சியாட்டிலில் இளையராஜா

by நூருத்தீன்

சத்தியம் தியேட்டர் இருக்கும் சாலையில் பீட்டர்ஸ் ரோடின் மறுபுறம் வந்து சேர்ந்தது Echo Recording நிறுவனத்தின் அலுவலகம். Echo இளையராஜாவின் நிறுவனம். அவரது இசையமைப்பில் வெளியான பெரும்பாலான படங்களின் ரிக்கார்டுகள், கேஸட்டுகள் உரிமம் அந்த நிறுவனத்திடமே இருந்தது. Youtube, iPod தலைமுறைக்கு இசையானது ரிக்கார்டுகளிலும் கேஸட்டுகளிலும் ஒலித்துக்கொண்டிருந்த காலமெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், அதெல்லாம் ஆதி காலம்.

மாணவப் பருவத்தில் இளையராஜாவின் இசைக்கு எனது மண்டையும் கிறுகிறுக்க ஆரம்பித்தபின்

அவரின் படத்திலிருந்து சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து “Made in Japan” ஒரிஜினல் கேஸட்டுகளில் ரிக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கிறுக்கு ஏற்பட்டிருந்தது எனக்கு.

படம் வெளியாவதற்குமுன் கேஸட் வெளியாகும். அந்த கேஸட்டை வாங்கி seal பிரிக்காமல், கேஸட்டை எடுத்து பாடல்களை ஒருமுறை கேட்டுவிட்டு, கேஸட்டை அப்படியே விற்றுவிடுவேன். 90 நிமிட கேஸட்டுக்கான பாடல்கள் தேர்வானதும் ரிக்கார்டிங் கடைக்கு பட்டியலுடன் நான் ஆஜர்.

வீட்டிற்கு அண்மையில் மேற்சொன்ன Echo வந்து சேர்ந்ததா, புது ரிலீஸ்களை அவர்களிடம் நேரடியாக வாங்கினால் discount கிடைக்கிறதா கேட்டுப் பார்ப்போமே என்ற திட்டத்துடன் ஒருநாள் அந்த ஆபீஸிற்குள் நுழைந்தேன். ரிஸப்ஷனில் இருந்த பெண்மணி நன்றாகத்தான் பேசினார். என்ன வேண்டும் என்று விசாரித்தார்? கேஸட்டுகள் சகாய விலையில் கிடைக்குமா என்று விசாரித்தேன். டீலர்களுக்குத்தான் discount. உங்களுக்கு இங்கு யாரையாவது தெரியும் என்றால், தனிநபருக்கும் தருவோம் என்றார்.

காலேஜ் பருவம். குசும்பு யாரைவிட்டது. “எனக்கு ஒருவரைத் தெரியும். ஆனால், அவருக்கு என்னைத் தெரியுமா என்று தெரியாது” என்று பழைய ஜோக்கை அவிழ்த்தேன்.

“யார் அவர்?” என்றார் அக்கறையுடன்.

“இளையராஜா”.

அந்த ரிஸப்ஷனிஸ்ட்டுக்கு உள்ள நகைச்சுவை உணர்வின் ரிசல்ட்டை அறிய அதிக நேரம் நான் அங்கு நிற்கவில்லை. வாசலுக்கு விரைந்துவிட்டேன். Safety first!

பின்னர், காலம் ஓட ஓட, மனமானது மாற்றத்திற்கு உள்ளாக உள்ளாக, இன்று கையடக்க ஸ்மார்ட் ஃபோனில் ரேடியோ ஸ்டேஷனே சாத்தியமாகிவிட்டபோதும், எனது ஐஃபோனில் மருந்துக்குக்கூட ஒரு பாடல் இல்லை என்பது உலக அதிசயத்திற்கு ஒப்பான செய்தி.

ஏன் இன்று இந்த மலரும் நினைவுகள் எனில்…

இன்று சியாட்டிலில் இளையராஜா & குழுவினரின் இசை நிகழ்ச்சியாம். மனோ, சித்ரா, பவதாரினி என்று பெரிய பட்டாளத்துடன் USA வந்திருக்கிறார் ராஜா. வந்து விழுந்த மின் விளம்பரங்களையும் மின்னஞ்சல்களையும் சகஜமாகக் கடந்துவிட்டேன்.

என் வரலாறு அறியாத தமிழக அன்பர் ஒருவர் ஓரிரு வாரத்திற்குமுன் என்னிடம், “நம் ஊரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிங்க” என்று ஆவலுடன் வாட்ஸ்அப்பில் தெரிவித்தார்.

“டிக்கெட் எவ்ளோவாம்?” என்று எனது ஜெனரல் நாலெட்ஜை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் மட்டும் கேட்டேன்.

“குறைந்தபட்சம் $49. நானும் நண்பர்களும் செல்கிறோம். வருகிறீர்களா?”

“ம்ஹும்பா. நான் மாட்டேன். அது போதை!”

Related Articles

Leave a Comment