73. ஜிஹாது அங்கி
ஸலாஹுத்தீன் தம் தந்தையைத் தம்மிடம் அழைத்துக்கொள்ள விரும்பினார். அந்தக் கோரிக்கையை நூருத்தீனுக்கும் அனுப்பி வைத்தார். இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவுக்குப் பிறகு, அலெப்போவில் நூருத்தீனிடம் ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிற்றப்பா அஸதுத்தீன் ஷிர்குஹ் தளபதியானார்; தந்தை நஜ்முத்தீன் அய்யூபி தம் குடும்பத்தினருடன் டமாஸ்கஸில் அரசுப் பதவி வகித்தார் என்று பார்த்தோம்.
நூருத்தீனின் அரசாங்கத்தில் அவரது ஆற்றலும் பணியும் சிறப்பாக அமைந்துபோய், அவரது நம்பிக்கைக்கு உரியவராகி இருந்தார் நஜ்முத்தீன். ஸலாஹுத்தீனின் கோரிக்கை வந்ததும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு நஜ்முத்தீனை அனுப்பி வைத்தார் நூருத்தீன்.
நாங்களும் எகிப்திற்கு வருகிறோம் என்று பெருந்திரளான வர்த்தகர்கள் அவருடன் இணைந்தனர். கூடவே ஸலாஹுத்தீனின் நண்பர்களும் உற்றார் உறவினர்களும் சேர்ந்துகொண்டார்கள். ஸலாஹுத்தீனுக்கும் ஃபாத்திமீ கலீஃபாவுக்கும் அன்பளிப்புகளை அளித்து, நஜ்முத்தீன் அய்யூபியையும் பயணக் குழுவையும் நூருத்தீன் பத்திரமாக வழியனுப்பி வைத்தார். வழியில் பரங்கியர்கள் அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் தம் படையைச் சிறிது தூரம் துணையாகவும் அனுப்பினார், அந்தளவிற்கு அவருக்கு நஜ்முத்தீன் அய்யூபியின் மீது அன்பும் அக்கறையும் மிகைத்திருந்தன.
27 ரஜப், 565 / ஏப்ரல் 16, 1170 அவர்கள் அனைவரும் எகிப்து வந்தடைந்தனர். விழாக்கோலம் பூண்டிருந்தது கெய்ரோ. வரவேற்பு ஏற்பாடுகளும் தடபுடல். ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் தமது நெறிமுறைகளுக்கு மாற்றமாகத் தாமே தமது அரண்மனையிலிருந்து கிளம்பிச் சென்று அரசு மரியாதைகளுடன் ஸலாஹுத்தீனின் தந்தையை வரவேற்றார். பரஸ்பரம் அன்பளிப்புகள் பரிமாறப்பட்டன. ஒரு வார காலம் நீடித்தது வரவேற்பு வைபவம். அல்லாஹ் குர்ஆனில் யூஸுஃப் நபியின் (அலை) வரலாற்றைக் கூறும்போது அவருடைய தந்தை யாகூப் நபி (அலை) தம் குடும்பத்தாருடன் எகிப்தில் அவரை வந்தடைந்ததை விவரித்திருப்பான். அந்த நிகழ்வை இது ஒத்திருந்தது என்று இதை அன்றைய வரலாற்றாசிரியர்கள் வர்ணித்துள்ளார்கள்.
தந்தைக்கு ஒரு மாளிகையை ஒதுக்கி அதில் தங்க வைத்தார் ஸலாஹுத்தீன். தமது பதவி உட்பட்ட பொறுப்புகளை அவர் வசம் அளிக்க முற்பட்டபோது, தடுத்து மறுத்தார் நஜ்முத்தீன். ‘மகனே! இந்தப் பணிக்கு அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். நீ அதற்குப் பொருத்தமானவனும் கூட. ஆகவே மகிழ்வுக்குரிய இவற்றை மாற்ற வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார்.
அதன் பின், அலெக்ஸாந்திரியா, தமீதா நகரங்களின் கருவூலப் பொறுப்பு நிர்வாகத் திறன் மிக்க நஜ்முத்தீன் அய்யூபியிடம் ஒப்படைக்கப்பட்டது. சகோதரர் தூரன்ஷாவிடம் நைலின் உச்சிப் பகுதி அளிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றமர்ந்து கூடிப் பேசும் வேளையில் நஜ்முத்தீன் பழைய நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
“நாங்கள் திக்ரித் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட போதுதான் இம்மகன் பிறந்தார். அச்சமயம் இவரை அவநம்பிக்கையுடன் பார்த்தேன். அவப்பேறாகக் கருதினேன். என்னுடன் கிறிஸ்தவரான ஓர் எழுத்தாளர் இருந்தார். அவர்தான், ‘எசமானரே! யாருக்குத் தெரியும்? ஒருவேளை இவர் ஒரு பெரிய அரசராக உயரலாம். நற்பெயர் பெற்று பெரிதும் மதிக்கப்படலாம்’ என்றார். அவரது வார்த்தைகள் சிசுவின் மீது எனக்கு இரக்கத்தை ஏற்படுத்தின. பிறகு அனைவரும் அந்தத் தற்செயல் நிகழ்வால் ஈர்க்கப்பட்டோம். அல்லாஹ் அவர்கள் அனைவர் மீதும் கருணையைப் பொழிவானாக”
குடும்பத் தலைவரும் அரசியலில் பழுத்தவரும் நிர்வாகத்தில் தலைசிறந்தவருமான தந்தை நிதி நிர்வாகத்தில்; சகோதரர்கள் முக்கியமான அதிகாரத்தில் என்றானதும் ஸலாஹுத்தீன் தமது அடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டார். அங்கியை அணிந்தார். முஜாஹித் எனும் மேலங்கி. தொடங்கியது பரங்கியர்கள் ஆக்கிரமித்திருந்த களத்தில் அவரது எதிர் நடவடிக்கை.
oOo
சினாய் தீபகற்பத்தின் கடுமையான நிலப்பரப்பில் எகிப்திலிருந்து நீளும் நில வழிப் பாதைகள் இரண்டு இருந்தன. ஒன்று எகிப்தின் வடக்குக் கடற்கரையோரமாக கஸ்ஸா வரை. தெற்கே மற்றொன்று கெய்ரோவிலிருந்து சூயஸுக்கும் பிறகு அங்கிருந்து சினாய் தீபகற்பத்தின் குறுக்கே நீண்டு அய்லா கோட்டை மற்றும் அகபா துறைமுகத்துக்கும். 1160ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின்போது ஸலாஹுத்தீன் இப்பகுதிகளைத் தம் சிற்றப்பா ஷிர்குஹ்வுடன் கடந்து வந்தவர். இப்பொழுது அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, எகிப்தின் பாதுகாப்பை பலப்படுத்தி, பரங்கியர்களுக்கு அழுத்தம் அளிக்க முடிவெடுத்தார். அவரது கட்டளைப்படி சினாயின் மேற்கு விளிம்பில் அமைந்திருந்த சாலையில் ஸத்ருக் கோட்டை கட்டப்பட்டது. மற்றொரு விளிம்பில் இருந்த அய்லா கோட்டை? பார்ப்போம். அதற்கு முன் ’தாரும் (Darum)’.
‘தய்ர் அல்-பலஹ்’ (Arabic: دير البلح) ஃபலஸ்தீனில் இன்று துண்டாகக் கிழித்துப் பிரிக்கபட்டுள்ள கஸ்ஸா பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். கஸ்ஸா நகரிலிருந்து தெற்கே 14 கி.மீ. அதன் தொலைவு. ஹிஜ்ரீ ஏழாம் நூற்றாண்டில் பைஸாந்தியர்கள் ’தாரும்’ எனப்படும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அந்த தாருமிற்குள் இந்த தய்ர் அல்-பலஹ் நகரும் அடங்கியிருந்தது. ஹி. 632ஆம் ஆண்டு உஸாமா இப்னு ஸைது (ரலி) தாருமின் மீது படையெடுத்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) கஸ்ஸாவைக் கைப்பற்றிய பின் தாருமும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது.
சிலுவைப்படை காலத்தில் ஜெருசல ராஜா அமால்ரிக் ஃபாத்திமீக்களிடமிருந்து அஸ்கலான் நகரைக் கைப்பற்றிய பின், கி.பி. 1153ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதன் வடக்கே தாருமில் கோட்டை கட்டியிருந்தார். தாரோமின் சிலுவைப்போர் கோட்டை (Crusader fort of Darom) என்ற பெயரை அது சுமந்துகொண்டது. சதுர வடிவிலான நான்கு கோபுரங்களும் கல்லெறி தூர உள்ளவும் கொண்ட சின்னக் கோட்டை. ஆனால் முஸ்லிம்களுக்கு அது பெரிய உபத்திரவமாக அமைந்து விட்டது. ராஜா அமால்ரிக் எகிப்திற்குப் படையெடுக்கும் போதெல்லாம் அதுதான் அவருக்குத் தொடக்கப்புள்ளி. எகிப்திலிருந்து வரும் வணிகர்களிடமிருந்தும் பயணிகளிடமிருந்தும் வரி வசூல் செய்ய, சுங்க இலாகா மையம் தாரும். பின்னர் கி.பி. 1188ஆம் ஆண்டுதான் ஸலாஹுத்தீன் அய்யூபி இதை முற்றிலுமாகக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் 1170ஆம் ஆண்டில் அமைந்தது அதன் முதல் முயற்சி. தாருமை நோக்கிச் சென்றது அவரது தலைமையிலான படை. முற்றுகையிட்டது; தாக்கியது. அதன் பாதுகாவலர்களாக இருந்தவர்களோ வலிமை மிக்க டெம்ப்ளர்கள். எதிர்த்துத் தாக்குப் பிடித்தார்கள். அதற்குள் அமால்ரிக் அவசர அவசரமாக உதவிப்படையை ஜெருசலத்திலிருந்து அனுப்பி வைக்க, எதிர்த்துச் சென்று அவர்களுடன் மோதிவென்று, கஸ்ஸாவைக் கைப்பற்றிவிட்டு, ஸலாஹுத்தீன் எகிப்துக்குத் திரும்பினார்.
அவரது அடுத்த இலக்கானது அகபா துறைமுகம்.
சினாய் தீபகற்பத்தின் மேற்கே சூயஸ் வளைகுடாவும் கிழக்கே அகபா வளைகுடாவும் சூழ்ந்துள்ளன. அவை இரண்டும் சினாயின் தெற்கு முனையில் இணைந்து அங்கிருந்து தொடங்குகிறது செங்கடல். இதில் அகபா வளைகுடாவின் வடக்கு உச்சியில், சினாய் தீபகற்பத்தின் கிழக்கில் உள்ளது அகபா துறைமுகம். அதிலிருந்து 12 கி.மீ. தொலைவில் பாறைகளின்மீது கோட்டை ஒன்று அமர்ந்திருந்தது. ஆங்கிலத்தில் அதன் பெயர் எய்லாத் (Eilat). அரபியில் அய்லா (Ayla).
ஜெருசலத்தைப் பிடுங்கிய சிலுவைப்படை அய்லாவையும் கைப்பற்றி ஆக்கிரமித்திருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அது அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சினாயில் உள்ள புனித காத்திரீன் மடாலயத்திற்குச் செல்லும் யாத்திரீகர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் பரங்கியர்கள் அதைப் பயன்படுத்தினர். சிரியாவும் எகிப்தும் இப்பொழுது ஒன்றிணைந்துவிட்டதால், டமாஸ்கஸுக்கும் கெய்ரோவுக்கும் இடையே வீற்றிருக்கும் அய்லா கோட்டை பல்லிடுக்குத் துணுக்காக, உபத்திரவ முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தது. அந்த ஆபத்து ஸலாஹுத்தீனின் கவனத்தை ஈர்த்தபடி இருந்தது. ஆனால் சினாய் வனாந்திரத்தைக் கடந்து அந்தத் துறைமுகப் பட்டணத்தை எப்படி முற்றுகை இடுவது? கடலில் சூழ்வது?
எகிப்தில் முதலில் படகுகளைக் கட்டினார்கள். பிறகு அதைத் துண்டுகளாகப் பிரித்தெடுத்து அவற்றை ஒட்டகங்களின் முதுகுகளில் சுமையேற்றினார்கள். சினாய் தீபகற்பத்தைக் கடந்து அய்லாவை அடைந்தது படை. அங்கு அந்தத் துண்டுகளைக் கிடுகிடுவென்று ஒன்றிணைத்துப் படகுகளாக்கிக் கடலில் இறக்கினார்கள். 1170ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதி. நில வழியாகவும் கடல் வழியாகவும் அய்லாவைச் சுற்றி வளைத்துத் தாக்கினார் ஸலாஹுத்தீன். பாறைப் பகுதியில் அமைந்திருந்த அய்லாவிற்கு நீர் ஆதாரம் வெளியிலுள்ள நிலப்பகுதி. எனவே அக்கோட்டையினுள் பாதுகாப்புக்கு வெகு சில வீரர்களே இருந்து வந்தனர். பெரிதாக எதுவும் போரிடாமல் அப்படியே அவர்கள் ஸலாஹுத்தீனிடம் சரணடைந்தனர். பரங்கியர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டு முஸ்லிம்கள் வசமாயின அய்லாவும் துறைமுகப் பட்டணம் அகபாவும்.
வர்த்தகத்தில் செழித்த அந்தத் துறைமுகப் பட்டணம் மக்காவிற்குப் பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கு முக்கியமான இடைத்தலம். அதை மீட்டெடுத்தது இஸ்லாத்திற்குக் கிடைத்த முக்கிய வெற்றி என்கின்றார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஜெஃப்ரி ஹிண்ட்லி (Geoffrey Hindley). அது மட்டுமின்றி அது எகிப்திய முஸ்லிம் இராணுவத்தின் மனவோட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்துப் பல்லாயிர அலகு ஊக்கத்தைப் புகுத்தி விட்டது. அத்தனை ஆண்டுக் காலமாகத் தங்களது எல்லைகளைத் தற்காத்துக் காப்பாற்றினால் போதும் என்று திருப்திப்பட்டுக் கிடந்த படை இப்பொழுதுதான் முற்கொண்டு தாக்கும் நிலைக்கு உயர்ந்தது, அதுவும் எதிரியின் எல்லைக்குள் ஊடுருவித் தாக்கி வெற்றியடைந்தது அவர்களுக்கு எக்கச்சக்க உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது.
oOo
எகிப்தின் வெளியே ஸலாஹுத்தீன் ஜிஹாதை முன்னெடுத்த அதே வேளை, எகிப்தின் உள்ளே வழிகேடான ஷிஆ மரபு முறையைப் பலவீனப்படுத்தி நீக்கும் முயற்சியையும் மேற்கொண்டார். முஹம்மது இப்னு மஹ்ரஸ் அல்-வஹ்ரானி (Rukn al-Din Abu Abdullah Mohammed ibn Mahrez ibn Mohammed al-Wahrani al-Maghribi) என்பவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். அவரது பூர்விகம், மக்ரிபு (المغرب العربي) எனப்படும் இன்றைய மொராக்கோ. எகிப்திற்கு இரண்டு முறை பயணம் சென்றவர். அவர், ஸலாஹுத்தீன் அய்யூபியின் அம்முயற்சியைப் பாராட்டிக் குவித்துள்ளார். ‘இஸ்லாம் முழுமையடையும் வரை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கம் நிறைவேறும் வரை, வழிகெட்ட கண்டுபிடிப்புகளை அவர் அணைத்தொழித்தார்’ என்று எழுதி வைத்துள்ளார் அந்த எழுத்தாளர்.
தமது பதவியில் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவேற்றிய ஸலாஹுத்தீன், நூருத்தீனைப் பின்பற்றி மக்களுக்கான இஸ்லாமிய நலத் திட்டங்களை முன்னெடுத்தார். கெய்ரோவிலும் ஃபுஸ்தத் புறநகரிலும் ஸன்னி சட்டத்துறை மையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டன. இஸ்லாமியச் சட்டத்திற்குப் புறம்பான வர்த்தக வரிவிதிப்புகள் ஒழிக்கப்பட்டன. விசாரணை என்ற பெயரில் ஃபாத்திமீ காவலர்கள் தாம் விரும்பியவர்களைக் கைதிகளாக்கி முறைகேடாக விசாரிக்கும் கூடம் ஒன்று கெய்ரோவின் பழைய நகரில் இருந்தது. அதன் பெயர் தாருல் மஉனா (Dar al-Ma’una). தமிழில் ’உதவும் கரங்கள்’. அது இடிக்கப்பட்டு இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் வழித்துறையைச் சேர்ந்த மதரஸா கட்டப்பட்டது. ஃபாத்திமீக்களின் Hall of Justice எனப்படும் நீதி மன்றமும் மதரஸாவாக மாற்றப்பட்டது. ஸலாஹுத்தீனின் சகோதரர் மகன் தகீயுத்தீன் தம் பங்கிற்கு, மனாஸில் அல்-இஸ் (Manazil al-Izz) (Abodes of Glory) ’கண்ணியத்தின் உறைவிடம்’ எனப்படும் ஃபாத்திமீக்களின் உல்லாச மாளிகையை விலை கொடுத்து வாங்கி அதையும் ஒரு மதரஸாவாக மாற்றினார்.
கெய்ரோவின் ஷிஆ காழீ நீக்கப்பட்டு, ஸன்னி முஸ்லிம் காழீ (நீதிபதி) நியமிக்கப்பட்டார். எகிப்து முழுவதும் பரவலாக ஸன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். அலெக்ஸாந்திரியாவில் ஸன்னி முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஷிஆ ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்த சட்டங்கள் எல்லாம் இரத்துச் செய்யப்பட்டன.
இவ்விதம் வழிகேடுகளை நீக்கி நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றும் உரிய மாற்றங்களை ஸலாஹுத்தீன் மெதுமெதுவே நிகழ்த்தி வந்த வேளையில் நூருத்தீனிடம் இருந்து அவருக்கு ஒரு மடல் வந்தது. கடுமையாகவும் அது அமைந்திருந்தது. அதையடுத்து நிகழ்ந்த மாற்றம் இஸ்லாமிய வரலாற்றின் முக்கியத் திருப்புமுனை.
அது…
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 10 மார்ச் 2024 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License