வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” – 2

மற்றும் தயானந்தர் இவ்வாறும் எழுதுகின்றார்: “விவாகத்தினால் பிணைக்கப்பட்ட இருவர் தமக்குள் பத்துக் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நியோகத்தினால் சேர்க்கப்பட்ட இருவர்

இரண்டு அல்லது நான்கு குழந்தைகளுக்குமேல் பெறுவது கூடாது… கைம்பெண் ஒருத்தி தனக்காக இரண்டு குழந்தைகளையும் தன் நியோக புருஷர்கள் நால்வருள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு குழந்தைகளாக ஜனிக்கச் செய்யலாம். இவ்வண்ணமே மனைவியை இழந்தவனும் தனக்காக இரண்டு குழந்தைகளையும் தன் நான்கு விதவைகளுக்காக ஒவ்வொருத்திக்கும் இவ்விரண்டு குழந்தைகள் விகிதமும் பெற்றுக் கொள்ளலாம். இதனால் ஒவ்வொரு தம்பதியும் பத்துக் குழந்தைகளைப் பெறலாம். இதையேதான் வேதமும் ஊர்ஜிதப் படுத்துகின்றனது.

(விவாகம் செய்துகொண்டவள் தன் ஒரு புருஷனிடமிருந்து பத்துக் குழந்தைகளைப் பெறலாம்; ஆனால், நியோகத்தில் ஈடுபட்டவள் அவ்வாறு ஒரே நாயகன் மூலம் எல்லாப் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்வது கூடாது; ஒன்றுக்கு மேற்பட்ட நான்கு புருஷர்களிடம் போய்த்தான் அப்பிள்ளைகளைப் பெறுதல் வேண்டுமாம்! இன்னமும் விதவைகள் ஒவ்வொருவனாகப் பதினொரு புருஷர்கள்மட்டும் நியோகம் செய்வதேபோல், மனைவியை இழந்தவனும் ஒவ்வொருத்தியாகப் பதினொரு விதவைகள் மட்டும் நியோகம் புரிந்துகொள்ளலாமென்றும் தயானந்த்ஜீ ருக்வேதத்திலிருந்து ஆதாரம் காட்டியுள்ளார்.

இதிலென்ன இரகசியமிருத்தல் கூடுமென்று எம்மால் அறியக்கூடவில்லை; நியோக விதவைகள் பதினொரு புருஷர்களிடம் கலந்துதான் பத்துப் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதன் அந்தரங்கம்தான் என்ன? நியோக புருஷன் ஒருவனைக்கொண்டே ஏன் ஒரு விதவை பத்துப் பிள்ளைகளையும் பெற்றெடுத்தல் கூடாது? மானத்தை ஒருவனிடம் மட்டுமே காட்டி, மற்றையோரிடம் காட்டாமல் மறைத்துக்கொள்ளக் கூடாதா? வியபிசாரத் தொழிலில் ஈடுபட்டுக்கிடக்கும் ஸ்திரீ புருஷர்களுங்கூட இப்படிப்பட்ட ஈனத்தொழிலில் இறங்குவதற்கு அஞ்சுகின்றனரே!

பகிரங்க வியபிசாரிகளும் கண்ட கண்டவரிடத்தெல்லாம் தம் மானத்தைக் காட்ட மறுக்கின்றனர்; இவர்களுக்கு ஒருவனிடம் தொடர்புண்டாய்விடும் பக்ஷத்தில், பிறகு பத்துப் பன்னிரண்டல்ல, ஒன்றிரண்டு அயலாரையும் விழைவதற்கும் மனந்துணிவதில்லை. இதனால் இவ் விஷயத்தில் வியபிசாரிகளுக்கும் நாணமுண்டு என்பதை நன்கறிந்து கொள்ளுகிறோம். ஆனால், நியோகம் புரிய முன்வரும் ஆண்களும் பெண்களும் இதை அனுமதிக்கும் மஹரிஷியும் இதைக் கற்பித்த பகவானும் அவர்களுடைய வேதங்களும் மானமென்பதை விடுத்து மகாபரிசுத்தம் (?) அடைந்துவிட்டதாகவே கருதப்படல் வேண்டும். கபீர்.)

குமாரனுக்கும் குமாரிக்கும் கல்யாணமாவதேபோல் விதவைக்கும் மனைவியை இழந்தவனுக்கும் நியோகம் ஆகிறதேயல்லாது, ஒருபோதும் குமாரனுக்கும் குமாரிக்கும் நியோகமாவதில்லை,” என்று தயானந்தர் கூறுகிறார்; அஃதாவது, கல்யாணமாகாத இள நங்கையரும் கன்னிகழியாத இள வாலிபரும் நியோகம் செய்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

(அந்தோ அப்ஸோஸ்! தாரமிழந்தவருக்கும் விதவைகளுக்கும் கிடைக்கும் நியோகம் என்னும் தேவாமிர்தம் ஏன் இள நங்கையருக்கும் யௌவன வாலிபருக்கும் கொடுக்கப்படுதல் கூடாது? இவர்கள் மட்டும் என்ன பாபம் செய்தார்கள்? இவர்களுக்கும் நியோகத்தை அனுமதித்துவிட்டால், யாருக்கென்ன தீங்கு விளைந்துவிடப் போகிறது? தாரத்தையேனும் புருஷனையேனும் இழக்காத விவாகமாய்விட்ட ஸ்திரீ புருஷர்களும் நியோகம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, விவாகமாகாத கன்னிகைகளும் காளைகளுமே இந்த நியோக போகத்தினின்றும் தடுக்கப்பட்டுள்ளார். காரணந்தான் என்ன? இஃதெமக்கு ஆச்சரியத்தையே விளைக்கின்றது. கபீர்)

விவாகத்தினால் சேர்க்கப்பட்ட தம்பதிகள் எப்பொழுதும் ஒன்றாய் வசிப்பதேபோல் நியோகத்தினால் பிணைக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் ஒன்று சேர்ந்து வசிப்பதில்லை; ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி உறவாடக்கூடிய சேர்க்கையின் வேளையிலல்லாமல் மற்றைக் காலங்களில் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை,” என்றும் சத்தியார்த்தப் பிரகாச ஆசிரியர் வரைந்துள்ளார்.

(இவ்வாறாகவேதான் வியபிசார ஸ்திரீ புருஷர்களும் செய்துவருகிறார்கள். சிற்றின்ப மோகம் பொங்கியெழுங்கால் ஆணும் பெண்ணும் ஒன்று கூடுகின்றனர்; வேறு சாதாரண காலங்களில் அவரவரும் தத்தம் இல்லத்திலேதான் தனித்தனியே வசித்துவருகின்றனர். இதனினும் நியோகம் எவ்வாறு வேறுபட்டது? கபீர்.)

விதவை தனக்காக நியோகம் செய்வாளாயின், இரண்டாவது கர்ப்பத்தை அடைந்தவுடன் தன் நியோக புருஷனிடமிருந்து விலகிக்கொள்வாள்; இவ்வாறே மனைவியை இழந்தவனும் தனக்காக நியோகம் செய்வானாயின், இரண்டாவது கர்ப்பத்தை உண்டாக்கியவுடன் தன் நியோக விதவையை விட்டு விலகிக்கொள்வான். ஆனால், நியோகம் செய்த ஸ்திரீயானவள் இரண்டு மூன்று வருஷம்வரை குழந்தையை வளர்த்தபின் நியோக புருஷனிடம் அதை ஒப்புக்கொடுத்து விடவேண்டும்,” என்றும் எழுதியுள்ளார்.

(எனவே, குழந்தைகளின் பொருட்டு ஆடவர் பெண்டிரையும் பெண்டிர் புருஷரையும் தேடித் திரியும்படியான அவசியம் ஏற்பட்டு விட்டதென்று தெரிந்து கொள்ளுகிறோம். ஸ்வீகாரத்தினால் குழுந்தைகளை எடுத்து வளர்த்துக்கொண்டால் இவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரைத்தேடி மற்றொருவர்…… போல் அலைந்து திரிந்து ஆபாச நியோகம் அளவில்லாது செய்யவேண்டுவதின்று.

இவ்வாறின்றித் தாரமிழந்தவர்களும் விதவைகளும் கௌரவமான முறையில் புனர்விவாகம் செய்துகொண்டு நல்ல கண்ணியமிக்க முறையில் புண்ணியமாகச் சுமார் பத்துக் குழந்தைகள் மட்டும் ஈன்றெடுக்கலாம்; இப்படிச் செய்வதாலும் நியோகமென்னும் நீசத் தனத்தினின்றும் தப்பிக்கொள்ளலாம். வெவ்வேறு சுரோணித சுக்கிலங்களால் வெவ்வேறு குழந்தைகள் ஜனிப்பதைக் காட்டினும் ஒரே தம்பதிகளின் சேர்க்கையால் பல குழந்தைகள் பிறந்துவிடின், அவர்களுக்குள் சண்டை சச்சரவுகளும் மற்றும் பற்பல பொறாமை புழுக்கங்களும் இல்லாமல் ஒழியுமே. ஒரே உதரத்தில் ஒரே இந்திரியத்தால் உற்பத்தியாகும் அன்புக்குழவி வம்புகளை விலக்கக்கூடியதாய் இருக்கிறது.

இரண்டாவது கர்ப்பத்தை அடைந்தவுடன் அந்த நியோக புருஷனை விட்டு அந்த நியோக ஸ்திரீ இரண்டாவது, மூன்றாவது, நான்காவதென்று பதினொரு புருஷர்மட்டும் தேடிக்கொண்டு திரியவேண்டும்  என்பதன் கருத்து, அவள் ஒரே நியோக புருஷனுடன் இருந்து விடுவாளாயின், அப்பொழுது வியபிசாரியென்று அழைக்கப்படுவாள் என்னும் இழிய எண்ணத்துக்கு இடந்தரலாகாது என்னும் அந்தரங்கம் அல்லாது வேறு என்னவாய் இருத்தல் கூடும்?

ஏனெனின், வியபிசாரிகள் தங்கள் மானத்தை முன்னிட்டுப் பத்துப் பதினொரு புருஷரிடம் சேர்ந்து கொள்வதில்லை. வியபிசாரிகள் ஒருவனிடம் தங் கற்பை இழந்துவிடுவார்களாயின், அதன்பின்பு ஆயுள் பரியந்தம் அவனையே பற்றிக்கொண்டு நிற்கின்றனர்; கூடியவரை தங்களுடைய சம்பந்தத்தைப் பிரித்துக்கொள்வதில்லை. தம்முடைய கற்பை அழித்த அவனையே கதியென்று பற்றிக்கொள்ளுகின்றனர். பலபேர்களிடம் இவ் வெட்கமற்ற தொழிலைச் செய்யப் பெரிதும் வெட்கப்படுகின்றனர். கூடியமட்டும் அவர்கள் நாணத்தையே மேற்கொண்டு ஒழுகுகின்றனர். கபீர்.)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment