Crusaders

மிகமிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்கு அமீர் தாவூத் அழகாக வருணித்துக் கூறிய கதையை நாம் அப்படியே எழுதுகிறோம்:

 என்னருமை மகளே! ஐயூபி வம்ச சுல்தான்கள் இந்த அரியாசனத்தில் என்றைக்கு ஏறினார்களோ, அன்றையிலிருந்தே ஐரோப்பா கண்டத்திலிருக்கும் அத்தனை நசாராக்களும் இங்குள்ள எல்லா முஸ்லிம்களையும் அடியுடன் ஒழித்துவிட்டு, பைத்துல் முகத்தஸையும் கைப்பற்றிக்கொண்டு, கிலாபத் ராஜ்யத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட வேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டார்கள்.

ஆனால், நம் ஸலாஹுத்தீன் ஐயூபி சுல்தான் காலத்தில் நிகழ்ந்த மூன்றாவது சிலுவையுத்தத்தில் அந்த நசாராக்கள் படுதோல்வியை அடைந்திருந்தும், அவர்களுக்கு நல்ல புத்தி வரவில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி அந்த ஸலாஹுத்தீன் மன்னர் அற்ப ஆயுளிலே காலமாகி விட்டார் ஆதலால், இனி முஸ்லிம்களைச் சுலபமாக வென்றுவிடலாம் என்றெண்ணி, அந்த ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி பலஸ்தீன்மீது படையெடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி ஏதும் கிட்டவில்லை. அன்றியும், பைத்துல் முகத்தஸை – ஜெரூஸலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், மிஸ்ரின் ஸல்தனத்தை முதலில் முறியடிக்க வேண்டுமென்று முடிவுகட்டினர்.

ஏனென்றால், மிஸ்ரிலுள்ள ஐயூபி சுல்தான்கள் மிகவும் வன்மை பொருந்தியவர்களாக இருக்கிற காரணத்தால்தான் பலஸ்தீனில் வெற்றியடைய முடியவில்லை என்பதையும், ஐரோப்பிய சிலுவை யுத்தப் படையினர் அப் புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைப்பதற்குள் மிஸ்ரின் ஸல்தனத்திலுள்ள சுல்தான் முதல் சிறந்த படைகள்வரை அங்கே திரண்டுவந்து குழுமிவிடுகிறார்கள் என்பதையும் எதிரிகள் நன்றாய்த் தெரிந்துகொண்டார்கள்.

ஆகவே, முதலில் இம் மிஸ்ரின்மீது படையெடுத்து வந்து இந்நாட்டை அடிமைப்படுத்த வேண்டுமென்று அந்த நசாராக்கள் ஒருமுகமாக முடிவு செய்துகொண்டார்கள். மிஸ்ரை அழித்துவிட்டால், பைத்துல் முகத்தஸைச் சுலபமாக விழுங்கிவிடலாமென்று அவர்கள் கனவுகண்டார்கள்.

அப்போதெல்லாம் நான் இந்த அரண்மனையில் மிகவும் ராஜதந்திர நிபுணத்துவம் வாய்ந்த எல்லா அமீர்களையும்விட அதிகமான திறமையுள்ளவனாக இருந்துவந்தேன். பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றுவதில் அந்தக் கிறிஸ்தவர்கள் தோல்வி அடைய அடைய, என்றைக்காவது இந் நாட்டின்மீதே அக்கயவர்கள் திரும்வார்களென்பதை நான்மட்டும் எதிர்பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். நான் இதனை அப்போது ஆட்சி செலுத்திவந்த சுல்தானாகிய ஸைபுத்தீன் என்னும் முதல் ஆதில் மன்னரிடம் எச்சரித்தும் வந்தேன். ஆனால், அவர் என் எச்சரிக்கைக்கு சற்றும் செவிசாய்க்கவில்லை.

ஹிஜ்ரீ 614-ஆம் ஆண்டு பிறந்தது – (கி.பி. 1217). ஆறாவது சிலுவையுத்தமும் ஆரம்பமாயிற்று. அப்போது ரோமாபுரியில் ‘பாபா’வாக – (போப் ஆண்டவராக) இருந்த மூன்றாவது இன்னஸெண்ட் என்பவர், பெண்களையும், பிள்ளைகளையும், வயோதிகர்களையும், குருடர்களையும், முடவர்களையும், குஷ்டரோகிகளையும், இன்னம் எல்லா வகையினரையும் ஏராளமாகப் படைதிரட்டி, அந்தப் “புனித யுத்தத்துக்குப்” போகுமாறு வற்புறுத்தினார்.

கிழக்குநோக்கிப் படையெடுத்துச் செல்வதற்காக ஏராளமான படைபலம் வேண்டுமென்றுணர்ந்த ஹங்கேரியின் மன்னனும், ஆஸ்திரிய பவேரியாவின் கோமகன்களும், கீழ் ஜெர்மனியின் சிற்றரசர்களும் தங்கள் சேனைகளையும் அப் பெரும்படையுடன் ஐக்கியப்படுத்திவிட்டார்கள்.

அதுவரை புரியப்பட்ட எந்தச் சிலுவையுத்தத்திலும் அதற்குமுன் எப்பொழுதுமே திரண்டிராத அத்துணைப் பெரிய பிரம்மாண்டமான கிறிஸ்தவப் பெருஞ்சேனை மிக்க உக்கிரத்துடன் புறப்பட்டு வந்தது. அச்செய்தியைக் கேள்வியுற்ற நாங்களெல்லோருமே கிடுகிடுத்து நடுநடுங்கிப் போய்விட்டோம். இங்கே மிஸ்ரிலாவது கொஞ்சம் தைரியமிருந்தது; ஆனால், ஷாம் பகுதியில் எல்லாருமே திகில்கொண்டு நிலைகுலைந்துபோய் விட்டனர். இஸ்லாத்துக்கும் புண்ணிய பூமிக்கும் அவ்வளவு பெரிய அபாயம் வரப்போகிறதென்பதைக் கேட்ட எவர்தாம் கதிகலங்காதிருக்கமுடியும்?

கிறிஸ்தவர்களின் சேனைப் பெருங்கடல் கடுவேகமாகப் பொங்குகிறதென்பதையும் அது வழிநெடுகச் சொல்லொணா அநியாய அக்கிரமங்களையெல்லாம் புரிந்துகொண்டே வருகிறதென்பதையும் கேள்வியுற்ற ஒவ்வொரு முஸ்லிமும் அப்படியே நெற்றியைப் பூமியில் பதிய வைத்துவிட்டு, இருகையேந்தி அல்லாஹுத் தஆலாவிடம் முறையிட்டுக் கொண்டனர். எவருமே மனநிம்மதி அடையவில்லை; பலர் உணவே உட்கொள்ளவில்லை. புன்முறுவலென்பது எப்படிப்பட்ட விதூஷகர் முகத்திலுங்கூடத் தவழவில்லை. எல்லாருடைய கருத்தும் கவலையும் எப்போதும் அந்த மாபெரும் எதிரிகளின் வருகைமீதே எதிர்பார்த்து ஊன்றியிருந்தன. அரசாங்கத்து வேடிக்கைகளும் கேளிக்கைகளும் அடியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒவ்வொருவர் முகத்திலும் கலவரக்குறியும் நிலைதடுமாறிய அவலத்தோற்றமுமே எப்போதும் குடிகொண்டிருந்தன. தீராத வியாதியுள் வீழ்ந்திருந்த பிணியாளிகளும் தங்கள் நோயின் கொடுமையை மறந்து, அந்த ஐரோப்பிய அக்கிரமம் பிடித்த நசாராக்களின் அநாகரிகமான மிருகத்தனத்தை நினைத்தே மாபெரும் கவலை கொண்டுவிட்டனர்.

அப்போது எங்கள் சுல்தான் அவசரமாக என்னைக் கூப்பிட்டனுப்பினார். முன்னமெல்லாம் நான் எச்சரித்து வந்ததை ஏளனமாகக் கொண்ட அவர் இப்போது இப்படையெடுப்பின் செய்திகேட்டதும், பெரிதும் குடல் குலுங்கி விட்டார். இன்னது செய்வதென்றே அவருக்குத் தோன்றாமையால், என்னிடம் ஆலோசனை கேட்டார். யோசிப்பதில் பயனில்லை என்றும், அப்போதே அவர் பெரிய படையைத் திரட்டிக்கொண்டு ஷாம் பகுதிக்குச் சென்று, எதிர்த்து வருகிற கிறிஸ்தவ சேனையைத் தடுத்து நிறுத்தவேண்டுமென்றும் நான் கூறினேன்.

அதுகேட்டு அவர், “தாவூத்! இந் நெருக்கடியான வேளையில் இந்த மிஸ்ர்தேசத்தை விட்டு என்னை ஷாம் தேசத்துக்கா போகச் சொல்கிறீர்?” என்று கேட்டார்.

அதற்கு நான், ”ஆம், மிஸ்ரை மிஸ்ர் மக்களாகிய நாங்கள் எப்படியும் காப்பாற்றிக் கொள்கிறோம். ஆனால், தரைமார்க்கமாக ஐரோப்பாவிலிருந்து நேரே கிழக்கு நோக்கித் திரண்டுவருகிற சேனைக்கடலைத் தாங்கள் எதிர்த்துச் சென்று, வழியிலேயே மடக்கி ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் சரியான மார்க்கமாயிருக்கிறது. அப்படி அவர்கள் மத்திய தரைக்கடலில் இறங்கி இந்நாட்டின்மீது படையெடுத்து வந்துவிட்டால், நானும் மற்ற அமீர்களும் சேர்ந்து அந்த எதிரிகளை இம் மிஸ்ருக்குள்ளே நுழைய முடியாதபடி செய்துவிடுகிறோம். அன்று தங்கள் சகோதரர் ஸலாஹுத்தீன் இந்த மிஸ்ரைத் தங்களிடம் எவ்விதமாக ஒப்படைத்துவிட்டு, ஆங்கில மன்னன் ரிச்சர்டை – அதுவும் சிங்கநெஞ்சம் படைத்த ரிச்சர்டை – அந்த மூன்றாவது சிலுவையுத்தத்தில் புறமுதுகிட்டோடச் செய்து அழியாப் புகழைப் பெற்றுக்கொண்டாரோ, அதேவிதமாகத் தாங்கள் இந்தத் தேசபாரத்தை அமீர்களாகிய எங்களிடம் யாதொரு பயமும் இன்றி ஒப்படைத்துவிட்டு, ஆண்டவன்மீது உறுதிகொண்டு, அந்த ஐரோப்பிய நாஸ்திக துரோகிகளை வழியிலேயே சின்னாபின்னப் படுத்திவிடுங்கள். தங்கள் சகோதரர் அன்று நாட்டிய புகழ்ப்பெருமையை இன்னம் அதிகப்படுத்த வேண்டிய பொறுப்புத் தங்களிடம் இருக்கிறது,” என்று விடை பகர்ந்தேன்.

சுல்தான் மௌனமாகச் சிந்தித்தார். அவர் யுத்தத்துக்கு ஷாம் செல்ல விரும்பாதிருந்தும், நான் அவருடைய சகோதரர் ஸலாஹுத்தீன் ஐயூபியின் புகழ்ப்பெருமையை ஞாபகப்படுத்தியதால், அவர் மனம் மாறிவிட்டது. பிறகு திடீரென்று, “நீர் சொல்கிறபடி நான் அந்தச் சிலுவை யுத்தக்காரர்களை ஷாம் பகுதியிலேயே தடுத்து நிறுத்த ஒத்துக்கொள்கிறேன். ஆனால், என் அண்ணன் காலத்தில் வந்த எதிரிகளைவிட இப்பொழுது படைதிரண்டு வந்திருப்பவரின் எண்ணிக்கையோ பன்மடங்கு அதிகம். அன்று இந்த மிஸ்ருக்கு இருந்த ஆபத்தைவிட இன்று இந் நாட்டுக்கு ஆபத்து அதிகம். அப்போது என் சகோதரர் போர்புரியச் சென்றிருந்தபோது, நான் இங்கிருந்துகொண்டு இந்நாட்டின் ஆட்சியைப் பரிபாலித்து வந்தேன். ஆனால், இப்போதோ, நான் போர் புரியச் சென்றுவிட்ட பின்னர் இத்தேசத்தைப் பராமரிக்க எனக்குச் சகோதரர் எவருமில்லையே?” என்று வருத்தங் கலந்த தொனியில் விதந்து கூறினார்.

நான் விட்டுக்கொடுக்க வில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் கூறிய ஆலோசனையெல்லாம் சுல்தானை எப்படியாவது ஷாம் பகுதிக்கு அனுப்பவேண்டும்; அப்போதுதான் முஸ்லிம்களுக்கு வெற்றிகிட்டும் என்பதாகவே இருந்துவந்தபடியால், இப்போது அவர் ஷாம் செல்ல ஒத்துக்கொண்ட பின்னர் நான் குதூகலம் கொண்டுவிட்டேன். எனவே, “மன்னர் பெருமானே! இந்த மிஸ்ரைக் காப்பாற்றத் தங்களுக்குச் சகோதரர் எவருமில்லையென்றா கூறுகிறீர்கள்? நான் தங்கள் தாயார் வயிற்றில்மட்டும்தான் பிறக்கவில்லையேயன்றி, தங்களுக்கு வேறெல்லாத் துறைகளிலுமே சொந்தச் சகோதரன்போலவே இதுவரை ஒழுகிவரவில்லையா? அன்றியும், நம் ரசூலுல்லாஹி (சல்அம்) அவர்கள் இவ்வகில முஸ்லிம்கள் அனைவருமே சகோதரர்கள்தாம் என்று அழுத்தமாக்க் கூறியிருக்க வில்லையா? குர்ஆனும் அவ்வாறே கூறியிருக்க வில்லையா? இன்று முஸ்லிம்களாகிய நம்மனைவர்க்கும் வந்திருக்கும் பொது ஆபத்தை வழியிலேயே எதிர்த்துத் தடுத்துநிறுத்தத் தாங்கள் இவ்விடம் விட்டுச் சென்றால், நாளை இவ்விடத்துக்கு வரக்கூடிய ஆபத்தை நாங்கள் தடுப்பதற்குத் தயங்குவோமா? எங்கள் உடலில் இறுதித்துளி இரத்தம் சிந்தி முடிகிறவரை எங்கள் கடமையை இந்த ஸல்தனத்துக்காகவும், சுல்தானாகிய தங்களுக்காகவும், முஸ்லிம்களாகிய நம் எல்லாருக்காகவும் நிறைவேற்றாமல் போவோமா? தயங்காதீர்கள். இனியும் யோசிப்பதில் பயனில்லை. உடனே புறப்படுங்கள். தங்கள் புத்திரர்கள் மூவரையும் வேண்டுமானால் உடன் கொண்டு செல்லுங்கள். இந்நாட்டை அமீர்களும் குடிமக்களும் எப்படி வீரத்துடன் காப்பாற்றிக்கொண்டனரென்பதை, இன்ஷா அல்லாஹ் தாங்கள் இங்கு வெற்றியுடன் திரும்பியதும், கண்டுகொள்வீர்கள்!” என்று நீண்ட பிரசங்கம் புரிந்தேன்.

நான் மெய் விசுவாசத்துடனும் உறுதியான உள்ளப் பரிசுத்தத்துடனும் பேசியதால், என் கண்களில் வீரக் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட சுல்தான் அப்படியே எழுந்தார். என்னை இறுகத் தழுவி, அப்போதே ராஜ்யபாரத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, அன்று மாலையிலே பெரும்படை திரட்டிக்கொண்டு, பைத்துல் முகத்தஸை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

எல்லையற்ற அதிகாரத்தை எனக்கு அவர் வழங்கிச் சென்றிருந்தும், ஷஜருத்துர்! நான் என்றுமே அதைத் துர்வினியோகம் செய்யவுமில்லை; அல்லது துர்வினியோகம் செய்யவேண்டுமென்று நினைக்கவுமில்லை. அமீராயிருந்தவனுக்கு அரசபோகம் கிடைத்துவிட்டதென்று சில பொறாமைக்காரர்கள் என்னைப் பரிகசித்தனர். ஆனால், அரசாங்கப் பாரத்தைச் சுமப்பது என்ன, சிறுவர்கள் தெருவில் பந்து விளையாடுவது போன்ற விளையாட்டான காரியமா? அதிலும், நான் அந்தப் பதவியை வகித்த காலத்தில் நிலைமை என்ன அமைதியாகவா இருந்தது? எதைச் செய்வதாயிருந்தாலும், அதிகம் யோசித்து யோசித்தே செய்யவேண்டியிருந்தது. யானே அரசனாயிருந்துவிட்டால், எதையும் சுயமே செய்துவிடலாம்! ஆனால், நான் சுல்தானுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி செலுத்தும்போது தவறேதும் நிகழ்ந்து விட்டால், நான் சுல்தானுக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? அவருக்கு நான் கொடுத்திருந்த வாக்கு ஒருபுறம்; பொறாமைக்காரர்களின் வயிற்றெரிச்சல் ஒருபுறம்; நாட்டுக்கு எந்நேரத்திலும் எதிரிகளால் விளைந்துவிடத்தக்க பேராபத்து இனியொருபுறம்; ஆட்சி உபத்திரவத்தின் சாசுவதமான சிக்கல்கள் வேறொருபுறம்; மக்களின் கவலை மற்றொருபுறம். இம்மாதிரியான இசகுபிசகான சங்கட சந்தர்ப்பத்தில் நான் சிக்கிக் கொண்டு மூளையைக் குழப்பிக் கொண்ட அந்த நாட்களை நினைக்கவே என் நெஞ்சம் துணுக்குறுகின்றது. நீ ஓர் அபலைச் சிறுமி; உனக்கு எங்கே இந்தச் சிக்கல்களெல்லாம் புரியப்போகின்றன? நீயும் ஒரு நாளைக்காவது இந்த ராஜ்யத்தின் அபாரப்பொறுப்பை நிர்விகிக்கநேர்ந்தால், அப்போது தெரியும், நான் சொல்கிற இவ்விஷயங்களின் தர்மசங்கட விவகாரங்கள். அது கிடக்கட்டும்; கதையைக் கவனமாய்க் கேள்.

சுல்தான்மட்டும் யுத்தத்துக்குச் சென்றாரே யொழிய, அவருடைய மூன்று குமாரர்களும் அவருடன் செல்லவில்லை. ராஜ்யபாரத்தை அமீர்களிடம் மட்டும் விட்டுப் போகக் கூடாதென்று அவர்கள் முதலில் பயந்த காரணத்தால் இங்கேயேதான் தங்கியிருந்தார்கள். ஆனால், நான் அந்த சுல்தானின் ஸ்தானத்தில் இருந்துகொண்டு, எவ்வளவு திறமையாக, அந்த ஐயூபி வம்சத்தார்களின் நன்மைக்காக ஆட்சியைச் செலுத்தினேன் என்பதை அவர்கள் கண்ணால் கண்டதும், தாம் கொண்டிருந்த ஐயம் நீங்கி, என்மீது முழு அன்பையும் அபிமானத்தையும் காட்டினார்கள். இங்கே மிஸ்ரை நான்மட்டுமே காப்பாற்றி விடுவேனென்பதைத் தெரிந்துகொண்ட அம் மூவரும் ஷாமுக்கே சென்று போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு உதவிபுரிய வேண்டுமென்று இறுதியாகத் தீர்மானித்தும் விட்டார்கள்.

இதற்கிடையில் முன்னம் சென்ற சுல்தான் ஒற்றர்கள் மூலமாக, எதிர்த்துவருகின்ற எதிரிப்படைகளின் முழுப் பலத்தையும் தெரிந்துகொண்டு விட்டார். தாம் கொண்டு சென்றுள்ள முஸ்லிம்படை போதாதென்று சந்தேகித்து, அவர் விசேஷத் தூதரை இங்கு அனுப்பினார். அத் தூதர் இங்கு வந்ததும், சுல்தானின் கவலையைத் தெரிவித்தார். அப்போது பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த மூன்று இளவரசரும் துள்ளித்துடித்து, தாங்கள் பெரும்படையைச் சேகரித்துக்கொண்டு தந்தையிடம் போவதாகத் தெரிவித்தனர். நானும் அனுமதியளித்தேன். மறுநாளே பெரும்படை திரட்டி, அம் மூவரும் என் அனுமதியைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.

இறுதியாக அந்த நசாராக்களின் சேனை ஷாமுக்கு வந்து சேர்ந்தது. அப் படையில் உத்தேசம் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் இருந்தார்கள். அவர்களுள் பெரும்பகுதியினர் ஜெர்மானியர். நான் முன்னமே வருணித்ததுபோல், அத்தனை அவலக்ஷணமும், அநாகரிகமும், குஷ்டரோகமும் பிடித்த ஆண், பெண், சிறுவர் நிரம்பிய கதம்பமாகவே அந்தச் சேனை காணப்பட்டது.

ஆனால், ஷாம் எல்லையருகில் அவர்கள் வந்ததும், நம்முடைய சுல்தானும் அவருடைய படைகளும் பைத்துல் முகத்தஸைக் காப்பாற்ற அணிவகுத்து நிற்கிறார்களென்பதை அவ்வெதிரிகள் கண்டதும், ஏமாற்றமுற்றனர். போர் நிகழ்த்த அந்த நசாராக்கள் தைரியங் கொள்ளவில்லை. யுத்தப் பயிற்சியேயில்லாத அந்த வெறுங் காக்கைக் கூட்டம் எந்தத் தைரியத்தை வைத்துக் கொண்டு போர் புரியும்? போப் சொல்லி விட்டாரென்பதற்காக அவர்கள் கண்மூடித்தனமாகத் திரண்டு வந்துவிட்டார்கள். ஆனால், ரணகளத்தில் எப்படி நுழைவார்கள்?

எனவே அப் பெருங்கூட்டம் உள்நோக்கிச் செல்லாமல், கரையோரமாகவே நாசவேலையைச் செய்ய முனைந்தது. அநாகரிகமாகவும், அக்கிரமமாகவும் அந்தக் கூட்டத்தினர் எல்லாச் சிற்றூர்களையும் கொள்ளையடித்தும், கொலைபுரிந்தும், தீயிட்டுக் கொளுத்தியும் தங்கள் பேய்ப்பசியைத தணித்துக் கொண்டார்கள். போர்புரிய வந்தவர்கள் இம்மாதிரியாகக் கொள்ளைக் கூட்டத்தினராக மாறிவிட்டதைக் கண்டு எல்லா முஸ்லிம்களுக்குமே ஆத்திரம் அதிகரித்தது. அநாகரிகம் பிடித்த அந்த அக்கிரம அரக்கர்களை எவர் தடுத்து நிறுத்த முடியும்? அவர்கள் தங்கள் படுகொலையிலும் பட்டப் பகல் கொள்ளையிலும் வெறிகொண்டு, மிக விரைவாகக் கரைமார்க்கமாக இம்மிஸ்ருக்கே வந்துவிட்டார்கள்.

ஷாமில் இருந்த சுல்தானுக்கும் அவர் குமாரர்களுக்கும் இந்த வெறிபிடித்த கூட்டத்தினரின் செயல் ஏமாற்றத்தையேயளித்தது. அன்றியும், அந்த நசாராக்கள் மிஸ்ர் நோக்கிப் போகிறார்களென்பதைக் கேள்வியுற்றதும், உடனே அங்கிருந்து சுல்தான் கிளம்பினார். ஆனால், வருகிற வழியில் ஆண்டவன் நாடியிருந்த வண்ணம், சுல்தான் ஆதில் ஹிஜ்ரீ 615-ஆம் ஆண்டில், ஜமாதியுல் அவ்வல் மாதம், 7-ஆம் தேதி (21-8-1218) வழியிலேயே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்து விட்டார். ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!’ அதற்கு இருபது ஆண்டுகட்கு முன்னர் அவர் சகோதரர் எப்படி மூன்றாவது சிலவை யுத்தத்தில் வெற்றிபெற்றபின் இந் நாட்டுக்குத் திரும்பு முன்னரே வழியில் திமஷ்கில் காலஞ் சென்றாரோ அப்படியே இந்த இளைய சகோதரரும் மிஸ்ர் வந்து சேரு முன்னமே திமஷ்க் அருகிலேயே மரணமடைந்து விட்டார்.

ஆனால், சுல்தானுக்கு வழியில் இந்த எதிர்பாராத முடிவு ஏற்பட்டுவிட்டதென்பது எங்களுள் எவருக்குமே தெரியாது. ஏனெனில், கரையோரமாக விரைந்துவந்த அந்த நசாராக்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளே நீலநதி முகத்துவாரத்தின் கிழக்குக் கரைக்கு வந்துவிட்டார்களென்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அப்படி அங்கே வந்து சேர்ந்த கொள்ளைக் கூட்டம் அங்குள்ள தமீதா என்னும் பட்டணத்தை முற்றுகையிட்டுவிட்டது என்றும் மறுநாளே செய்தி கிடைத்தது.

காஹிராவுக்கு இவ்வளவு அருகிலுள்ள தமீதாவை எதிரிகள் சூழ்ந்துகொண்டார்களென்னும் செய்தி எங்களுக்கு எட்டியவுடனே மனம் இடிந்துபோனோம். தமீதாவை அடுத்துள்ள இஸ்கந்தரிய்யாவை எப்படிக் காப்பாற்றுவது? காஹிரா என்ன கதியாகும்?… மிஸ்ர் தேசமே அவ்வெதிரிகளுக்கு அடிமைப்பட்டு விடுமோ? என்ற அச்சம் என் மனத்தைக் கலக்கிவிட்டது. அப்போதுதான் நான் ஆதில் சுல்தானை அவ்வளவு வற்புறுத்தி ஷாமுக்கு அனுப்பியது முட்டாள்தனம் என்று என் மனம் என்னை நிந்தித்தது. ஆனாலும், அரசர் அங்குச் சென்றிராவிட்டால், இக் கொள்ளைக்கூட்டம் பைத்துல் முகத்தஸையும் ஷாமையும் விழுங்கியிருக்குமே என்ற ஒரு சமாதானம் மட்டுமே சாந்தியளித்தது.

எனினும், நான் செயலற்றுவிடவில்லை. மிஸ்ருக்கு ஆபத்து வந்துவிட்டதென்பது கேட்டு, சுல்தானும் அவருடைய படைகளும் இங்குத் திரும்பி வந்துவிடுமென்று நான் எதிர்பார்த்து, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, தமீதாவுக்குள் சிக்கித்தவிக்கும் எழுபதினாயிரம் உயிர்களை எப்படிக் காப்பாற்றலாமென்பதற்குத் திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஏற்பட்ட பெருத்த மனக் கவலையின் காரணமாக நரைக்க ஆரம்பித்த என் ரோமங்கள் என்னை அப்போதே கிழடுதட்டச் செய்துவிட்டன.

தமீதாவுக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு, அவர்கள் முஸ்லிம்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், யூதர்களாயினும், மஜூஸிகளாயினும் யாதொரு வித்தியாசமும் பாராட்டாது உணவுப்பண்டங்களையும் ஏனை அத்தியாவசியப் பொருள்களையும் ஒவ்வொருவருக்கும் ஒரே அளவில் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று நான் கட்டளை பிறப்பித்தேன். இந்த நீலநதி மார்க்கமாகப் பெரிய தோணிகளில் அப் பண்டங்களை ஏற்றியனுப்பிக் கொண்டேயிருந்தேன். எதிரிகளிடம் சிக்கியவை போக எஞ்சிய பண்டங்கள் தமீதா மக்களுக்குக் கிடைத்தே வந்தன.

இதற்கிடையில் நான் தினமும் சுல்தான் மிஸ்ருக்கு வந்துவிடுவார், வந்துவிடுவார் என்றே எதிர்பார்த்தேயிருந்தேன். ஆனால், அவர் திமஷ்கருகே உயிர்நீத்தார் என்னும் திடுக்கிடத்தக்க செய்தி வந்ததும், நான் நிலைகுலைந்து போய்விட்டேன். எவர்பொருட்டு நான் காத்திருந்தேனோ, எவருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்று துடித்து நின்றேனோ, எவர் வந்தால் இந்த தமீதா முற்றுகையின் சிக்கலைத் தீர்த்து விடலாமென்று நான் முற்றும் நம்பியிருந்தேனோ, அவர், வழியில் ஆண்டவனால் பறிக்கப்பட்டு விட்டாரென்று கேள்வியுற்றதும், மயக்கமுற்று வீழ்ந்துவிட்டேன்.

பிறகு நான் கண்விழித்துப் பார்த்தபோது, எனக்கருகில் இளவரசர் முஹம்மத் காமில் அமர்ந்து எனக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டிருந்ததைக் கண்டேன். நான் சட்டென்று எழுந்து அமர்ந்தேன். அவர் தம் முகத்தை மூடிக்கொண்டு சிறுபிள்ளைபோல் தேம்பித்தேம்பி அழுதார். சுல்தான் ஆதில், தம் மூத்த குமாரராகிய அவரை எவ்வளவு அன்புடன் வளர்த்துவந்தாரென்பதை நான் நன்கு அறிந்திருந்தேன்; ஆகையால், அவர் அழுவதைப் பார்த்து எனக்கும் அழுகை வந்துவிட்டது. அழுதேன்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 16-31 ஜனவரி 2012

<<அத்தியாயம் 10>>     <<அத்தியாயம் 12>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment