ஜியாரத்துல் குபூர் விமர்சனம் – அபூசுமைய்யா

by admin
ஆச்சரியப்படுத்தும் அறிஞர் பா. தாவூத்ஷா!

மிழக முஸ்லிம்களிடையே தௌஹீது சிந்தனை வளர்ச்சியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரமும் 1980களிலேதான் ஆரம்பித்தன; அதன் பின்னரே, அரபு மொழியிலிருந்து முக்கியமான கிரந்தங்களெல்லாம் தமிழில் வரத் தொடங்கின;

அதற்கு முந்தைய தமிழக முஸ்லிம்கள் மூடநம்பிக்கைகளிலும் ஏக இறைவனுக்கு இணைவைக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருந்ததற்குக் காரணம், தமிழில் இஸ்லாமிய அடிப்படை சிந்தனை நூல்கள் வராததே காரணம் என்ற எண்ணங்களைத் தவிடுபொடியாக்குகிறார் அறிஞர் பா. தாவூத்ஷா. அவரின் எழுத்துகளை வாசித்தால், இந்திய சுதந்திரத்துக்கு முன்னரே தமிழகத்தில் அவர் பெரும் புரட்சி செய்திருப்பது புரிகிறது. அவர் தொடாத விசயங்களே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விசயங்களில் இறங்கிக் களமாடியுள்ளார்.

அவரின் பேரனும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவருமான சகோ. நூருத்தீன் இன்று அனுப்பித்தந்த நூல், ஜியாரத்துல் குபூர். தமிழக தௌஹீத் பிரச்சார வரலாற்றினை அறிவதற்காக இன்றைய தௌஹீதுவாதிகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாக இதைப் பரிந்துரைக்கிறேன். இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) எழுதிய இந்நூல், கபுர் ஜியாரத்தின் அடிப்படை குறித்தும் அதில் முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் இணைவைப்பு பற்றியும் அவ்வளவு தெளிவாக ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் எடுத்து வைத்து விவரிக்கிறது.

இந்நூலின் அட்டையில், 144 ஆகாத கருமங்களுடன் என்று மட்டும் காணப்படுகிறது. உள்ளே சென்றால், நூலின் பின்னிணைப்பாக மௌலவி அஷ்ரஃப் அலி தொகுத்துள்ள 144 மூட நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் மட்டுமல்ல, இன்றும் இஸ்லாம் என நினைத்து மக்கள் பின்பற்றும் பல விசயங்கள் அதிலுள்ளன. 1980 கால கட்டத்தை யோசித்தால், இதிலுள்ள பெரும்பாலானவை மத நம்பிக்கைகளாக மக்களிடையே செயல்பாட்டில் இருந்தவையே. ஆணும் பெண்ணும் மனமொத்து, சாட்சிகள் இன்றி, பதிவின்றி திருமணம் செய்து கொண்டால் அதனைத் திருமணமாகவே அங்கீகரிக்கமுடியாது என்பது மட்டுமல்ல, அது விபச்சாரமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என 7ஆவது ஆகாத கருமம் குறிப்பிடுகிறது. இது போன்ற, கற்காலத்துக்குக் கொண்டு செல்லும் தற்கால மூதேவிகளின் பல ஆகாத கருமங்களையும் இதில் தொகுத்துள்ளனர்.

1980களில்தான் இவையெல்லாம் தமிழக இஸ்லாமிய சமூகத்துக்கே எடுத்துச் சொல்லப்பட்டன என்ற எண்ணத்தை, 1930இல் வெளியான இந்நூல் நிச்சயம் தவிடுபொடியாக்கும். பின்னர் எப்படி, 1980களில் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களிலிருந்து தமிழக தௌஹீது எழுச்சியின் நாயகர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர் என்பது பெரும் ஆச்சரியம்

அறிஞர் பா. தாவூத்ஷா போன்ற நிஜமான வரலாற்றுப் புரட்சியாளர்கள் தமிழகத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதற்குத் தடையாக நான் காண்பது, புரிவதற்கு எளிமையாக இப்போதைய மொழிவழக்கில் இப்படைப்புகள் இல்லை என்பது மட்டும்தான். அவரின் படைப்புகளை இணையத்தில் ஆவணப்படுத்தும் பெரும் பணியினைச் செய்து கொண்டிருக்கும் சகோ. நூருத்தீன் அதனை இக்கால எளிய தமிழில் மறு உருவாக்கம் செய்வதற்கும் மனம் வைக்க வேண்டும்!

-அபூசுமையா

Related Articles

Leave a Comment