80. பின் அதிர்வுகள்
நூருத்தீனின் மரணம் சிரியாவில் ஏற்படுத்திய துக்கம், அதிர்ச்சி, கவலை எல்லாம் ஒருபுறம் இருக்க, அதுவரை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருங்கிணைப்பு, திகைப்பூட்டும் வகையில் கலையத் தொடங்கியது. ஏற்பட்டுவிட்ட வெற்றிடத்தை சாதகமாக்கிக்கொள்ள நாலாபுறமும் முளைத்த விவகாரங்களும் பிரச்சினைகளும் சிரியாவுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உருவாயின. ஜெருசலம் மீட்பு, சிலுவைப்படையினருக்கு எதிரான ஜிஹாது அனைத்தும் இரண்டாம் பட்சமாகிப் போட்டிக்கு இலக்காயின நிலமும் அதன் ஆட்சியும் அதிகாரமும்.
‘மாண்டாரா நூருத்தீன்?’ என்று குதித்தெழுந்த ஜெருசல ராஜா அமால்ரிக், கட்டவிழ்த்து விடப்பட்டதைப் போல் தறிகெட்டு ஆட ஆரம்பித்த மோஸுலின் ஸைஃபுத்தீன், அதிகாரபூர்வ அரசை அமைக்க முயன்ற டமாஸ்கஸ் அமீர்கள், தங்களுக்கென ஆட்சி அமைக்கக் காய்கள் நகர்த்திய அலெப்போ முக்கியஸ்தர்கள், அங்கு இடைபுகுந்து ஆட்டத்தின் போக்கை மேலும் கெடுத்து அலெப்போவைக் கைவசமாக்கிய அலி குமுஷ்திஜின் என சிரியாவில் சுழன்றடித்தது சூறைக்காற்று. இமாதுத்தீன் ஸெங்கியும் நூருத்தீனும் இட்டிருந்த அடித்தளத்தை அசைத்துச் சிதைக்கப் பரவியது அரசியல் களேபரம்.
எனில் எகிப்து? ஸலாஹுத்தீன்? ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பார்ப்போம்.
oOo
முதலில் டமாஸ்கஸ். தம்முடைய மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன், மகன் இஸ்மாயீல் அஸ்-ஸாலிஹுக்கு விருத்தசேதனம் செய்வித்து, அவரைத் தம்முடைய அடுத்த அரச வாரிசாகவும் அறிவித்து, தம் தலைமையில் நகர்வலமும் நிகழ்த்தியிருந்தார் நூருத்தீன். ஸாலிஹ் வளர்ந்து வாலிபராவார்; நூருத்தீனுக்குப் பிறகு அரசராவார் என்பது அமீர்களின் பொது எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சில நாட்களிலேயே அதற்குரிய தேவை ஏற்படும் என்பது அவர்கள் எதிர்பாராதது. டமாஸ்கஸின் அமீர்கள் ஒன்று கூடினர். ஜெருசலத்திலிருந்து வரக்கூடிய ஆபத்தையும் அலெப்போவிலிருந்து வரக்கூடிய சவால்களையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர். ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, இளம் அரசர் அஸ்-ஸாலிஹுக்கு விசுவாசப் பிரமாணம் அளித்தனர். அவர் பதினொரு வயதே நிரம்பிய சிறுவர் என்பதால் நூருத்தீனின் மூத்த தளபதிகளுள் ஒருவரான இப்னுல் முகத்தம் என்பவரை இராணுவத் தளபதியாக நியமித்து, அவரது தலைமையில் ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டுவந்தனர். மன்னர் அஸ்-ஸாலிஹின் அரசப் பிரதிநிதியானார் இப்னுல் முகத்தம். நூருத்தீனின் மனைவியும் அவர்களுடைய மகன் அஸ்-ஸாலிஹும் அச்சமயம் இருந்தது டமாஸ்கஸில்.
அலெப்போவுக்கு நூருத்தீனின் மரணச் செய்தி புறாவின் மூலம் உடனே வந்து சேர்ந்தது. அங்கு அச்சமயம் ஆளுநராக இருந்தவர் ஜமாலுத்தீன். அவர் அமீர்களை அழைத்து, அஸ்-ஸாலிஹுக்கு சத்தியப் பிரமாணம் அளிக்க வைத்தார். அவர்களும் எதிர்ப்பின்றி நிறைவேற்றினர். ஆனால் நகரின் ஆட்சி நிர்வாகம்? அலெப்போவில் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தது ஒரு குடும்பம். அது நூருத்தீனின் ஆலோசனைக் குழுவில் அங்கமாகவும் இருந்தது. அக்குடும்பத்தின் சகோதரர்கள் முக்கியப் பதவிகளை வகித்து வந்தனர். ஷம்சுத்தீன் இப்னு தயாஹ் என்பவர் திவான். இராணுவத்தின் பொறுப்பு அவர் வசம் இருந்தது. அலெப்போவின் பாதுகாவலராக இருந்தவர் அவருடைய சகோதரர் பதுருத்தீன் ஹஸன். சுற்றுமுற்றும் உள்ள கோட்டைகள் அக்குடும்பத்துச் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
ஏற்கெனவே இவ்விதம் இருந்தவர்கள், நூருத்தீன் மரணமடைந்தார் என்றதும் அலெப்போவின் ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் வசம் கொண்டுவந்தனர். தம்மை ஆளுநர் என்று அறிவித்துவிட்டு அலெப்பொவின் முதன்மைக் கோட்டைக்குள் நுழைந்தார் ஷம்சுத்தீன். இதர சகோதரர்கள் பொறுப்பு மிக்க முக்கியப் பதவிகளுக்குத் தங்களை நியமித்துக்கொண்டனர். அலெப்போவின் அரச நிர்வாகம் அந்த இப்னு தயாஹ் குடும்பத்தவர் வசமானது.
தம் சகோதரர் மகன்களான இமாதுத்தீன், ஸைஃபுத்தீன் காஸி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது; அதைத் தீர்த்து வைத்து இமாதுத்தீனை ஸிஞ்சாருக்கும் ஸைஃபுத்தீனை மோஸுலுக்கும் நூருத்தீன் ஆட்சியாளர்களாக ஆக்கினார்; தம்முடைய பிரதிநிதியாக குமுஷ்திஜினை மோஸுலின் ஆளுநராக அமர்த்தினார் என்பதை 72ஆம் அத்தியாயத்தில் பார்த்தோம். நூருத்தீனின் குணாதிசயங்களுக்குச் சற்றும் தொடர்பற்றவர்களாக இருந்தனர் இமாதுத்தீனும் ஸைஃபுத்தீனும். என்பதோடன்றி அவர்களுக்கு இடையேயான பிளவு நீறு பூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டே இருந்தது.
நூருத்தீன் தம்முடைய மரணத்திற்கு முன் நேசப் படையினரை வரச்சொல்லி பெரியதொரு படையெடுப்பிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அவரது கட்டளைப்படி ஸைஃபுத்தீன் மோஸுல் படையணியுடன் டமாஸ்கஸுக்கு வரும் வழியில் அவரை எட்டியது நூருத்தீனின் மரணச் செய்தி. அதைக் கேட்டு அவர் செய்த காரியங்கள் அவக்கேடு. உடனே அவர் படையின் ஒரு பகுதியுடன் சிரியாவின் வடக்கு நோக்கித் திரும்பி விரைந்தார். ’ஸெங்கி வம்சாவளியின் மூத்த உறுப்பினன் நான்’ என்ற அகந்தையுடன் நுஸைபின், ஹர்ரான், அர்-ருஹா, அர்-ரக்கா, மெஸபோட்டோமியாவின் மேற்புறம் உள்ள ஜஸீராவின் பகுதிகள் அனைத்தையும் அங்கு நூருத்தீன் அமர்த்தியிருந்த ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றினார். தடை செய்யப்பட்டிருந்த சாராயம் திறந்துவிடப்பட்டு, இஸ்லாத்திற்குப் புறம்பான அநீதியான வரிகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நூருத்தீன் மோஸுலில் நிறுவியிருந்த ஆட்சி ஒழுங்கு அனைத்தும் தூக்கி எறியப்பட்டன.
ஸைஃபுத்தீன் அப்படியென்றால், அவருடைய படையில் முன் அணியில் இருந்த அலி குமுஷ்திஜின், தம்முடைய உடைமைகளைக் கூட அப்படி அப்படியே போட்டுவிட்டு அலெப்போவுக்குப் பறந்தார். அங்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்திருந்த இப்னு தயாஹ் சகோதரர்களுடன் எப்படியோ நட்பாகி நெருக்கமாகவும் ஆனார். அவருக்குள் ஒளிந்திருந்த கபடம் மட்டும் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தது.
டமாஸ்கஸ், அலெப்போ, மோஸுல் ஆகியவற்றின் நிலை இவ்வாறிருக்க, ஜெருசல இராஜாங்கமோ தங்களுடைய தலையாய எதிரியின் பேராபத்து நீங்கியது என்று மகிழ்ந்தது. சிரியாவின் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்டுவிட்ட சலசலப்பையும் அது துண்டு துண்டாக இருப்பதையும் கவனித்த ராஜா அமால்ரிக் உடனே காரியத்தில் இறங்கினார். படை திரட்டினார். பனியாஸ் கோட்டையை முற்றுகையிட்டார்.
டமாஸ்கஸிலிருந்து கலீலி கடலின் மேற்புறப் பகுதிக்கு நீளும் நெடுஞ்சாலையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பனியாஸ். அதைக் கைப்பற்றுவது புவியியல் ரீதியாக ஜெருசலத்திற்கு முக்கியமாக இருந்தது. அமால்ரிக்கின் படையெடுப்பை அறிந்த இப்னுல் முகத்தம் டமாஸ்கஸிலிருந்து படையுடன் விரைந்தார். ஆனால், ஜெருசல படையைத் தாக்கி விரட்டும் அளவிலான வலிமை இன்றி இருந்தது அவரது படையணி. சமயோசிதமாக ஒரு யோசனை தோன்ற, ஸைஃபுத்தீனையும் ஸலாஹுத்தீனையும் துணைக்கு அழைப்பேன் என்று பரங்கியர்களை மிரட்டிவிட்டு போர் நிறுத்த சமாதானம் பேசினார் இப்னுல் முகத்தம். அமால்ரிக் தம் முற்றுகையைக் கைவிடப் பணமும் டமாஸ்கஸில் சிறையிருந்த பரங்கியர்களின் விடுதலையையும் கோர, ஏற்றார் இப்னுல் முகத்தம்.
அந்தப் பிரச்சினை அவ்வாறு முடிவுக்கு வர, அலெப்போவிலிருந்து வேறோர் அழுத்தம் டமாஸ்கஸுக்கு வந்தது. இரு நகரங்களும் தத்தம் ஆட்சியாளர்களிடம் சென்றுவிட, யார் வசம் இளம் மன்னர் ஸாலிஹ் உள்ளாரோ அவர்தாம் அதிகாரத்தில் கை ஓங்கியவராக உயர முடியும் என்பதை இரு தரப்பினருமே உணர்ந்தனர். மோஸுலின் ஸைஃபுத்தீன் காஸியினால் சிரியாவின் வடக்குப் பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதால், அவரை எதிர்க்கவும் படை திரட்டவும் அஸ்-ஸாலிஹைத் தங்கள் வசம் அனுப்பி வைக்கும்படி டமாஸ்கஸுக்குத் தூதுக் குழுவை அனுப்பினார் ஷம்சுத்தீன் இப்னு தயாஹ். ஜுன் மாதம் டமாஸ்கஸ் சென்ற அக்குழுவின் தலைவர் குமுஷ்திஜின்.
பேச வேண்டிய முறைப்படிப் பேசி, அஸ்-ஸாலிஹின் தாயாரை இணங்க வைத்து, அனுமதி பெற்று, அஸ்-ஸாலிஹைத் தம்முடன் அலெப்போவுக்கு அழைத்து வந்தார் குமுஷ்திஜின். அதையடுத்து, மளமளவென்று காரியத்தில் இறங்கி இப்னு தயாஹ் சகோதரர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார். அலெப்போவையும் இளம் மன்னர் ஸாலிஹையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஸாலிஹின் அதிகாரபூர்வ பாதுகாவலர் ஆனார்.
இவ்வாறாக மோஸுல், அலெப்போ, டமாஸ்கஸ், ஜெருசலம் ஆகியவை தத்தம் அரசியல் நகர்வுகளில் மும்முரமாக இருந்தாலும் அவற்றின் கண்கள் எகிப்தில் இருக்கும் ஸலாஹுத்தீனின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதையே எச்சரிக்கையுடன் கவனித்தபடி இருந்தன. எகிப்தின் முக்கிய ஆளுமையாக ஸலாஹுத்தீன் உருவாகியிருந்த போதும், நூருத்தீனின் ஆலோசகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் யூஸுஃபின் (ஸலாஹுத்தீனின் இயற்பெயர்) பெயரைக் குறிப்பிடும் அளவிற்குக்கூட மரியாதை இருந்ததில்லை. அவரை அற்பன், செய்நன்றி கொன்றவன், நம்பிக்கை துரோகி, ஆணவமிக்கவன் என்றே குறிப்பிடுவர். அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்பதை அவர்கள் சற்றும் அறிந்திருக்கவில்லை. ஆனால், நூருத்தீனுக்கும் அவருடைய தந்தை இமாதுத்தீன் ஸெங்கிக்கும் மதியூக ஆலோசகராக இருந்த கமாலுத்தீன் இப்னு அல்-ஷாராஸுரி என்பவர்தாம் ஸலாஹுத்தீனை நன்றாக அறிந்திருந்தார்; எடைபோட்டு வைத்திருந்தார். அவர்தாம் அமீர்களை எச்சரித்தார்.
“எகிப்தை ஆளும் ஸலாஹுத்தீன், நூருத்தீனின் மம்லூக்குகளுள் ஒருவர். அவருடன் உள்ள இராணுவ அதிகாரிகளும் நூருத்தீனின் விசுவாசிகள். நாம் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அவரை ஒதுக்கக் கூடாது. அதுவே சிறந்த அரசியல் நகர்வாகும். இல்லையெனில் நமக்கு எதிரான அவரது நடவடிக்கைக்கு அது காரணமாகிவிடும். அவர் நம்மைவிட வலிமையானவர். ஏனெனில் இன்று எகிப்து முழுவதும் அவருடைய தனிக் கட்டுபாட்டில் உள்ளது”
அமீர்களின் செவிக்குள் அந்த எச்சரிக்கை நுழைந்தது. ஆனால், அவர்களுக்கு அது வேறு வித அச்சத்தை அளித்தது. ஸலாஹுத்தீன் சிரியாவுக்குள் நுழைந்தால் எங்கே தங்களை எல்லாம் வெளியேற்றி விடுவாரோ, பதவியும் பட்டமும் பறிபோய் விடுமோ என்ற அச்சம்.
oOo
நூருத்தீனின் மரணச் செய்தி வந்ததுமே ஸலாஹுத்தீன் செய்த முதல் காரியம் டமாஸ்கஸைத் தொடர்புகொண்டது. அச்செய்தி வதந்தியன்று என்பதை உறுதி செய்துகொண்டார். ஸாலிஹை சிரியாவுக்கும் எகிப்துக்கும் புதிய அரசராக அறிவித்து வந்த தகவலையும் தயக்கமின்றி ஏற்றார், அடிபணிந்தார் ஸலாஹுத்தீன். எகிப்தில் மூன்று நாள்கள் அரசு முறை துக்கம் அறிவிக்கப்பட்டது. அடுத்து வந்த வெள்ளிக்கிழமையிலிருந்து எகிப்திலும் வட ஆப்பிரிக்காவின் மஸ்ஜித்களிலும் குத்பாவில் அஸ்-ஸாலிஹின் பெயரை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டு அது அமல்படுத்தப்பட்டது.
‘உன் தந்தையின் மரணம் எனக்கு பூகம்பத்திற்கு இணையான அதிர்ச்சியை அளித்துள்ளது. இஸ்லாம் ஒரு மாவீரரை இழந்துள்ளது’ என்று நூருத்தீனின் மகன் அஸ்-ஸாலிஹுக்கு இரங்கல் மடல் ஒன்றைத் தூதுக்குழுவின் மூலம் அனுப்பி வைத்தார் ஸலாஹுத்தீன். அது மட்டுமின்றி ஸாலிஹின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களும் அவரது நேர்மை, நாணயத்தின் சாட்சியாக அக்குழுவின் மூலம் டமாஸ்கஸ் வந்தது. எவரை ஸெங்கி வம்சாவளியின் அச்சுறுத்தலாக சிரியா கருதியதோ, அவர் நூருத்தீனின் வாரிசுக்குக் கட்டுப்பட்டவராய்த் தம்மை அறிவித்துத் தமது நேர்மையைப் பறைசாற்றினார். ஆனால், நூருத்தீனின் இரத்த உறவான ஸைஃபுத்தீனோ ஸெங்கி ஆட்சிக்கு எதிரியாக மாறியிருந்தார்.
கெய்ரோவில் இருந்தபடி சிரியாவின் அரசியல் நிலவரத்தை ஆய்ந்தபோது ஸலாஹுத்தீனுக்குப் பல பிரச்சினைகள் மனத்தில் தென்பட்டன. அலெப்போவினர் அஸ்-ஸாலிஹைக் கைப்பாவையாக மாற்றியிருந்தது அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. பனியாஸ் மீது அமால்ரிக் படையெடுத்தது கவலையை அளித்தது. டமாஸ்கஸ் பரங்கியர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையோ பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அத்தகு உடன்படிக்கை டமாஸ்கஸின் பலவீனம். அந்த பலவீனம் டமாஸ்கஸை மோஸுல் வசம் எளிதாக விழ வைத்து விடும். அவ்விதம் நிகழ்ந்தால் சிரியா எகிப்திலிருந்து தூரமாகிவிடும். அது பரங்கியர்களுக்கு சிரியாவின் மீது பாய நல்வாய்ப்பாக மாறிவிடும் என்று கருதினார் அவர்.
இவற்றையெல்லாம் சரி செய்ய, கட்டுக்குள் கொண்டுவர தாம் உடனே சிரியாவுக்குச் செல்லலாம் என்றால், இறந்தார் மன்னன், காலியானது திண்னை என நிலத்தை அபகரிக்க வந்தவராக மக்கள் தம்மை நினைப்பர்; தம் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும் என்ற முன்னெச்சரிக்கை அவரைத் தடுத்தது. ஆனால், ஜெருசலத்தை மீட்கும் ஜிஹாதுதான் அவருடைய பிரதான நோக்கமெனில், சிரியாவே அவருடைய ராஜாங்கத்தின் மையமாக அமைய வேண்டும்; நூருத்தீனுக்கு அடுத்து ஜிஹாது எனும் மேலங்கியை அவர் அணிவதாக இருந்தால், அவர் டமாஸ்கஸுக்கு நகர வேண்டியது கட்டாயம் என்பது மட்டும் அவருக்குத் தெளிவானது. அதே நேரத்தில், தாம் இவ்விஷயத்தில் மிகை வேகத்துடன் செயல்படக்கூடாது, நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
‘நான் ஒரு கரையில். என்னைத் தவறாக நினைப்பவர்களோ எதிர் கரையில்’ என்று தம் சங்கட நிலையை விவரித்திருக்கிறார் ஸலாஹுத்தீன். தம்முடைய நிலைப்பாட்டையும் எண்ணங்களையும் விவரித்துத் தளபதி இப்னு முகத்தமுக்குக் கடிதமெழுதினார். ஸைஃபுத்தீன் சிரியாவின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியதைக் குறிப்பிட்டு, ‘எனக்கு ஏன் உடனே தெரிவிக்கவில்லை, என் உதவியைக் கோரவில்லை?’ என்று அதில் வினவியிருந்தார். அலெப்போவினர் அஸ்-ஸாலிஹைக் கைப்பாவையாக மாற்றி இருந்ததை, ‘அவர்கள் இதை எப்படிச் செய்யத் துணிந்தார்கள்?’ என்ற அவரது கேள்வியில் ஆத்திரம் கலந்திருந்தது. மேலும் அக்கடிதத்தில், தம்மை நூருத்தீனின் இலட்சியத்தைத் தொடர்பவராகவும் அவரது நம்பிக்கைக்கு உரியவராகவும் நிறுவும் முயற்சி இருந்தது.
‘மரணமடைந்த நமது மன்னர், என்னளவு நம்பிக்கையான ஒருவரை உங்களுள் கண்டிருப்பாராயின், அவருடைய முக்கியமான பிராந்தியமான எகிப்தின் தலைமையை அந்நபரிடம் ஒப்படைத்திருப்பார் அல்லவா? நூருத்தீன் இவ்வளவு விரைவில் மரணமடைந்திருக்காவிட்டால் அவருடைய மகனுக்குக் கல்வி புகட்டிப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம்தான் ஒப்படைத்திருப்பார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இப்பொழுது, நீங்கள் மட்டுமே என்னுடைய எசமானருக்கும் அவருடைய மகனுக்கும் சேவையாற்றியதைப் போல் நடந்துகொள்வதையும் என்னை விலக்கி வைப்பதையும் கவனிக்கிறேன். என் எஜமானையும் என் எஜமானின் மகனையும் கவனித்துக்கொள்வதில் நீங்கள் என்னைப் புண்படுத்தி விட்டீர்கள் என்று நான் கருதுகிறேன். ஸாலிஹுக்கு உரிய மரியாதையை அளிக்கவும் அவருடைய தந்தையிடமிருந்து நான் பெற்ற பலனைத் திரும்பச் செலுத்தவும் விரைவில் நான் வருவேன். என் எசமானரின் நினைவைப் போற்றும் வகையில், நான் காரியங்களாற்றுவேன். அவை அவற்றுக்குரிய விளைவை ஏற்படுத்தும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய தவறான நடத்தைக்காக தண்டிக்கப்படுவீர்கள்.’
ஸலாஹுத்தீன் விரைவில் வருவார் என்பதை அறிந்த இப்னுல் முகத்தம் மோஸுலில் உள்ள ஸைஃபுத்தீனுக்கு உதவி வேண்டி தகவல் அனுப்பினார். ஆனால் அவரோ, சிரியாவில் தாம் கைப்பற்றிய பகுதிகளைப் பாதுகாப்பதில் மகிழ்ச்சிகரமாக ஈடுபட்டிருந்தார். எனவே, பரங்கியர்களுடன் கூட்டணி அமைக்கலாமா என்றுகூட ஒரு யோசனை டமாஸ்கஸ் ஆட்சியாளர்கள் மத்தியில் ஓடியது. ஆனால் அதற்கு வாய்ப்பின்றி ஜெருசலத்தில் வேறொரு திருப்பம் நிகழ்ந்தது,
oOo
ராஜா அமால்ரிக் பனியாஸிலிருந்து ஜெருசலம் திரும்பியவுடன் அவருக்கு வயிற்றுப்போக்குத் தொடங்கியது. அது நிற்காமல் முற்றி, 14 ஜூலை 1174 அன்று மரணமடைந்தார் அமால்ரிக். 38ஆவது வயதில் அவரது ஆயுள் முடிவடைந்தது. இரண்டே மாத இடைவெளியில் சிரியாவின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நூருத்தீனும் அமால்ரிக்கும் காட்சியிலிருந்து மறைந்தனர்.
அமால்ரிக்கை அடுத்து அவருடைய 13 வயது மகன் நான்காம் பால்ட்வின் ஜெருசலத்தின் ராஜாவாக அறிவிக்கப்பட்டார். அந்த வமிசத்தில் எஞ்சியிருந்த ஒரே ஆண் வாரிசு அவரே. தம்முடைய மூத்த சகோதரர் மூன்றாம் பால்ட்வினின் மீதுள்ள பிரியத்தினால் தம் மகனுக்கு அப்பெயரைச் சூட்டியிருந்தார் அமால்ரிக். பெயர் சூட்டும் விழா நிகழும் போது, அக்குழந்தைக்கு என்ன பரிசளிப்பீர்கள் என்று பெரியப்பா மூன்றாம் பால்ட்வினிடம் கேட்கப்பட்டபோது, அவர் வேடிக்கையாக, ‘ஜெருசல இராஜ்ஜியம்’ என்று பதிலளித்திருந்தார். ராஜா மூன்றாம் பால்ட்வினுக்கு அச்சமயம் 31 வயது. புதிதாகத் திருமணம் முடித்திருந்தார். அன்றைய அச்சூழலில் அவருடைய தம்பி மகன் பட்டமேறுவான் என்பதை யாரும் நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் அடுத்து இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் பால்ட்வின் மரணமடைந்தார். தம்பி அமால்ரிக் ராஜாவானார். அவரும் இப்பொழுது மரணமடைந்து ஜெருசலத்தின் ஆறாவது இலத்தீன் ராஜாவானார் சிறுவர் நான்காம் பால்ட்வின். முதலாம் சிலுவைப்போரில் பரங்கியர்கள் ஜெருசலத்தைக் கைப்பற்றிய எழுபத்தைந்தாம் ஆண்டு விழாவில் நடைபெற்றது நான்காம் பால்ட்வினின் பட்டமேற்பு வைபவம்.
ஒருநாள் இளம் ராஜா பால்ட்வின் நண்பர்களுடன் மல்யுத்தம் விளையாடும்போது அன்றைய வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம் (William of Tyre) அசாதரணமான ஒரு விஷயத்தைக் கவனித்தார். விளையாடிவர்களின் நகங்கள் பால்ட்வின் மீது ஆழமாகப் பதிந்தன; பிடிகள் வலுவாக இறுகின. ஆனால் பால்ட்வினிடம் வலியின் உணர்ச்சியே இல்லை. வில்லியமுக்கு அச்சம் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகம் உறுதியானது. சிறுவன் நான்காம் பால்ட்வின் தொழுநோய்க்கு உள்ளாகியிருந்தார். வரலாற்றில் தொழுநோயாளி மன்னன் –The Leper King– என்று இடம்பெற்றார்.
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 13 நவம்பர் 2024 வெளியானது
Image: AI generated
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License