1957 – ரங்கூன் மடல்

by admin

ங்கூனிலிருந்து வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம்! கைவசம் மீதமீருக்கும் பழஞ்சரக்கில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இது இடையில் எட்டிப்பார்த்தது. ரங்கூன் பர்மா நாட்டின் முன்னாள் தலைநகர்.

அங்கிருந்த V.M. நைனார் முஹம்மது என்ற வாசகர், தாருல் இஸ்லாம் எடிட்டர் பா. தாவூத்ஷாவுக்கு அக் கடிதத்தை எழுதியிருக்கிறார். மடலின் உள்ளடக்கம் ஏற்படுத்திய வியப்பு ஒருபுறமிருக்க, ‘Aerogramme’ தபாலில் கையால் எழுதப்பெற்று வந்திருக்கும் அந்த ஆவணமும் ஸ்பரிசமும் ஏற்படுத்திய பரவசம் தனிச் சிறப்பு.

நாளையொரு காலத்தில், இன்று பகிரப்படும் வாட்ஸ்அப், சமூக ஊடகத் தகவல்கள் ஆவணமாய்க் கிடைக்கும்போது, அந்தத் தலைமுறையினருக்கு அவை இதே போன்றதொரு பரவசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துமா, அளிக்குமா என்று தெரியவில்லை. அதற்குமுன் ஓலையில் எழுதினார்களே? நவீன முன்னேற்றம் அதைத் தாளுக்கு மாறவில்லையா? என்ற கேள்விகள் எழலாம். வாஸ்தவம்தான். ஆனால் அந்த மாற்றத்தைச் சிதைக்கா சில இதில் உள்ளடங்கியிருக்கின்றன. முனைப்பு, சிந்தனை, நிதானம், கையால் எழுதும் மெனக்கெடல்…. இவற்றில் உள்ளடங்கயிருக்கும் மேன்மையை டிஜிட்டல் எழுத்துகள் அழித்துவிட்டதாய்த்தான் எனக்குத் தோன்றுகிறது. தட்டச்சு சொகுசு, பலாபலன்கள் வேறு ரகம்.

அந்தப் பட்டிமன்றம் கிடக்கட்டும். மடலும் அதன் தட்டச்சும் கீழே. அதிலுள்ள உள்ளடக்கம் சிந்தனைக்கு.

-நூருத்தீன்
ஜனவரி 19, 2019

oOo

Rangoon
19 June 57

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜுன் மாதத்தின் தாருல் இஸ்லாம் கண்டு உவகை அடைந்தேன். அதில் தாங்கள் எழுதிய “ஏன் விணே புண்படுத்துகிறீர்கள்” என்ற கட்டுரை என் கவனத்தை மட்டுமின்றி என் தோழர்களின் கவனத்தையும், ஏன் ஒவ்வொருவரின் கவனத்தையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

நம் நாட்டில் பிறந்து நம்முடன் நெருங்கிப் பழகும் நம் தமிழ் ஹிந்துக்கள், நாம் எந்த அளவுக்கு அவர்களின் மதத்தையும், ஆச்சாரத்தையும், பண்பாட்டையும் அறிந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவர்கள் அறிந்து கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களாகப் பொறுப்பேற்று நூல்கள் பல எழுதும் சரித்திராசிரியர்களும், கதாசிரியர்களும், மேடைப் பிரசங்கிகளும் இஸ்லாத்தைப் பற்றி கொஞ்சங் கூடத் தெரியாமல் – தெரிந்துகொள்ளாமல் வாயில் வந்ததை உளறியும். பேனா போன போக்கில் கிறுக்கியும் தள்ளிவிடுகின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல; முஸ்லிம்களின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்புமாகும்.

‘கஜினி முஹம்மது கொள்ளையடித்தான். ஔரங்கஜேப் வாளைக் கொண்டு இஸ்லாத்தைப் பரப்பினான். திப்பு சுல்தான் போரில் புறமுதுகு காட்டி ஓடினான் – என்று அவர்கள் எழுதுவதும், குர்ஆன் (’52) க்குப் பொருந்தாது என்று பேசுவதும்,; கன்னாபின்னா என்று கதைகள் எழுதுவதும் இதற்குச் சான்று.

தமிழ் ஹிந்துக்களின் மனதில் ஒரு அச்சம் உண்டு. அதாவது, “புனிதத் திருமறையையும், இஸ்லாத்தின் சிறப்பியல்புகளையும் பற்றி நாம் தெரிந்துவிட்டால் நாமும் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடுவோம் – அதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை” என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பதால் அதனைக் கண் கொண்டும் பார்க்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருக்கின்றனர். அதுபற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும். ஆனால் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையைப் பின்னணியாகக் கொண்டு கதை கட்டுரை வரைவது நம் மனதைப் புண்படுத்துகின்றன. இது போன்ற செய்கைகளை நம் ஹிந்துத் தோழர்கள் செய்யாமல் இருந்தால் அதுவே இரு இனத்தினையும் தமிழர் என்ற பெருமையோடு வாழச் செய்யும்.

தமிழ் ஹிந்துக்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் கதை கட்டுரை எழுதுவதைக் கைவிட்டு விட்டு, தங்களுக்குத் தெரிந்த விஷயம் குறித்து எழுதினால் எவ்வளவோ சிறப்புடையதாகும்.

தக்க சமயத்தில், இது போன்ற சமயங்களில் தாங்கள் தக்க சாட்டை கொடுப்பதைப் பாராட்டுகிறேன். அத் துணிவு தங்கள் ஒருவர் இடத்தில் இருப்பது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

இறுதியாக ஒன்று: ஹிந்து நண்பர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்களின் வாழ்க்கைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வானொலி மூலம் பிரச்சாரம் செய்வது நலம் – அதற்காவன செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து, பொறுபு்பு வாய்ந்த பத்திரிக்கைகள் முஸ்லிம்களின் வாழ்க்கையை கன்னாபின்னா என்று எழுதாதிருக்க, அல்லது பிரசுரிக்காமல் இருக்க ஒரு முஸ்லிமை கௌரவ ஆசிரியராக நியமிப்பது நல்லது என்று அப்படிப்பட்ட பத்திரிக்கைகளுக்கு ஆலோசனை சொல்லுவது சிறந்தது. முஸ்லிம்களைப் புண்படுத்தும் செய்திகளை தணிக்கை செய்ய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். இதற்கு முயற்சியுங்கள்.

(நைனார் முஹம்மது)
கையொப்பம்

Related Articles

Leave a Comment