படிக்கட்டுகள் – மதிப்புரை

by நூருத்தீன்

ற்சிந்தனைகள் பலவற்றை அடுக்கி, படிக்கட்டுகள் கட்டியிருக்கிறார் சகோதரர் ஜாகிர் ஹுசைன். ஊரும் உலகும் ஒழுங்குடன் இருக்கிறதோ, இல்லையோ, தனி மனிதன் ஒவ்வொருவனும் ஒழுங்குடன் இருக்க வேண்டியது முக்கியம். அவன் அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்தச் சுயநலத்தின் பக்க விளைவு என்னெவென்றால்  ஊரும் உலகும் ஒழுக்கமடைய அது தானாகவே வழி வகுத்துவிடும்.

இது உன்னதமில்லையா?

அத்தகு உன்னதத்திற்கு –  தனிமனித குணநல முன்னேற்றத்திற்கு உசாத்துணையாய் அமைந்துள்ளன இந்தப் படிக்கட்டுகள்.

தமது தொழிலும் வாழ்க்கை அனுபவமும் கற்றுத் தந்த பாடத்தை சக மனிதர்களுக்கு அவர்களின் இயல்பான மொழியில் பகிர்ந்திருக்கிறார் ஜாகிர். தம் தொழிலின் அங்கமாகத் தாம் கற்றுத் தேர்ந்ததை தமிழ் மக்களுக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கை உதாரணங்களுடன் பொறுத்தி, பல்வேறு தலைப்புகளில் இருபத்து நான்கு அத்தியாயங்கள் எழுதியுள்ளார்.

நூல் நெடுகவுமே positive approach எனப்படும் நேர்மறை அணுகுமுறை பேசப்பட்டுள்ளது; விவரிக்கப்பட்டுள்ளது. உபதேச உரைகளைப் போலன்றி, ஆசிரியருக்கு அவருடைய வாழ்க்கையில் கிடைத்த படிப்பினைகள் நமக்கு அக்கறையுடன் பகிரப்பட்டுள்ளன.  நம்முடைய பலவீனங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றைக் களையும் வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உறவினர்களையும் அவர்களுடனான நமது உறவில் ஏற்படும் சிக்கல்களையும் பேசுவதுடன் நின்றுவிடாமல், அவற்றைக் கையாள்வதற்கான குறிப்புகளையும் படிக்கட்டுகள் நமக்குத் தருகிறது. ஆங்காங்கே வெளிப்படும் ஜாஹிரின் அங்கதம்  சிறு சுவை.

தமிழ் வாசகர்களுக்கான் இந்நூலில் ஆங்கிலச் சொற்பிரயோகம் வெகு அதிகம். அவற்றுக்குரிய தமிழ் வார்த்தைகளோ, வாக்கியங்களோ அதனுடன் சேர்த்து எழுதப்பட்டிருந்தால் அந்நியத் தன்மையைக் குறைத்திருக்கும். தமது முதல் நூலின் பேசுபொருளை  மனிதனின் முன்னேற்றத்திற்கான ஒன்றாக அமைத்துக் கொண்ட ஆசிரியரின் நோக்கம் சிறப்பு. பாராட்டுக்குரியது.

அவர் மேலும் பல படிக்கட்டுகளை வெற்றிகரமாகக் கடக்க விழைகிறேன். இறைஞ்சுகிறேன்.

-நூருத்தீன்

(நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள: editor@adirainirubar.in)

Related Articles

Leave a Comment