ஜியாரத்துல் குபூர் – முன்னுரை

மாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் எழுதிய ஜியாரத்துல் குபூர் என்ற நூலையும்  மௌலானா அஷ்ரப் அலீ அவர்கள் எழுதிய 144 ஆகாத கருமங்களையும் தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத் ஷா அவர்களும் அப்பத்திரிகையின் உதவி ஆசிரியர்களும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்து 1930 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இது அந்நூலின் மறுபதிப்பு.

தர்ஹா வழிபாடு, கப்ரு வழிபாடு,  மூடநம்பிக்கை, இன்னபிற மிகவும் மலிந்திருந்த அக்காலகட்டத்தில் இந்நூலும் இதன் கருத்துகளும் தமிழக முஸ்லிம்களிடம் எத்தகு எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும், மெய்ஞ்ஞானம் தேடி அலைந்த உள்ளங்களுக்கு எத்தகு உதவி புரிந்திருக்கும் என்பதை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

‘ஆகாத கருமங்கள்’ பகுதியில் உள்ள தகவல்கள், முஸ்லிம்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருந்தனவா என வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பெரும் சோகம் என்னவெனில் அவற்றுள் பெரும்பாலானவை இன்று ஒழிந்து போயிருந்தாலும் முஸ்லிம் சமுகம் இன்னும் அவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடவில்லை என்பதே.

சிதிலமடைந்து, உதிர்ந்த பக்கங்களாய்க் கண்டெடுக்கப்பட்ட இந்நூலின் பிரதியில் பா. தா. அவர்கள் அடுத்த பதிப்பிற்கான திருத்தங்களைச் செய்து வைத்திருக்கிறார்கள். அது வெளியானதா எனத் தெரியவில்லை. ஆயினும் அத்திருத்தங்களை உள்ளடக்கி இப்பதிப்பு உருவாகியுள்ளது.

நூலின் இருபக்கங்கள் (பக்கம் 131, 132) தவறிவிட்டதால் ஆகாத கருமங்கள் 129லிருந்து 136வரை விடுபட்டுள்ளன. தவிர மௌலானா அஷ்ரப் அலீயின் சில கருத்துகள் மேலதிக விரிவுக்கும் விளக்கத்திற்கும் உட்பட்டவை என்பது எனது கருத்து. என்றாலும் முந்தைய பதிப்பின் மூலம் எதுவும் சிதைவுறாமல் அதன் அசல் தன்மையுடன் சமகால வாசகர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே இப்பதிப்பின் நோக்கம் என்பதால் வேறு கருத்துகள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை.

இலாப நோக்கின்றி, திருத்தங்கள், மாற்றங்கள் எதுவும் இன்றி இதை as it is அப்படியே அச்சிட்டு வினியோகிக்க விரும்புபவர்களுக்கு அனுமதியுண்டு.

இப்பணியை நிறைவேற்றி முடிக்க என்னைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் பெருமையும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்.

மனிதர்கள் குறையுள்ளவர்கள். இதிலுள்ள குறைகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்க, ஆசிரியர்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ள இறைவனிடம் கையேந்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையையும் பாவ மன்னிப்பையும் வேண்டி நிற்கிறேன். நம் அனைவரையும் நேர்வழியில் நடத்தி நம்மை அதில் நிலைநிறுத்தி வைக்க படைத்தவனிடம் இறைஞ்சுகிறேன்.

-நூருத்தீன்

இந்நூலை இலவசமாகப் பெற இங்கே க்ளிக் செய்யவும்

Related Articles

Leave a Comment