சிறு துளி பெருவெள்ளம்

by நூருத்தீன்

அன்று ஞாயிற்றுக்கிழமை. முஸ்தபாவைச் சந்திக்க அவருடைய நண்பர் காசிம் வந்திருந்தார். இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பிள்ளைகள் அப்துல் கரீமுக்கும் ஸாலிஹாவுக்கும்

பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அவர்களும் அன்று வீட்டில் இருந்தனர். அங்கிள் காசிமுக்கு ஸலாம் தெரிவித்துவிட்டு தங்கள் அறையில் அமர்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஹாலில் பெரியவர்கள் இருவரும் பேசுவதும் அவர்கள் காதில் விழுந்தது.

‘அஸ்ஸுஃப்பா’ என்றொரு பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்தார் காசிம். பெற்றோர் இன்றி ஆதரவு இல்லாத சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம். அங்கு அவர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாய் கல்வி கற்றுத் தந்தார். அதைப் பற்றி முஸ்தபாவிடம் விவரித்துச் சொன்னார் காசிம். அதற்காக நன்கொடை திரட்ட வந்திருந்தார்.

“ஸாலிஹா! உம்மாவிடம் என் செக் புக் வாங்கிட்டு வா” என்று குரல் கொடுத்தார் முஸ்தபா.

“இதோ வருகிறேன் டாடி” என்று அதைக் கொண்டுவந்து அத்தாவிடம் தந்தாள் ஸாலிஹா. காசிமிடம் திரும்பி, “அங்கிள்! எனக்கும் அஸ்ஸுஃப்பா பற்றித் தெரியும்” என்றாள்.

“அப்படியா!” என்று ஆச்சரியமடைந்த காசிம், “உனக்கு என்ன தெரியும்னு சொல்லு.. கேட்போம்” என்றார்.

“எனக்கு உம்மா சொல்லித் தந்தாங்க” என்று பெரிய மனுஷியைப் போல் விவரிக்க ஆரம்பித்தாள் ஸாலிஹா.

“முஹம்மது நபி (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தார்கள். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். அதுதான் மஸ்ஜிதுன் நபவீ. அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தில் உயரமாய் ஒரு காலி இடம் இருந்தது. அது ஒரு திண்ணை. அதன் மேலே நிழலுக்காக ஒரு தடுப்பு மட்டும்தான் இருக்கும். அந்தத் திண்ணையின் பெயர் அஸ்ஸுஃப்பா.

அஸ்ஸுஃப்பாவில் அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கியிருந்தார்கள். அதில் நிறைய பேர் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தவர்கள். அவர்களுக்கு வசதி இல்லை. பணமும் இல்லை. ரொம்பவும் ஏழைகள். அதனால் அவர்கள் அந்தத் திண்ணையிலேயே, வாழ்ந்து வந்தார்கள். அதுதான் அவர்களுக்குப் பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்கள் பெயர் ‘அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா’. அதாவது திண்ணைத் தோழர்கள்.

அந்தத் திண்ணையில் சுவர் இல்லை. அதனால் வெயில், மழை, குளிர் எல்லாம் அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். போர்த்திக்கொள்ளக்கூட சரியான துணி இருக்காது. உடுத்தி இருக்கும் ஆடையும் கிழிந்து இருக்கும். பணம் இல்லாததால் அவர்களால் சரியாகச் சாப்பிடவும் முடியாது.

யாராவது உணவு கொண்டுவந்து தருவார்கள். அதை அவர்கள் பகிர்ந்து சாப்பிடுவார்கள். சிலபேர் எப்பொழுதாவது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு இருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். அதிலிருந்து ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிடுவார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு உணவு கிடைக்காது. பசியில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அதில் டயர்டாகி தொழுகையின்போது மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள்.

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அவர்கள் ரஸுலுல்லாஹ்விடம் பாடம் படித்தார்கள். குர்ஆன் கற்றார்கள். இஸ்லாத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டார்கள். அஸ்ஸுஃப்பாவில் தங்கியிருந்து பாடம் படித்த நிறைய சஹாபாக்கள் பிறகு முக்கியமானவர்கள் ஆனார்கள். ரஸுலுல்லாஹ்வுக்கும் அவர்கள் ஸ்பெஷல் சஹாபாக்கள்.”

மூச்சுவிடாமல் விவரித்த ஸாலிஹாவை முஸ்தபாவும் காசிமும் ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மாஷா அல்லாஹ்!” என்று வியப்புடன் கூறினார் காசிம்.

“அங்கிள்! உங்களுடைய அஸ்ஸுஃப்பா ஸ்கூலுக்கு நானும் கிஃப்ட் தரவா?” என்று கேட்டவாறே தன் கவுன் பாக்கெட்டிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து நீட்டினாள் ஸாலிஹா. உண்டியல் போன்ற மூடி இருந்தது. அதனுள் கலகல என்று சத்தம்.

“என்ன இது?” என்றார் காசிம். “அத்தாவும் உம்மாவும் எனக்குக் கொடுக்கும் காய்ன்ஸை சேமித்து வைத்திருந்தேன். இது அஸ்ஸுஃப்பா ஃப்ரெண்ட்ஸுக்கு என்னுடைய கிஃப்ட். கொஞ்சமாகத்தான் இருக்கும்… பரவாயில்லையா?”

“சிற துளி பெருவெள்ளம் ஸாலிஹா. அல்லாஹ் அளவைப் பார்ப்பதில்லை. மனதைத்தான் பார்ப்பான்.” கண்களில் கண்ணீருடன் அதை வாங்கிக்கொண்டார் காசிம்.

உள்ளே உம்மாவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன, “அல்ஹம்துலில்லாஹ்.”

-நூருத்தீன்

புதிய விடியல் – ஜனவரி 1-15, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment