அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கின்றது. 11 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் அருகே கொழுந்துவிட்டு எரியும் கோரத் தீயின் இப்போதைய பாதிப்பு நிலவரம் இது.
ஸான் ஃபெனாண்டோ (San Fernando) நகருக்கு வடக்கே பரவியுள்ள ஹர்ஸ்ட் தீ (Hurst Fire) 771 ஏக்கரை அழித்துள்ளது. அதற்கு வட கிழக்கே ஆக்டான் (Acton) பகுதியில் 394 ஏக்கரையும் கலபாசஸ் (Calabasas) பகுதியில் தொடங்கியுள்ள தீ மூன்று மணி நேரத்தில் 960 ஏக்கரையும் பாசடீனா (Pasadena) அருகே, நகரின் கிழக்குப் பகுதியில் பரவியுள்ள தீ 13,690 ஏக்கரையும் எரித்துள்ளது. ஆகப் பெரிய அழிவு பாலிசேட்ஸ் தீ (Palisades). பசிபிக் பாலிசேட்ஸ் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ள இந்தத் தீயின் கோரத்தாண்டவத்தில் எரிந்த நிலம் 19,978 ஏக்கர்.
பசிபிக் பாலிசேட்ஸ் அழகான மலைப்பகுதிகள், கட்டடங்கள், தோட்டங்கள் கொண்ட பிரமாதமான கிராமம். புகழ்பெற்ற பிரபலங்களின் வீடுகள் அங்கு உள்ளன. ம்ஹும்! இருந்தன. மின்னல் வேகத்தில் பரவிய தீயில் அனைத்தும் முற்றிலுமாக அழிந்து சுடுகாடாக மாறி, சாம்பல் மேடுகள் குவிந்து, வெண்புகை மட்டும் வானில். இங்கு 5,300 கட்டடங்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன என்று இதுவரை கணக்கிட்டிருக்கிறார்கள்.
நடிகரும் எழுத்தாளருமான ஸ்டீவ் குட்டன்பெர்க் (Steve Guttenberg), வியாழக்கிழமை காலை பசிபிக் பாலிசேட்ஸில் இருந்த தமது குடியிருப்புப் பகுதியைத் தமது வாகனத்தில் சென்று பார்த்தவர், இதை உலகப் போரின் அழிவுடன் ஒப்பிட்டுள்ளார்.
“இது பெர்லினைப் போல் — அல்லது இரண்டாம் உலகப் போரின் சில இடத்தைப் போல் உள்ளது. அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. படு பயங்கரம்” என்று தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸ் அதிகாரிகள், ‘வறண்டிருந்த பூமி, ஒரே பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தீ, 100 மைல் வேகத்துடன் வீசிய சூறாவளிக் காற்று, அதன் விளைவாக ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு விமானங்களைப் பயன்படுத்த இயலாத நிலை; காற்றின் உதவியால் மின்னல் வேகத்தில் பரவிய தீ, ஆகியவை இந்தப் பேரழிவை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டன,’ என்கின்றனர்.
அது மட்டுமின்றி, “இவ்வகையான பிரம்மாண்ட தீ விபத்தை எதிர்கொள்ளும் நீர் அமைப்பு உலகத்தில் எங்குமே இல்லை என நான் நினைக்கிறேன்,” என்று UCLAவின் நீர் வள நிபுணர் கிரெக் பியர்ஸ் (Greg Pierce) கூறியுள்ளார்.
தீ பரவ ஆரம்பித்த சில நிமிடங்களில் தப்பி ஓடிய மக்கள், சாம்பலாகி விட்ட தங்களது வீடுகளையும் உடைமைகளையும் செய்தி ஒளிக்காட்சியில் பார்த்து வேதனையின் உச்சத்தில் உள்ளனர். தனது வீட்டை இழந்தவிட்ட டார்ரின் ஹர்விட்ஸ் (Darrin Hurwitz), “பசிபிக் பாலிசேட்ஸ் இவ்வளவு விரைவில் முழுவதும் அழிந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் வாழ்ந்த பகுதி முற்றிலும் அழிந்துவிட்டது. அது ஓர் அருமையான ஊர். இயற்கையுடன் இணைந்து அமைந்த ஒரு பகுதி. இனி அது ஒருபோதும் தனது பழைய நிலைக்கு திரும்பாது; ஒருபோதும் அதே இடமாக இருக்காது. இதைவிட மோசமானது எதுவும் இல்லை,” என்று கூறியுள்ளார். தற்சமயம் தனது மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் வேறோர் ஊரில் உள்ள உறவினரின் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.
இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த எந்த இயற்கைச் சீற்றத்தையும் விட மிக மிகப் பெரிது. அமெரிக்காவில் இதுவரை நிகழ்ந்த தீ விபத்துகளிலேயே மிக மோசமான ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, “இந்த தீவிபத்துகள் அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை,” என்று UCLA பருவநிலை விஞ்ஞானி டேனியல் ஸ்வெய்ன் கூறியுள்ளார்.
“இது முற்றிலும் முன்மாதிரியற்ற தீ விபத்து” என்று மேயர் கேரன் பாஸ் (Karen Bass) தெரிவித்துள்ளார்.
ஃபலஸ்தீன கஸ்ஸாவை அமெரிக்க ஏவுகணைகளால் தீயிட்டு அழித்துக்கொண்டிருக்கும் சமகால அராஜகத்தை, முழு வளைகுடா நாடுகளுக்கும் நடக்கும் என்பதாக, ஆணவத்தின் உச்சத்தில் “All hell will break out in the Middle East” என்று தீ பரவலுக்கு இரு நாள்கள் முன் ட்ரம்ப் கர்ஜித்தார்! All hell will break out என்பது வேறொருவன் தீர்மானிப்பது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.
தற்சமயம் காற்றின் வேகம் தணிந்துள்ளதால், தீயணைப்புப் போராட்டம் தொடர்கிறது. ஆனால், இன்னும் வெந்து தணியவில்லை இந்தக் காட்டுத் தீ!
–நூருத்தீன்
(சத்தியமார்க்கம்.காம் இணைய இதழில் ஜனவரி 12, 2025 வெளியான கட்டுரை)
(புதிய சில தகவல்களுடன் சமரம் பிப்ரவரி 1, 2025 இதழில் வெளியான கட்டுரையின் அச்சு வடிவத்தை வாசிக்க க்ளிக்கவும்)
Pic courtesy: Reuters/Ringo Chiu