நைல் துளிகள் : துளி 2

by நூருத்தீன்

தி காலத்தில் எகிப்தின் தலைநகரம் மெம்ஃபிஸ் (Memphis). பின்னர் பைஸாந்தியர்களுக்கும் ஸஸானியர்களுக்கும் (பாரசீகர்கள்) மத்தியதரைக் கடல் நகரான அலெக்ஸாந்திரியா தலைநகரம். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து, முஸ்லிம்கள் வசமானபோது, துறைமுக நகரான அலெக்ஸாந்திரியா பாதுகாப்பானதன்று என்று ஃபுஸ்தத் (Fustat) தலைநகர் ஆனது. ஃபாத்திமீக்கள் எகிப்தில் நுழைந்த பின், ஃபுஸ்தத்துக்கு அண்மையில் புதிதாக கெய்ரோ நகரை உருவாக்கியதும், அது தலைநகராகி நிலைத்துவிட்டது. இன்று பரந்து விரிவடைந்துவிட்ட கெய்ரோவுக்குள் பழைய ஃபுஸ்தத் நகரும் உள்ளடங்கியுள்ளது.

இந்த ஃபுஸ்தத் நகரில் தலை நிமிர்ந்து நிற்கிறது அம்ரு இப்னுல் ஆஸ் பள்ளிவாசல். நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றிய பின்னர், கி.பி. 641ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்கு முஸ்லிம் படைகளின் தளபதியாகத் திகழ்ந்த தோழர் அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தின் எகிப்தில் இதுதான் முதல் பள்ளிவாசல். கி,பி. 1169ஆம் ஆண்டு, சிலுவைப்படையினரிடமிருந்து தற்காக்க ஃபாத்திமீ வஸீர் ஃபுஸ்தத் நகரைத் தீயிட்டுக் கொளுத்தியபோது, இந்தப் பள்ளிவாசலும் அதற்கு இரையானது. ஸலாஹுத்தீன் அய்யூபி எகிப்தின் ஆட்சியை ஃபாத்திமீக்களிடமிருந்து மீட்டு, சுல்தான் ஆன பின் 1179ஆம் ஆண்டு இந்தப் பள்ளிவாசலைப் புனரமைத்தார், அதற்குப் பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் பல புனரமைப்புகளுக்கு உட்பட்டு, அதன் பழைய வடிவம் மாறிப்போயிருந்தாலும் இன்றும் அதன் தோற்றம் கம்பீரம்.

இந்தப் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழும் வாய்ப்புக் கிடைத்தது. மனத்தினுள் ஓடிய வரலாற்றுப் பின்னணியும் அதன் தோற்றமும் எனக்குள் ஏற்படுத்திய உவகையும் பிரமிப்பும் அலாதி.

எகிப்தில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற மற்றொரு பள்ளிவாசல் ஜாமிஉல்-அஸ்ஹர். எகிப்தினுள் கி.பி. 969ஆம் ஆண்டு புகுந்த ஃபாத்திமீக்கள் கெய்ரோவில் 972ஆம் ஆண்டு நிர்மாணித்த பள்ளிவாசல் அது. அதனுடன் இணைக்கப்பட்ட அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் இன்றும் நிலைத்துள்ள பழமையான இஸ்லாமியக் கல்வி மையம் ஆகும். ஷிஆ இஸ்மாயிலீக்களின் நிறுவனமாக உருவான அல்-அஸ்ஹர், சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ஃபாத்திமீ வழிகேட்டிலிருந்து எகிப்தை மீட்ட பின், ஸன்னி முஸ்லிம்களிடம் மீண்டது.

இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குடன் திகழும் அல்-அஸ்ஹர் எகிப்தின் பெருமை மிகு அடையாளம். இங்கு எங்களுக்கு லுஹரும் அஸரும் தொழும் வாய்ப்பு அமைந்தது. அந்தப் பகல் நேரத்திலும், மிகவும் வயது முதிர்ந்த ஷேக் ஒருவரின் பாட வகுப்பு நடைபெற்றபடி இருந்தது. குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் பெண்களும் தனித்தனிக் குழுவாக அமர்ந்து கவனமுடன் கேட்டுப் பயின்று கொண்டிருந்தார்கள்.

இஸ்லாமியச் சட்டவியல் வழித்துறை நான்கில் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் வழித்துறையும் ஒன்று. கி.பி. 813ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணம் சென்ற இமாம், அங்கு அம்ரு இப்னுல் ஆஸ் பள்ளிவாசலில்தான் பாடம் நடத்தினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மரணமடைந்தார். அல்-ஃகராஃபா பகுதியில் நல்லடக்கமும் செய்யப்பட்டார். அல்-ஃகராஃபா என்பது முஸ்லிம்களின் கல்லறைகள் வரிசையாக நிரம்பியுள்ள பகுதி. இதைப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாகவும் உலகப் பாரம்பரியத் தலமாகவும் அறிவித்துள்ளது யுனெஸ்கோ.

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி தமது ஆட்சிக்காலத்தில் இமாம் ஷாஃபியின் கல்லறையை ஒட்டி மதரஸா ஒன்றை நிறுவினார். பின்னர் அவருடைய தம்பி ஸைஃபுத்தீன் அபூபக்ருவின் மகன் சுல்தான் அல்-காமில் தம் ஆட்சியின் போது இமாம் ஷாஃபியின் கல்லறை அருகே தம் தாயாருக்குக் கல்லறை கட்டி முழுப் பகுதியையும் உள்ளடக்கிக் கட்டடமும் குவிமாடமும் கட்டிவிட்டார். அல்-காமில் இறந்த பிறகு அவரது கல்லறையும் அங்கு அமைந்து, மூன்றும் அருகருகே ஒரே கூரையின் கீழ் உள்ளன. காண வருபவர்களுக்கு அக்கட்டடத்தைத் திறந்து காட்டிவிட்டு, பிறகு மூடிவிடுகின்றார்கள்.

இமாம் ஷாஃபியின் கல்லறையைச் சுற்றி அமைத்துள்ள கூண்டுக்கு உள்ளே பணமும் காகிதங்களும் (விண்ணப்பம் போலும்) இறைந்து கிடந்தன. அந்தக் கட்டடத்திற்கு வெளியே இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் கூற்று அழுத்தந் திருத்தமாக நிறுவப்பட்டிருந்தது:

நான் நல்லொழுக்கமுள்ள மேன்மக்களை மிகவும் நேசிக்கின்றேன்.
அவர்களுள் நான் ஒருவனல்லன்.
இறைவனிடம் எனக்காக அவர்கள் பரிந்துரைப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு எனக்குண்டு!

இங்கு வருபவர்களில் பலர் அதைக் கண்டுகொள்வதில்லை போலும்.

இமாம் ஷாஃபியின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள சுல்தான் அல்-காமில் ஸலாஹுத்தீனின் தம்பி மகன் என்று பார்த்தோமில்லையா? அவருடைய மகன் நஜ்முத்தீன் அஸ்-ஸாலிஹ் எகிப்தின் சுல்தானாக இருந்தபோது, பிரான்சின் ஒன்பதாம் லூயீயின் தலைமையில் ஏழாவது சிலுவையுத்தம் நிகழ்த்தக் கிளம்பி வந்தது சிலுவைப்படை. துறைமுக நகரமான தமீதாவையும் கைப்பற்றிவிட்டது. கெய்ரோவை நோக்கிச் சிலுவைப்படை முன்னேறி வர, சுல்தான் நஜ்முத்தீனோ திடீரெனத் தலைநகரில் மரணமடைந்துவிட்டார்.

அவருடைய மனைவி ஷஜருத்துர் சமயோசிதமாக, கணவரின் மரணத்தை மறைத்து, அவரை நைல் நதித் தீவிலுள்ள கூடாரத்தில் கிடத்தி, நோயுற்றிருப்பதாகப் படையினரிடம் கூறி, மம்லூக் தளபதியின் உதவியுடன் சிலுவைப்படையை அந்த ஏழாம் சிலுவை யுத்தத்தில் வென்றார்.

அவர் பிரான்சின் ஒன்பதாம் லூயீயைச் சிறைபிடித்தது; பின்னர் எகிப்தின் சுல்தானாவாக உயர்ந்தது; அவருடன் அய்யூபிகளின் ஆட்சி முடிவுக்கு வந்து, மம்லூக் ஆட்சி உருவானது ஆகியன எகிப்திய வரலாற்றில் பெரியதொரு திருப்புமுனை.

ஷஜருத்துர்ரைப் பற்றிய தகவல்கள் சுற்றுலா வழிகாட்டி முஸ்தஃபாவுக்கு மிகவும் புதிதாக இருந்தன. எகிப்திய சுற்றுலா மையம் அந்த வரலாறுகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டது என்று அறிந்துகொண்டேன். பிறகு ஷஜருத்துர்ரின் கல்லறையைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றார் முஸ்தஃபா.

அல்-அஷ்ராஃப் எனப்படும் அவ்வீதியில் முக்கியமானவர்களின் கல்லறைகள் நிரம்பியிருந்தன. முஹம்மது இப்னு ஸீரின் (ரஹ்) அவர்களின் கல்லறையிலிருந்து சில அடிகள் தள்ளி, எவ்விதக் குறிப்பும் தகவலும் இன்றி இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் பத்திரமாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது சுல்தானா ஷஜருத்துர்ரின் கல்லறை. ஆனால் அந்த அல்-அஷ்ராஃப் வீதியில் உள்ள வரைபடத்தில் மட்டும் அவருக்கும் ஓர் இடம்!

நூருத்தீன்

Related Articles

Leave a Comment