77. தெற்கும் மேற்கும் ஸலாஹுத்தீனின் படையெடுப்பும்
அல்-மாலிக் அல்-நாஸிர் ஸலாஹுத்தீன் அபுல்-முஸஃப்பர் யூஸுஃப் இப்னு அய்யூப் இப்னு ஷாதி. வஸீர் ஸலாஹுத்தீன், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தபின் அவருக்கு வந்த சேர்ந்த முழு நீளப் பட்டப் பெயர் அது. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் அந்தப் பட்டத்துடன்தான் அவரைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஸலாஹுத்தீனோ தமக்கு மன்னர் என்ற பட்டத்தை வரித்துக் கொண்டதே இல்லை. இயல்பாகவே அவரது சுபாவம் தன்னடக்கம் என்கின்றது வரலாறு.
ஸலாஹுத்தீன் எகிப்தின் அதிபதியாக உயர்ந்தது ஐரோப்பிய அரங்கிலும் கவனத்தை ஈர்த்தது. ஜெர்மன் சக்கரவர்த்தி ஃப்ரெட்ரிக் பார்பரோஸா (Emperor Frederick Barbarossa of Germany) நட்புறவு தூதுக் குழுவைக் கெய்ரோவுக்கு அனுப்பினார். சிறப்பு மிக்க அன்பளிப்புகள் ஏராளம் வந்தன. சுமுகமான சூழல் தோன்றியது; கூடவே வதந்தியும் பரவியது. சக்ரவர்த்தி ஃப்ரெட்ரிக்கின் மகளுடன் ஸலாஹுத்தீனின் மகனுக்குத் திருமணம் நிகழலாம் என்ற வதந்தி. 1188ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ஃப்ரெட்ரிக் மூன்றாம் சிலுவை யுத்தத்துக்காகச் சிலுவையை ஏந்தியதும் முறிந்தது அந்த நட்புறவு.
நூருத்தீனின் தாக்கம் ஸலாஹுத்தீனுக்கு மிக அதிகம் அமைந்திருந்தது. இருவரிடமும் செயலாளராகப் பணியாற்றிய இமாதுத்தீன் அல்-இஸ்ஃபஹானி, நூருத்தீனின் குணங்களையே ஸலாஹுத்தீன் தமக்கான மாதிரியாக அமைத்துக்கொண்டார்; அவருடைய கருத்தியலையே தாமும் பின்பற்றினார் என்று எழுதி வைத்துள்ளார். ஸலாஹுத்தீன் சிறுவராக இருந்தபோது அவருடைய தந்தையும் சிற்றப்பாவும் நூருத்தீனுக்கு நிறைவான விசுவாசத்துடன் சேவையாற்றியவர்கள். அவரது அவையில் அவரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் ஸலாஹுத்தீன். அது முதன்மையான காரணமாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இருவரும் இரு வேறுபட்ட சுபாவத்தினர்.
நூருத்தீன் ஆழ்ந்த சிந்தனையாளர். அவருக்கு ஹதீஸ்களைச் சேகரிப்பதிலும் வாசிப்பதிலும் பேரார்வம். ஸலாஹுத்தீன் அவ்விஷயத்தில் நூருத்தீனின் அளவிற்கு முனைப்புடன் இருந்ததில்லை என்றபோதும் இஸ்லாமிய ஸன்னி மரபுவழிக் கொள்கைகளைக் கடைபிடிப்பதில் அப்பழுக்கற்றவராக இருந்தார். மார்க்க அறிஞர்கள் மீது இருவருக்கும் மட்டற்ற மரியாதை இருந்தது. இருவர் மனத்திலும் துறவறத்தை ஒட்டிய ஸூஃபிஸத்தனமான எளிமை அவர்களைப் போர்த்தியிருந்தது. ஆயினும் நூருத்தீனிடம் ஒருவிதக் கடுமை இருந்தது. ஸலாஹுத்தீனின் இயற்கை குணமோ கருணை, மென்மை. அதன் விளைவாக அவ்வப்போது விழிகளை ஈரமாக்கும் கண்ணீர். அவையாவும் போக, இருவரிடமும் ஒன்றே போல் குடிகொண்டிருந்தது சிலுவைப்படையினருக்கு எதிரான ஜிஹாது வேட்கை.
oOo
தந்தை நஜ்முத்தீனுக்கு ஏற்பட்ட விபத்தை முன்னிட்டு எகிப்துக்குத் திரும்பிய ஸலாஹுத்தீன் அதையடுத்து ஓய்ந்துவிடவில்லை. மேற்குத் திசையில் வட ஆப்பிரிக்காவுக்கும் தெற்கே யெமனுக்கும் அவரது படைகள் முன்னேறின; அதற்கான கட்டாயமும் ஏற்பட்டிருந்தது. அதைக் கீழே பார்ப்போம். அதற்கு முன் சிலரது பெயர்களின் அறிமுகம் செய்துகொள்வோம்.
தம் உடன்பிறப்புகளை நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தியிருந்த ஸலாஹுத்தீன், அவர்களது தலைமையில்தான் படைகளை அனுப்பினார். சிலரது பெயர்களை முந்தைய அத்தியாயங்களில் நாம் தாண்டி வந்திருந்தாலும் இவ்வரலாற்றில் அவர்களது பங்களிப்பைத் தேவைக்கேற்ப விரிவாகக் காணப்போவதால் இங்குச் சுருக்கமாக அவர்களது பெயர்களையும் உறவுமுறைகளையும் முறைப்படித் தெரிந்து கொள்வோம்.
ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபிக்குப் பல பிள்ளைகள். அவர்களுள் நூருத்தீன் ஷாஹின்ஷா என்பவர் மூத்த மகன். கி.பி. 1148ஆம் ஆண்டே அவர் மரணமடைந்துவிட்டார். அவருடைய மகனே தகீயுத்தீன். முந்தைய அத்தியாயத்தில், ‘மன்னர் நூருத்தீன் எகிப்துக்குப் படையெடுத்து வந்தால் போரிடுவோம்’ என்று ஸலாஹுத்தீனுக்கு ஆலோசனை கூறினாரே, அந்தத் தகீயுத்தீன். அவரது முழுப் பெயர் அல்-முளஃப்பர் தகீயுத்தீன் உமர்.
நஜ்முத்தீனின் மற்றொரு மகன் ஷம்ஸுத் தவ்லா தூரான்ஷா. இவரும் ஸலாஹுத்தீனுக்கு மூத்தவரே. தம்பி ஸலாஹுத்தீனின் ஆட்சியை வலுப்படுத்தப் பெரிதும் உதவிகரமாகத் திகழ்ந்தவர்.
ஸலாஹுத்தீனின் தம்பி ஸைஃபுத்தீன் அபூபக்ரு. வரலாற்றில் இவரது பெயர் முதலாம் ஆதில். ஸலாஹுத்தீன் எகிப்திலிருந்து நகர்ந்து சிலுவைப்படையினருக்கு எதிரானத் தமது அடுத்தடுத்த ஜிஹாதுகளில் மும்முரமாக இறங்கியபோது, எகிப்தின் ஆட்சியை நிர்வகித்தவர் இவர்தாம்.
மற்றொரு தம்பி, ஸைஃபுல் இஸ்லாம் துக்தகீன் அஹ்மது. இப்போதைக்கு இவர்கள் போதும். வட ஆப்பிரிக்காவுக்கும் யெமனுக்கும் சென்ற படைகளைப் பின் தொடர்வோம்.
oOo
நுபியா! அக்காலத்தில் இப்பெயருடன் திகழ்ந்த நிலப்பரப்பு இன்றைய எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே பிரிந்து கிடக்கும் பகுதியாகும். எகிப்திலுள்ள அஸ்வான் பிராந்தியத்தின் தெற்கில் நைல்நதி, நுரைநீராக மாறுகின்றது. அங்கிருந்து, சூடானின் ஃகர்தூம் நகரில் வெள்ளை நைல்நதியும் நீல நைல்நதியும் சங்கமமாகும் முனைவரை அமைந்திருந்த பகுதியே நுபியா. அங்கு கிறிஸ்தவர்கள் ஆட்சியில் இருந்தனர். ஃபாத்தீமீக்களுடன் இணக்கமாக இருந்த அவர்கள் சுல்தான் ஸலாஹுத்தீனைக் கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். நூருத்தீனுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையே மனத்தாங்கல்; ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கின்றார்கள்; இதுவே சரியான தருணம் என்று அவர்கள் அஸ்வான் மீது படையெடுத்தனர்.
எகிப்துக்குத் தெற்கிலிருந்து எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நுபியாவைத் தம் வசமாக்கும் எண்ணமும் ஸலாஹுத்தீனுக்கு இருந்துவந்தது. அதற்கேற்ப நுபியர்களும் போருக்குத் தயாரானதும் ஸலாஹுத்தீனின் படை அவருடைய அண்ணன் ஷம்சுத் தவ்லா தூரான்ஷா தலைமையில் அதை எதிர்த்துக் கிளம்பியது. அஸ்வானுக்கு வடக்கே நைல் அருகே உள்ள ஃகுஸ் பகுதியில் பாடி இறங்கியது. அந்த எதிர் நடவடிக்கையை நுபியர்கள் எதிர்பார்க்கவில்லையோ, என்னவோ, சமாதானம் பேசத் தூதுவர்களை அனுப்பினர். பதிலுக்கு இரண்டு ஜோடி அம்புகளை அனுப்பினார் தூரான்ஷா. கூடவே சுருக்கமாக அச்சுறுத்தும் செய்தியும். “இவையன்றி உம்முடைய ராஜாவுக்கு வேறு பதில் என்னிடம் இல்லை என்று தெரிவிக்கவும்”
ஹி. 568 / கி.பி. 1173. களமிறங்கினார் தூரான்ஷா. இப்ரீம் என்றொரு கோட்டை முற்றுகை இடப்பட்டது; கைப்பற்றப்பட்டது. நுபியர்கள் கைதுசெய்யப்பட்டனர். போர் வெகுமானமாகச் செல்வம் ஏராளம் குவிந்தது. தெற்கே இவ்விவகாரம் ஒருபக்கம் நடைபெற்ற நேரத்தில் எகிப்தின் மேற்கே வட ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளுக்கு ஸலாஹுத்தீனின் மற்றொரு படைப் பிரிவு அணிவகுத்தது. அதற்குத் தலைமை வகித்தவர், தகீயுத்தீனின் மம்லூக் ஷர்ஃபுத்தீன் கரகுஷ். அது விறுவிறுவென்று முன்னேறி திரிப்போலியைக் கைப்பற்றியது. மத்தியதரைக்கடலின் முக்கியமான கடலோரப் பகுதிகளை மீட்டபடி மேலும் மேற்கே நகர்ந்து துனிஷியாவிற்குள் நுழைந்தது, காபிஸ் வரை வென்றது.
அவ்வெற்றிகள் எல்லாம் எகிப்திய இராணுவத்திற்கும் கடற்படைக்கும் புதிய வருவாயை ஈட்டித் தந்தன. எகிப்தியக் குடிமக்களுக்கோ ஸலாஹுத்தீனின் மீதான அபிமானத்தை மேலும் மேலும் உயர்த்தின. இதையடுத்து தெற்கே மற்றொரு பிரச்சினை கிளம்பியது. அது ஸலாஹுத்தீனின் கவனத்திற்கு வந்தது.
யெமனில் ஸபீத் என்றொரு நகரம். அது மேற்குக் கடற்கரையில் செங்கடல் ஓரம் அமைந்துள்ளது. பண்டையப் பட்டணமான ஸபீதில் நபித் தோழர் அபூமூஸா அல்-அஷ் அரீ (ரலி), ’அல்-அஷாயிர்’ என்றொரு பள்ளிவாசலைக் கட்டியிருந்தார். அது இஸ்லாமிய வரலாற்றின் ஐந்தாவது பள்ளிவாசலாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்நகர் பல வமிசங்களின் கைமாறி, கி.பி. 1158ஆம் ஆண்டு மஹ்தீத்கள் என்ற வமிசத்தின் வசம் வந்து சேர்ந்தது. முஹம்மது நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு உருவாகிய பிழை ஞானக் கூட்டமாகிய கவாரிஜ்களைப் போன்றவர்களே இந்த மஹ்தீத்கள் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.
அவ்வமிசத்தைத் தோற்றுவித்த அலீ இப்னு மஹ்தி மரணமடைந்த பின் அவருடைய மகன் அப்துந் நபி என்பவன் ஆட்சிக்கு வந்தான். ஃபாத்திமீக்களுடன் தொடர்புடைய அப்துந் நபி, ஷிஆ கொள்கையாளனாகக் கருதப்பட்டான். வெறி கொண்ட கொள்ளையனான அவனது இலட்சியம் உலகைத் தன் வசமாக்கி ஆள்வது. ‘மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மஹ்தி நான்’ என்று சுய அறிவிப்புச் செய்துவிட்டு, அப்பாஸிய கலீஃபாவின் பெயரை ஜும்ஆ குத்பாவில் இருந்து நீக்கிவிட்டான். தன்னுடைய தந்தையின் மண்ணறை மீது பெரியதொரு குவிமாடத்தைக் கட்டி எழுப்பி, மக்கள் அதற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டால் போதும், ஹஜ்ஜுக்குச் செல்லத் தேவையில்லை என்று கட்டளை வேறு.
ஸன்னி முஸ்லிம்களுக்கும் அப்பாஸிய கலீஃபாவுக்கும் எதிராக அப்துந் நபியின் விவகாரம் உருவானதுமே அரசியல் ரீதியாக விரைந்து தீர்க்க வேண்டியது முன்னுரிமை பெற்றுவிட்டது. அது ஒருபுறமிருக்க, புவியியல் ரீதியாகவும் யெமனைத் தம் வசமாக்குவது ஸலாஹுத்தீனுக்கு முக்கியமானதாக இருந்தது. அங்கிருந்த ஏடன் நகரம்தான் இந்தியா, ஸன்ஜ் (கிழக்கு ஆப்பிரிக்கா), அபீஸினியா, ஓமன், கெர்மான், கிஷ், பாரசீகம் எனப் பல நாடுகளுக்கும் துறைமுக வாயில். மட்டுமின்றி, அது வசமானால்தான் செங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பரங்கியர்களுக்கும் அபிஸீனிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே இணக்கமும் கூட்டணியும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இல்லையெனில் வடக்கே மத்தியதரைக் கடலில் பரங்கியர்களுக்கும் தெற்கே செங்கடலில் அபிஸீனியர்களுக்கும் இடையே ஸலாஹுத்தீன் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருந்தது.
இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஸலாஹுத்தீனின் இராணுவ நடவடிக்கை யெமனின் மீது பாய மற்றொருவனும் மும்முரமாகச் செயல்பட்டான். அவன் பெயர் உமாரா. ஃபாத்திமீ அவைக் கவிஞனாக இருந்த அவன் யெமனைச் சேர்ந்தவன். எகிப்தில் இருந்த அவன் ஸலாஹுத்தீனின் சகோதரர் ஷம்ஸுத் தவ்லா தூரான்ஷாவிடம் அவர் யெமனுக்குப் படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று தூண்டியபடி இருந்தான். அதில் உள்பொதிந்திருந்தது வஞ்சகம். அது விரிவான பிறிதொரு சதியின் அங்கம்.
தூரான்ஷா ஸலாஹுத்தீனிடம் அனுமதி கேட்டார். அவர் நூருத்தீனிடம் முறைப்படி அனுமதி பெற்றார். ஹி. 569 / கி.பி. 1174 ஷம்ஸுத் தவ்லா தூரான்ஷா தலைமையில் யெமனுக்குக் கிளம்பிச் சென்றது படை. வழியில் மக்காவில் உம்ராவை நிறைவேற்றிவிட்டு ஸபீதை அடைந்தார் தூரான்ஷா. அவரது வலிமையைக் குறைத்து எடையிட்ட அப்துந் நபி தன் படையினரிடம், “வெயிலில் காய்ந்து தீய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாய் வந்திருக்கிறார்கள். அவர்கள் வெறும் தலைப்புண்” என்றான். அவ்வளவு அலட்சியம். ஆனால் தூரான்ஷாவிடம் தோற்றுத் தெறித்து ஓடியது அவனது படை. ஸபீத் கைப்பற்றப்பட்டது. ஜும்ஆ குத்பா சீர் செய்யப்பட்டது. அப்துந் நபி சிறைபிடிக்கப்பட்டான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கொல்லப்பட்டான்.
ஸபீதிலிருந்து ஏடன் நகருக்கு நகர்ந்தார் தூரான்ஷா. அங்கும் பெருவெற்றி. ஏடன் அவர் வசமானது. சுற்று முற்றும் இருந்த கோட்டைகளெல்லாம் கைப்பற்றப்பட்டன. போர் வெற்றியின் மகிழ்வில் நகரம் சூறையாடப்படாமல் ஷம்ஸுத் தவ்லா தடுத்தார்.
“நாம் நாட்டை அழிக்க வரவில்லை. மாறாக ஆட்சி செலுத்தி, அதை உயர்த்துவோம். அதன் வருமானம் நமக்குச் செல்வம் ஈட்டித்தரும்” என்று அறிவித்தார் அவர். அது வெற்றுப் பேச்செல்லாம் இல்லை. ஷம்ஸுத் தவ்லா தூரான்ஷாவின் ஆட்சி அங்கு நிலைபெற்றது. மக்கள் நலன் காக்கப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது. “தூரான்ஷாவுக்குத் திறந்த மனது; ஈகை குணம்; நற்குணவான். என்னைவிட மிகச் சிறந்தவர் அவர்” என்று மனதாராப் பாராட்டுவது சுல்தான் ஸலாஹுத்தீன் வழக்கம். தூரான்ஷா யெமன் மக்களின் அபிமானத்தை ஈட்டி, அப்பகுதிகள் யாவும் அவருக்குப் பிறகும் அடுத்த ஐம்பது ஆண்டுகள் அய்யூபி வமிசத்திடமே இருந்தன.
oOo
இவ்வெற்றியின் நற்செய்திகள் யாவும் கெய்ரோவுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவை ஸலாஹுத்தீனிடமிருந்து நூருத்தீனுக்குச் சென்றன. நூருத்தீன் பக்தாதிலுள்ள அப்பாஸிய கலீஃபாவுக்கு மடல் அனுப்பினார். அதில், ”கான்ஸ்டண்டினோபிள் (துருக்கியின் இன்றைய தலைநகர் இஸ்தன்புல்), ஜெருசலம் ஆகிய இரண்டும் இறுதி இலக்கு. அல்லாஹ் முஸ்லிம்கள் வெற்றியின் இலக்கை நெருங்கச் செய்வானாக! இந்தப் பணியாளன் கலீஃபாவின் உவப்பைப் பெற உதவுவானாக! மகிழ்வுக்குரிய நாள்கள் இவை. நிகழ்வுற்ற நல்ல விஷயங்களுள் ஒன்று நுபியாவிலும் இதர பகுதிகளிலும் முஸ்லிம்களின் காலடி படாத பகுதிகளையெல்லாம் நமது படை மிதித்து விட்டது. எகிப்திய துருப்புகள் அதன் கோட்டைகளைக் கைப்பற்றி விட்டன. மக்ரிப் (மொராக்கோ) எல்லையை எட்டி விட்டன”.
போர்களிலும் இராணுவ நடவடிக்கைகளிலும் நூருத்தீனுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் இடையில் நிறைவான ஒத்துழைப்பும் இணக்கமும் இருந்தன. அவை ஒருபுறமிருக்க, எகிப்தின் வரவு விபரங்களை சரிபார்க்கத் தம்முடைய தணிக்கையாளரை அனுப்பி வைத்தார் நூருத்தீன். அவரும் ஸலாஹுத்தீனை வந்து அடைந்தார்.
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 05 செப்டெம்பர் 2024 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License