அல்லாஹ் அல்லாதவரிடம் வேண்டுதல் புரியும் விதம்

1. மனிதர்களால் வேண்டுதல் புரியப்படும் சில கோரிக்கைகள் ஆண்டவனால் அல்லாது, அவனுடைய சிருஷ்டிகளான அடியார்களால் நிறைவேற்றி வைத்து விடுவது

முடியாதனவாகும். உதாரணமாக, மனிதர்களைப் பீடித்திருக்கும் வியாதியும் நாற்காற் பிராணிகளைப் பீடித்திருக்கும் துன்பங்களும் சொஸ்தமாய்விட வேண்டும் என்று எண்ணுவதும் எதிர்பாரா விதமாய்த் தன்னுடையே வியாதியே போலுள்ள கடன் தீர்ந்துபோக வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தன்னைச் சேர்ந்த கூட்டத்தினர் குடும்பத்தினர்கள் சுகமே ஜீவித்திருக்கு வேண்டும் என்றெண்ணுவதும் இவ்வுலகிலம் மறுவுலகிலும் எந்தவிதமான கஷ்டத்துக்கும் சங்கடத்துக்கும் தான் ஆளாகாமலிருக்க வேண்டும் என்றெண்ணுவதும் தனக்கு எதிரியாயுள்ள பகைவன் தனக்கு ஐக்கியப்பட்டவனே போல் ஆகிவிடவேண்டுமென்று விரும்புவதும் இன்னமும் ஹிருதயத்துக்கு நேர்வழி காட்டுவதும் பாபங்களை மன்னிப்பதும் மேன்மையான சுவனபதியில் நுழையச் செய்வதும் நரக வேதனையினின்று தான் தப்பிக்கொள்ள வேண்டுமென்று விழைவதும் கல்வியைச் சரியான முறையில் கற்று, அதன் இரகசியங்களை நன்குணர்ந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுவதும் சரியான நற்குணத்தைக் கொண்டு சாந்தகுண சீலராய் விளங்க வேண்டுமென்று விருப்பங் கொள்வதும் தன் ஹிருதயத்தினகத்தே காணக்கிடக்கும் கொடிய எண்ணங்களை அப்புறப்படுத்தி நல்ல குணங்கள் நிறையப் பெற்றதாய் இருக்க வேண்டுமென்று எண்ணுவதும் ஆண்டவனல்லாத ஏனையவர்கள் எவராயினும் அன்னவர்களிடம் கேட்பது கூடவே கூடாது.

உதாரணமாய் மலக்குகளாயினும் வலீகளாயினும் ஷெய்குகளாயினும் பீர்களாயினும் முர்ஷித்களாயினும் அன்னவரே போன்ற வேறெவராயினும் – அவர்கள் ஜீவித்திருப்பார்களாயினும் மரணம் அடைந்தவர்களாயினும் – அன்னவர்களை முன்னோக்கி, “ஏ இன்னாரே! என்னுடைய பாபங்களை மன்னித்தருள வேண்டும். (கிறிஸ்தவர்கள் தங்கள் பாதிரிமார்களிடம் இவ்வாறுதான் வேண்டுதல் புரிகின்றனர்.) பகைவன்மீது எனக்கு ஜயத்தைக் கொடுத்தருள வேண்டும்; என்னுடைய வியாதி சொஸ்தமடையும்படி செய்ய வேண்டும்; என்னுடைய கூட்டத்தினர் குடும்பத்தினர்களைச் சுகமாய் வைக்க வேண்டும்; என்னுடைய நாற்காற் பிராணிகளுக்கு எந்த விதமான ஆபத்தும் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்,” என்பன போன்ற வார்த்தைகளைக் கொண்டு வேண்டுதல் செய்துகொள்வது மிகமிக அழுத்தமாய்க் கண்டிக்கப்பட்டிருக்கிறது. இல்லை! எவரேனும் இவ்வாறு வேண்டுகோள்களைச் செய்வாராயின், நிச்சயமாய் இன்னவர் ஆண்டவனுக்கு இணை வைத்து வணங்கும் கூட்டத்தினரே போல் ஷிர்க் செய்பவராகவேதாம் காணப்படுகின்றனர். எப்படி எனின், உலகின்கண் சிலர் மலாயிகத்துகளையும் அன்பியாக்களையும் வணங்கி வருகின்றனர்.

இன்னமும் சிலர் தங்கள் எண்ணங்களுக் கொப்பச் சிலைகளையும் விக்ரகங்களையும் செய்து (நபிமார்களென்றும் மலக்குகளென்றும் எண்ணி) வணக்கம் புரிந்து கொண்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மஸீஹ் மரியம் (அலை) முதலியவர்களுக்குச் சர்வ சாதாரணமாய் வணக்கம் புரிந்து வருகின்றனர். எனவே, மேலே காட்டப்பட்ட வர்க்கத்தினரனைவரும் உண்மையில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவேதாம் இருக்கின்றனர். இதையேதான் நம் நாயன் பின் காணும் திருவாக்கியங்களைக் கொண்டு விவரித்துக் காட்டுகிறான்:—

“அல்லாஹ் மரியத்தின் புத்திரர் ஈஸாவை நோக்கி ‘என்னையும் என்னுடைய தாயாரையும் ஆண்டவர்களாய் ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்றா மனிதர்களுக்குச் சொன்னீர்? என்று சொல்வான்” (குர்ஆன் 5:116).

“அன்னவர்கள் (தங்கள் உண்மையான) அல்லாஹ்வை விடுத்து மரியத்தின் குமாரரான மஸீஹையும் மஷாயிகுகளையும் கல்விமான்களையும் ரப்புகளாய்ப் பற்றிக்கொண்டனர். (ஆனால்) அவர்கள் ஒரே ஆண்டவனைத்தான் வணங்க வேண்டுமென்று உத்தரவிடப்பெற்றார்கள்; வணக்கத்துக்குரியவன் அவனன்றி வேறில்லை. அவர்கள் இணை வைப்பதினின்றும் (அல்லாஹ்) தூய்மையானவனாய் இருக்கிறான்” (குர்ஆன் 9:31).

2. வேறு சில காரியங்கள் வெளித் தோற்றத்தில் ஆண்டவன் உதவியின்றி மனிதர்களே செய்து முடிக்கும் காரியமேபோல் காணப்படுகின்றன. இவ்வாறான காரியங்களிலும் சிற்சில விஷயங்களில் மனிதர்களிடமே வேண்டுதல் புரிவது கூடாது எனக் கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கொப்ப இறைவன் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பின் காணுமாறு எச்சரிக்கை செய்கின்றான்:—

“நீர் (உம்முடைய மனோ சங்கடங்களினின்றும்) நீங்கியிருக்கும்போது ஆண்டவனுக்கு வணக்கம் புரிவதில் அமர்ந்து விடுவீராக. மேலும், உம்முடைய ரப்பின் பக்கல் முழுதும் சார்ந்துவிடுவீராக” (குர்ஆன் 94:7, 8).

இதுவுமல்லாமல் எமது நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின் காணுமாறு வஸிய்யத் செய்திருக்கிறார்கள்; “ஏதேனுமொன்றைக் கேட்பீர்களாயின், அல்லாஹ்வினிடமே கேட்பீராக. உதவி தேடுவீராயின், ஆண்டவனிடமே தேடுவீராக!” என்று கூறியதுடனே, ஸஹாபாக்களுள் ஒரு கூட்டத்தினருக்கு ஒரு சமயம், “மனிதர்களிடத்தே எந்தவிதமான உதவியையும் தேடுவது கூடாது,” என்றும் உபதேசம் செய்தார்கள். இதைக் கேட்டதன்பின் அந்த மெய்யான ஸஹாபாக்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் கையினின்றும் தவறிக் கீழே விழுந்த சாட்டையைக்கூட வேறொருவர் எடுத்துத்தர வேண்டுமென வேண்டினார்களில்லை. இதையொட்டியே நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்:

“என்னுடைய உம்மத்தினின்று எழுபதினாயிரம் மனிதர்கள் ஒருவித விசாரணையுமின்றியே சுவனலோகம் போய்ச் சேர்வார்கள். அவர்கள் (யாரெனின்) தங்களை மிக்க உயர்ந்தவர்களென்று எண்ண மாட்டார்கள்; மற்றவர்களை இழித்துக் கூற மனம் துணியார்கள். சகுனம் பார்க்க மாட்டார்கள்; மேலும், அன்னவர்கள் தங்கள் ரப்பின்மீது பரிபூரண நம்பிக்கை வைத்தவர்களாய் இருப்பார்கள்” – (புகாரீ, முஸ்லிம்).

இதுவுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்காணுமாறும் திருவுளம் பற்றியுள்ளார்கள்:

“எவரேனும் தம்முடைய சோதரருக்குப் பச்சாத்தாபப்பட்டு, அவர்கள் மறைவாயிருக்கும் பொழுது அவருக்காக அண்டவனிடம் துஆ கேட்பாராயின், (துஆ கேட்கும்) இவருக்காக அல்லாஹ் ஒரு மலக்கை ஏற்படுத்துகிறான். இவர் துஆ கேட்குந்தோறெல்லாம் இந்த மலக்கானவர் இவருக்காக ஆண்டவனிடம் துஆ கேட்ட வண்ணமே இருக்கின்றார்.”

இஃதேபோல், “மறைவாயிருப்பவர் மறைவாயிருக்கும் மற்றவர் பொருட்டு துஆ கேட்பாராயின், அஃது ஆண்டவனால் அங்கீகரிக்கப்படுகின்றது,” எனத் திருவுளமாயுள்ளார்கள். இதையொட்டியேதான், தங்களுடைய உம்மத்துகள் தங்கள்மீது சலவாத்துச் சொல்வதையும் தங்க(ளின் ஏவல்க)ளை வஸீலாவாய்க் கொள்ள வேண்டுமென்பதையும் நாயகம் (ஸல்) அவர்கள் திருவுளமாயுள்ளார்கள். எப்படியெனின்:

“முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்பீர்களாயின், நீங்களும் அவ்வாறே மிருதுவாய்ச் சொல்லுங்கள். பிறகு என்மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஒருவன் என்மீது ஒருமுறை சலவாத்துச் சொல்வானாயின், அல்லாஹ் அவன்மீது (கருணை புரிந்து) பத்து முறை சலவாத்துச் சொல்லுகிறான். பிறகு எனக்காக அல்லாஹ்வினிடம் வஸீலாவைத் தேடுங்கள். இதுவோ, சுவர்க்கலோகத்தில் ஒரு மேலான பதவியாய் இருக்கின்றது. அல்லாஹ்வின் அடியார்களுள் ஒருவருக்கே இந்தப் பதவி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அடியான் யானாய் இருக்கலாம் என்றெண்ணுகிறேன். எனக்காக அல்லாஹ்வினிடம் யாரேனும் வஸீலாவை வேண்டுவராயின், அன்னவருக்கு என்னுடைய ஷபாஅத் இறுதி நாளின்போது உரியதாய் இருக்கின்றது.”

எனவே, உயர்ந்தவர்களிடமும் மேலானவர்களிடமும் ஆண்டவனிடம் துஆ கேட்க வேண்டுமென வேண்டுதல் செய்வது ஷரீஅத்தின்படி ஓர் அங்கீகரிக்கப்பட்டுள்ள காரியமாகும். உதாரணமாய் (ஹஜ்ஜு நாட்களில்) உம்ரா செய்து பிரிந்து செல்லும்போது ஹஜரத் உமர் (ரலி) அவர்களை நோக்கி நாயகம் (ஸல்) அவர்கள், “ஏ என்னுடைய சோதர! உம்முடைய துஆவினின்று என்னை மறந்து விடுவது கூடாது,” என்று திருவுளமாயுள்ளார்கள்.

மேலே சொன்ன விஷயத்திலும் நமக்குத்தான் பிரயோஜனம் காணப்படுகின்றது. எப்படி எனின், நம் நாயகம் (ஸல்) அவர்கள், “என் மீது சலவாத் சொல்லுங்கள்; மேலும் எனக்காக வஸீலாவையும் அல்லாஹ்வினிடம் தேடுங்கள்,” என்று கூறியதுடன் நில்லாமல், “என்மீது ஒருவன் ஒரு சலவாத் சொல்வானாயின், அவன்மீது ஆண்டவன் பத்து முறை சலவாத் சொல்லுகின்றான்; இன்னமும் எவனாயினும் எனக்காக வஸீலாவை அல்லாஹ்வினிடம் கேட்பானாயின், அவன் என்னுடைய ஷபாஅத்துக்கு லாயிக்காய் விடுகிறான்” என்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள். இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனின், மற்றவரின் பிரயோஜனத்தை அடைவதும் தன்னுடைய சொந்தப் பிரயோஜனத்தை நாடி இதை அல்லாஹ் அல்லாத ஏனையவர்களிடம் கேட்பதும் உண்மையில் முரண்பட்ட இரண்டு வேறு விஷயங்களாகும் என்பதே. இதை விளக்கும் சில நாயகப் பொன்மொழிகளைக் கவனிப்பீர்களாக:

“நாயகம் (ஸல்) அவர்கள் உவைஸ் கர்னீ (ரஹ்) அவர்கள் விஷயமாய்ப் பேசிக்கொண்டிருக்குங் காலையில் ஹஜரத் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உம்மால் கூடுமாயின் அவரின் வாயிலாய் அல்லாஹ்வினிடம் பாபமன்னிப்புக்கு துஆ கேட்கச் சொல்வீராக’ என்று சொன்னார்கள். (புகாரீ).

ஹஜரத் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இவர்களிடையே ஏதோ ஒரு விஷயத்தில் அபிப்ராய பேதத்தின் காரணமாய்ப் பிணக்க மேற்பட்டது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “என்னுடைய பாபத்தை மன்னிக்கும்படி நீர் துஆ கேட்க வேண்டும்” என்றும், இனியொரு ரிவாயத்தில், “உமர் கத்தாப் (ரலி), அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி இம்மாதிரி கூறினார்கள்” என்றும் காணப்படுகின்றன. – (புகாரீ, முஸ்லிம்).

“ஒரு சமயம். மழை பெய்யாமலிருந்த காலத்து மனிதர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து மழைக்காக ஆண்டவனிடம் துஆ கேட்க வேண்டுமன வேண்டிக்கொள்ள, நாயகமவர்கள் அவ்வாறே துஆ கேட்க, உடனே மாரி பொழிந்தது” – (புகாரீ, முஸ்லிம்).

“நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப்பின் மழையில்லாமல் மனிதர்கள் கஷ்டமான நிலைமையிலிருந்தபோது, ஹஜரத் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னே நிற்கும்படி செய்து, உமர் கத்தாப் (ரலி) அவர்கள், ‘ஏ எங்கள் ஆண்டவனே! நாயகம் (ஸல்) அவர்கள் ஜீவித்திருந்த காலத்து அவர்களின் மூலமாய் எங்களின் அவசியமான காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தோம்; இப்பொழுது நாயகமவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்களின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம். எனவே, எங்களுக்கு மாரியின் ரஹ்மத்தை அருள்வாயாக!” என்றொரு புனித விஷயமும் காணக் கிடக்கின்றது – (புகாரீ, முஸ்லிம்).

ஒரு சமயம் ஒரு பட்டிக்காட்டு அரபி, தம்முடைய உயிருக்கும் முதலுக்கும் ஆபத்து வந்துவிட்டதென்றும் தம்முடைய குடும்பத்தினர்கள் பட்டினி கிடக்கின்றார்களென்றும் சகிக்க முடியாத கஷ்டங்கள் உண்டாகின்றனவென்றும் சொல்லிக் கொண்டு நாயகத்தின் சமுகத்தில் ஆஜிராய், “நாயகமே! அல்லாஹ்வினிடம் துஆ கேட்பீர்களாக. அல்லாஹ்வை உங்களிடம் ஷபீ ஆகக் கொண்டிருக்கின்றோம்; ஆண்டவன் சமுகத்தில் தாங்கள் எங்களுக்கு ஷபாஅத் செய்பவர்களாயிருக்கின்றீர்கள்,” என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் நாயகம் (ஸல்) அவர்கள் முகத்தில் கோபத்தின் குறி காணப்பட்டவர்களாய், “ஏ அஃராபியே! ஆண்டவன் யாரிடமும் ஷபீஆய் வரமாட்டான். சகல வர்க்கத்தினர்க்கும் மேம்பட்ட அதிகாரத்தை உடையவன். மேலும் அவன் மிக்க மேலானவனாகவும் உன்னத மிக்கவனாகவும் இருக்கின்றான்,” என்று மறுத்துக் கூறினார்கள், என்று அவ்விஷயம் காணக் கிடக்கின்றது.

எனவே, நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினிடம் ஷபாஅத் செய்வதென்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அல்லாஹ் எந்த மனிதரிடமும் ஷபாஅத் செய்ய வரமாட்டான் என்று சொல்லி, இவ்வாறு சொல்லும் இவ்விஷயத்தில் கோபம் கொண்டவர்களாயும் காணப்படுகின்றனர்; உண்மையான விஷயமும் இதுவே. ஏனெனின், உயர்வாயிருப்பவனிடம் தாழ்ந்தவன் ஸிபாரிஷ் செய்யலாம்; ஆனால், உயர்வாயிருப்பவன் தாழ்ந்தவனிடம் ஸிபாரிஷ் செய்யவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஆகவே, ஆண்டவன் எல்லாக் காரியங்களையும் சகல சிருஷ்டிப் பொருள்களைவிடத் தான் நாடியபடி செய்யத் திராணியுள்ளவனாய் இருக்கிறான். இவனே சிருஷ்டி கர்த்தனாயுமிருக்கிறான். எனவே, அல்லாஹ் எந்த விதமாகவும் யாரிடமும் தேவையுடையவனாகவோ, உதவியை எதிர்பார்ப்பவனாகவோ இல்லை என்னும் விஷயத்தை யான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment