மன்னித்து வாழ்த்து

by நூருத்தீன்

வீட்டுக் கதவை நெருங்கும்போதே முஸ்தபாவுக்குத் தம் பிள்ளைகளின் வாக்குவாத ஒலி கேட்டது. அக்காவுக்கும் தம்பிக்கும் இன்று எதில் பிரச்சினையோ? யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்குமுஸ் ஸலாம்.” உம்மா மட்டும்தான் பதில் அளித்தாள். பிள்ளைகள் அத்தாவைக் கண்டதும் சண்டையை நிறுத்திவிட்டு, சோபாவில் ஆளுக்கொரு மூலையில் ‘உர்’ என்று அமர்ந்திருந்தார்கள். ரூமிற்குள் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு, ஒளூ புரிந்துவிட்டு வந்து அமர்ந்தார் முஸ்தபா.

“இரண்டு பேருக்கும் மூக்கிலிருந்து நீர் கொட்டுதே, குழாய் ரிப்பேரா?”

“அத்தா! இவன் என்னய ‘ஸ்டுப்பி’ன்னு திட்டிட்டான்” என்றாள் பத்து வயது மகள் சாலிஹா.

“ஸ்டுப்பின்னா?” புரியாமல் கேட்டார் முஸ்தபா. “ஸ்டுப்பிட்டாம்” என்றாள் உம்மா.

“அல்லாஹ்வே! ஏன் அப்படிச் சொன்னே கரீம்?”

“அத்தா, இந்த ஐபேட் எனக்குத்தானே தந்தீங்க? நான் கேம்ஸ் விளையாடும்போது அக்கா பிடுங்குறா?”

“எனக்குத்தானே அத்தா தந்தீங்க?”

“ஓ! இதுதான் பிரச்சினையா? நான் நம் அனைவருக்கும்தான் வாங்கினேன். ஷேர் செய்ய வேண்டும். அதற்காக அக்காவைத் திட்டலாமா?”

“ஐபேடை பிடுங்கினால் திட்டலாம்” என்று முணுமுணுத்தான் அப்துல் கரீம்.

“நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லவா? உண்மைக் கதை”. இறுகிய முகத்துடன் இருவருமே தலையை ஆட்டினார்கள்.

“மதீனாவில் ரபீஆ என்று ஒரு சஹாபி இருந்தார். அவர் ஏழை. எனவே நபி (ஸல்) அவருக்கு கொஞ்சம் நிலத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்கள். அந்த நிலத்தில் ஈச்சமரம் ஒன்று இருந்தது. ரபீஆவின் நிலத்திற்குப் பக்கத்தில் ஒரு நிலம் இருந்தது. அது அபூபக்ருக்குச் சொந்தமானது.”

“அபூபக்ருன்ன யாரு?” என்று கேட்டான் கரீம்.

“அவர் மிகவும் ஸ்பெஷலான சஹாபி. ரஸூலுல்லாஹ்வுக்கு ரொம்பவும் பெஸ்ட் ஃப்ரெண்ட். என் அரபிக் டீச்சர் சொல்லி இருக்காங்க. கரெக்ட்டா அத்தா?” உற்சாகமாகக் கூறினாள் சாலிஹா.

“கரெக்ட். சஹாபிகளைக் குறிப்பிடும்போது நாம் ரலியல்லாஹு அன்ஹு என்று சொல்ல வேண்டும். ஓக்கே. கதையைத் தொடர்வோம். அந்த இரண்டு சஹாபிகளின் நிலத்திற்கும் நடுவில் அந்த ஈச்சமரம் இருந்தது. அதனால், ரபீஆ அந்த மரம் தன்னுடையது என்றார். அபூபக்ருவோ அது என்னுடைய நிலத்தில் உள்ளது என்றார். இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேசப்பேச, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைத் தப்பாகப் பேசிவிட்டார். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வந்ததுமே அவருக்கு தவறு புரிந்து விட்டது. மிகவும் அச்சத்துடன், உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா?”

பிள்ளைகள் ஆர்வமாய் அத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“‘இதோ பாருங்கள் ரபீஆ. நான் உங்களைத் தப்பாகப் பேசிவிட்டேன். நீங்களும் ஒருமுறை என்னை அதைப்போல் பேசிவிடுங்கள். போதும். பழி தீர்ந்து விடும். நாளை அல்லாஹ்வுக்கு எதிரில் நமக்குள் பிரச்சினை இருக்காது” என்றார்.

அபூபக்ரு (ரலி) மிகவும் சிறப்பான சஹாபா, அஸ்-ஸித்தீக், பெருமதிப்பிற்குரியவர், உயர்ந்த மனிதர் என்பது ரபீஆவுக்குத் தெரியும். ஏதோ, கோபத்தில் வாய் தவறிச் சொல்லிவிட்டார். அதற்காக, அவரை அதேபோல் நாமும் திட்ட முடியாது, அது ரொம்ப தப்பு என்பதால், “ம்ஹும்! நான் உங்களைத் திட்ட முடியாது” என்று மறுத்துவிட்டார் ரபீஆ.

“என்னைத் திட்டப் போகிறாயா இல்லையா?” என்று மீண்டும் கேட்டார் அபூபக்ரு. “முடியாது!” என்றார் ரபீஆ.

“அப்படியானால் நான் ரஸூலுல்லாஹ்விடம் சென்று விஷயத்தைச் சொல்வேன்” என்று நபியைப் பார்க்கக் கிளம்பிவிட்டார் அபூபக்ரு. ஈச்சமரத்தைப் பற்றிக் கேட்பதற்குச் செல்லவில்லை. நான் ரபீஆவைத் தவறாகத் திட்டியதற்கு பதிலாய் அவர் என்னைத் திட்டி என் பாவத்தை நீக்க மாட்டேன் என்கிறார் என்பதைச் சொல்லி நியாயம் கேட்பதற்காக.

அபூபக்ரு விறுவிறுவென்று நடக்க, ரபீஆவும் வேகவேமாய் ஓடினார். ரஸூலுல்லாஹ்வைச் சந்தித்து, நடந்தை எல்லாம் கூறி அழுதார் அபூபக்ரு. “நான் அவரைத் திட்டி பாவம் புரிந்துவிட்டேன். அவரும் என்னைத் திட்டி அதைக் கழிக்கச் சொல்லுங்கள் என்று அழுதார்.”

“அப்படீன்னா நானும் இவனை ஸ்டுப்பிட்னு திட்டட்டுமா அத்தா?” என்றாள் ஸாலிஹா.

“நோ! பதிலுக்குப் பதில் திட்டக்கூடாது. மேற்கொண்டு என்ன நடந்தது என்று சொல்கிறேன். கேட்டுவிட்டு நீயே என்ன செய்யவேண்டும் என்று சொல். ‘ரபீஆ, உனக்கும் அபூபக்ருக்கும் இடையில் என்ன பிரச்சினை?’ என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நானும் அவரைப் பேச வேண்டுமாம். மறுத்துவிட்டேன்’ என்று பதில் அளித்தார் ரபீஆ.

‘நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு’ என்று ரஸூலுல்லாஹ் அட்வைஸ் செய்தார்கள். உடனே ‘அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் அபூபக்ரே!’ என்றார் ரபிஆ. ‘அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் ரபீஆ! அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும்’ என்று அபூபக்ரும் மகிழ்ச்சியால் அழுதுகொண்டே சொன்னார்.”

கதையை முடித்துவிட்டு, முஸ்தபா புன்னகையுடன் ஸாலிஹாவைப் பார்க்க, “அல்லாஹ் உனது பிழை பொறுக்கட்டும் கரீம்” என்றாள் அவள் தன் தம்பியிடம்.

கரீமும் உடனே பெரிய மனுஷனைப்போல், “அல்லாஹ் உனக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் அக்கா” என்றான்.

-நூருத்தீன்

புதிய விடியல் – டிசம்பர் 16-31, 2018

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment