித் தொழுகையும் நூருத்தீனுக்கு வாடிக்கையாயின. ஏகாந்த பொழுதிற்கும் தொழுகைக்கும் அவருக்கென ஒரு தனியறை. மன்னர்களுக்கெல்லாம் பள்ளியறை பேரானந்தம் என்றால் மன்னர் நூருத்தீன் ஸெங்கிக்கோ அந்தத் தனியறையில்தான் அலாதி ஆனந்தம், ஆறுதல்.
உணவு, உடை, தனிப்பட்ட செலவினங்களுக்கு எல்லாம் அவர் தம்முடைய சொந்தப் பணத்தை மட்டுமே செலவழித்தார். போரில் வெற்றி பெற்று அவருக்கு உரிய பங்காகக் கிடைக்கும் போர் வெகுமானங்களைத் தவிர்த்து அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு செப்புக் காசைக் கூட அவர் தமக்கென எடுத்ததில்லை. அவ்விஷயத்தில் அவர் வெகு கறார். ஒருமுறை அவருடைய மனைவி பணப் பற்றாக்குறையின் கடின சூழலைக் குறித்து அவரிடம் புகார் கூறியபோது, ஹும்ஸு நகரில் தமக்குரிய மூன்று கடைகளை அவருக்கு அளித்துவிட்டார் நூருத்தீன். அதன் ஆண்டு வருமானம் இருபது தீனார். போதுமா அது? ஈடுகட்ட முடியவில்லை என்று அவருடைய மனைவி குறைபட, “இதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. என் கைவசம் உள்ள மற்றவை எல்லாம் முஸ்லிம்களின் அமானிதம். நான் அதன் பாதுகாவலன் மட்டுமே. மக்களை நான் ஏமாற்றவும் மாட்டேன். உன்னால் நரக நெருப்பில் வாடவும் மாட்டேன்” என்று பதிலளித்து விட்டார்.
அப்பழுக்கற்ற இத்தகு நேர்மையும் நன்னடத்தையும் அனைத்து மக்களையும் அவருக்குக் கட்டுப்பட வைத்தன. ஒப்பற்ற தலைவர் என்று போற்றிப் பாட வைத்தன. அவரது ஒரு பாதி மக்களைப் பிரமிக்க வைக்கும் கம்பீரமும் ஆளுமையும் என்றால் மறுபாதி அவர்களை வியப்பில் ஆழ்த்தும் அடக்கம், மென்மை. இரு வேறு பண்புகளும் சரிவிகிதத்தில் சேர்ந்திருந்த கலவை நூருத்தீன்.
அரச விவகாரங்களில் விவேகமும் தெளிவான பார்வையும் ஒரு புறம் என்றால் மறுபுறம் நபி வழி மரபைப் பின்பற்றிய முன்சென்ற சான்றோர்களின் வாழ்க்கையைக் கண்டறிந்து அதைப் பின் பற்றுவதில் அவர் வெகு தீவிரம். சிரியாவில் அச்சமயம் வாழ்ந்த மார்க்க அறிஞர்களிடமும் சான்றோர்களிடமும் அவருக்கு நெருக்கம், நேசம், நட்பு, ஏகப்பட்ட மதிப்பு, அபிமானம். அவர்களுடன் இளைப்பாறுவார். முரண்பட்டுப் பேசமாட்டார். அவர்களுக்கு ஏராளமான அன்பளிப்புகளுடன் குறையற்ற உபசாரம் நடைபெறும். அவர்களுக்கு மடல் எழுத வேண்டியிருந்தால் எழுத்தர்கள், காரியதரிசிகள் உதவியின்றித் தம் கைப்பட எழுதும் அளவிற்கு அவர்கள் மீது அவருக்கு மரியாதை. மட்டுமின்றி, அவர்களுடைய பாட வகுப்புகளிலும் மன்னர் நூருத்தீன் சிரத்தையான ஒரு மாணவர்.
இமாம் அபூஹனீஃபாவின் வழித்துறைச் சட்டங்கள் குறித்த ஞானம் அவருக்கு இருந்தது. ஆனால் அதே நேரம் அதில் கண்மூடித்தனமான வெறி எதுவும் அவருக்கு இருந்ததில்லை. ஹதீஸ்களைப் பயில்வதும் அதைப் பிறருக்குப் பயிற்றுவிப்பதும் அவருக்கு வழக்கமாக இருந்தது.
ஷரிஆவைச் சட்டமாக்கிய அவர், மார்க்கத்திற்குப் புறம்பான அநியாய, அக்கிரம வரிகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டினார். அவரிடமிருந்த அடிமைகள் பருவ வயதை எட்டியதும் விடுவிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி, அவர்களுக்கு மணமுடித்து வைக்கப்படும்; வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடும் செய்து தரப்படும். அத்தகு உன்னதப் பண்புகள்தாம் அவருக்கு ஏராள வெற்றிகள் இறைவனால் அருளப்படக் காரணமாக அமைந்தன என்று கருத்துத் தெரிவிக்கின்றார் அக்காலத்து வரலாற்று ஆசிரியர் இமாம் அபுஷமா. அவர் நூருத்தீனின் சிறப்புகளை மேலும் எழுதி வைத்துள்ளார்:
தம் வயதுக்குரிய நற்காரியங்கள் அனைத்திலும் நூருத்தீன் முன்னணி வகித்தார். கடுமையான பின்னடைவுகளையும் இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்தபோதிலும் அவர் அனைத்தையும் சீர் செய்து புனரமைத்தார். அவரது சீரிய தன்மை, துணிவு, உலகளாவிய வகையில் அவருக்கு இருந்த மரியாதை அனைத்தும் போற்றுதலுக்குரியவை. அவர் கைப்பற்றிய நாடுகளில் ஜிஹாதைத் தொடரத் தேவையான வளங்களத் திரட்டி, தமக்குப் பின் வருபவர்கள் புனிதப் போரைத் தொடர்வதை எளிதாக்கினார்.
அலெப்போவில் ஷிஆ பிரிவினர் தொழுகைக்கான பாங்கு அழைப்பில் செருகியிருந்த வாசகங்களையும் அவர்களது கொள்கைகளையும் ஒழித்து ஸன்னி முஸ்லிம் மரபுவழியை நிறுவினார். அந்நகரில் கல்லூரிகளையும் மார்க்க நெறி பரப்பும் நிறுவனங்களையும் அமைத்தார். நீதியை நிலைநாட்டினார்.
டமாஸ்கஸைக் கைப்பற்றிய பிறகு, அங்கும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினார். அரண் அமைத்தார். கல்லூரிகளையும் மஸ்ஜித்களையும் கட்டினார். சாலைகள் அமைத்தார், சந்தைகளை விரிவுபடுத்தினார். மது அருந்துபவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது.
போரில் அவரது உறுதியும் வீரமும் வில் வித்தையும் வாள்வீச்சின் வீரியமும் அவரின் தனிச் சிறப்பு. ஹதீஸ்களைப் பயில்வதில் பெருமகிழ்வு அடைந்தார். நபியவர்களின் மரபுகளைப் பின்பற்றினார். அறச் செயல்களில் மிகைத்த உறுதியினால், அந்தப்புர சொகுசகளைத் தவிர்த்துக்கொண்டார். மிதமான செலவாளி. மிகவும் எளிமையானவர்.
போரில் நேரடியாகக் களமிறங்கும் அவரிடம் அம்புகளும் அம்பறாத்தூணியும் இருக்கும். மன்னர் அவர் நேரடியாகச் சண்டையிட வேண்டுமா, அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ற கவலையில் அவரிடம், “அல்லாஹ்வுக்காகச் சொல்கிறேன். உங்களையும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஆபத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீங்கள் போரில் அடிபட்டால், அதன் பின் எதிரிகளின் வாளுக்கு இரையாகாத முஸ்லிம் இருக்க முடியாது” என்ற அச்சமும் கவலையும் தெரிவிக்கப்பட்ட போது, அவர் அளித்த சுருக்கமான பதிலில் கடலளவு ஆழம்.
“இவ்விதம் தெரிவிக்கப்பட யார் இந்த மஹ்மூது? எனக்கு முன், இந்நிலங்களையும் இஸ்லாத்தையும் காத்தவன் யார்? அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை”.
அவரது உளத் தூய்மையை, வீரத்தை அறிய இது போதாது?
oOo
சிலுவைப்படையினரின் ஆக்கிரமிப்பிற்குப் பின், சிதறுண்டு கிடந்த சிரியாவில் அலெப்போவையும் டமாஸ்கஸையும் ஒன்றிணைத்த முதல் முஸ்லிம் தலைவர் என்ற பெருமை நூருத்தீனுக்குத்தான் வாய்த்தது. நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டிருந்த பகுதிகளில் ஒழுங்கான, நிலையான மத்திய அரசாங்க நிர்வாகத்தை அமைத்ததும் ஜிஹாது முழக்கத்தை உயிர்ப்பித்து அதற்கான ராஜபாட்டையை உருவாக்கியதும் அவருடைய புத்தி சாதுர்யம். ஒன்றிணைந்த சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ், ஹும்ஸு, ஹமா, அலெப்போ, ஷைஸர், பால்பெக் ஆகியனவற்றின் கோட்டைகளையும் அரண் சுவர்களையும் பலப்படுத்தினார் நூருத்தீன். மோஸுலில் நூரி மஸ்ஜிதும் சிரியாவில் ஷாஃபி, ஹனஃபி கல்விக் கூடங்களும் எழுந்தன. சூஃபிக்களுக்கான பயிற்சிக் கூடங்களும் மருத்துவமனைகளும் நெடுஞ்சாலைகளில் வணிகர்கள் தங்குவதற்குரிய சத்திரங்களும் கட்டப்பட்டன. அவற்றுக்கெல்லாம் நிதி ஆதாரமாகப் பெரும் கொடைகளையும் அள்ளி வழங்கினார் நூருத்தீன்.
நாற்புறமும் பரவிய அவரது அதிகாரத்திற்கு பக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாவின் அங்கீகாரமும் ஆதரவும் மறுப்பின்றி, தடையின்றிக் கிடைத்தன. சிலுவைப்படையினரின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்றே மக்கள் நினைத்தனர். அந்த நிலையில் திடீரென நிகழ்ந்த நூருத்தீனின் மரணம் முஸ்லிம்களை ஆற்றவியலா சோகத்தில் ஆழ்த்தியது. இஸ்லாத்திற்கு ஈடற்ற சோதனை என்று அவர்களைக் கவலையில் மூழ்கடித்தது.
நூருத்தீன் மட்டும் அச்சமயத்தில் மரணமடையாது அவரது ஆயுள் நீடித்து இருந்திருக்குமேயானால், ஜெருசல மீட்பு வரலாறு அவருடையதாகி இருக்கும்; ஸலாஹுத்தீன் அவ்வரலாற்று நூலில் அடிக்குறிப்பாகி இருப்பார் என்கிறார் சமகால வரலாற்று ஆசிரியர் ஏ. ஆர். அஸ்ஸாம் (A.R. Azzam). எகிப்தும் சிரியாவும் நூருத்தீனுடைய ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டன. மோஸுலோ அவருடைய சகோதரர் வசம். ஆகவே அடுத்து சந்தேகமேயின்றி நூருத்தீனின் முழுக் கவனமும் ஜெருசலம் நோக்கித்தான் திரும்பியிருக்கும் என்று தமது கருத்துக்குத் தர்க்க ரீதியான விளக்கமும் அளிக்கின்றார் அவர்.
ஆனால், அனைத்தையும் அறிந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டமும் திட்டமும் வேறுவிதமாக அமைந்திருந்தன. அவனது விதியை யார் வெல்ல முடியும்? மாற்றியமைக்க முடியும்?
நூருத்தீன் மரணமடைந்த செய்தி சுல்தான் ஸலாஹுத்தீனை அடைந்தது. சிரியாவில் ஏற்பட்டுவிட்ட அரசியல் வெற்றிடத்தையும் அதனால் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் அவர் மனம் கணக்கிட்டது. அதைச் சரி செய்ய அவர் எகிப்தை விட்டுக் கிளம்பி அங்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு முன் முக்கியமான பிரச்சினை ஒன்று எகிப்தைச் சூழ்ந்தது. அது, சிசுலியின் மன்னர் இரண்டாம் வில்லியம் தலைமையில் அலெக்ஸாந்திரியாவைத் தாக்க வந்துகொண்டிருந்த கப்பற்படை. அந்தப் போருக்கு தயாரானார் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.
அது-
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 20 அக்டோபர் 2024 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License