விவசாயி

by நூருத்தீன்

கி. பி. 2075

போர்டு மீட்டிங்கில் புதிய நகரின் மாடல் ஷோ அழகிப் போட்டி மங்கை போல் நகர்ந்து கொண்டிருந்தது. திரையற்ற வெறுமையில் முப்பரிமாண காட்சிகள் நகர, சூழ்ந்து அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“மனை போட்டு நகர் என்ற பெயரில் விற்றதெல்லாம் அந்த காலம். இது நிஜமான நகரம். ஒவ்வொரு நகரும் குட்டி சிங்கப்பூர். அதனுள் அனைத்தும் அடக்கம்” என்று விவரித்தார் அஜென்.

“மார்வெலஸ்! என்னைக் கேட்டால் இது தனி நாடு. சிறு சிறு கிராமத்தை வாங்கி அதன் வயல் உட்பட அனைத்தையும் சேர்த்து தனிநாடு போலவே ஆக்கிவிட்டார் அஜென்” என்று எழுந்து நின்று கை தட்டினார் எம்.ஜே.

“அதென்ன நடுவில் சிறு பூங்கா பசேல்னு?” என்று ஒரு டைரக்டரிடமிருந்து கேள்வி வந்தது.

“அது மாடல் வயல்! அரை ஏக்கர் ஒதுக்கியிருக்கிறோம். மற்றபடி விவசாய இலாகாவின் கூடத்தில் விளையும் நெல் இந்த நகரின் அத்தனை லட்சம் பிரஜைகளுக்கும் சோறு போடும். இதோ இந்த கலியபெருமாள்தான் அதன் மூளை. இந்த நகரிலுள்ள கட்டிடக்கலை அவன் வடிவமைப்புதான். மூதாதையர்கள் அந்தக் காலத்து விவசாயிகளாம்”

“எக்ஸலெண்ட்” என்று பலரும் வாய் பிளந்தார்கள்.

“மற்றோர் ஆச்சரியமும் உண்டு” என்றான் கலியபெருமாள்.

“ஒவ்வொரு பில்டிங் கான்கிரீட்டிலும் நான் கண்டுபிடித்த ரசாயணத்தைக் கலந்திருக்கிறேன். கரையானைப்போல் அது கட்டிடங்களை அரித்து மூன்று ஆண்டுகளில் எல்லாம் பொடியாகிவிடும்”

கூட்டம் அதிர்ந்து எழுந்தது.

“நாயே! ஏண்டா?” என்று கத்தினார் அஜென்.

“என் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சத்தியம் செய்திருந்தேன்”

“அது எப்போ?”

“அவங்க தற்கொலை செய்துகொண்டு செத்தப்போ”

#சின்னக்கதை

Related Articles

Leave a Comment