அனார்க்கலீ

by admin

“பூரண நிலவொளியில் வெள்ளியை உருக்கியது போன்று பாய்ந்தோடும் ஓடையருகே உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். சகியே! இருதய வேதனை தாங்கமுடிய வில்லை. வாழ்விலே பிடிப்பில்லை. காற்றில் கலந்திடும் என்பெரு மூச்சை நீ அறிவாயா? சகியே! எனது இருதயத்தில் காதல் கனலை எழுப்பி விட்டாய். நான் எரிந்து சாம்பலாய்ப் போய்க்கொண் டிக்கிறேன். உனது அணைப்பிலே தான் என் வாழ்வின் சாசுவதம் அடங்கிக் கிடக்கிறது. சகியே! ஓடைக்கு வந்துவிடு,” என்று பொருள்படும் தான்சேன் (தான்சேன் மகா அக்பர் பாதுஷாவின் ஆஸ்தான சங்கீத வித்வான்களுக்கெல்லாம் தலைவன்.) பாடிக்கொண்டிருந்தான். சுகமான அவனது சாரீர இனிமையில் எல்லோரும் மெய்ம் மறந்து விட்டார்கள். மெல்லிய காற்று வீசியது. புஷ்பங்களின் நறுமணம் “கம்மென” நானாபுறமும் பரவியது. ஸலீம் பெருமூச்செறிந்தான். அவனது முகத்தில் வேதனை ரேகைகள் படர்ந்தன. அவனது இதயம் கட்டுக் கடங்காமல் இன்பக் ‘கிளறி’யில் மூழ்கி எழுந்தது. அதனால் அதற்கு மேல் அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மொகலாய சக்ரவர்த்தி அக்பரின் மகன்தான் என்றாலும், அவனும் மனிதன் தானே! மெதுவாக, சபையிலிருந்து நழுவினான்.

* * *

அன்று நவ்ரோஜ் பண்டிகை. நகரின் மாந்தர்க ளெல்லாம் ஆனந்த சாகரத்தில் திளைத்திருந்தார்கள். மெல் லியலாரின் இனிய கானமும் அவர்களது கால் சதங்கைகளின் “கிண் கிணி” சப்தமும் ஸலீமின் மனதைச் சந்தோஷப் படுத்தவில்லை. ஆனால் அவனது இதயவேதனை பன்மடங்காகியது. மேலும் மேலும் நடந்தான்; வேகமாக நடந்தான். மனித சஞ்சாரமற்ற வெட்டவெளியில் தரையில் படுத்து, கண்களை மூடிக் கனவுகாண ஆசைப்பட்டான் ஸலீம். கிழக்கே சந்திரோதயம் ஆய்விட்டது. யமுனை ஆற்றங்கரையை அடைந்தான் ஸலீம். பளிச் பளிச்செனச் சந்திரனொளியில் மின்னும் மீன் கூட்டத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். ஸ்திரீகளின் கானம் லேசாகக் காற்றினில் மிதந்து வந்துகொண் டிருந்தது. எங்கிருந்தோ ஒருவன் “சஹநாயி” (“ஷஹனாயி” என்பது அரண்மனைகளில் ஊதப்படும் ஓரினிய சிறிய நாகசுரம் போன்ற ராஜசுரத்துகளைக்கருவி.) வாசிக்க ஆரம்பித்து விட்டான. ஸலீம் சலிப்புற்ற மேலும் நடந்தான். ஆற்றங் கரையோரம் முக்காடிட்டு உட்கார்ந்து கொண்டிரு்கம் அவ்வுருவத்தைக் கண்டதும் சற்று நின்றான். கூழாங்கற்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துகொண்டு பெருமூச்செறியும் அவ் வுருவத்தை அணுகினான் ஸலீம். பக்கத்திலிருந்த மாதுளை மலர்களின் சுவாசனை அவனை மெய்ம் மறக்கச் செய்தது; அவனுக்குப் புரிந்துவிட்டது அது யாரென்று. மெதுவாகப் பின்சென்று அவளுடைய கண்களைப் பொத்தினான். அவள் துணுக்குற்றாள். கைகளை வேகமாக விலக்கி, அவனை உற்று நோக்கினாள். நாணத்தால் அவள்முகம் சிவந்து கவிழ்ந்தது.

“அனார்! நான் யாரென்று கூடத் தெரிய வில்லையா? கண்களை மூடிக்கொண்டு கூடக் கண்டு பிடித்து விடவேண்டும். உண்மைக் காதலுக்கு இந்தச் சக்திமூடக் கிடையாதா?” என்று கேட்டான் ஸலீம். அனார்க்கலீ பெருமூச்செறிந்தாள். அவள் பதில்பேசவே யில்லை. ஸலீமுடன் தர்க்க்ம் செய்வதே யில்லை அவள். அவனிடம் அவ்வளவு நம்பிக்கை. “ஏன்! பேச மாட்டாயா? என்மீது கோபமா, அனார்?” என்று அன்பொழுகக் கேட்டான். “இல்லை, இளவரசே!” என்று அவள் சொன்னதும் ஸலீமின் முகம் வாடியது.

“அனார்! என்ன இது? என்னை இளவரசே! என்றுதான் கூப்பிடுவாயா? நாள் முழுவதும் கேட்டு அலுத்துப்போன அந்தப்பட்டம் எனக்கு வேண்டாம். நானும் மனிதன் என்ற உணர்வு உன்னைப் பார்க்கும் பொழுது தான் ஏற்படுகிறது. அனார்! என்னை மறுமுறை அப்படிக் கூப்பிடாதே! நான் யாருக்கு மகனாகிலும், இளவச னாகிலும், உன் முன் நான் ‘அனாரின் குலாம்’ தான்,” என்று சொல்லி, அன்புடன் அவளைத் தழுவினான். விண்மீன்கள் கண்சிமிட்டின.

“ஸலீம்! பிரியஸலீம்! உங்கள் பேச்சு வீணையின் இனிய மீட்டைப்போ லிருந்த போதிலும், நான் கேவலம் ஒரு ஏழைப் பெண் என்பதை எப்படி மறந்துவிட முடியும்? அன்பே! காலில் மிதிபடும் தும்மைப்பூ சூரியனை இச்சிக்கலாமா? என்றோ தாங்களும் சாம்ராஜ்யாதிபதியாவீர்கள். அன்று பட்டமகிஷியுடன் ஆனந்தமாய் நீங்கள் கொலு வீற்றிருப்பதைக் கண்ணாரக் கண்டுவிட்டு, உமது வாழ்விலிருந்தே மறைந்துவிட நான் ஆசைப்படுகிறேன். இன்ஷா அல்லா, என் விருப்பம் கை கூடுமானால், அதுவே எனக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம்,” என்று சொல்லிக் கண்களை மூடினாள் அனார். அவளது விழிகளிலிருந்து இருதுளி கண்ணீர் பெருகி, கன்னத்தின் வழியே ஓடி மறைந்தது. (“காலா யுதக்கொடியோன் கையா யுதவிழியாள் – மாலா யுதமீன்ற மாமணியைத் தானுதிர்த்தாள்”! என்று அன்றொரு கவிவாணன் அழகுபெறப் பாடியத இன்றெமது நிவைிற்கு வருகின்றது இங்கு.) கனவின் இன்பச் சாயை அவளது முகத்தில் படர்ந்தது.

“அனார்! ஒருநாளும் நான் உன்னைக் கைவிட மாட்டேன். என் பட்டமகிஷி என் பிரிய அனார் தான். அவள் தான் என் இதய ராணி,” என்று சொல்லி, அவளது முகத்தையே உற்று நோக்கினான்.

அனார் கண்விழித்தாள். கனவு கலைந்தது. “இதோ என்னுடைய அன்பின் அடையாளம்!” என்று சொல்லி, அவளுடைய தளிர் விரலிலே மோதிரமிட்டான் ஸலீம். “அனார்! வெகு காலத்திற்குப் பிறகு மறுபடியும் நவ்ரோஜ் தினத்தன்று நீ அறிவாய் உன் ஸலீமின் உண்மைக் காதலின் சக்தியை” என்று சொல்லி, அவளது செவ்விதழ்களிலே முத்தமிட்டான். மேகமண்டலத்தில் முகம் புதைத்தான் சந்திரன்.

* * *

வெகு காலத்திற்குப் பிறகு மறுபடியும் நவ்ரோஜ் தினம் மொகலாய சாம்ராஜ்யமெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அன்றும் சந்திரோதயம் ஆயிற்று. விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்று மாகக் கண் சிமிட்டின. யமுனை நதிக்கரையில் கானமும் சஹநாயியும் கலந்தே கேட்டன. பளிச் பளிச்சென மீன் கூட்டங்கள் மின்னின. ஆனால் அந்தப் புஷ்பக் கூடை அங்கில்லை. அங்கு மாதுளை மலரின் வாசமுமிலை. ஜஹாங்கீர் – ஆம், இன்றும் அவன் இளவரசன் ஸலீமல்ல. அக்பருக்குப் பின் ஜஹாங்கீர் எனும் பெயருடன் பட்டமேறி விட்டான்; – அன்று மாலை அவ்வழியே வரவில்லை. தர்பாரில் பாட்டும் கூத்தும் பிரமாதமாய்த்தா னிருந்தன. இன்று தான்சேனில்லை. ஆனால் வேறொருவன் பாடினான். லைலாவைப் பிரிந்து பரந்த மணல் வெளியில் வழி தெரியாமல் தவித்த மஜ்னூனைப் பற்றிப் பாடினான் அவன். ஜஹாங்கீரின் மனம் எங்கோ சென்றது. தர்பாரை விட்டு ஓடவேண்டும் என்று எண்ணின வுடனே ஓடிவிட முடியுமா? அன்று இளவரசன் ஸலீம் ஓடினான். ஓட முடிந்தது. இன்று ஜஹாங்கீர் மொகாலாய மன்னன்!

வேதனை நிறைந்த அவன் முகத்தைக் கண்ட பாடகன் பாட்டை நிறுத்தினான். மனோநிலை சரியாகவில்லை யென்றுசொல்லி, தர்பாரிலிருந்து மெதுவாக எழுந்து சென்றான் ஜஹாங்கீர். தர்பாரி லுள்ளவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். அன்றுபோல் இன்றும் ஜஹாங்கீர் வேகமாக நடந்தான். யமுனைக் கரையை அடைந்தான். யமுனை ஆற்றங்கரை அன்று சூன்யமாகப்பட்டது. அனார்க்கலீயின் ஞாபகம் அவனை வாட்டியது. அவளிருப்பிடம் நோக்கி ஓடினான்.

* * *

கைகொட்டி ஆர்ப்பரித்துக்கொண் டிருந்தாள் அனார்க்கலீ. அக்பர் பாதுஷா அவளைக் கைது செய்து சிறையிட் டிருந்தார். அனார் விளக்குடன் விளையாடும் விட்டில பூச்சி என்றுதான் அவர் நினைத்தார். இளவரசனின் மனத்தை மயக்கிய அந்தப் பேதையைத் தண்டிக்க வேண்டு மென்று ஏனோ அவர் நினைத்தார்? ஆனால், ஸலீம் ஜஹாங்கீரானதும் அவனது முதல் காரியம் அனாரை விடுதலை செய்வதுதான். அனார் சிறைக்கூடத்திலிருந்து வெளிவந்தாள். ஆனால், அவள் இதயம் சூன்ய நிலையை அடைந்து விட்டது. அன்று நடந்த சிம்மாசமேறும் வைபவத்திற்கு அவள் சென்றிருந்தாள். அவளுடைய கனவு பூர்த்தியாகி விட்டது. ஆனால், ஜஹாங்கீரின் கனவு சிதைந்துவிட்டது. இன்று ஜஹாங்கீர் மொகலாய மன்னன். ஆனால், அனார் அவனுடைய பட்டமகிஷியல்ல. அவனுடைய அந்த்ப்புரத்தில் வசிக்க அவள் ஆசைப்படவில்லை. அவனுடைய வாழ்விலிருந்தே விலகிவிட வேண்டும் என்றுதான் அவள் விரும்பினாள். அவள் இதய மொட்டுக் கருகிவிட்டது. இனி வாழ்வில் அவளுக்கென்ன இருக்கிறது? “ஸலீம்! ஸலீம்!” என்று அவள் வாய் முணுமுணுத்துக்கொண் டிருந்தது. அவளுக்கு அநேகமாக “ஸலீம்” பைத்தியமே பிடித்துவிட்டது.

அன்றும் நவ்ரோஜ்; திடீரென அனார் நன்றாக உடை யுடுத்தி யமுனையாற்றங்கரை செல்ல நினைத்தாள். பூரண நிலவில் அவள் மனம் மயங்கியது; நடந்தாள்; பிறகு ஓடினாள். பாதையில் கல்லொன்று இடறியது; தடுமாறிக் கீழே விழுந்தாள்; நெற்றியில் நல்ல காயம். ரத்தம் பீரிட்டது. அப்பொழுதும் அவள் ஸலீமை மறக்கவில்லை. எழுந்திருந்து நதிக்கரையை எப்படியாவது அடைந்தே விடுவது என்று தீர்மானித்தாள். எழுந்திருக்க முடியவில்லை. தலைசுழன்று பிரக்ஞையற்றுப் பூமியில் சாய்ந்தாள்.

* * *

ஜஹாங்கீர் நடந்துகொண்டே யிருந்தான். மனம் ஒரு நிலையி லில்லை. யமுனையாறு வேதனையை அதிகப்படுத்தியது. வானத்தையே நோக்கி நடந்துகொண் டிருந்த அவனது காலில் இடர்பட்டது ஒரு பெண்ணின் உருவம். ஜஹாங்கீர் கீழே குனிந்து கவனித்தான். ஆம்! அனார்தான்! – எந்த அனாருடன் வாழ்வதாக அவன் கனவு கண்டானோ அதே மாதுளை மொக்கு. அவளுடைய நெற்றியிலிருந்து இரத்தம்; சுய நினைவற்ற அவளுக்கு மொகலாய மன்னன் சிசுரூஷை செய்தான். இங்குமங்கும் ஓடித் தண்ணீர் கொண்டுவந்து அவளுடைய முகத்தி லடித்தான். தனது அங்கியினால் அவளது இரத்தக் கறைகளைத் துடைத்தான். அவளை மடிமீது சார்த்திக்கொண்டு தரைமீது உட்கார்ந்தான் ஜஹாங்கீர். அனார் மெதுவாக மூச்சுவிட்டாள்.

“அனார்! என் அன்பே! நான் வந்து விட்டேன். என்னைப் பார்!” என்று மனம் கரைந்து சொன்னான். அனார் கண்விழிக்கவில்லை. மறுபடியும் சிருரூஷை செய்தான் மன்னன். மெல்லிய காற்று அடித்தது. அனார் கண்களை லேசாகத் திறந்தாள். ஆர்வத்துடன் ஜஹாங்கீர், “நான் வந்துவிட்டேன்” என்றான். அனாரின் உதடுகள் மெதுவாக அசைந்தன. ஈனஸ்வரத்தில், “நீ யார்?” என்று கேட்டாள்.

“அனார்! என்னைக்கூட நீ அறியவில்லையா? நான்தான் ஜஹாங்கீர்!” என்றான். ஒன்றும் பரியாதவள்போல் அனார் மறுமுறை கண்களை மூடினாள்.

“அனார்! என்னோடு பேசவே மாட்டாயா? என்ன தண்டனை! நான் தான் உன்னுடைய ஸலீம்,” என்றான்.

அனார் மெதுவாகக் கண் விழத்து, “யார் ஸலீம்? நீயா ஸலீம்? நீயா ஸலீம்?” என்று கேட்டுவிட்டு, ‘ஓ’ வென உரக்கச் சிரிக்க ஆரம்பித்தாள். ஜஹாங்கீரின் கண்களில் நீர் துளித்தது. “ஸலீம்! ஸலீம்! ஓஹோ ஓஹோஹோ,” என்று பேய்போல் சிரித்து விட்டு, அவனுடைய மடியிலேயே துவண்டு விழுந்தாள் அனார். மொகலாய மன்னன் அலறினான். மனித சஞ்சாரமற்ற அந்த வெட்ட வெளியில் அவனுடைய பிரலாபம் வெகு தூரம் கேட்டது. பக்கத்தில் யமுனை நதி நிசப்தமாகச் சென்று கொண்டிருந்தது. அனாரின் தளிர்விரலில் ஸலீமின் மோதிரம் பளிச்சென மின்னி, அவனைப் பரிகாசம் செய்தது.

* * *

அதே இடத்தில் அனாருக்காகச் சமாதி கட்டினான் ஜஹாங்கீர். பூரணநில வொளியில் நவ்ரோஜ் தினங்களன்று தனியே மாலையுடன் வந்து கண்ணீருகுக்கும் மொகலாய மன்னனை விண் மீன்களும் வெண்மதியும் யமுனையுமே கண்டன.

அனார்க்கலீ

– கு. வெ. ஜானகிராமன்


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 12-16

Related Articles

Leave a Comment