இறைவனுக்குப் பெரியார் வகுத்த இலக்கணம் என்ன தெரியுமா? இதோ, பெரியார் கூறுகிறார்: “மனிதனை மனிதனாக மதிக்கக் கூடிய மதத்தையோ, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்காத மதத்தையோ,
காசுபணம் செலவு செய்துதான் தன்னை வணங்கவேண்டும் என்று கூறாத கடவுளையோ நாம் வேண்டாம் என்று கூறவில்லை.
“உயர்வு- தாழ்வுகளைச் சமன்செய்து, ஒற்றுமை உணர்ச்சியைத் தூண்டிவரும் கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்?
“சூத்திரப் பட்டத்தைக் கற்பித்து நிலைநாட்டிவரும் கடவுளை, அதற்கு ஆதாரமான புராண, இதிகாசங்களை அழித்தொழியுங்கள். அன்பும் அறிவுமயமானதுமான கடவுளை வணங்குங்கள்.
“கடவுளை வணங்குதல் என்றால் என்ன? தேங்காய் உடைத்து, திருவிழா செய்து, பார்ப்பனுக்குத் தட்சணை கொடுத்து அவன் காலில் விழுவதில்லை. ஒழுக்கமாக நடப்பதும் உயர்ந்த பண்புகள் கொள்வதுமே அன்பும் அறிவுமான கடவுளை வணங்குதல் என்பதற்கு ஏற்றதாகும்.” (ஆதாரம்: பெரியாரின் பொன்மொழிகள்)
பெரியார் வகுத்த இந்த வரைவிலக்கணம் இஸ்லாமியத் திருநெறிக்கும் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கைக்கும் அப்படியே பொருந்துகின்றன.
“பெரியார் பெரியார்” என்று மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிக்கும் பகுத்தறிவாளர்களும் திராவிட இயக்கத்தினரும் தலித் தலைவர்களும் இனியும் நாத்திகம் பேசி நாள்களைக் கடத்துவது சரியா என யோசிக்க வேண்டும்.
– சிராஜுல்ஹஸன், பொறுப்பாசிரியர், சமரசம்
இதரச் செய்திகள் : Click here