60. அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (عبد الله ابن عباس) – 2
கல்வியும் ஞானமும் ஓய்ந்த பொழுதில் ஒழிந்த நேரத்தில் ஈட்டிவிட முடியாதவை. முழு அர்ப்பணிப்புடன் கற்க முயலாதவரை அவை அசாத்தியம். மற்றபடி போகிற போக்கில் கற்றுப் பெறுவதெல்லாம் நுனிப்புல்.
“அறிவைத் தேடுவதில் ஏற்படும் இன்னல்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள். அவை இறுதியில் உங்களுக்கு உயர்வைத்தான் கொண்டு வந்து சேர்க்கும்” என்று இப்னு அப்பாஸ் கூறியுள்ளார். அவரது மற்ற தகுதிகள்கூட வேண்டாம்; அதிலுள்ள உண்மையை உணர அனுபவஸ்தர் என்ற அவரது தகுதியே போதும்.
நபியவர்கள் ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டு மரணமடைந்தபோது இப்னு அப்பாஸின் வயது ஏறத்தாழ பதின்மூன்று என்று பார்த்தோமில்லையா? சற்றொப்ப அவரது பதினாறு வயதினிலே, ஹிஜ்ரீ பதின்மூன்றில் இரண்டாவது கலீஃபாவாக உமர் ரலியல்லாஹு அன்ஹு பொறுப்பேற்றார். அவரது ஆட்சிக்காலம் பத்து ஆண்டுகளும் சில மாதங்களும் நீடித்தன. உமர் மரணமடையும்போது இப்னு அப்பாஸுக்கு இருபத்து ஆறு வயது இருந்திருக்கலாம்.
இருந்துவிட்டுப் போகட்டும். எதற்கு இந்த ஒப்பீடு?
உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் முதிர்ந்த வயது; நபியவர்களுடன் அவருக்கு இருந்த அணுக்கம்; சுகம், துக்கம், போர் என்று அவர் கொண்டிருந்த அனுபவம்; இவையெல்லாம் எவ்வளவு விசாலம்? அத்தகு உமர், தமது ஆட்சிக் காலத்தின்போது பதின்மப் பருவத்து இளைஞர் இப்னு அப்பாஸுடன் பாராட்டிய நெருக்கத்தையும் அவரது அறிவுக்கு அளித்த கண்ணியத்தையும் உணர்ந்து கொள்ளத்தான்.
நபியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் தோழர்கள் பெருமதிப்பு வைத்திருந்தார்கள்; பணிவும் பாசமும் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்சொன்ன தாபித் பின் கைஸ் அவர்களின் நிகழ்வும் தம் வீட்டு வாசலில் படுத்திருந்த இப்னு அப்பாஸை நோக்கி அந்தத் தோழர் கூறியதுமே போதுமான சான்றுகள். எனவே இதிலென்ன ஆச்சரியம் என்று தோன்றலாம். இது அதுவன்று. அதைத் தாண்டிய விஷயம்.
எப்படி?
கலீஃபா உமரின் அவை. அவை என்றதும் அரண்மனை, சிம்மாசனம், கிரீடம், பகட்டு, பிரம்மாண்டம் என்று நமக்கு ஏற்படும் இயல்பான கற்பனைகளை அப்படியே நீக்கிவிட்டு, எளிய குடிலில் அனைவரும் சமமாய்க் கூடி அமர்ந்திருக்கும் காட்சி ஒன்றை மனத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும். மூத்த, அனுபவமிக்க தோழர்கள் கலீஃபாவுடன் அமர்ந்திருந்தார்கள். பத்ருப் போராளிகள், முஹாஜிரீன்கள், அன்ஸார்கள் என்று பழுத்த சான்றோர் நிரம்பியிருந்த அவை அது. அங்கிருந்த மூத்தவர்களுக்கு இப்னு அப்பாஸின் வயதை ஒட்டிய மைந்தர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் இப்னு அப்பாஸைத் தம்முடன் நெருக்கமாக அமர்த்திக் கொள்வார் உமர். பல தோழர்களுக்குப் பெரும் வியப்பு. சிலர் கேட்டே விட்டார்கள்.
“இவரது வயதில் எங்களுக்கு மைந்தர்கள் உண்டு. அத்தகு இளைஞரை நமது அவையில் இணைத்துக் கொண்டுள்ளீரே ஏன்?”
அது அவரது கல்வி அறிவின் மேன்மைக்காக என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க விரும்பினார் உமர். ‘அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்’ என்ற வசனத்தை ஓதினார் உமர். குர்ஆனில் சூரா அந்-நஸ்ரின் முதல் இரண்டு வசனங்கள் அவை.
“இதைப் பற்றி உங்களின் விளக்கம் என்ன?” என்று தோழர்களிடம் கேட்டார் உமர்.
சில தோழர்கள், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்றார்கள். “எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் மற்றும் சிலர். மற்றவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்கள்.
தெரியாத விஷயங்களைத் ‘தெரியாது’ எனச் சொல்வதிலும் அமைதி காப்பதிலும் அவர்களுக்குத் தயக்கம், வெட்கம் இருந்ததில்லை. அதுவும் இறை வசனங்கள் எனும்போது அவர்களது எச்சரிக்கை பன்மடங்கு.
“நீர் என்ன சொல்கிறீர்?” என்று இப்னு அப்பாஸிடம் வினவினார் உமர்.
விளக்கமளித்தார் இப்னு அப்பாஸ். “அல்லாஹ்வின் தூதருடைய மரணத்தை இவ்வசனங்கள் முன்னறிவிக்கின்றன. ‘அல்லாஹ்வின் உதவி கிடைத்து, மக்கா நகர் கைப்பற்றப்படுவது, உம்முடைய மரணம் நெருங்குகிறது என்பதன் அடையாளம். எனவே உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்’ என்று அல்லாஹ், தன் தூதரிடம் கூறுகின்றான்.”
“நானும் அதை இவ்விதமே புரிந்து வைத்துள்ளேன்” எனக் கூறிய உமர், தம் அவையிலிருந்தவர்களுக்கு இபுனு அப்பாஸ் என்ற இளைய தோழருக்கு இறைமறையில் இருந்த ஆழ்ந்த ஞானத்தைப் புரியவைத்தார்.
ஒருமுறை இப்னு அப்பாஸைத் தம்மிடம் நெருக்கமாக அழைத்து, “ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மை அழைத்து உமது தலையைத் தடவி ‘யா அல்லாஹ்! இவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான புரிதலை அளிப்பாயாக. குர்ஆனின் விளக்கங்களைக் கற்றுத் தருவாயாக’ என்று இறைஞ்சியதை நான் பார்த்திருக்கிறேன்” என்று உமர் தெரிவித்தார்.
“அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் எத்தகு சிறந்த குர்ஆன் விரிவுரையாளர்” என்று வியப்பதும் அவர் வந்தால், “கேள்விகள் கேட்பவர்; புரிந்து கொள்பவர் – முதியவர்களுக்குரிய இளைஞர் வந்திருக்கிறார்” என்று உமர் அவரைக் கௌரவப்படுத்துவதும் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.
இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதானிருந்தார் தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு. தம் மகனை அழைத்து அறிவுரைகள் கூறினார்.
“என் மகனே! அமீருல் மூஃமினீன் உமர் உம்மைத் தம்முடன் நெருக்கமாக வைத்திருப்பதையும் தனிமையில், அல்லது நபியவர்களின் தோழர்களின் மத்தியில் உம்மிடம் ஆலோசனை கேட்பதையும் நான் கவனித்திருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தெரிவிக்கிறேன். கவனமாக அறிந்துகொள். எக்காரணம் கொண்டும் அவரது ரகசியங்களை வெளிப்படுத்திவிடாதே – அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்; எக்காரணம் கொண்டும் அவரிடம் பொய்யுரைக்காதே; எக்காரணம் கொண்டும் அவரிடம் பிறரைப் பற்றிப் புறங்கூறி விடாதே.”
தம் மைந்தரையும் அவரது உயர் குணங்களையும் புத்திக் கூர்மையையும் அப்பாஸ் அறியாதவரல்லர். கலீஃபா உமரின் அனுபவம், தகுதிகள், அவருக்கும் தம் மகனுக்கும் உள்ள வயது வித்தியாசம் என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பாசக்காரத் தந்தை தம் மகனுக்கு அதிகப்படியாய்த் தெரிவித்த ஆலோசனைகள் அவை. கவனமுடன் கேட்டுக் கொண்டார் இப்னு அப்பாஸ்.
இவ்விதம் இப்னு அப்பாஸ் மிக இள வயதில் அடைந்த மதிப்பும் அவரது அறிவுக்குக் கிடைத்த அங்கீகாரமும் அவரிடத்தில் என்ன செய்தன? மேலதிக அடக்கம் வளர்க்க உதவின. மூத்தோர் அவையில் அமர்ந்திருக்கும்போது அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே பேசுவாரே தவிர மற்ற நேரங்களில் மௌனமும் நடப்பவற்றை அமைதியாகக் கவனிப்பதுமே அவரது இயல்பாக இருந்திருக்கிறது.
கலீஃபா உமரிடம் சில வழக்குகள் வரும்போது இப்னு அப்பாஸிடம், “சிக்கலான வழக்குகள் வந்துள்ளன. இதைத் தீர்த்து வைக்க நீர்தான் சரியானவர்” என்று ஆலோசனை கேட்பார் உமர்.
ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, “இப்னு அப்பாஸைப்போல் புரிந்துகொள்வதில் துரிதமானவர்கள், அதிகமாய் அறி்ந்தவர்கள், பாண்டித்யம் மிக்கவர்களை நான் கண்டதில்லை. மூத்தவர்கள் சூழ்ந்திருக்க, கடினமான பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாட உமர் (ரலி), இப்னு அப்பாஸை அழைப்பதைக் கண்டிருக்கிறேன். அவரது ஆலோசனையைச் செவியுறுவார். செயல்படுத்துவார்” என்று தெரிவித்திருக்கிறார்.
“இப்னு அப்பாஸுக்கு உமர் முன்னுரிமை அளித்ததைப் போன்று அவர் வேறு எவருக்கும் அளித்து நான் பார்த்ததில்லை” என்று வியந்துள்ளார் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
இப்படி எத்தனை நற்சான்றுகள்? இருந்தும் ‘ஸிரியாவின் ஹும்ஸ் பகுதிக்கு ஆளுநராகச் செல்லுங்கள்’ என்று கலீஃபா உமர் பதவி அளித்தபோது மறுத்துவிட்டார் இப்னு அப்பாஸ். ரலியல்லாஹு அன்ஹு.
oOo
உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின்போது நிகழ்வுற்ற போர்களில் இப்னு அப்பாஸ் முக்கியமான படை வீரரும்கூட. ஸயீத் இப்னுல் ஆஸ் கூஃபா நகரிலிருந்து குரஸான் நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, அதில் ஹஸன், ஹுஸைன், அப்துல்லாஹ் இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் போன்ற இளைய தோழர்களின் அணி.
ஆப்பிரிக்காவின் வடக்கே துனீஸியா நாட்டின்மீது படையெடுக்க அப்துல்லாஹ் இப்னு ஸஅத் கலீஃபா உதுமானுக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டார். தோழர்களுடன் கலந்து விவாதித்து அனுமதி அளித்தார் உதுமான். அந்தப் படையெடுப்பிலும் இளைய தோழர்களின் அணியில் – ஹஸன், ஹுஸைன், இப்னு ஜஅஃபர், இப்னு அப்பாஸ். இவ்வாறு போர்க்களத்தையும் உள்ளடக்கித்தான் அவரது வாழ்க்கை அமைந்திருந்தது.
அடுத்து அலீ ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றார். அது அரசியல் சிக்கல், குழப்பங்கள் மிகைத்திருந்த நேரம். இஸ்லாமிய ஆட்சியின் தலைமையகம் மதீனாவிலிருந்து பஸ்ராவுக்கு நகர்ந்தது. மதீனா நகரின் பொறுப்பை இப்னு அப்பாஸிடம் ஒப்படைத்துவிட்டு பஸ்ராவுக்கு இடம்பெயர்ந்தார் அலீ. முன்னர் கலீஃபா உமரின் ஆட்சியின்போது பதவியை நிராகரித்தவர், இப்பொழுது நிர்ப்பந்தம் என்றானதும் பொறுப்பைச் சுமக்கத் தயங்கவில்லை. பின்னர் பஸ்ரா நகரிலிருந்து கூஃபா நகருக்கு அலீ இடம்பெயரும்படி ஆனதும் இப்னு அப்பாஸை அழைத்து ஆளுநர் பதவியை ஒப்படைத்தார். பிறகு அவருக்கு அறிவுரை வழங்கினார் அலீ. நமக்கும் அதில் நிறைய பாடம் என்பதால் கவனமுடன் படித்துக் கொள்ள வேண்டும்.
“அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சும்படி நான் உமக்கு அறிவுறுத்துகிறேன். உம்மை யாருக்கு அவன் பொறுப்பாளராக ஆக்கிவிட்டானோ அவர்களிடம் நீதியுடன் நடந்துகொள்ளவும். மக்களிடம் அன்புடனும் இன்முகத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ளவும். உமது அறிவையும் ஞானத்தையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும். பிறரிடம் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும் – ஏனெனில் அவை மனத்தை மரணிக்கச் செய்து வாய்மையைக் கொன்றுவிடும். நினைவில் கொள்ளவும் – எவையெல்லாம் உம்மை அல்லாஹ்வுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறதோ அவை உம்மை நரக நெருப்பைவிட்டு வெகுதொலைவு தள்ளிவிடும். எவையெல்லாம் உம்மை நரக நெருப்பிற்கு நெருக்கமாய்க் கொண்டு செல்லுமோ அவையெல்லாம் உம்மை அல்லாஹ்வை விட்டுத் தொலைவிற்குத் தள்ளிவிடும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரவும். அசட்டையானவருள் ஒருவராக ஆகிவிடவேண்டாம்.”
அத்துடன் நின்றுவிடவில்லை. அமீருல் மூஃமினீன் அலீ. அவ்வப்போது இப்னு அப்பாஸுக்கு அறிவுரை வழங்கிக் கடிதம் எழுதுவதும் தொடர்ந்தது.
ஒரு மடலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
“தனக்குக் கிடைக்கக்கூடாத ஒன்று கிடைக்காமற் போனதை நினைத்து ஒரு மனிதன் வருந்தலாம். எது தவறிப்போகாமல் அவனுக்குக் கிடைத்திருக்கக்கூடுமோ அது கிடைத்துவிட்டதே என்று அவன் மகிழலாம்.
எனவே, மறுமைக்கான விஷயங்களில் எது உமக்குக் கிடைக்கிறதோ உமது இன்பம் அதைச் சார்ந்து இருக்கட்டும். மறுமைக்கான விஷயங்களில் எது தவறுகிறதோ அதைச் சார்ந்து உமது வருத்தம் அமையட்டும்.
உலகைச் சார்ந்த ஆதாயங்கள் கிடைக்கும்போது அதிகம் மகிழ வேண்டாம். அதைச் சார்ந்த விஷயங்கள் கை நழுவும்போது அதிகம் வருந்தவும் வேண்டாம். உமது கவலையெல்லாம் மரணத்திற்குப் பிறகு நிகழ்வதைப் பற்றியதாக இருக்கட்டும்.”
பணியைத் துவங்கினார் இப்னு அப்பாஸ். ஞானம் மிகைத்திருந்ததைப்போல் நிர்வாகத் திறமையும் அவரிடம் இருந்தது. பஸ்ரா மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி ஸிஜிஸ்தான். அதன் ஆளுநரை கவாரிஜ்கள் கொலை செய்தனர். கலீ்ஃபா அலீயுடன் ஆலோசித்து, பஸ்ராவிலிருந்து படையை அனுப்பிவைத்தார் இப்னு அப்பாஸ். கவாரிஜ்கள் கொல்லப்பட்டு, அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விஷயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலம், அதன் அரசியல், போர்கள் போன்றவை நெடிய வரலாறு. தமது கிலாஃபத்தில் அலீ (ரலி) சந்தித்த பல முக்கிய சவால்களுள் ஒன்றுதான் கவாரிஜ்கள். அவர்களுடன் இப்னு அப்பாஸ் நிகழ்த்திய விவாதம் ஒன்று உண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அது. அதை அறியும் முன் கவாரிஜ்கள் பற்றி அறிய வேண்டும்.
யார் அவர்கள்?
தொடரும், இன்ஷா அல்லாஹ்…
oOo
– நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 23 செப்டம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை