இஷ்டபூர்த்தி சிறுகதையை வாசித்துவிட்டு அதன் அனுபவத்தையும் தமது கருத்தையும் ‘பத்து முப்பத்து ஏழு’ என்ற தலைப்பில் சிறுகதையாக, தம் கைப்பட எழுதி அனுப்பிவிட்டார் சையத் இப்ராஹீம்
சுபுஹ் தொழுகைக்குப் பின் சில வேலைகளை முடித்துக்கொண்டு செல்ஃபோனில் நேரத்தைப் பார்த்தான் ஜியா. ஆறு நாப்பத்தி ஏழு காட்டியது. இன்னும் பதின்மூன்று நிமிடங்களில் அந்த ஃபோன் வந்து விடும். அக்குபிரஷர் டாக்டருக்கு ஆங்கிலப்பாடம் எடுக்கும் நேரம் அது. சரி, அதுவரை சற்று படுக்கையில் சாய்வோம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். அன்று என்ன ஆனதோ தெரியவில்லை… அந்த ஃபோன் அழைப்பு வரவே இல்லை. முதல் நாள் மட்டுமல்ல மூன்று நாள்கள் தொடர்ந்த மழையின் குளிரில் ஆழ்ந்த உறக்கம் அவனை அரவணைத்துக்கொண்டது. கண் விழித்த போது மணி ஒன்பதை நெருங்கியது. அந்த நேரம் பார்த்தா நூரானந்தாவின் சிறுகதை கண்ணில் பட வேண்டும்?
இரண்டு நாள்களுக்கு முன்பே தனது சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்திருப்பதாக முகநூலில் போட்டிருந்தார் நூரானந்தா. நாமெங்கே ஆனந்த விகடனில் படிப்பது என்று அசால்ட்டாக விட்டு விட்டான். இப்போது கதைச் சுட்டியே வந்திருந்தால் விடமுடியுமா? ஏதோ சிறுகதைதானே என்று படுக்கையில் படுத்தவாறே படிக்கத் தொடங்கினான் ஜியா. கதையின் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை ஜியாவுக்கு. ‘வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பையே கதையின் இரண்டு மூன்று பத்திகளுக்கு நிரப்ப முடியுமா? நாமும் தான் இருக்கிறோமே கதை எழுதத் தெரியாமல்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். சென்னையில் இருந்துகொண்டே சியாட்டிலின் வானிலை நிலவரம் பற்றித் தெரிந்துகொள்ள கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்ல வேண்டும் போல் இருந்த்து ஜியாவுக்கு.
அடடா… ஒரே நேரத்தில் பட்டுகோட்டை பிரபாகர், சாண்டில்யன், லேனா தமிழ்வாணன் ஆகியோரைப் படித்த பிரமிப்பு ஏற்பட்டது. இடையில் விட்டலாச்சார்யா படத்தின் காட்சிகள் கூட! IFT வெளியீட்டில் சிறுவர்களுக்காக கதைக்குள் கதை என்றொரு நூல் வெளியிட்டுள்ளார்கள் அதுபோல் ஒரு கதைக்குள் பல கதைகள். அமெரிக்கா, கேரளா, சென்னை, அதிலும் கோடம்பாக்கம், இத்தாலி என்று உலகம் சுற்றிய வாலிபனாக அந்தக் கதை ஜியாவை மாற்றியது தனிக்கதை.
அந்த நேரம் பார்த்து ஒரு சகோதரி ஃபோன் செய்ய, நேரத்தைப் பார்த்தால் 9.30! அடடா தலைவர் வந்து விடுவாரே! சீக்கிரம் கிளம்ப வேண்டுமே! என்ற அவசரத்தில் இருந்த ஜியாவிடம் அந்தச் சகோதரி பல செய்திகளைப் பேசிக்கொன்டிருந்தார். என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த ஜியா திடீரென, “இந்த விபரங்களை என் மருமகளிடம் கூறுங்கள். அவர்தான் அக்குபிரஷர் பற்றி விபரம் தேடிக் கொண்டிருந்தார்” என்று சொல்லி விட்டு, ஃபோனை மருமகளிடம் தள்ளிவிட்டு அவசரமாகக் குளியலறைக்குள் சென்றான்.
அந்த அம்மா விபரமெல்லாம் சொல்லி விட்டு, “அண்ணனிடம் கொடும்மா, முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொன்னபோது, “குளியலறையில் இருக்கிறார்” என்று மருமகள் கூறியது ஜியாவுக்குத் தெளிவாகக் கேட்டது.
அவசரமாக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவனுக்கு மீண்டும் அந்த அம்மாவிடமிருந்து ஃபோன். ஒருவழியாகப் பேசி முடித்து விட்டு காலை உணவை கபக் கபக்கென்று விழுங்கிவிட்டு வண்டியில் வந்து அலுவலகத்தில் நுழையும் போது மணி 10:20. நல்லவேளை, தலைவர் வரவில்லை என்ற ஆறுதலோடு கதையை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து, படித்து முடித்து அலுவலகக் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து முப்பத்து ஏழு.
ஹும்…! இப்படியெல்லாம் கதையெழுதலாம் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டான் ஜியா.
சரி, கதையின் முடிவுக்கு வருவோம்! சமையல்காரனுக்கு ஏற்கெனவே பயம். ஆனாலும் வைர நெக்லஸ் வேண்டுமென்ற எண்ணத்தில்தான் அதைச் செய்ய ஒப்புக் கொண்டான். இருந்தாலும் செய்வானா என்பது கேள்விக்குறியே!
தந்தையைக் கொன்ற கணவனைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தது மனைவியின் மனம். அதற்தாக தன்னுடைய வைர நெக்லஸையே இழக்கத் தயாராகி இருந்தாள். இப்போதோ மற்றொரு வைர நெக்லஸ் கணவன் மூலமாகத் தயாராக உள்ளது. தான் இழக்க விரும்பியதை இழக்கவும் தான் இழக்க (மனதளவில்) விரும்பாததைத் தக்கவைத்துக் கொள்ளவும் தக்கவொரு சந்தர்ப்பம்… அவ்வளவுதான்! நமக்கேன் வம்பு!
– சையத் இபுராஹீம்
syed1959.sb@gmail.com
+91 9884053640