கி.மு. 4000ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது பண்டைய எகிப்தின் வரலாறு. முதலாம் வம்சத்திலிருந்து 31ஆம் வம்சம் வரை ஆண்டு வாரியாகப் பிரித்து, அவற்றைப் பழைய, மத்திய, புதிய, இன்னும் சில இராஜ்ஜியங்களாகத் தொகுத்து வைத்திருக்கின்றார்கள். நாமனைவரும் அறிந்த எகிப்துப் பேரழகி க்ளியோபாட்ராவின் அரசுக் காலம் கி.மு.51-30. பிறகு கி.மு. 30இல் தொடங்குகின்றது ரோமர்கள் காலம். அன்றிலிருந்து இன்று வரை மதம், அரசியல், புவியியல் ரீதியாக எகிப்து என்பது தவிர்க்க முடியாத முக்கியத் தலம் அதனால், அதன் ஒவ்வொரு மணல் துகளிலும் எதாவது ஒரு வரலாற்றுத் தகவல் ஒளிந்திருக்கின்றது.
எகிப்திய வரலாற்றில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மூவருக்கும் மத ரீதியாக ஆழ்ந்த தொடர்பு உண்டு. ஆப்ரஹாம் என்று பிறரால் சொல்லப்படும் இப்ராஹீம் நபிதாம் மூவினத்துக்கும் மூலப் பிதா. ஆய்வாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவருடைய வரலாறு ஒரு தகவல் சுரங்கம்.
தன் நாட்டிற்குச் சுற்றுலாத் துறை வெகு முக்கியமானதொரு நிதி ஆதாரம் என்பதால், அனைவருக்கும் ஏற்ற வகையில் பண்டைய காலத்திலிருந்து அண்மைய நூற்றாண்டு வரை வரலாற்றையும் தலங்களையும் பாதுகாத்து, தனது சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் தனது கொள்கைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வழங்குகிறது அந்த அரசு.
மூச்சு முட்டும் வரலாறு நிறைந்த நாட்டை ஒரு வார காலத்தில் எவ்வளவுதான் பார்த்து அறிந்திட முடியும்? தேர்தல் சூறாவளிச் சுற்றுப் பயணம் போல் அமைந்திருந்த எங்களது பயணத்தை, சுற்றுலா வழிகாட்டி மையம் ஓரளவு சிறப்பாகவே வடிவமைத்திருந்தது. பண்டைய காலத்தவை, இஸ்லாமிய முக்கியத்துவம் வாய்ந்தவை, அண்மைய காலத்துத் தலங்கள் என்று ஓரளவு பரவலாக எங்களது சுற்றுப் பயணத் திட்டத்தை வடிவமைத்திருந்தார்கள்.
எகிப்து என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருபவை குறைந்தபட்சம் இரண்டு. ஒன்று நைல் நதி. மற்றொன்று பிரமிட்ஸ் (Pyramids) எனப்படும் கூர்நுதிக் கோபுரங்கள்.
ஆப்பிரிக்காவின் ஒன்பது நாடுகள் வழியாக 6650 கி.மீ. நீளத்திலும் சளைக்காமல் ஓடிவந்து மத்தியத்தரைக் கடலில் கலக்கும் நைல் நதி ஓர் இயற்கை பிரமிப்பு. கெய்ரோ நகரின் இடையே ஓடும் அதன் நீரை உற்று நோக்கிய போது, கரை புரண்டோடும் அந்த நீர் பிரவாகத்தில், படைத்தவனின் கூற்றின் மீது முழு நம்பிக்கை வைத்து, தம் குழந்தை மூஸாவைக் கூடையில் வைத்து இறக்கிவிட்ட அந்தத் தாயின் திடவுறுதி பிடரியில் அறைந்தது. பண்டைய அந்நிகழ்வின் நினைவுகளிலிருந்து மீண்டு வந்தால், நைல் நீர்த் துளிகளில் சொல்லி மாளா வரலாற்று வாசம்.
நைல் நதிக்குக் கிழக்கே கெய்ரோ. மேற்கே ஜீஸா. பிரமிடுகளின் நகரம். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூர்நுதிக் கோபுரங்கள் அற்புதம். அன்று அவர்களுக்கு வாய்த்திருந்த கட்டிடக்கலை நுண்ணறிவுடன் ஒப்பிட்டு உணரும்போது அவை ஏன் பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்று எனப் போற்றப்படுகின்றது என்பது புரிந்தது. கூர்நுதிக் கோபுரங்களுள் இருந்த மம்மீகளை எடுத்து வந்து, எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Egyptian Civilization) பத்திரப்படுத்திவிட்டது அரசு. 18 ராஜாக்களும் 4 ராணிகளுமாக 22 மம்மீகள். அவற்றுள் ஒன்று நபி மூஸா (அலை) அவர்களின் காலத்து ஃபிர்அவ்ன் என்று நம்பப்படுவதாகவும். அந்த ஃபிர்அவ்னின் மம்மீ எது என்பதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்தார் சுற்றுலா வழிகாட்டி முஸ்தஃபா. அருங்காட்சியகம் ஒவ்வோர் மம்மீயின் கால கட்டம், அது யார், எவர், வமிசம், அதன் சிறு வரலாறு என்று விவரித்து வைத்துள்ளதே தவிர மூஸா நபி காலத்து ஃபிர்அவ்ன் மம்மீ எது என எந்த ஒன்றையும் குறிப்பிட்டுத் தெரிவிக்கவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட மங்கிய ஒளியுடன் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தளத்தில் கேமராக்களுக்கும் ஃபோட்டோகளுக்கும் கண்டிப்பான தடை என்பதால் படமெடுக்கவில்லை.
மம்மீ கலை என்பதே பிரமிக்க வைக்கும் ஓர் அதிசயமல்லவா? ஒவ்வொரு மம்மீயையும் நெருங்கி உற்றுப் பார்த்தபோது, மனத்துள் ஓடிய வரிகள்:
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
ஆஜானுபாகு உருவமனைத்தையும் சுருக்கி விட்டிருந்தது மம்மீ. சில ராணிகளுக்குத் தலைமுடி இன்னமும் மிச்சமுள்ளது.
இவற்றை எல்லாம் கண்டு வியந்துவிட்டு, நான் ஆர்வமுடன் செல்லக் காத்திருந்தது ஸலாஹுத்தீனின் கோட்டை – Citadel of Saladin. அங்கு நான் அடைந்த ஏமாற்றத்தை விவரிக்கும் முன் பரோன் அரண்மனையைச் சொல்லி விடுகின்றேன். ’பரோன் எட்வார்ட் எம்பைன்’ பல்கேரிய நாட்டைச் சேர்ந்த, கொழுத்த செல்வம் படைத்த பொறியாளர், தொழிலதிபர். 1904ஆம் ஆண்டு, தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் ரயில் பாதைகளை அமைக்கவும் எகிப்துக்கு வந்தவர், தமக்கு அரண்மனை ஒன்றைக் கட்டினார். காசுள்ள சீமான் அரண்மனை கட்டியது அன்று வியப்பு. ‘இந்து அரண்மனை’ என்று அழைக்கப்படும் அளவிற்கு அதன் புற வடிவத்தை முழுக்க முழுக்க இந்துக் கோவிலின் வடிவமைப்பில் கட்டி வைத்துள்ளதுதான் அதன் சிறப்பம்சம். உள் கட்டமைப்பு மட்டும் ஐரோப்பிய பாணி.
அரண்மனையின் உள்ளே ஒவ்வோர் அறையிலும் மிக விரிவாக பரோனைப் பற்றியும் அந்த அரண்மனை உருவானதைப் பற்றியும் தகவல்களும் துணுக்குகளும் ஏராளம் நிறைத்து வைத்திருக்கிறார்கள். அவை போதாதென்று அரண்மனை-1, அரண்மனை-2… என்று அரண்மனை-10 வரை படமெடுக்கும் அளவிற்கு அந்த அரண்மனையைப் பற்றி உலாவும் அமானுஷ்ய வதந்திகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இரவில் ஏதேனும் ஓர் அறையில் ‘லக..லக..லக’ என்று சந்திரமுகி பின்னணி ஒலித்தாலும் வியப்பதற்கில்லை என்று எனக்குத் தோன்றியது.
கெய்ரோவில் ஹெலியோபோலிஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையைத் தனித்துவமான வரலாற்று மாளிகையாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கு சுவாரஸ்யமும் பயனும் அளிக்கும் வகையில் மிக விரிவாகத் தகவல்களும் கூட.
இப்பொழுது சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி 1176ஆம் ஆண்டில் கட்டிய கோட்டைக்குப் போவோம். கெய்ரோ நகரின் மையத்தில் ’முகத்தம்’ மலைகளின் முகப்பில் நகரத்தை கம்பீரமாகப் பார்வையிட்டபடி வானளாவ நிற்கிறது பிரமாதமான அந்த இராணுவக் கோட்டை. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் எகிப்திய அரசாங்கத்திற்கு அதுதான் ஆட்சிப் பீடமாகவும் அதன் ஆட்சியாளர்களுக்கு வசிப்பிடமாகவும் இருந்துள்ளது.
14ஆம் நூற்றாண்டில் மம்லுக் ஸல்தனத் ஆட்சிக் காலத்திலும் 19ஆம் நூற்றாண்டில் முஹம்மது அலீ பாஷாவின் ஆட்சியிலும் பல மாற்றங்களுக்கு உட்பட்ட இக்கோட்டையில் இன்று பெயரளவில் மட்டுமே ஸலாஹுத்தீனுக்கு இடம். முஹம்மது அலீ பாஷா அதிலிருந்த பல பழைய கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு, பல புதிய கட்டுமானங்களையும் நினைவுச் சின்னங்களையும் கட்டிவிட்ட பின், இன்று அக்கோட்டைக்கு நம்மை அழைத்துச் சென்று சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றிக் காட்டுவதெல்லாம், அங்கு ஒட்டோமான் பாணியில் முஹம்மது அலீ பாஷா கட்டியுள்ள பள்ளிவாசல், அதன் வளாகம், பள்ளிவாசலினுள் பாஷாவின் கல்லறை. அவ்வளவுதான். அவ்வளவேதான். மற்றபடி, சுல்தான் ஸலாஹுத்தீன், பிற அய்யூபிகள், மம்லூக்குகள், ஆரம்ப காலக் கோட்டை, பின்னர் ஏற்பட்ட மாற்றம் இப்படி ஒரு வரிச் செய்திகூட அந்தக் கோட்டையினுள் இல்லை. பரோன் அரண்மனைக்கு நேர் மாற்றம்.
ஸலாஹுத்தீனின் கோட்டை துடைத்தழிக்கப்படாமல் பெயர் தாங்கி நிற்பதும்கூட, யுனெஸ்கோவின் கைங்கர்யம் என்றே நினைக்கின்றேன். 1976 ஆம் ஆண்டு, இதை உலகப் பாரம்பரிய தலமாக அறிவித்து விட்டது யுனெஸ்கோ.
பின்னர் எகிப்தியர்களிடம் இது குறித்து எனது வியப்பையும் வருத்தத்தையும் பகிர்ந்த போது, சமகால எகிப்திய அரசுக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் ஸலாஹுத்தீனின் வரலாற்றிலும் அதைப் பரப்புவதிலும் ஆர்வமின்மை மட்டுமின்றி ஒவ்வாமையும் கூட என்று சில பல அரசியல் காரணங்களைப் பகிர்ந்தனர். கேட்டுக்கொண்டேன்.
எகிப்தை ஃபாத்திமீக்களிடமிருந்து மீட்டு, சிலுவைப்படை பரங்கியர்களிடமிருந்து பாதுகாத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியை இன்றைய எகிப்து என்னதான் புறக்கணித்த போதும், அவரது இலச்சினை மட்டும் மிகக் கம்பீரமாய் எகிப்தின் அடையாளமாய் வீற்றிருக்கிறது. அது-
எகிப்து நாட்டுக் கொடியின் மத்தியில் உள்ள ஸலாஹுத்தீனின் கழுகு – Eagle of Saladin.
நூருத்தீன்






