நான் காரில் ஏறும்போது விரைந்து வந்தார் அவர்.
“மன்னிக்கவும். உங்களை நான் புறக்கணித்தேன், உதாசீனப்படுத்தினேன் என்று நினைக்க வேண்டாம்” என்று மிக, மிக மன்னிப்பான பாவனையில் பேசினார் அந்த சூடான் நாட்டுச் சகோதரர்.
“இல்லையே. நான் அப்படி நினைக்கவில்லையே. நீங்கள் முக்கியமான வேறு விஷயத்தில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதைத்தான்
நான் கவனித்தேனே” என்றேன். நிசமாகவே, ‘அவர் என்னைப் புறக்கணிக்கிறார்’ என்று நான் சற்றும் நினைக்கவில்லை.
“அப்படியில்லை. சகோதரர் ஒருவர் ஸலாம் கூறும்போது தகுந்த முறையில் பதில் அளிக்க வேண்டும். நான் அதை சரிவரச் செய்யவில்லை. என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம்” என்று விளக்கமளித்தார்.
விஷயம் வேறொன்றுமில்லை. தொழுதுவிட்டு வெளியேறும்போது அவருக்கு ஸலாம் கூறினேன். அச்சமயம் அவர் donation box-இன் பக்கம் திரும்பி தம் பர்ஸிலிருந்து பணம் எடுக்கும் மும்முரத்தில் இருந்தார். நான் தொந்தரவு செய்யாமல், வந்துவிட்டேன். அதற்குத்தான் பதறி ஓடிவந்து என்னை பார்க்கிங்கில் பிடித்து, மன்னிப்பு, சமாதானம் … என்று பேச்சு.
என்னைவிட வயதில் மிகவும் இளையவர். சிறு செயலில் எத்தகு பாடத்தை கற்றுத் தந்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர்!