‘அக்கடா’ என்று அமர்ந்து வாட்ஸப்பில் வந்திருந்த வீடியோக்களைப் அன்பரசு பார்க்க ஆரம்பித்தபோது, அவசரமாகக் கதவைத் திறந்து, மூவரை அழைத்துக்கொண்டு நுழைந்தான் சீயான். அவனது ஊழியன். விக்ரமின் தீவிர ரசிகன். அவனுடன் வந்த மூவரும் 1970களின் சினிமா கதாபாத்திரங்கள் போல் இருந்தனர். 67 வயது மதிக்கத்தக்கவர் முன் வழுக்கையும் கண்ணாடியுமாக வி.எஸ்.ராகவன் போல் இருந்தார். இளைஞனாக இருந்தவனுக்கு நினைத்தாலே இனிக்கும் கமல்ஹாசனைப் போல் தலைமுடி. பூ டிஸைனில் சட்டை, பெல்பாட்டம் பேண்ட். டக்-இன் செய்து பெரிய பட்டை பெல்ட் . மூன்றாமவள் பெண். அன்பரசு வாய் பிளக்கும் அளவிற்கு அழகாக இருந்தாள். அவளது உடையும் அலங்காரமும் அந்தக் காலத்து மாடர்ன் டிரஸ் அணிந்திருக்கும் ஶ்ரீப்ரியாவை நினைவுறுத்தின.
அன்பரசு விழி விரிய அவர்களைப் பார்த்துவிட்டு, சீயானிடம் திரும்பினால், “அண்ணே! இவங்க பிரச்சினையை என்னான்னு கேளுங்களேன்” என்றான். உதட்டோரம் நமட்டுப் புன்னகை தெரிந்தது.
சென்னையில் முக்கியத் தலம் ஒன்றில் ஐந்து மாடிக் கட்டடங்கள் இரண்டின் சொந்தக்காரன் அன்பரசு. தன் ஒரே மகனான அவனுக்கு அவற்றை எழுதி வைத்துவிட்டு, அவனுடைய அப்பா மாரடைப்பில் மரணமடைந்து விட்டார். வரும் வாடகைக்கு உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற அவனது நப்பாசை நிறைவேறவில்லை. வீட்டில் மனைவியின் ஏவல்கள் அவனது உல்லாசத்திற்குப் பெரும் இடைஞ்சலாக இருந்ததால், ‘உத்தியோகம் புருஷ இலட்சணம்’ என்றொரு தத்துவத்தை உதிர்த்துவிட்டு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையும் பைகிராப்ட்ஸ் சாலையும் இணையும் இடத்தில் ஓர் அலுவலகத்தைத் திறந்து உட்கார்ந்து விட்டான்.
இரண்டு கணினிகள். ஊழியர்கள் இருவர். ஆன்லைனில் பில் கட்டுவது, பஸ், இரயில் டிக்கெட்டுகள் வாங்கித் தருவது, யாரேனும் தட்டச்சு செய்து கேட்டால் DTP வேலை என்ற உதிரித் தொழில். செலவைச் சமாளிக்கும் அளவு வருமானம் வந்தது. மனைவியின் இடிசொல் இன்றி செல்ஃபோனில் விழுந்து கிடக்க அவனுக்குத் தேவை தொந்தரவற்ற பொழுது. அது அலுவலகத்தில் அவனுக்குக் கிடைத்தது.
அன்று வழக்கம் போல் காலையில் கடையைத் திறந்து, ஏஸியை முடுக்கிவிட்டு, பூக்காரக் கிழவி தந்த சரத்திலிருந்து கவனமாக இரண்டே இரண்டு பூவை மட்டும் எடுத்து இரண்டு காதிலும் வைத்துக்கொண்டு சரத்தை மேசையின் ஓரமாக வைத்து விட்டு அக்கடா என்று அவன் அமர்ந்தபோதுதான் அவர்கள் நுழைந்தார்கள்.
“சார்! என் பெயர் ராகவானந்தம். டாக்டர் ராகவானந்தம்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் வி.எஸ்.ராகவனைப் போல் இருந்தவர். “அவள் என் மகள் மாலதி. பையன் அவளுடைய நண்பன்”
சீயான் மூன்று நாற்காலிகளை ‘கரகர’ என்று இழுத்துவந்து போட்டான். “நல்லது உட்காருங்கள்” என்று கையை காட்டிவிட்டு, “நீங்க வந்தது நல்லதாப் போச்சு. ஒரு வாரமா தொண்டையில் வலி டாக்டர்” என்றான்.
“மிஸ்டர்…. ?”
“என் பெயர் அன்பரசு டாக்டர்”
“மிஸ்டர் அன்பரசு. நீங்கள் தப்பாகப் புரிந்து விட்டீர்கள். நான் இன்ஃப்ளூயென்ஸா டாக்டரல்ல. நான் டாக்டர் பட்டம் வங்கியது நியூக்ளியர் ஃபிஸிக்ஸில்”
“நியூக்ளியர்? அப்ப நரம்பு டாக்டரா?”
“நீங்க சொல்றது நியூராலஜி. இவர் விஞ்ஞானிங்க” என்று குறுக்கிட்டான் இளைஞன்.
“அட! நம்ம அப்துல் கலாம் ஐயா போல. ராக்கெட் விடுவீங்களா?”
“அண்ணே! உங்க கேள்வியை அப்புறம் வெச்சுக்குங்க. அவங்க பிரச்சினையை மொதல்ல கேளுங்க” சுவரோரம் இருந்த மற்றொரு மேசையில் ஏறி காலைத் தொங்கப் போட்டபடி பேசினான் சீயான்.
“நாங்க வழி தவறி இங்கே வந்துட்டோம். வழி தவறின்னா ரொம்ம்ம்ப தூரம். எல்லாம் இந்த ஸில்லி ஸ்டுபிட் கேர்ல் செய்த வேலை” என்று படபடத்தார் டாக்டர்.
“அதற்கென்ன? எங்கே போகனும்னு சொல்லுங்க. ஆன்லைன்ல டிக்கெட் போட்டுடலாம்”
சுவரில் தொங்கிய கேலண்டரைப் பார்த்தபடி, “மிஸ்டர் அன்பரசு! எப்படி புரிய வைப்பேன். சுருக்கமாகச் சொல்றேன். நாங்க கிட்டத்தட்ட நாற்பத்து சொச்ச வருஷம் தள்ளி இங்கே வந்துட்டோம். டைம் டிராவல். கேள்விப்பட்டிருக்கிங்களா?”
“அதான்னே! மார்க் ஆண்டனி படத்துல விஷாலும் சூர்யாவும் முன்னே பின்னே போவாங்களே அப்படி” என்றான் சீயான்.
“என்னாது?” என்று விழிகளை அகல விரித்தான் அன்பரசு.
“ஆப்பிள் சைஸில் உலோகப் பந்து. இந்தப் பெண் தொலைத்து விட்டாள். நாங்கள் இங்கு மாட்டிக்கொண்டோம். அது கிடைத்தால் போதும். நாங்கள் எங்கள் காலத்திற்குப் போய்விடுவோம்”
“மெட்டல் பால்? சீயான் புதுப்பேட்டைல் நம்ம பாய் கடைல விசாரிச்சு வாங்கிக்கொடேன்”
“இருங்க! கொஞ்சம் விபரமாச் சொல்றேன்” என்று அந்து இளைஞன் ஆரம்பித்தான். “அது டைம் மெஷின் பந்து. மேலே நம்பர்லாம் வெச்சிருக்கும். டாக்டர் கண்டுபிடிச்சது. டெஸ்ட் பண்ணலாம் என்று 2024 தட்டி இங்கே வந்துட்டோம். ராகவேனியம் 277 என்கிற எலிமெண்ட் போல் இதுவும் கணக்குல தப்பியிருக்கும்னு நான் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா இது வேலை செஞ்சுடுச்சு.”
“இந்த முட்டாள் பெண் இப்படித் தவறவிடுவது இது இரண்டாவது முறை. முன்னாடி ராகவேனியம் 277 வில்லையைத் தொலைத்து பெரிய டிஸாஸ்டர்லேருந்து தப்பிச்சோம்”
இழுத்து மூச்சு விட்டு, அவர்களை வெறிக்கப் பார்த்தான் அன்பரசு. காதுகளில் செருகியிருந்த பூவை எடுத்து மேசையில் போட்டுவிட்டு, “டாக்டர் ராகவன். அதென்ன ராகவேனியம் 277? இது என்ன டைம் மெஷின் பந்து?” என்று கேட்டான்.
“ராகவன் இல்லை. டாக்டர் ராகவானந்தம். நீங்கள் எங்களை நம்பவில்லை என்று தெரிகிறது. ராகவேனியம் 277 நான் அப்போ புதிதாக ஸின்தஸைஸ் பண்ணித் தயாரித்த எலிமெண்ட்.”
“ஊறுகாயா?” என்று கேட்டான் சீயான்.
டாக்டர் தன்னுடன் வந்த இளைஞனிடம் திரும்பி, “பையா! உன்னை மாதிரியே இந்தப் பையனும் கேட்கிறான் பார்” என்று சொல்லிவிட்டு சீயானிடம், “அது ஒரு ரேடியோ ஆக்டிவ் எலிமெண்ட். நான் முனைந்து ஆராய்ச்சி பண்ணி உருவாக்கினது. வெடித்தால், வீடு போய்விடும். இந்தச் சென்னை நகரம் போய்விடும். இந்த மாநிலம் போய்விடும். இந்தத் தேசம், என் கணக்கில் தப்பவில்லை என்றால் உலகமே….”
“ஐயோ!” என்றான் அன்பரசு.
“அதை நான் தொலைத்துவிட்டேன். வெடிக்கப் போகுது உலகம் அழியப் போகுதுன்னு இவர் படுத்தின பாட்டுக்கு, பேயா திரிஞ்சு. அதைக் கடைசியில் கண்டுபிடித்து வந்தால் ‘புஸ்’ என்று ஆகிவிட்டது. எப்ஸிலான் டு தி பவர் ஆஃப் ஆஃல்பா ப்ளஸ்–க்கு பதிலாக ஆல்ஃபா மைனஸ் எக்ஸ் என்று எடுத்துக்கொண்டுவிட்டேன் போலிருக்கிறது. கணக்கில் தப்பு என்று ஸிம்பிளாகச் சொல்லிவிட்டார் அப்பா” என்றாள் மாலதி.
“அந்த அனுபவத்தை நாங்க சுஜாதாவிடம் சொல்லி அவர் அதைக் கதையாகக் கூட எழுதினாரே. வேணும்னா அவரிடம் போன் போட்டுக் கேளுங்கள்” என்றார் டாக்டர்.
“நடிகை சுஜாதா மேடமா? அவங்க கதை எழுதினாங்களா?” என்றான் அன்பரசு.
“ஐயோ அண்ணே! இது ரைட்டர் சுஜாதா”
“உனக்கு எப்படிடா தெரியும்?” என்று சீயானை முறைத்தான் அன்பரசு.
“இந்தியன்-2 விமர்சனத்துல டைரக்டர் ஷங்கரை எல்லாரும் கலாய்ச்சிருந்தாங்களே. நீங்க யூடியூப்ல பார்க்கலியா?” என்று சொல்லிவிட்டு, டாக்டரைப் பார்த்து, “சுஜாதா ஸார் இறந்துட்டாருங்க” என்றான் சீயான்.
‘த்சொ.. த்சோ’ என்று வருத்தப்பட்டார் டாக்டர். “எங்களுக்கு நல்ல பழக்கம். பிரமாதமான ரைட்டர். அவர் எழுதின காயத்ரி நாவலை புதுப் பையன் ரஜினியைப் போட்டு படமெல்லாம் எடுத்தாங்க”
“இப்போ ரஜினி தாத்தாவாகிட்டாருங்க. ஆனாக்க, படத்துல ஹீரோவாத்தான் இருக்காரு! இப்பக்கூடப் புதுசா வேட்டையன் வருது. டிரைலர் பாக்குறீங்களா?” பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுத்தான் சீயான்.
“ருத் என்றொரு ஸ்டாஃப் இருக்காரு. ரெண்டு நாளா அவரு லீவு. அவரு தாங்க ரொம்பப் படிப்பாரு. சுஜாதாவைப் பத்தி அவருக்குத்தாங்க தெரிஞ்சிருக்கும்” என்று குறுக்கிட்ட அன்பரசு, “அந்த வில்லை கதை சரி. இந்த உலோகப் பந்து என்ன மேட்டர்? எப்படி தொலைஞ்சது?” என்று விட்ட இடத்திற்கு வந்தான்.
“அதான் சொன்னேனே. டாக்டர் ஸார் லேபில் அமர்ந்திருந்தோம். தன் ஆராய்ச்சி சக்ஸஸ் என்று டாக்டர் நம்பினார். எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. மாலதிதான் அதில் எண்களைத் தட்டினாள். இந்த வருஷத்திற்கு வந்துவிட்டோம்.”
“சரி வந்துட்டீங்க. உங்களை சந்திச்சது சந்தோஷம். திரும்பவும் நம்பரைத் தட்டி உங்க வருஷத்துக்குப் போயிடுங்க”
“அதாங்க பிரச்சினை. ரத்னா கஃபேயில் நாங்க மூன்று பேரும் மசாலா தோசையும் காஃபியும் சாப்பிட்டுவிட்டு, பில் கொடுக்கும் முன் பாத்ரூமிற்குள் போன மாலதி கைப்பையை மறந்துட்டு வந்துட்டாள். அதில்தான் அந்தப் பந்து இருந்தது. உடனே ஓடிப் போய்ப் பார்த்தால் பை இருக்கு அதில் பந்து இல்லே”
“அதாவது நோ பால்?”
“ஆமாம் மிஸ்டர் அன்பரசு! அந்த டைம் மெஷின் பந்தை மட்டும் யாரோ களவாடிட்டாங்க” என்று கவலையுடன் பேசினார் டாக்டர்.
“ஹோட்டல்லே கேட்டீங்களா?”
“கேட்டோம். இப்போ புதுசா ஏதோ சிசிடிவி கேமரா எல்லாம் வெச்சிருக்காங்களாமே. அதில் பார்த்ததில் யாரோ ஒரு பெண் சேலைக்குள் எதையோ மறைத்தபடி வெளியேறிச் சென்றது தெரிகிறது. அவர் யாரோ ஒரு கஸ்டமர் என்கிறார்கள்”
இவர்களை நம்புவதா, கூடாதா? ஏதும் டுபாக்கூர் களவாணிகளோ என்ற சிந்தனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தான் அன்பரசு. “இப்போ ஆப்பிள் வாட்ச் எல்லாம் வந்திருக்கு! அதில் ஏதும் ஆப் டவுன்லோட் பண்ணி உங்க வருஷத்துக்குப் போக முடியுமான்னு ட்ரை பண்றீங்களா? வேணும்னா கூகுளைக் கேட்போம்”
“ஆப்பிள் வாட்ச்? கூகுள் யார்? நீங்க ஏதோ புதுசாச் சொல்றீங்க. அதெல்லாம் எங்களுக்கு வொர்க் ஆவாதுங்க” என்றாள் மாலதி.
“நாம அப்பவே கல்யாணம் கட்டியிருந்தா இப்போ நாற்பது வயசுல் பையனோ, பொண்ணோ இருந்திருப்பாங்க. அவர்களை சந்தித்திருக்கலாம். நீதான் தாமதப்படுத்திட்டே” என்று அவளிடம் கிசுகிசுதான் இளைஞன்.
“பையா! உனக்கு இப்ப அந்த ரொமான்ஸ்தான் முக்கியமா?” என்றார் டாக்டர்.
“ஒரு ஐடியா!” என்று குதித்தான் இளைஞன்.
“சொல்” என்று அவசரப்படுத்தினார் டாக்டர்.
“உங்களுடைய தத்துவங்களைப் பழித்துக்கொண்டே உங்களுக்குப் போட்டியா ஆராய்ச்சியில் இருந்தாரே உங்க ஃப்ரெண்ட், அவர் எந்த ஏரியா?”
“ம்ம்ம்” என்று நெற்றியைத் தட்டிவிட்டுக்கொண்டு, “மியூஸிக் அகாடமி பக்கத்துலே புதுப்பேட்டை கார்டன் தெரு” என்று நினைவு.
“அவர் ஆள் வைத்து நம்மைப் பின் தொடர்ந்து அந்தப் பந்தை கடத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவரைப் போய்ப் பார்த்தால்?”
“யெஸ்! ஐ திங்க் ஸோ. மிஸ்டர் அன்பரசு எங்களுக்கு அங்குப் போக ஆட்டோ பிடித்துத் தரச் சொல்லுங்கள்” என்றார் டாக்டர் ராகவானந்தம்.
அவர்கள் சொன்னது எதுவும் புரியவில்லை என்றாலும், இந்த ரோதனை தீர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான் அன்பரசு, “டேய் சீயான்! இவர்களுக்கு மியூஸிக் அகாடமிக்கு ஆட்டோ புடிச்சு அனுப்பி வை”
“ரொம்ப தேங்க்ஸ். மிக்க நன்றி” என்று மூவரும் விடைபெற்றார்கள்.
பிறகு சீயானிடம், “ஏதும் பழைய சினிமா போஸ்டர்லேருந்து அவர்களைக் கிழிச்சு எடுத்தாந்தியா என்ன? காலங்கார்த்தால என்னடா இது?” என்றான்.
“அவங்கள பார்க்க வித்தியாசமாவும் சொன்ன மேட்டர் தமாஷாவும் இருந்துச்சுன்னே. அதான் டைம் பாஸுக்குக் கூட்டியாந்தேன்”
“நல்லா புடிச்சே போ”
oOo
மறுநாள் லீவு முடிந்து ஆபீஸுக்கு வந்திருந்தான் ருத். மும்முரமாகக் கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தவனை நெருங்கினான் சீயான். அன்பரசு வாட்ஸப் வீடியோவில் மூழ்கியிருந்தான்.
“ருத்து! நேத்து சாயந்தரம் ஃபோன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு. ஆதி கேசவலுவுக்குப் புது வேலை கிடைச்சதுக்கு பிலால்லே ட்ரீட் கொடுத்தான். உன்னயும் கூப்பிடச் சொன்னான்”
“அது டிராமா பாக்கப் போயிருந்தேன் சீயான். ஃபோன் ஆஃப் பண்ணியிருந்தேன்”
“என்ன டிராமா?”
“ரைட்டார் சுஜாதா ஸார் பத்திச் சொல்வேனே தெரியுமா? அவருடைய ஐந்து விஞ்ஞானக் கதைகளை டிராமாவா இந்த வாரம் நடத்துறாங்க. நேத்து ராகவேனியம் 277. சேலத்து காலேஜ் பசங்க – ரெண்டு பாய்ஸும் ஒரு பொண்ணும். தத்ரூபம். கலக்கிட்டாங்க”
அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்த அன்பரசு கேட்டான். “டிராமா எங்கே நடக்குது?”
“மியூசிக் அகாடமியில்!”
-நூருத்தீன்
(சொல்வனம் இணைய இதழில் அக்டோபர் 27, 2024 வெளியானது)
Image: AI Generated
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License