காங்கிரஸை 10 வருடத்திற்கு தலைமுழுகிவிட்டேன்
உர்து முன்ஷிகளே கிடையாது
சென்னை, ஜன. 7- தமிழ்த் திருநாளைக் கொண்டாடுதற்காக ஒரு பெரும் பொதுக்கூட்டம் புரசைவாக்கம் கம்பர் கழகத்தின் ஆதரவில் ஹைக்கோர்ட் கடற்கரையிலே சென்ற ஞாயிறு அன்று கூடியது. தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களும் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.
நடராஜனுக்கு அனுதாபம்
தோழர் பழனிச்சாமி அவர்களால் தமிழ் வாழ்த்துக் கூறப்பட்டு கூட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாயின.
“காலமான இந்தி எதிர்ப்புத் தொண்டர் தோழர் ல. நடராஜனின் மரணத்திற்கு வருந்துவதுடன் இக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தை அவர் குடும்பத்தாருக்குத் தெரிவிக்க கம்பர் தமிழ்க் கழகத்தாரைக் கேட்டுக்கொள்கிறது என்ற தீர்மானத்தைத் தலைவர் பிரரேபிக்க கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று தீர்மானத்தை நிறைவேற்றினர்.
தமிழ்க் கொடியேற்றுவிழா
தலைவர் முகவுரைக்குப் பின் தோழர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார் கரகோஷத்தினிடையே தமிழ்க் கொடி யேற்றுவித்தார்.
தோழர் எஸ் பாலசுந்தரப் பாவலர் அவர்கள் துணைவியார் திருமாட்டி பட்டம்மாள் அவர்கள் அடுத்தபடியாகப் பேசுகையில் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களின் தமிழ்ப் பற்று பாராட்டுதற்குரியது என்றும் தமிழ்ப் பெண்ணுலகம் தியாக நடத்தையில் ஆண்களுக்குப் பின்னரில்லையென்றும் கூறி விட்டு கனம் ஆச்சாரியார் ஆட்சியை பழங்கால அரக்கன் நீலன் ஆட்சிக்கு ஒப்பிட்டு நீலன் அவன் செய்த கொடுமைகளினால் அதிசீக்கிரம் துர் மரணமடைந்தான் என்று சொல்லப்படுவது போன்றே ஆச்சாரியார் கட்சி நெடுநாள் நீடிக்காது என்று கூறினார்.
ஜனாப் தாவுத்ஷா
“தாருல் இஸ்லாம்” ஆசிரியர் ஜனாப் தாவுத்ஷா அவர்கள் பலத்த கைதட்டலுக்கிடையே பேசியதன் சாரம்:–
“கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் அடிமைப் பத்திரிகை நிருபர்களுக்கும் கண்ணிருந்து இப்பெருங் கூட்டத்தைப் பார்த்திருப்பார்களானால் தமிழ் நாட்டில் இந்திக்கு ஆதரவிருக்கிறது என நெஞ்சாரப் பொய்தன்னைக்கூற அவர்களுக்குக்கூட துணிவிராது.
காங்கிரஸ் மந்திரிகள் இந்தியினால் தமிழுக்கு ஆபத்தில்லை என்றோ இந்தியினால் தமிழ்க்கலை வளரும் என்றோ கூற யோக்கியதை கிடையாது. அவர்களுக்குத் தமிழோ அல்லது இந்தியோ தெரியாது. பிரளயகாலத்திலிருந்து இதுவரை நிலைத்திருக்கும் ஒரு சில உலக மொழிகளில் ஒன்றாகிய தமிழைப் பற்றியோ, அல்லது ஆரியத்துடன் அறப்போர் புரிந்த தமிழைப்பற்றியோ வடநாட்டுத் தலைவர்கள் அறிந்தது என்ன? ஆரியம் என்று சொன்னாலே தோழர் ஶ்ரீனிவாசய்யங்காருக்கு மூக்கிற்கு மேல் கோபம் பொங்கிக் கொண்டு வரும். (சிரிப்பு) நான் சரித்திர பூர்வமானதைத்தான் கூறுகிறேன். இல்லை என்று மறுத்து ஆதாரம் காட்டும் பார்க்கலாம்.”
தமிழறிஞர் நமசிவாய முதலியார் அவர்கள் தமிழ் தொண்டைப்பற்றி ஜனாப் தாவுத்ஷா அவர்கள் குறிப்பிட்டு விட்டு மேலும் பேசியதாவது:–
“நிற்க. முஸ்லிம்களுக்குப் போதிக்கப்படும் இந்தி இந்தியே அல்ல. சமஸ்கிருதம் கலந்த தேவ நாகரியாகும். 125 பள்ளிக்கூடங்களில் இந்தி போதிப்பவர்கள் எல்லாரும் பார்ப்பனர் என்றே சொல்லலாம். உருது முன்ஷிகளே கிடையாது எனத் திட்டமாகக் கூறுவேன். நான் கூறுவதில் பிழையிருந்தால் கனம் ஆச்சாரியாரே திருத்தலாம்.
சட்டசபையிலே ஜனாப் ஹமீத்கான் உர்து முன்ஷிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்களென்று கேட்டதற்குக் கனம் ஆச்சாரியார் நோட்டீஸ் வேணுமென்று கூறினார். ஜனாப் ஹமீத்கான் அவர்கள் மறுபடியும் அந்த உர்து உபாத்தியாயர் எவ்வளவு பேர்களுக்கு உர்து கற்பிக்கத் தெரியும் என்று கேட்டதற்கு கனம் பிரதம மந்திரி, அவர்களுக்கும் கொஞ்சம் உர்து தெரியுமென்று மழுப்பினார்.
பொங்கல் பண்டிகை ஒன்றையே தமிழர்கள் பழங்காலந் தொட்டு கொண்டாடி வருகிறார்கள். தீபாவளிப் பண்டிகை எல்லாம் பின்னர் ஆரிய நாகரீகக் கலப்பால் தோன்றியவை. பொங்கலைக் கூட ஆரியர்கள் விட்டுவைத்தார்கள் என்றா நினைக்கிறீர்கள். அதற்கு மகா சங்கராந்தி எனப் பெயர் சூட்டினார்கள்.
காங்கிரஸ் மந்திரிசபை பதவியிலிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சமஷ்டி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி! தமிழர்கள் தங்கள் போரை தளராது நடத்த வேண்டும். பார்ப்பனரல்லாதார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும நீதி கிடைக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸிற்கும் எனக்கும் இன்னும் 10 வருடங்களுக்கு சம்பந்தமிலலை. அரசியல் என்னும் பெயரால் பார்ப்பனர்கள் கைப் பொம்மையாக இருப்பது காங்கிரஸ். அந்தக் காங்கிரசைக் கொண்டு பார்ப்பனர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்காவது தங்கள் ராமராஜ்யம் நிலைத்திருக்க வேண்டுமென்றே எண்ணுகிறார்கள். (கைதட்டல்) தமிழர்கள் போரை இடைவிடாது நடத்த வேண்டும்.”
ரெபரெண்டு அருள் தங்கையா அவர்கள் பேசுகையில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தமிழுக்குழைத்திருக்கிறர்களென்றும் தாங்கள் தமிழர்கள் என்றழைக்கப்படுவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.
பெரியார்கள் படத்திறப்பு விழா
காலஞ்சென்ற தமிழறிஞர் வி. மாணிக்க நாயகர் படத்தை தோழர் என். சங்கரன் திறந்துவைத்து அவர் வாழ்க்கைச் சிறப்பைக் கூறி தமிழர்கள் தங்கள் பெரியார்களை விட்டு, வடநாட்டவர்களைத் துதி பாடுவதை விட்டொழிக்கக் கேட்டுக்கொண்டனர்.
தோழர் சி.என். அண்ணாதுரை எம். ஏ. அவர்கள் நிவான் பகதூர் டாக்டர் சி. நடேச முதலியார் அவர்கள் படத்தைத் திறந்து வைக்கையில் குறிப்பிட்டதாவது:–
“தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமையிலே திவான் பகதூர் சி. நடேச முதலியார் படத்தைத் திறந்து வைக்க மிகவும் பெருமைப்படுகிறேன். நடேச முதலியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கென்றே உயிர் வாழ்ந்தவர். தலைவர் அவர்களின் மந்திரி சபையின்போதுதான் அவர் கொள்கை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. நடேச முதலியார் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு செய்த சேவை சொல்லவொண்ணாது அவர் கட்சி என்று வீழ்ந்ததோ அன்றே அவர் உயிர் இழந்தார். அவர் மிகவும் ஏழை. அவர் பெரிய அரசியல் நிபுணர் அல்ல. அவர் ஏழைகளுக்குழைத்தார். ஏழைகளால் போற்றப்படுகிறார். அவர் சேவையை சென்னை நகரத்தாருக்கு நான் விளக்கிக் கூற வேண்டியதில்லை. தற்பொழுது அவர் உயிரோடிருந்து தமிழர் உணர்ச்சியைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என வருந்துகிறேன்.
காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பேசுகையில் தமிழர்களுக்குப் பொங்கல் தினம் மிகவும் முக்கியமான தென்றும் பொங்கலே தமிழர் விழா என்றும் கூறி தமிழ்த் திருநாளைப்பற்றி விவரித்து விட்டு மேலும் பேசுகையில் கூறியதாவது:–
காங்கிரஸ்காரர்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அவர்கள் பதவியேற்றவுடன் தேன்மழை பொழியும், பாலாறு ஓடும் என்றெல்லாம் கூறினார்கள். பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளே எங்கும் பஞ்சம். மழை கிடையாது. மக்களுக்குச் சோற்றுக்கு வழியில்லை. கால்நடைகள் ஜீவனத்திற்குத் தவிக்கின்றன. குடிக்கத் தண்ணீரில்லை. வரியே கிடையாது என்று கூறினவர்கள் வரியையேனும் பஞ்சகாலத்தில் குறைக்கிறார்களா? கருணை கூர்ந்து ஒரு ரூபாய்க்கு கீழ் உள்ள நிலத் தீர்வை கொடுப்பதை ஒத்திப்போட்டிருக்கிறார்களாம். என்ன தயாளம்! குடிகளிடம் இருக்கும் அன்பு! இதனால் ஏதாவது குடியானவர்களுக்கு நன்மையுண்டா? அவர்கள் இருபது வருடத்திற்குத் தங்கள் பதவிக்கு ஆபத்தில்லையென்று கூறுகிறார்கள். அவர்கள் இன்னும் இருபது மாதங்களுக்கு நிலைத்திருக்கப் போகிறார்களா என்று கேட்கிறேன்.
அடுத்தபடியாகத் தோழர் சாரங்கபாணி அவர்கள் தமிழின் பெருமையைப் பற்றி பேசினார்.
தோழர் சி.டி.நாயகம் அவர்கள் நமசிவாய முதலியார் அவர்கள் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அவர் எங்ஙனம் விடாமுயற்சியால் ஒரு தமிழ் ஆசிரியர் பதவியிலிருந்து ராணிமேரி கல்லூரி பேராசிரியர் ஆனார் என்பதைப் பற்றியும் அவர் தமிழுக்குச் செய்த ஊழியத்தைப் போற்றியும் பேசினார்.
தோழர் அண்ணல் தங்கோ அவர்கள் பேசிய பிறகு வந்தனங் கூற கூட்டம் இனிது முடிந்தது.
(சனவரி 31, 1939 தமிழ் முரசு, சிங்கப்பூர் – இதழில் வெளியான செய்தி)
https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/preview/tamilmurasu19390131-1
நன்றி:
தமிழ் முரசு, சிங்கப்பூர்.
SPH MEDIA LIMITED, Singapore
NLB, Singapore