36. ராஜ விசுவாசப் பிரமாணம்

அன்று கூடிய அரசவையிலே அரியாசனத்தின்மீது சுல்தானுக்குப் பதிலாக ஷஜருத்துர் அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. சுல்தான் காஹிராவின் இருக்கும்வேளையில் அவர் மனைவி இதுவரை இப்படித் திடீரென்று சிம்மாசனத்தில் வீற்றிருந்ததில்லை.

ஆதலால், ஒருவரும் ஒன்றும் புரியாமலே விழித்தனர்.

“ஏ முஸ்லிம்களே! ஷாம் தேசத்தில் கடும் போர் புரிந்து இங்கு வந்த பின்னரும் சுல்தான் மிகவும் உழைத்து வந்தமையால், அவர் இதுபோது சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். சிறிது ஜுரமும் கடுமையான தலைவலியும் அவருக்குச் சங்கடம் விளைத்துள்ளன. நம் அரண்மனை ஹக்கீம் சுல்தானைப் பூரண ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி உபதேசித்திருக்கிறார். எனவே, சுல்தான் இன்று இங்கே எழுந்தருளவில்லை. எனினும், யூத்த நிலைமையை உத்தேசித்து நாமே அரசவை கூட்டவும், மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கவனிக்கவும் சுல்தானின் அனுமதியைப் பெற்றிருக்கிறோம். ஆதலால், இன்று நாமே இங்கு வீற்றிருக்கிறோம். எதிரிகள் தமீதாவை விட்டு இப்பக்கம் ஓடிவருகிறார்களென்ற செய்தி தெரிந்ததும், அங்கிருந்த நம் படைகள் குறுக்குப் பாதையாக இங்கே வந்து விட்டன. அன்றியும். நாம் ஷாம் தேசத்திலிருந்து எதிர்பார்த்த துணைப்படையும் காஹிரா வந்து சேர்ந்துவிட்டது. தமீதாவில் எதிரிகளைத் திணறச்செய்த ஜாஹிர் ருக்னுத்தீன் என்னும் பஹ்ரீ மம்லூக் அமீரே இப்போது காஹிராவில் நடக்கப்போகும் போரிலும் படைகளை நடத்தவிருக்கிறார். முஸ்லிம்கள் இனிப் பயப்பட வேண்டிய அவசியமே அணுத்துணையுமில்லை.

“ஆச்சரியப்படத்தக்க விதத்திலே நாம் எல்லாரும் அபூர்வமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். பற்றாததற்கு இப்போது தமீதா சென்றிருந்த படையின் பெரும் பகுதியும், ஷாமிலிருந்து வந்த துணைப்படையும் நம் பலத்தைப் பன்மடங்கில் பல்கச் செய்துவிட்டன. முன்பெல்லாம் நாம் கொஞ்ச நஞ்சம் கொண்டருந்த கவலைக்கும் இனி அவசியமில்லை. அல்லாஹுத் தஆலா நிச்சயம் நமக்கு வெற்றியைக் கொடுப்பதற்காகவே இந்த இறுதி வேளையில் நம்முடைய பலத்தைப் பெருக்கிவிட்டிருக்கிறான். சத்தியம் நிலைத்து நிற்கவேண்டிய சமயம் வந்துவிட்டது; அசத்தியம் அழிவதற்குரிய அஸ்தமய நேரம் நெருங்கிவிட்டது. அந்த நசாராக்களையும் அவர்களுடைய தலைவனையும் தன்னகத்தே இழுத்துக்கொள்ள நம் சிறைக்கோட்டம் வாய்பிளந்து நிற்கிறது.

“வீர சிகாமணிகாள்! உங்கள் ஆண்மைத் தன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டிப் பெரும்புகழ் ஈட்டவேண்டய நிமிஷம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆண்டவனே உங்கள் அனைவருக்கும் குன்றாத பேரூக்கத்தை இறுதிவரை அளித்து ரக்ஷிப்பானாக. ஆயத்தமாயிருங்கள்! இன்று, அல்லது நாளைக்குள் அந் நசாராக்கள் விளக்கில் விழ வரும் விட்டிற் பூச்சிகளேபோல் இந் நகரை எட்டிவிடுவார்கள். சுல்தான் சீக்கிரமே சுகமடைவதற்கும் இந்த ஜிஹாதிலே முஸ்லிம்கள் வெற்றி பெறுதற்கும் ஒவ்வொருவரும் கையேந்திக் குறையிரப்பாராக! வெற்றி நமதே! ”

சுல்தானாவின் இவ்வீரப் பிரசங்கம்  ஜீவன் நிறைந்ததாயிருந்தது. அவர் முகத்தில் கலவரக்குறி ஏதும் காணப்படவில்லை. பின்பு அவசரமான அரசாங்க அலுவல்கள் கவனிக்கப்பட்டு, அரசவை கலைக்கப்பட்டது.

அத்தாணி மண்டபத்திலிருந்து ஒவ்வொருவராய் வெளியேறிக் கொண்டே இருக்கையில், ஒரு சில தலைவர்களும், கண்ணியம் பொருந்திய உயர்தரப் பதவி வகிக்கும் உன்னத உத்தியோகஸ்தர்களும் சுமார் பத்துப் பேர்வரை தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷஜருத்துர் அவர்களைப் பார்த்துத் தலையசைத்துக்கொண்டு இருந்தபடியால், அவர்கள் வெளியேறாமல் நின்றுவிட்டனர். சபையைக் கலைத்தபிறகு சில குறிப்பிட்ட வர்களை மட்டும் சுல்தானா நிறுத்தி வைத்ததன் மர்மம் அவர்களுக்கு விளங்கவில்லை.

ஷஜருத்துர் அரியாசனத்திலிருந்து இறங்கினார். சபா மண்டபத்தை அடுத்திருந்த அந்தரங்கக் கூட்டம் நடக்கும் பெரிய அறை திறக்கப்பட்டது. அப் பிரபலஸ்தர்களும் ஷஜரும் அவ்வறைக்குள்ளே புகுந்தனர். மீண்டும் அவ்வறைக் கதவு சார்த்தப்பட்டு உட்புறம் பூட்டிடப்பட்டு விட்டது. முன்னம் சிறிதே அதிசயம் பூண்ட அவர்கள் இப்பொழுது அதிக ஆச்சரியமுற்றார்கள்.

சுல்தானா சுற்றுமுற்றும் பார்த்தார். சற்றுமுன் அரசவையில் தெளிவுபடப் பிரகாசித்துக்கொண்டிருந்த அவர் வதனம் இப்போது மந்தாரத்தில் முங்கிய சந்திரனைப்போல் கம்மியிருந்தது. வெளிறியிருந்த நடுங்கும் மேனியுடன் அவர் பொலிவிழந்தும் காணப்பட்டார்.

“பிரதானிகளே! நான் உங்களையெல்லாம் மிகவும் முக்கியமான காரியத்துக்காக இங்கே கூட்டியிருக்கிறேன். இந்த ஸல்தனத்தின் எதிர்கால வாழ்வெல்லாம் இனி உங்கள் கையிலேதான் இருக்கிறது. சுல்தான் மிகக் கடுமையான வியாதியில் பேச்சுமூச்சில்லாமல் பிரக்ஞை தவறிக் கிடக்கிறார். என்ன ஆகுமோ என்று சொல்வதற்கில்லை. அரண்மனை ஹக்கீம் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்.”

“என்ன! அவ்வளவு கடுமையான வியாதியா! இதுவரை எங்களுக்குத் தெரியாதே!” என்று சேனைத் தலைவர் ருக்னுத்தீன் ஆவலுடன் வினவினார்.

“உஸ்! இரைச்சல் போடாதீர்கள். இந்த விஷயம் பரம ரகஸ்யாமாய் இருக்க வேண்டும். காஹிராவின் தலைவாயில் அருகே நெருங்கி வருகின்ற நம் பகைவர்களுக்கு இவ்விஷயம் எட்டுணையும் எட்டக்கூடாது. இதற்காகவே நான் எதையும் பிரபலப்படுத்தவில்லை. அப்படி ஏதாவது பெரிய காரியம் நிகழ்ந்து விட்டாலும், அதையுங்கூட நாம் வெளியாகாமலே பார்த்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த ஐயூபி ஸல்தனத்துக்காகவும், அல்லாஹ்வுக்காகவும் ரசூலுக்காகவும் இப்பெரிய சோதனையின் சிக்கலை அவிழ்த்துவிட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நான் கோரி நிற்கிறேன்,” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் அவலக் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடிற்று.

அப் பிரதானிகளின் நெஞ்சு அனலிடைப்பட்ட மெழுகென உருகிற்று.

ஷஜருத்துர் தம் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவல மென்னும் ஆதுரத்தை வீரமென்னும் அங்குசத்தால் அடக்கிய வண்ணம் மேலும் பேசினார்:-

“யோசித்துக்ககொண்டு, பொன்போலும் மதிப்பு நிறைந்த சில நிமிஷங்களே எஞ்சி நிற்கும் இவ்வேளையிலே நேரத்தைக் கடத்துவதில் பயனில்லை. நான் எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடாயிருப்பதற்காக ஷாமில் இருக்கும் இளவரசரைக் கையோடழைத்து வருமாறு ஆளனுப்பி இருக்கிறேன். அவர் வந்து சேர்வதற்குள் சுல்தான் சுகமடைந்து விட்டால், மிகவும் நல்லதே. ஆனால், ஆண்டவன் வேறு விதமாக நாடி யிருந்தாலோ..! அதை நினைக்கவே என் மனம் துணுக்குறுகின்றது. இருந்தாலும், ஐயூபி வம்சத்தினரின் இந்த ஸல்தனத்துக்கு நாம் உலகம் உள்ளளவும் விசுவாசம் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

“நான் ஓர் ஐயூபி சுல்தானின் மனைவியே என்றாலும், மூனிஸ்ஸாவைப் போல் நானும் ஐயூபி வமிசத்தில் உதித்தவளல்லள் என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீகள். எனவே, மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி இந்நேரத்தில் உயிர் துறப்பதாயிருந்தால், இளவரசர் இங்கே வந்து சேர்கிற வரையில் இந்த ஸல்தனத்தை நாம் காப்பாற்றி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இப்படிக் காப்பாற்றுவதில் உங்களுக்கெல்லாம் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமைதான் எனக்கும் இருக்கிறது. சுல்தானின் மனைவியாய் இருக்கிறேன் என்பதற்காகவே என்னை எல்லா மக்களும் நேசிக்கின்றனர்; நானிடும் கட்டளைகளுக்கு அடிபணிகின்றனர். ஆனால், எந்த நிமிஷத்தில் அவர் என்னை விட்டுச் சென்று விடுவாரோ, அந்த நிமிஷம்முதல் எனக்கு இந்த ஸல்தனத்தின் மீதோ, இந்நாட்டு மக்கள் மீதோ என்ன உரிமை இருக்கிறது? இந்த ஸல்தனத் ஐயூபிகளுக்கு உரிய சொந்தச் சொத்தேயன்றி, முன்பின் தெரியாத வெளி நாட்டுப் பெண்ணாகிய எனக்கு எப்படி உரித்தாகும்?

“சாதாரணக் காலமாயிருந்தால், நான் கண் கலங்கமாட்டேன். ஆனால், சிலுவை யுத்தக்காரர்கள் இந்த ஸல்தனத்தின் கதவைத் தகர்த்துக்கொண்டிருக்கிற சரியான சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட இடைஞ்சலை இறைவன் உண்டுபண்ணி விட்டானே என்றுதான் மனந்துவளுகிறேன். எனவே, இப்போது உங்களை எல்லாம் நான் ஏன் இங்கு அழைத்தேனென்றால், இஸ்லாத்தின்மீது, இல்லை, இருலோக ரக்ஷகராம் முஹம்மத் (சல்) அவர்கள்மீது நீங்கள் கொண்டிருக்கிற பக்தி விசுவாசம் பெரிதாயிருப்பின், இந்தச் சோதனை நிரம்பிய வேளையிலே நீங்கள் இந்த ஸல்தனத்தை எப்படியும் பக்தி விசுவாசத்துடன் காப்பாற்றியே தீர்வீர்களென்று நான் நம்புகிறேன். நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்மீது நம்பிக்கை வைத்து, இளவரசர் தூரான்ஷா இங்கு வந்து சேர்கிறவரை என்னை ஆதரிப்பீர்களேல், நானும் என்னால் எல்லாம் முடிந்த அளவு உதவி செய்கிறேன். இல்லையேல், பின்னே வரக்கூடிய சந்ததியார்கள் என்றென்றும் நம்மை இழிவு படுத்தித் தூற்றுதற்கு வழியைக் கோலிக் கொண்டவர்களாகப் போய் முடிவோம். ஐயூபிகள் உங்களுக்காக இதுவரை சாதித்த அத்தனை காரியங்களுக்கும் பிரதியுபகாரமாக நீங்கள் தற்சமயம் செய்யக்கூடிய வேலை ஒன்றேதான் எஞ்சியிருக்கிறது. அதுதான், நீங்கள் தூரன்ஷாவுக்கு ராஜ விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பது. என்ன சொல்லுகிறீர்கள்?”

அங்குக் கூடியிருந்த அந்தப் பத்துப் பேரும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். சுல்தான் ஸாலிஹ் உயிருடனிருப்பது வாஸ்தவமென்றால், இளவரசருக்குப் பிரமாணம் செய்து கொடுக்கும்படி ஷஜருத்துர் கேட்பானேன்? – அவர்களுக்கு மர்மம் விளங்கவில்லை.

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! நாங்கள் இதுவரை தங்கள் கட்டளைகளை நிறைவேற்றி வந்ததற்கெல்லாம் காரணம் நாங்கள் தங்கள்மீது கொண்டுள்ள அன்பும் அபிமானமும் தாமேயொழிய, தாங்கள் நவில்கிறபடி ஸுல்தானின் பாரியையாய் இருப்பதனாலல்ல. எனவே, இப்போது தாங்கள் காலாலிட்ட கட்டளையை எல்லாம் எங்கள் தலையால் செய்து முடிக்கக் காத்து நிற்கிறோம். தங்கள் சித்தமே எங்கள் பாக்கியமென்று சதா கருதிக்கொண்டிருக்கிற எங்களைத் தாங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைக் கட்டளையிடுங்கள். இக்கணமே நிறைவேற்றி முடிக்கிறோம். இந்த நாட்டின் ஷேமத்துக்காகத் தங்களைவிடத் தியாகபுத்தி படைத்த வேறு எவரை நாங்கள் பெறப்போகிறோம்? சுல்தானேகூடத் தங்கள் அபிப்பிராயப்படி நடந்துவர, நாங்கள் மட்டும் எங்ஙனம் உல்லங்கனம் செய்வோம்? தாங்கள் ஏது சொல்வதாயிருப்பினும், அஃது அனைவரின் ஷேமத்தைக் கருதியதாகவே இருக்கும் என்பதை நாங்கள் அறியமாட்டோமா?” என்று ருக்னுத்தீன் உள்ளன்புடன் உண்மையை மொழிந்தார்.

“நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை உங்கள் தலைமீது நான் வலியச் சுமத்த விரும்பாமையாலேயே இப்படிக் கலந்து ஆலோசிக்கிறேன். சுல்தானுக்கு மூளை ஜுரம் கண்டு பிரக்ஞை தவறிக் கிடப்பதாலும், நம் ஹக்கீம் நம்பிக்கையை இழந்துவிட்டாரென்று தெரிகிறபடியாலும், எந்நேரத்திலும் எதிர்பாரா அசம்பவம் நிகழ்ந்துவிடலாம். அப்படி நிகழ்ந்து விட்டது வெளியில் தெரிந்தால், ஸல்தனத்தைக் கைப்பற்ற தக்க தருணம் கிடைக்காதா என்று சுயநலப் பேராசையுடனே நிற்கிற புர்ஜீகள் கலகம் விளைக்க முனைந்து விடுவார்கள். சிலுவை யுத்தக் கிறிஸ்தவர்களிடமிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதைவிட இந்த உள்நாட்டுக் கலக முஸ்லிம்களிடத்திருந்து மிஸ்ரை எப்படி மீள்விக்க முடியும்? எனவே, நம்பித்கைக்குப் பாத்திரமான நீங்களேனும் ஐயூபி வமிசக் கான்முளையாகிய தூரான்ஷாவுக்கு இப்போது ராஜ விசுவாசப் பிரமாணம் பண்ணிக்கொடுத்து, அவர் இங்கு வரும்வரை இந்நாட்டின் அரசியல் வியவகாரங்களைக் கவனிக்கிற அதிகாரத்தை எனக்கு மனப்பூர்வமாக அளிப்பீர்களேல், நான் சற்றும் உளந்துளங்காது எல்லாக் காரியத்தையும் கவனித்துக் கொள்கிறேன். அன்றியும், இன்று இங்கு நடந்த பேச்சு வார்த்தைகளிலிருந்து ஓர் அட்சரத்தைக்கூட வெளியில் பகிர்ந்துகொள்ள மாட்டீர்களென்றும் நம்புகிறேன். என்ன, சம்மதந்தானா?”

அந்த க்ஷணமே அங்குக் கூடியிருந்தோர் வாய் திறந்து ஓமென்று ஓப்பங்கூறித் தலையசைத்தனர். ஷஜருத்துர்ருக்கு மேனியெல்லாம் புளகாங்கிதத்தால் சிலிர்த்துவிட்டது.

பஹ்ரீ மம்லுக்குகளுள் தலைசிறந்தவரும், தமீதா சென்று வென்று வந்தவருமான ஜாஹிர் ருக்னுத்தீன் சட்டென்றெழுந்தார். கம்பீரமான குரலிலே, ராஜபக்தி அவர் மனத்தைக் கவர, வீராவேசத்துடனே கீழ்க்கண்ட விசுவாசப் பிரமாணத்தைப் பிரேரேபித்தார்:-

“எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவின் மீது பிரமாணமாக! இந்த மஸ்ரின் ஸல்தனத்தை நிர்வகித்து வருகிற ஐயூபி சுல்தான் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் மீது நாங்கள் எவ்வளவு ராஜபக்தி விசுவாசத்துடன் இன்றளவும் இருந்து வருகிறோமோ அந்த அளவுக்குக் குறையாமல், அவருக்குப்பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் தூரான்ஷாவுக்கு நாங்கள் விசுவாசம் செலுத்தக் கடவோம். அவர் தற்சமயம் இந்தத் தலைநகரில் இல்லாமையால். அவருடைய மாற்றாந்தாயும், சுல்தானின் பிரிய பாரியையுமாகிய மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் அவர்கள் கரத்திலே எங்கள் ராஜ விசுவாசத்தை எடுத்துக் கொள்கிறோம். இந்த நாட்டின் ஷேமத்துக்காகவும், ஐயூபிகளின் மேன்மைக்காகவும் எங்கள் உயிருள்ளளவும் நாங்கள் சர்வசங்க பரித்தியாகம் புரியக் கடவோம். இந்தப் பிரதிக்ஞையை நாங்கள் திரிகரண சுத்தியுடன் மும்முறை சத்தியம் செய்து  உறுதிப்படுத்துகிறோம்!”

இப்பிரதிக்ஞையை அங்குக் கூடியிருந்தவர் ஒவ்வொருவரும் தத்தம் வாயால் ஒருமுறை உரத்துக் கூறினர். ஷஜருத்துர் கலங்கிய கண்களுடன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டார்; கண்ணீரும் இரு சொட்டுத் தரையிலே விழுந்தன.

“ஏ பிரதானிகளே! நானும் சத்தியமாகச் சொல்லுகிறேன். இந்த ஸல்தனத்தின் கண்ணியத்தையும் கெளரவத்தையும், பெருமையையும் வலிமையையும் எப்படியும் காப்பாற்ற வேண்டுமென்னும் ஒரே நோக்கங்கொண்டவள் யானாகையால், சட்டப்படி இந்த நாட்டுக்குப் பட்டத்துக்கு வரவேண்டிய தூரான்ஷா ஐயூபிக்கு நானும் ராஜ விசுவாசப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், சுல்தான் வியாதியுள் வீழ்ந்திருப்பதாலும், பட்டத்து இளவரசர் பக்கத்தில் இல்லாமையாலும், நசாராக்கள் இந் நகர்மீது படையெடுத்து வருவதாலும் பட்டத்துக்குரியவர் எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறவரை, அகில ஸல்தனத் முஸ்லிம்களின் சார்பாக நானே ராஜ அதிகாரங்களை ஒழுங்காக நிர்வகித்துவரக் கடவேன். ஆண்டவன் எனக்கிட்டிருக்கும் சோதனைகளை, என்னால் சுமக்க முடியாதவாறு செய்துவிடாது எளிதாக்கி வைத்து, என்னையும் இந்நாட்டு மக்களையும், ஐயூபி சுல்தானையும், அவர்தம் கீர்த்தியையும் இழுக்குக்கு உட்படுத்தாமல் காத்து ரக்ஷித்தருள்வானாக! எனக்கு அவனே நிலையான புத்தியைத் தந்து, என் அறிவை விசாலமாக்கி, வரப் போகிற மகா யுத்தத்திலும் ஏனைச் சோதனைகளிலும் வெற்றியைத் தந்தருள்வானாக!” என்று ஷஜருத்துர் பதிலுக்குப் பிரதிக்ஞை எடுத்தார்.

அளைவரும் “அமீன்!” கூறினார்கள்.

பிறகு ஷஜருத்துர் அவர்களை எல்லாம் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்: “சுல்தான் வியாதியுற்றிருப்பதை நீங்கள் மிகமிக இரகசியமாகவே வைத்துக்கொள்வீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆனால். உங்களுடைய முகக் குறியோ, அல்லது நடை நொடியோ, சற்றுமே உள்ள நிலைமையைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்றுதான் நான் பெரிதும் கவலைப்படுகிறேன். உங்கள் அனைவரின் உள்ளத்துள்ளும் அன்பே உருவமாய்க் குடிகொண்டிருக்கும் சுல்தான் மீது நீங்கள் கொண்டிருக்கும் பாசத்தை நான் நன்கறிவேன். எனவேதான், உங்களால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதென்பதையும் நான் உணர்வேன். அப்படி உங்களையும் மீறிய துக்கம் வந்துவிட்டால், அதை வேறு வழியில் திருப்பிவிடுங்கள். எவராவது கேட்டால், யுத்த நிலைமையை அனுசரித்து அப்படிக் கவலைப்படுவதாகக் கூறிவிடுங்கள். உங்கள் நெஞ்சைப் பிறர் பிளந்தாலும் இன்று இங்கு நடந்தது எதையும் வெளியில் சொல்லிவிடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்மீது ஆணையிட்டுக் கூறியுள்ள உங்கள் பிரமாணத்தைக் காப்பாற்றுங்கள. சுல்தானது சரீர நிலையைப்பற்றி அவசியம் நேரும் போதெல்லாம் நான் உங்களைக் கூப்பிட்டனுப்பித் தெரிவிக்கிறேன். ஆனால். அவசரப்பட்டுக் கண்டவர்களிடத்தும் விசாரிக்காதீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பையுங் கொண்டே இப் பெரிய திட்டம் நிறைவேற வேண்டுமாகையால், இதை நீங்களே தகர்த்து விடாதீர்கள்!”

அந்த இரகசியக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஷஜருத்துர் வேகமாக அந்தப்புரத்துள் நுழைந்து, அரசரின் படுக்கையருகில் போய் நின்றார். சுல்தானுக்கு மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. ஹக்கீம் உதட்டைப் பிதுக்கி, அவ நம்பிக்கையோடு, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தார். அங்கே நின்ற அலிகள் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்.

உயிருக்கு மன்றாடிக்கொண்டு நீட்டிப் படுத்திருந்த சுல்தானின் காலடியில் ஷஜருத்துர் கோவென்று அலறி முகம் புதைத்துக் கொண்டார்!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 35>> <<அத்தியாயம் 37>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment