57. உபாதா பின் அஸ்ஸாமித் (عبادة بن الصامت) – 2
கூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி வைத்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஒவ்வொர் ஆயிரம் வீரருக்கு ஒரு முக்கியமான தோழர் தலைமை.
‘நாலாயிரம் வீரர்கள் அனுப்பியுள்ளேன். ஒவ்வோர் ஆயிரம் வீரர்களுக்கும் ஒருவர் தலைமை என நான்கு பேரையும் அனுப்பியுள்ளேன். அந்த நால்வருள் ஒவ்வொருவரும் ஓராயிரம் வீரருக்குச் சமம்! எனவே இப்பொழுது உம் வசம் பன்னிரண்டாயிரம் வீரர்கள் உள்ளனர். பன்னிரண்டாயிரம் வீரர்கள், எண்ணிக்கை பற்றாக்குறையினால் தோற்கப் போவதில்லை.’
ஒருவர் ஆயிரம் பேருக்குச் சமமான அந்த நால்வர் ஸுபைர் இப்னுல் அவ்வாம், மிக்தாத் இப்னுல் அஸ்வத், மஸ்லமா இப்னு முக்கல்லத் (மற்றொரு குறிப்பில் காரிஜா இப்னு ஹுதாஃபா), உபாதா இப்னு அஸ்ஸாமித். ரலியல்லாஹு அன்ஹும்.
இந்தப் பக்கம் துணைப்படை வந்து சேர, அந்தப் பக்கம் பைஸாந்தியர்களும் எகிப்தியர்களும் முஸ்லிம் படைகளை எதிர்த்துப் பெருமளவில் திரண்டு வந்தனர். அப்பொழுது மிகச் சிறப்பான இராணுவத் தந்திரம் ஒன்றைக் கையாண்டார் அம்ரு பின் அல்ஆஸ். அது முந்தைய போர்களில் காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு இராக்கில் கையாண்ட உத்தி.
தம் படையை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதி அல்-ஜபல் அல்-அஹ்மர் எனும் பகுதியில் எதிரிகளை நோக்கிக் காத்திருக்க நியமிக்கப்பட்டது. அடுத்த பகுதி நைல் நதியோரம் உம்மு தனீன் அருகே காத்திருந்தது. மூன்றாம் பகுதி, எதிரியை நேருக்கு நேர் சந்தித்தது. முரட்டுத்தனமாய் நிகழ்ந்தது போர்.
மும்முரமான ஒரு கட்டத்தில் அல்-ஜபல் அல்-அஹ்மர் பகுதியிலிருந்த முஸ்லிம் படை திடீரென்று வெளிவந்து, எதிரிகளின் மீது பாய்ந்தார்கள். அதை எதிரிப் படைகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முஸ்லிம்களின் பலமான தாக்குதலும் அவை ஏற்படுத்தும் இழப்பும் தாங்க இயலாமல் சிதறி, உம்மு தனீன் நகரை நோக்கி அவர்கள் தப்பி ஓட, அங்குக் காத்திருந்த முஸ்லிம்களின் படை, வாள், அம்பு, ஈட்டி சகிதமாய் இரு கை நீட்டி வரவேற்று, எதிரிகளைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தனர்.
முஸ்லிம்களின் மும்முனைத் தாக்குதலுக்கு இடையே வசமாகச் சிக்கி, இறுதியில் பைஸாந்திய, எகிப்திய படைகளுக்குப் படு தோல்வி ஏற்பட்டது. பெருமளவில் அவர்களது படை பலம் அழிந்து, பாபிலோன் கோட்டையை நோக்கி ஓடித் தப்பிய மற்றவர்கள் உயிர் பிழைத்தனர். முஸ்லிம்களுக்குத் தெளிவான வெற்றியுடன் முடிவற்றது அந்தப் போர். உம்மு தனீன் முஸ்லிம்கள் வசமானது.
ரோமர்களின் பைஸாந்தியப் பேரரசிற்கு எகிப்து கட்டுப்பட்டிருந்த காலம் அது. கப்பம், வரி என்று கொட்டி அழுத காப்டிக் எகிப்தியர்களை பைஸாந்தியர்களின் இராணுவமும் அரசாங்கத் துறைகளும் முழுக்க முழுக்க ஆண்டு வந்தன. எகிப்தை ஆள்வதற்கு அலெக்ஸாந்திரியாவைவும் பண்டைய நகரான மெம்ஃபிஸையும் தங்களுக்கு உகந்த தலை நகரங்களாக ரோமர்கள் ஆக்கி வைத்திருந்தார்கள்.
எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் பாபிலோன் கோட்டை என்றொரு பண்டைய நகரம். பாபிலோன் என்றதும் ஈராக் பகுதியின் புகழ்பெற்ற பண்டைய பாபிலோன் நினைவுக்கு வந்து குழப்பலாம். பெயரைத் தவிர அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எகிப்திலிருந்த ரோமர்களுக்குப் பாதுகாப்பு மிக்க வல்லரணாக இந்த பாபிலோன் கோட்டை திகழ்ந்து வந்தது. இந்நகரில் முகவ்கிஸ் எனும் கிறித்துவன் காப்திக் எகிப்தியர்களின் தலைவன். அவர்களின் ஆன்மீகத்திற்கு, அரசியலுக்கு எல்லாம் அவன்தான் குரு.
உம்மு தனீன் நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதும் பைஸாந்தியப் படை வீரர்கள் தப்பி ஓடினார்களே? அவர்கள் பாதுகாப்பாய்ச் சென்று நுழைந்து கொண்டது இந்த பாபிலோன் கோட்டைக்குள்தான். வல்லரணாய்த் தடுத்து நின்ற இந்தக் கோட்டையை நோக்கித் தம் படைகளை நகர்த்தினார் அம்ரு பின் அல்ஆஸ். பாபிலோன் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
நீண்ட நாள் முற்றுகைக்குப்பின் அம்ரு பின் அல்ஆஸுக்கு முகவ்கிஸ் கடிதம் எழுதியனுப்பினான். அதுவும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவையும் சுவையும் படிப்பினையும் உள்ளடக்கியவை. கடிதம், உரையாடல் என நிறைய உள்ளதால் ஒருமுறை மூச்சை நன்றாக உள்ளிழுத்துவிட்டுத் தொடருவோம்.
முகவ்கிஸின் தூதுவர்கள் அம்ரு பின் அல்ஆஸிடம் கடிதத்தை நீட்டினார்கள். ‘நீங்கள் எங்களது நாட்டுக்குள் ஊடுருவி எங்களுடன் போரிட முனைந்து நிற்கிறீர்கள். அதற்காக நீண்டகாலம் முற்றுகையிட்டுத் தங்கியுள்ளீர்கள். சிறியதொரு குழுவினர் நீங்கள். படை பலம் மிகுந்த பைஸாந்தியர்கள் உங்களைத் தாக்கத் தயாராகிவிட்டனர். அவர்கள் வசம் தளவாடங்களும் ஆயுதங்களும் ஏராளம். நீங்கள் எங்களை முற்றுகையிட்டுள்ளதாக நினைக்கலாம். ஆனால், இந்த நைல் நதி உங்களை வளைத்துள்ளது. சொல்லப்போனால் நீங்கள்தாம் எங்களிடம் அகப்பட்டுள்ள கைதிகள்.
’உங்களுடைய தோழர்களிலிருந்து தூதுவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாங்கள் கேட்டுப்பார்க்கிறோம். நம் இருவருக்கும் ஏதுவான வகையில் இந்த மோதலைத் தீர்த்துக் கொள்ள அனேகமாய் அது உதவலாம். அப்படியாகும் பட்சத்தில் பைஸாந்தியர்களின் தாக்குதலிலிருந்து நீங்கள் தப்பவிட முடியும். ஏனெனில் அவர்கள் உங்களைத் தாக்கத் துவங்கிவிட்டால் பேச்சுவார்த்தைக்கே வழியில்லாமல் ஆகிவிடும். நீங்கள் நினைத்ததற்கு மாறாய் உங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும். கைச்சேதப்படுவீர்கள். எனவே உங்களுடைய தூதர்களை அனுப்புங்கள். பேசி இணக்கமான முடிவு காண்போம்.’
கடிதத்தைப் படித்துவிட்டு பதிலும் எழுதாமல், தூதுவர்களையும் உடனே திருப்பி அனுப்பாமல் தங்க வைத்துக்கொண்டார் அம்ரு பின் அல்ஆஸ். பைஸாந்தியர்களின் படை பலம் பற்றி அச்சுறுத்தலோ, உலக வாழ்க்கை அடிப்படையிலான சமரசமோ முஸ்லிம் படையினரை அச்சுறுத்தவோ, ஆர்வமூட்டவோ முடியாது என்பதை நிறுவுவது அவரது நோக்கமாக இருந்தது.
சென்றவர்கள் திரும்பவில்லை என்றதும் முகவ்கிஸுக்குத்தான் அச்சம் தோன்றியது. தூதுவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நடைமுறை. முஸ்லிம்கள் மரபு தவறி விட்டிருப்பார்களோ என்ற கவலையில் தம் அதிகாரிகளிடம், “நம்முடைய தூதுவர்களை அவர்கள் கொன்றிருப்பார்களோ? ஒருவேளை அது அவர்களுடைய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயலோ?”
இரண்டு நாள்களுக்குப் பிறகு தூதுவர்கள் திரும்பினார்கள். கையில் அம்ருவின் பதில் கடிதம். அதில் சுருக்கமான வாசகங்கள். “நமக்கு இடையே மூன்றே தேர்வுகள் உள்ளன. ஒன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் சகோதரர்களாகி விடுவோம். நம்மிடையே அனைத்திலும் சம உரிமை. இல்லையெனில் எங்களுக்குக் கட்டுப்பட்டு ஜிஸ்யா வரி செலுத்துங்கள். அதுவும் இல்லையா நாங்கள் உங்கள்மீது போர் தொடுப்போம். அல்லாஹ் நம்மிடையே தீர்ப்பளிப்பான்.”
அவை எதுவும் முகவ்கிஸுக்கு உவப்பாய்த் தெரியவில்லை. “அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?” என்று தன் தூதுவர்களை ஆர்வமுடன் விசாரித்தான். கூடவே தங்கியிருந்திருக்கிறார்கள். என்ன பார்த்தார்கள்; செவியுற்றார்கள்; அவர்களைப் பற்றிய அனுமானம்தான் என்ன என்ற ஆர்வம்.
“நாங்கள் சந்தித்த அம்மக்களுக்கு உயிரைவிட மரணம், உயர் பதவியைவிட அடக்கம் உவப்பானதாயிருக்கிறது. அவர்களுள் எவரொருவருக்கும் இவ்வுலகின்மீது பற்றோ, ஆசையோ இருப்பதாகவே தெரியவில்லை. தரையில் அமர்ந்து முழந்தாளிட்டு உண்கிறார்கள். யார் தலைவர், யார் மற்றவர் என்று வித்தியாசமே காண முடியவில்லை. பதவியிலுள்ள அதிகாரி, பொதுவான வீரர் என்றும் பேதம் இல்லை; அடையாளம் காண முடியவில்லை. எசமானன், அடிமை என்று பிரித்துணர முடியவில்லை. அனைவரும் ஒன்றேபோல் எளிமை. தொழுகை நேரம் வந்துவிட்டால் போதும், ஒருவர் பாக்கியில்லாமல் விரைகின்றனர். கை, கால்களைக் கழுவிக்கொள்கிறார்கள். அப்படியொரு அடக்கத்துடன் தொழுகிறார்கள்.”
அக்காலத்தில் அரச மரபும் சரி; இன்றைய உலகின் அரச மரபும் சரி – உடையிலிருந்து, உணவிலிருந்து, செயல்களிலிருந்து மரபு, வழிமுறை என்று எத்தனை செயற்கை அலங்காரம், பகட்டு, ஆரவாரம். அப்படியெல்லாம் எந்த பேதமும் அற்ற ஒரு சமூகமும் மக்களும் அரேபியாவிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றதும் எகிப்தியர்களுக்கு அவர்கள் வேற்று கிரகவாசிகளைப் போல் ஆச்சரியம்.
வியந்துபோன முகவ்கிஸ் தன் உள்ளத்தில் உள்ளதை உரைத்தான். “சத்தியமாகச் சொல்கிறேன். மலையையே தகர்க்க நினைத்தாலும் அதை அவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்களிடம் யாராலும் போரிட முடியாது. அவர்கள் நைல் நதியால் சூழப்பட்டிருக்கும் இந்நி்லையில் நாம் அவர்களிடம் பேசி சமரசம் காண இயலாவிட்டால், நாளை அவர்கள் இவ்விடத்தை விட்டு நகர்ந்து முன்னேறியவுடன் சமாதான உடன்படிக்கை என்பதற்கெல்லாம் அறவே வாய்ப்பு இல்லை.”
முகவ்கிஸ் தம் தூதுவர்களிடம் மீண்டும் செய்தி சொல்லி அனுப்பினான். “உங்கள் சார்பாய் சில தூதுவர்களை அனுப்பிவையுங்கள். நாம் அவர்களிடம் பேசுவோம். நம்மிருவருக்கும் சாதகமான உடன்பாட்டை எட்டுவோம்.”
சரியென்று சிறப்பான பத்து பேரைத் தேர்ந்தெடுத்தார் அம்ரு பின் அல்ஆஸ். அவர்களுள் ஒருவர் உபாதா இப்னு அஸ்ஸாமித். அந்தத் தூதுக் குழுவிற்கு உபாதாவையே தலைவராக நியமித்து, அவரே முகவ்கிஸிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். படகில் ஏறி, நைல் நதியைக் கடந்து முகவ்கிஸின் அரண்மனையை அடைந்தது முஸ்லிம்களின் தூதுக் குழு. அவையில் காத்திருந்த முகவ்கிஸை நெருங்கினார் உபாதா பின் அஸ்ஸாமித்.
அதிர்ச்சியில் அலறினான் முகவ்கிஸ்!
உபாதா பின் அஸ்ஸாமித் கறுத்த நிறமுடையவர். தூதுவர்கள், அதன் தலைவர் என்றால் அதற்கெல்லாம் மரபும் பிம்பமும் அதை மிகப் பெருமையுடன் நடைமுறைப்படுத்தியும் வாழ்ந்து வந்தவருக்கு முன்னால் எளிமையான உடையில், கறுத்த நிறமுடைய ஒருவர் தாம் தூதுக்குழுவின் தலைவர் என்று சொல்லி நெருங்கினால்? நம்பவே முடியாமல் அவரைப் பார்த்து அதிர்ச்சியில் அலறினான் முகவ்கிஸ்.
“இந்த கரிய நிறத்தவரை என்னிடமிருந்து விலகச் சொல்லுங்கள். உங்களுள் வேறு எவரேனும் என்னிடம் வந்து பேசுங்கள்.”
முஸ்லிம் தூதுக்குழுவில் இருந்த அனைவரின் பதிலும் ஒன்றாக இருந்தது. “எங்களுள் அறிவும், ஞானமும் நிறைந்த மிகச் சிறப்பானவர் இந்த கரிய நிறத்தவரே. அவரே எங்களைவிடச் சிறப்பானவர். அவர்தான் எங்களுக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் அவருடைய முடிவிற்கு உடன்படுவோம். அவரது முடிவுக்கு மாறாய் நாங்கள் நடக்கக்கூடாது என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை”
அதைக் கேட்டு முகவ்கிஸுக்கு மேலும் ஆச்சரியம் அடங்கவில்லை. “இத்தகு கரிய நிறத்தவரை உங்களது தலைவராக நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உங்களுள் அவர் கடைநிலை மனிதராக அல்லவா இருக்க வேண்டும்” அப்பட்டமான வர்ண பேதம்.
“கடைநிலை மனிதரா? அப்படியெல்லாம் இல்லை. அவரது நிறம் கருமையானதாக இருக்கலாம். அதனால் என்ன? நிறம் என்பதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. எங்கள் மத்தியில் தரத்தில் மிக உயர்ந்தவர் அவர். எங்களுள் முதன்மையானவர். சிறப்பான மதிநுட்பவாதி.”
வேறு வழியில்லை. அவருடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றானதும் முகவ்கிஸ் உபாதாவிடம், “கரிய நிறத்தவரே, இங்கு வரவும். உம்முடைய நிறம் எம்மை கலக்கமுறச் செய்வதால் மென்மையாகப் பேசவும். கடுமொழி பேசுவீரானால் அது எம்மை மேலும் கலக்கமுறச் செய்யும்.”
அமைதியாக முகவ்கிஸை நெருங்கினார் உபாதா இப்னு அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு. பேசினார். அழகாய், தெளிவாய்ப் பேசினார். பாடங்கள் பொதிந்த அற்புத உரை.
“நீர் சொன்னதை நான் செவியுற்றேன். வெளியே தங்கியிருக்கும் எங்கள் படையினரில் என்னைப் போன்ற கரிய நிறத்தவர் ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். சொல்லப்போனால் அவர்கள் என்னைவிட கரிய நிறம். அவர்களது தோற்றம் காண்பதற்கு திகிலடையச் செய்யும். நீர் அவர்களைக் காண நேர்ந்தால் இதைவிட இன்னும் அதிகமாய்க் கலக்கமுற்றுவிடுவீர். நான் இளமைக் காலத்தை தாண்டிவிட்டவனாக இருக்கிறேன். ஆனால் எதிரிகள் நூறுபேர் ஒன்று சேர்ந்து, ஒரே நேரத்தில் என்னை எதிர்க்க நினைத்தாலும் அதைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன். என்னுடைய தோழர்களும் அதைப்போல் தைரியத்தில் மிகைத்தவர்களே.
“எங்களுடைய விருப்பம், ஆர்வம் என்பதெல்லாம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய உவப்பைப் பெறுவதற்காகவும் ஜிஹாத் புரிவது மட்டுமே. அல்லாஹ்வுக்கு எதிராய்ப் போர் தொடுக்கும் எதிரிகளின்மீது நாங்கள் நிகழ்த்தும் படையெடுப்பானது உலக ஆதாயத்திற்காகவோ, செல்வம் குவிக்கவோவன்று. போரில் நாங்கள் கைப்பற்றும் செல்வத்தையும் ஆதாயத்தையும் அல்லாஹ் எங்களுக்கு அனுமதித்துள்ளான்தான். ஆயினும் எங்களிடம் மூட்டை அளவு தங்கம் இருந்தாலும் சரி, ஒரே ஒரு திர்ஹம் இருந்தாலும் சரி, இரண்டும் ஒன்றே. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. செல்வமெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டுமில்லை. இவ்வுலகில் எங்களுக்கான தேவை என்பதெல்லாம் எங்களது பசியைத் தீர்க்குமளவிற்குச் சிறிதளவு உணவு; எங்களது உடலைப் போர்த்தி மானத்தைக் காத்துக்கொள்ளும் அளவிலான ஆடை, அவ்வளவே. அந்த அளவிற்கு எங்களிடம் ஏதேனும் இருந்தால் அதுவே எங்களுக்குப் போதுமானது.
“மூட்டையளவு தங்கம் கிடைத்தாலும் அதை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டு விடுவோம். எங்கள் வசமுள்ள சிறிதளவே எங்களுக்குத் தன்னிறைவு. ஏனெனில் இவ்வுலக இன்பமும் இன்பமல்ல; இவ்வுலக சொகுசும் சொகுசல்ல. மெய்யான சொகுசு, இன்பம் என்பதெல்லாம் மறுமையில் மட்டுமே உள்ளது. இவ்விதமாகவே எங்கள் இறைவன் எங்களை வழிநடாத்தியுள்ளான். எங்கள் நபியவர்கள் இவ்விதமாகவே எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். பசியைத் தணிக்கவும் மானத்தைக் காக்கவும் தேவையானது மட்டுமே இவ்வுலகில் எங்களுக்கான நாட்டமாய் இருக்கவேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். எங்களுடைய முக்கியமான குறிக்கோளெல்லாம் இறைவனை திருப்திப்படுத்துவதும் அவனுடைய எதிரிகளுக்கு எதிராய்ப் போர் தொடுப்பதுமேயாகும்.”
அதைக் கேட்டு திகைத்துப்போனான் முகவ்கிஸ். போர் என்றாலே அது மண்ணுக்கும் பொன்னுக்கும் என்பதுதானே எக்காலத்திலும் யுத்தத்தின் அடிநாதம். இதென்ன புது உரை? தம் அருகில் இருந்தவர்களிடம், “இந்த மனிதர் சொல்வதைப் போன்ற எதையாவது இதுவரை செவியுற்றிருக்கிறீர்களா? முதலில் இவருடைய தோற்றம் என்னைக் கலங்கவைத்தது. இப்பொழுது இவர் கூறுவது அவரது தோற்றத்தைவிட அதிகமாய் என்னைக் கலக்கமுற வைக்கிறது. இவர்கள் அகில உலகையும் வெல்லப் போகிறார்கள்.”
பிறகு உபாதாவிடம் திரும்பி, “மனிதரே! உம்மைப் பற்றியும் உம் தோழர்களைப் பற்றியும் நீர் உரைத்ததை நாம் செவியுற்றோம். நீங்கள் இதுவரை வென்றது, சாதித்தது என்பனவெல்லாம் வெகு நிச்சயமாக இதுவரை நீர் சொன்னதன் அடிப்படையில்தானன்றி வேறில்லை. யாரையெல்லாம் வென்றீர்களோ அவர்களது உலக இச்சையின் காரணத்தினாலேயே அவர்களை வென்றுள்ளீர்கள்.”
மறுமையின்மீது இந்தளவு உங்களுக்கு பற்று உள்ளதே உங்களது வெற்றிக்குக் காரணம். போலவே இவ்வுலக இச்சையே உங்களிடம் தோற்றவர்களின் தோல்விக்குக் காரணம் என்பதை அவ்விதம் சொன்னான் முகவ்கிஸ். அந்த உண்மையை உரைப்பதில் அவனுக்குத் தயக்கமில்லாவிட்டாலும் சரணடைவதற்கு அவன் தயாராக இல்லை. தொடர்ந்தான்.
“உங்களை எதிர்த்துப் போர் புரிய எண்ணிலடங்கா பைஸாந்தியப் படையினர் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உறுதியும் கடுமையும் நிறைந்தவர்கள். மூர்க்கமாகப் போரிடும் அவர்களுக்கு, தாங்கள் யாரிடம் போரிடப் போகிறோம் என்பதைப் பற்றி எந்த அக்கரையுமில்லை. எண்ணிக்கையில் குறைவாகவும் பலவீனமாகவும் உள்ள உங்களால் அவர்களைச் சமாளிக்கவே முடியாது.
“எங்களது பகுதிக்கு வந்து, பல மாதங்களாக முற்றுகையிட்டுக் கிடக்கிறீர்கள். உணவுத் தட்டுப்பாடு, கடுமையான சூழ்நிலை என்று வாடிக் கிடக்கிறீர்கள். உங்களது பலவீனத்தையும் சிறு படையையும், பற்றாக்குறையையும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்வோம். எனவே, உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தீனார் தருகிறோம். உங்கள் தலைவருக்கு நூறு, கலீஃபாவுக்கு ஆயிரம் தீனார். பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஊரைப் பார்க்கப் போய்ச் சேருங்கள். நீங்கள் சமாளிக்க இயலாத பெரிய படை கிளம்பி வருகிறது. அவர்கள் வருவதற்குமுன் கிளம்பி விடுங்கள்.”
செல்வம் என்பது பொருட்டே இல்லை என்பவரிடம் பணம் தருகிறேன், காசு கொடுக்கிறேன் ஓடிப் போய்விடு என்றால் என்னவொரு அபத்தம். பொறுமையாக பதில் அளித்தார் உபாதா.
“உம் மக்களும் நீங்களும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். பைஸாந்தியப் படையினர், பெரும் எண்ணிக்கை, எங்களால் சமாளிக்க முடியாது என்றெல்லாம் சொல்லி எங்களை அச்சுறுத்த முயல்கிறீர்கள். இவையெல்லாம் எங்களை அச்சுறுத்தவும் முடியாது; இவற்றைக் கண்டு நாங்கள் எங்களது திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். நீர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதிர்த்துப் போரிட அதுவே எங்களுக்குப் போதுமான தூண்டுகோல். அத்தகு சண்டைக்கு நாங்கள் ஆர்வமுடன் தயார். ஏனெனில் அது எங்கள் இறைவனுக்கு மிகவும் உவப்பானது. நாங்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டால் அது அல்லாஹ்வின் திருப்தியை எங்களுக்குப் பெற்றுத்தரும். சுவர்க்கத்தை ஈட்டித் தரும். அதைவிட மேன்மையானது எங்களுக்கு எதுவுமே இல்லை. நாங்கள் உங்களைத் தோற்கடித்தால் அது எங்களுக்கு இவ்வுலகில் கிடைக்கும் பெரும் வெற்றி. நீங்கள் எங்களைத் தோற்கடித்தால் எங்களுக்குப் பிரியமான மறுவுலகில் எங்களுக்கு வெற்றி.”
வென்றாலும் வெற்றி, தோற்றாலும் வெற்றி என்று சொல்பவர்களை எப்படி வெல்வது, எதைக் கொண்டு வெல்வது? மரணத்தை நேசிப்பவர்களை, உயிர் தியாகத்திற்கு இறைஞ்சுபவர்களை என்ன சொல்லி அச்சுறுத்த முடியும்?
“நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், எத்தனையோ சிறு கூட்டத்தார், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” சூரா அல் பகராவின் 249ஆம் வசனத்திலிருந்து இந்தப் பகுதியைத் தெரிவித்து, மேலும் தொடர்ந்தார் உபாதா.
“நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு உயிர்த் தியாகம் வாய்க்க வேண்டுமென்றும் மனைவி மக்களிடம் திரும்பக்கூடாது என்றும் காலையும் மாலையிலும் இறைவனைத் தொழுது வேண்டியவாறு உள்ளோம். எங்களுக்கு முன் உள்ளவற்றின் மீது மட்டுமே எங்கள் அனைவரின் கவனமும் குவிந்துள்ளதே அன்றி, நாங்கள் விட்டுப்பிரிந்து வந்துள்ள சொந்தங்களைப் பற்றி எங்கள் யாருக்கும் கவலையில்லை. எங்களுடைய மனைவி, மக்களை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு வந்துள்ளோம். மற்றபடி உணவுக் குறைபாடு, கடுமையான சூழ்நிலை என்று எங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறீர்களே, அது அனாவசியம். எங்களிடம் இருப்பதில் நாங்கள் இனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் முழுதுமே எங்களுடையதாக இருப்பினும் எங்களிடம் இப்பொழுது உள்ளதைவிட அதிகமான எதுவும் எங்களுக்குத் தேவையே இல்லை.
“நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நன்றாக யோசித்து உங்களது முடிவைச் சொல்லுங்கள். இந்த மூன்றைத் தவிர நம்மிடையே வேறு எந்த உடன்பாட்டையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை. இவற்றுள் எது வேண்டுமென்று முடிவெடுங்கள். வேறெந்தக் கற்பனையிலும் மூழ்க வேண்டாம். இதைத்தான் என் படைத்தலைவர் எனக்குச் சொல்லியுள்ளார். இதைத்தான் கலீஃபா அவருக்குச் சொல்லியுள்ளார். இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு அறிவித்துள்ளார்கள்.”
அந்த மூன்றை உபாதா விவரித்தார்:
“இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும் மார்க்கம் அது ஒன்றே. அதுதான் அவனுடைய தூதர்கள், நபிமார்கள், வானவர்கள் ஆகியோருடைய மார்க்கமாகும். அதை எதிர்ப்பவர்களை அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை போரிடும்படி அவன் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். யாரெல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்களோ அக்கணமே அவர்கள் எங்களுக்கு மார்க்க சகோதரர்கள். நம்மனைவருக்கும் ஒரேவிதமான கடமைகள்; ஒரேவிதமான உரிமைகள். நீரும் உம் மக்களும் இதை ஏற்றுக்கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு அடைவீர்கள். நாங்கள் உங்களிடம் போரிடமாட்டோம்; தீங்கிழைக்க மாட்டோம்.
“மறுப்பீர்களேயானால், ஜிஸ்யா வரி செலுத்துங்கள். அது ஆண்டிற்கு என்ன தொகை என்பதை நிர்ணயம் செய்துகொள்வோம். அதன்பின், உங்கள் உடைமைகளை, சொத்துகளை, மக்களை யாரேனும் தாக்கினால் உங்கள் சார்பாய் நாங்கள் நின்று போரிடுவோம். நீங்கள் எங்கள் பாதுகாவலில் வந்துவிட்டால் அது எங்களது கடமை. இது அல்லாஹ்வின் முன்னிலையில் நாங்கள் உங்களுக்குச் செய்துதரும் ஒப்பந்தம்.
“இதற்கும் மறுப்பீர்களேயானால் நம்மிருவருக்கும் இடையே வாள் தீர்ப்பெழுதும். ஒன்று நாங்கள் மாள்வோம். அல்லது நாங்கள் உங்களை வெல்வோம். இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் எங்களது சத்தியமாகும். இதைத் தவிர வேறு வழியில்லை. தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.”
அதற்கு முகவ்கிஸ், “சாத்தியமே இல்லை. நீங்கள் விரும்புவதெல்லாம் இந்த உலகம் உள்ளளவும் நாங்கள் உங்களுக்கு அடிமையாகக் கிடக்கவேண்டும் என்பதே.”
“உங்கள் விருப்பம். முடிவை நீங்கள் தேர்ந்தெடுங்கள்” என்றார் உபாதா.
“இந்த மூன்றைத் தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லையா?”
“வானம், பூமி மற்றும் அனைத்தின் அதிபதியாகிய அவன்மீது ஆணையாக! இம்மூன்றைத்தவிர நம்மிடையே நான்காவது கிடையாது. தேர்ந்தெடுங்கள்.”
முகவ்கிஸ் தம் ஆலோசகர்களிடம் திரும்பி, “நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “யாரேனும் இத்தகைய அவமானத்தை ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதென்பது ஒருக்காலும் நடக்காது. மர்யமின் புதல்வர் கொண்டுவந்த மார்க்கத்தைவிட்டு நாம் அறியாத வேறோரு மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்கள் நம்மைக் கைதுசெய்து நாம் அவர்களுக்குக் காலமெல்லாம் அடிமைப்பட்டுக் கிடப்பதைவிட, மரணம் மேல். அல்லது நாம் அவர்களுக்கு அளிக்க விரும்பியதைவிட பன்மடங்கு அதிகம் செல்வம் அளித்து அதை அவர்கள் பகரமாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் அது சரியான மாற்று”
“வேண்டுமானால் அதிகம் பணம் தருகிறோம் என்று சொல்லிப் பாருங்களேன்” என்பது ஆலோசகர்களின் இறுதி ஆலோசனையாக இருந்தது.
முகவ்கிஸ் உபாதாவிடம் பேசினான். “மக்கள் நிராகரிக்கிறார்கள். நீர் என்ன நினைக்கிறீர்? உம் தலைவரிடம் திரும்பிச்சென்று, நீங்கள் விரும்பியதைவிட பன்மடங்கு அதிகம் அளிப்பதற்கும் நாங்கள் தயார் என்று சொல்லவும். அதைப் பெற்றுக்கொண்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம்”
படையெடுப்பின் நோக்கமானது செல்வமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அதையே பகரமாகச் சொல்பவனிடம் மேற்கொண்டு என்ன பேச்சுவார்த்தை செய்ய முடியும்? உபாதாவும் தோழர்களும் திரும்பினார்கள். அவர்கள் சென்றதும் தம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் முகவ்கிஸ் கூறினான், “நான் சொல்வதைக் கேளுங்கள். அவர்கள் அளிக்கும் மூன்று தேர்வுகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! அவர்களை எதிர்க்க உங்களுக்குத் திறனில்லை. நீங்களாக விருப்பப்பட்டு ஒரு முடிவை ஏற்காவிட்டால், பின்னர் உங்கள் விருப்பம் இல்லாமலேயே கடினமான ஓர் உடன்படிக்கைக்கு நீங்கள் அடிபணிய நேரிடும்.”
“நாம் எதைத் தேர்ந்தெடுப்பது?” என்று கேட்டார்கள் அவர்கள்.
“சொல்கிறேன். மற்றொரு மார்க்கத்தைத் தேர்ந்தெடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவர்களிடம் போரிடுவதென்றால், உங்களால் அவர்களை வெல்ல முடியாது என்பதையும் அறிவேன். அவர்களைப்போன்ற விடாமுயற்சியெல்லாம் நமக்கு இல்லை. எனவே மூன்றாவது வழியைத் தவிர வேறில்லை.”
“எனில் நாம் அவர்களுக்கு என்றென்றும் அடிமைப்பட்டவர்களா?”
“ஆம். அடிமைகள். ஆனால் இது வேறு. உங்களது நாட்டில் உங்களுக்கான முழு உரிமையுடன், உங்கள் சொத்து, உங்கள் மக்கள் அனைத்தும் அனைவரும் பாதுகாப்பாய் அமையப்பெற்ற சுதந்தர அடிமைகள். போரில் நீங்கள் கொல்லப்படுவதைவிடவும் அல்லது அடிமைகளாகக் கைப்பற்றப்பட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பற்பல பகுதிகளில் சிதறி என்றென்றும் அடிமைகளாகக் கிடப்பதைவிடவும் அது மேலானதாகும்”
“எனில், அதைவிட எங்களுக்கு மரணம் மேலானதாகும்” என்று பதில் வந்தது.
வேறென்ன? அதன் பின் போர் நிகழ்ந்தது. விளைவு? பாபிலோன் கோட்டை முஸ்லிம்கள் வசமாகி அலெக்ஸாந்திரியாவுக்கு வாசல் திறந்தது.
அங்கிருந்து நகர்ந்து அலெக்ஸாந்திரியா நகரை அம்ரு பின் அல்ஆஸ் முற்றுகையிட்டார். இந்த முற்றுகை பல மாதங்கள் நீடித்தது. வெற்றியின்றித் தொடரும் முற்றுகையைப்பற்றி மதீனாவிலிருந்த கலீஃபா உமருக்குக் கவலையேற்பட்டது. அம்ரு பின் அல்ஆஸுக்குக் கடிதம் எழுதினார். அதைப் பார்த்துவிட்டு மஸ்லமா இப்னு முகல்லத் அல்-அன்ஸாரியிடம் அம்ரு பின் அல்ஆஸ் ஆலோசனை கேட்டார்.
“இவர்களிடம் போர் தொடுப்பது குறித்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.”
“நபியவர்களின் தோழர்களுள் அறிவும் அனுபவமும் மிகைத்த ஒருவரை நீர் தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்குப் படைத் தலைமையை அளிக்கவும். பின்னர் அவரே போரைத் துவங்கி அதை நடத்த வேண்டும். இதுவே என் கருத்து” என்றார் மஸ்லமா.
“அப்படியான ஒருவர் யார்?”
“உபாதா பின் அஸ்ஸாமித்.”
அம்ரு பின் அல்ஆஸ், உபாதாவைக் கூப்பிட்டு அனுப்பினார். குதிரையில் விரைந்து வந்தார் உபாதா. அருகே நெருங்கியவர் இறங்க யத்தணிக்க, “இறங்க வேண்டாம் உபாதா. உம்முடைய ஈட்டியைத் தாருங்கள்”
அதை வாங்கி தமது தலைப்பாகையை எடுத்து அந்த ஈட்டியில் கட்டினார் அம்ரு பின் அல்ஆஸ். பைஸாந்தியர்களுக்கு எதிரான அந்தச் சண்டையில் அவரைத் தலைவராக நியமித்து, போர் துவங்கியது. உபாதாவின் தலைமையில் உக்கிரமான போர். அடுத்த சில நாள்களில் அலெக்ஸாந்திரியாவும் முஸ்லிம்கள் வசமானது.
oOo
தமக்கான போர்ப் பணிகளை முடித்துவிட்டு ஸிரியாவுக்குத் திரும்பிவிட்டார் உபாதா பின் அஸ்ஸாமித். காலம் நகர்ந்து மதீனாவில் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றிருந்தார்.
ஹிம்ஸ் பகுதியை முற்றிலுமாய் முஸ்லிம்களிடம் தோற்று வெளியேறிய பைஸாந்தியர்களுக்கு, ஸிரியா நாட்டைத் தாண்டி மேற்கு எல்லையைக் கடந்து கடலில் அமைந்திருந்த சைப்ரஸ் தீவு பெரும் வசதியாய் அமைந்திருந்தது. அந்தத் தீவு ரோமர்களின் படைக்கு அருமையான ஓய்வுத் தளமாகவும் அவர்களது படைகள் புத்துணர்ச்சி பெறவும் ஆயுதங்களை மறுசேகரம் செய்து கொள்ளவும் வாகான ஊராகிப்போயிருந்தது.
ஸிரியாவில் கவர்னராய் இருந்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவுக்கு, ரோமர்கள் முஸ்லிம்களிடம் மோதுவதற்கு சைப்ரஸில் வசதி அமைந்திருப்பதை நினைத்துப் பெரும் கவலை. அது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. காலடியில் ஆபத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தால், தலைக்கே வினையாகுமே என்று கவலைப்பட்டார் முஆவியா. ஆகவே கலீஃபா பொறுப்பை உதுமான் ஏற்றதிலிருந்து இதைப்பற்றி பலமுறை வலியுறுத்த ஆரம்பித்தார் அவர். நீண்ட யோசனைக்குப் பிறகு இறுதியில் அதற்கு அனுமதியளித்தார் கலீஃபா, முக்கியமான நிபந்தனையுடன்.
“இந்தப் படையெடுப்பிற்கு வீரர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது; குலுக்கல் முறையிலும் தேர்வு செய்யக்கூடாது; யாரெல்லாம் தாமாகவே கலந்து கொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் உம்முடைய படையில் இணைந்துகொள்ளட்டும். அது அவரவர் விருப்பம்.”
ஏகத்துக்கும் ஆபத்து நிறைந்த இந்தக் கடல் பயணத்திற்கும் படையெடுப்பிற்கும் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது கலீஃபா உதுமானின் தீர்மானமாயிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியமெனில், எவ்வித வற்புறுத்தலும் இன்றிக் கடல் கடந்த போருக்கு, அதுவும் அவ்விதம் நடைபெறவிருக்கும் முதல் போருக்கு, பெருமளவில் திரண்டது முஸ்லிம்களின் படை. முக்கியத்துவம் வாய்ந்த நபித் தோழர்களான அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், அபூதர்தா, உபாதா இப்னு அஸ்ஸாமித், அவர் மனைவி உம்மு ஹராம் என்று பலரும் அந்தப் படையில் இணைந்து கொண்டனர்.
ஹிஜ்ரீ 28ஆம் ஆண்டு. குளிர்காலத்தின் முடிவு. துவங்கியது கடல் தாண்டிய படையெடுப்பு. ‘அக்கா’ துறைமுகத்திலிருந்து சைப்ரஸுக்குப் படை கிளம்பியது. முஸ்லிம்களைச் சுமந்து கொண்டு, சிம்மாசனங்கள்போல் கடலில் மிதந்தன கப்பல்கள். கரை கடந்தது ஏகத்துவ அழைப்பு.
முஸ்லிம்கள் கரையிறங்கினார்கள். அந்தப் படையெடுப்பில்தான் உபாதாவின் மனைவி உம்மு ஹராம் மரணமடைந்தார். உம்மு ஹராம் பயணிக்க அவருக்கு ஒரு குதிரை வழங்கப்பட்டது. அதில் ஏறி அமர்ந்தார் அவர். ஆனால் குதிரை முரண்டு பிடித்துத் திமிற, தடுமாறிக் கீழே விழுந்தார். அதில் அவருடைய கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டு, இறை வழியில் இறந்து போனார் உம்மு ஹராம். அத் தீவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
போர் குறித்து, உபாதா இப்னு அஸ்ஸாமித், அபூ அய்யூப், அபூதர்தா, அபூதர் அல் கிஃபாரி போன்ற முக்கியமான தோழர்கள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நிகழ்த்தினார் முஆவியா. முடிவொன்றை எட்டினர். அதன்படி, சைப்ரஸ் மக்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
‘நாங்கள் உங்களது தீவின்மீது பகை நோக்குடன் படையெடுத்து வரவில்லை. ஸிரியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய அரசின் எல்லைகளைப் பாதுகாப்பது எங்களது நோக்கம். ஏனெனில் பைஸாந்தியர்கள் உங்களது சைப்ரஸ் தீவை, தங்களுக்கான ஓய்வுத் தளமாகப் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களது படையெடுப்பின்போது இளைப்பாறும் தளமாக உதவுகிறது. தங்களது தேவைகளை மீண்டும் பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது. அந்த அவர்களது பலம், ஸிரியாவிற்குப் பெரும் அச்சுறுத்தல். உங்களது தீவு ஸிரியாவின் பாதுகாப்பை உறுத்தும் முள். முஸ்லிம்களின் எல்லையைத் தாக்கும் அம்பு எங்களைக் குறிபார்த்து தயாராயிருக்கும் நிலை. அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாத்திற்கு உங்களை அழைக்கிறோம். ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது முஸ்லிம்களுடன் இணக்கமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்பது தகவலின் சாராம்சம்.
அத்தீவின் மக்கள் அதற்கு உடன்படவில்லை. மறுத்து, தலைநகருக்குள் புகுந்து தடை அரண் அமைத்துக் கொண்டார்கள். பைஸாந்தியர்கள் வந்து காப்பாற்றுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு. அவர்கள் நகருக்குள் புகுந்து சாத்திக்கொண்டதால், முஸ்லிம் படை, நகரை முற்றுகையிட்டது. ஆனால் அந்த முற்றுகை அதிகம் நீடிக்கவில்லை. எதிர்பார்த்த உதவி வராமல்போக அவர்கள் முஸ்லிம்களின் உடன்படிக்கைகளைக்குக் கட்டுப்பட்டு ஏற்றுக்கொண்டார்கள். சைப்ரஸ் பகுதியை, பைஸாந்தியர்களிடமிருந்து மீட்டுப் பத்திரப்படுத்திவிட்டுத் திரும்பியது முஸ்லிம் படை.
தங்ளுக்கு வாகாய் அமைந்த தீவு பறிபோனது பைஸாந்தியர்களுக்குப் பேரிழப்பு. பொறுத்துக் கொள்ள முடியாத இழப்பு. அதனால் தொடர்ந்து அம்மக்களைத் தூண்டி, அடுத்த நான்கு ஆண்டுகளில் சைப்ரஸ் முஸ்லிம்களுடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டது. உடன்படிக்கை முறிவு என்பது போருக்கான நேரடி அறைகூவல். இம்முறை முஸ்லிம்கள் பேச்சுவார்த்தை ஏதும் நிகழ்த்தாமல் போர் தொடுத்து, சைப்ரஸ் முஸ்லிம்களின் முழு வசமானது.
போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். உபாதா முஆவியாவிடம் கூறினார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஹுனைன் படையெடுப்பின்போது, கைப்பற்றப்பட்ட பொருள்களைப் பற்றிச் சிலர் பேசினர். நபியவர்கள் ஒட்டகத்தின் உரோமம் ஒன்றை எடுத்து, அல்லாஹ் உங்களக்கு வழங்கியிருக்கும் இதிலிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை கும்ஸைத் தவிர. கும்ஸோ மீண்டும் உங்களுக்கே வழங்கப்படும் என்று கூறினார்கள்.”
எனத் தெரிவித்துவிட்டு, “அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் முஆவியா. சரியான முறையில் பங்கிடுங்கள். யாருக்கும் அவரது உரிமைக்கு மீறிய பங்கு அளித்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்தினார்.
“இப்பொறுப்பை நான் உமக்கே அளிக்கிறேன் உபாதா. ஸிரியாவிலேயே இவ்விஷயத்தில் நீர்தான் அதிகம் ஞானம் உள்ளவராக இருக்கின்றீர். ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சி உங்களது பொறுப்பை நிறைவேற்றுங்கள்.”
அபூதர்தாவும் அபூஉமாமாவும் உதவ, உபாதா பங்கிட்டு அளித்தார்.
போரும் வெற்றியும் எவ்வளவோ செல்வங்களை உரிய பங்காகவே கொண்டுவந்து சேர்ந்த போதும் அனைத்தையும் உதறிவிட்டு, இறுதி வரை எளிமையே வாழ்க்கை என்று அவருக்கு ஆகிப்போனது. உலகமும் அதன் வசீகரமும் தமது எளிய குடிலினுள் நுழைய அவர் இடமளிக்கவே இல்லை. குபாவில் எப்படி எளிமையாக வாழ்ந்திருந்தாரோ அதைப்போலவே தொடர்ந்தது அவரது வாழ்க்கை. பகட்டற்ற அடக்கமான வாழ்க்கை.
ஃபலஸ்தீனுக்குத் திரும்பி அங்கேயே அவரது ஆயுளின் சொச்ச நாள்களும் கழிந்தன. குர்ஆன், நபிமொழி என்று மக்களுக்குப் பயிற்றுவிப்பதைத் தம் பணியாகச் செய்துவந்த உபாதா, ஆயுளின் இறுதிவரை அதைத் தொடர்ந்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது அப்துர் ரஹ்மான் பின் உசைலா அஸ்ஸுனாபிஹீ அவரைச் சந்திக்க வந்து தாள இயலாமல் அழுதார்.
அதைக் கண்ட உபாதா “அமைதி! ஏன் அழுகை? அல்லாஹ்வின் மீது ஆணையாக! சாட்சியம் கூறுமாறு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உமக்காக நான் பரிந்துரைப்பேன். எனக்கு சக்தி இருந்தால் நிச்சயமாக உமக்கு நான் பயன் அளிப்பேன்” என்று கூறி விட்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற, உங்களுக்குப் பயனளிக்கும் எந்தச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை – ஒரு செய்தியைத் தவிர. அந்தச் செய்தியையும் இதோ என் உயிர் பிரியப் போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லி விடுகிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறியவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
ஹிஜ்ரீ 34 ஆம் ஆண்டு மரணமடைந்தார் உபாதா பின் அஸ்ஸாமித்.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 29 மார்ச் 2014 அன்று வெளியானது