ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் இறுதியில் பட்டத்துக்கு வந்த ஸாலிஹ் ஐயூபி மன்னர் ஆறு வருட காலத்துக்குள் மிஸ்ருக்கு மட்டும் வண்மை மிக்க சுல்தானாக உயர்ந்ததுடன் நில்லாமல்,

இதுபோது ஷாம்பகுதியின் பக்கமும் தம் வீரப் பிரதாபத்தைக் காட்ட ஆரம்பித்தார். சென்ற அத்தியாயத்திலேயே அவரை மக்கள் எவ்வளவு ஆசையுடன் நேசித்தனரென்பதையும். அந் நேசத்துக்கு அறிகுறியாக அவர்கள் அவரை எப்படி “நஜ்முத்தீன்” என்னும் சிறப்புப் பெயருடன் அழைக்க ஆரம்பித்தனர் என்பதையும் விவரித்தோம். அவர் அத்தகைய பெரும் புகழுக்கு ஆளாகிப் பெருமையுடன் உயர்ந்திரந்த சமயத்தில் அவர் தம் இனிய மனையாட்டி ஷஜருத்துர்ருக்கு ஓர் ஆண்சிசு ஜனனமாயிற்று.

அரசர் பட்டத்துக்கு வந்தபின்னர்ப் பிறந்த முதற்குழந்தை இதுவே ஆகையாலும், அதிலும் இக் குழந்தை எல்லாரின் பிரியத்துக்கும் பாத்திரமான ஷஜருக்குப் பிறந்தமையாலும், காஹிராவாசிகள் அனைவருக்குமே மட்டற்ற பெருமகிழ்ச்சி உதித்தது. குழந்தை பிறந்த அன்று சுல்தான் தம் செல்வத்தை வாரி வாரி ஏழைகளுக்கு இறைத்தார். அவர் அப்படித் தானம் வழங்கியபோது ஜாதி வித்தியாசமே பாராட்டவில்லை. மிஸ்ரிலிருந்த யூத, கிறிஸ்தவ, மஜூஸி, முஸ்லிம் ஏழைகள் அனைவர்க்குமே அள்ளி அள்ளிக் கொடுத்தார். தமக்குப் புத்திரன் பிறந்த பெருமையை முதற்குழந்தைக்குக் காட்ட முடியாது போய்விட்டபடியால், இச் சிசு பிறந்ததும் அனைத்துக்கும் சேர்த்துச் சொர்ணம் வழங்க ஆரம்பித்தார். என்றென்றும் தம் புகழ் நிலைத்திருப்பதற்காக அம் மகிழ்ச்சிக்குரிய நாளில் கல்வி பயிலச் சகல வசதியும் பொருந்திய கலாசாலை ஒன்றைக் கட்டுவதற்காகப் பொருள் ஈந்தார். இதுவே தக்க தருணமென்று கண்ட சில கிறிஸ்தவப் பிரமுகர்கள் அவரை நெருங்கி, தங்கள் மதத்தினரின் நன்மைக்காக ஒரு மடாலயம் நிருமிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். இஸ்லாமிய தர்மப் பிரகாரம் (குர் ஆன், ஸூரா அல்ஹஜ், ஆயத் 40ம் நோக்க) மத விஷயத்தில் மிகப் பெரிய தாராள மனம் படைக்கப்பெற்ற அம் மன்னர் முன்பின் சற்றும் யோசியாது, உடனே ஆயிரக்கணக்கான தீனார்களுக்கு அனுமதி அளித்துவிட்டார். தமது தந்தை மலிக்குல் காமில் அரசாட்சி செலுத்திய காலத்தில் நடந்த தமீதா முற்றுகையின்போது தம்மை ஈடாக அனுப்பி வைக்க நேர்ந்த விபரீத சம்பவத்தை நன்கு ஞாபகத்தில் வைத்திருந்தும், அவர் அதற்காகப் பழிவாங்கிக்கொள்ளவில்லை. அல்லது அவர் அம்மடாலயத்தை நிருமிக்க அனுமதி வழங்க முடியாதென்று தடுத்துச் சொல்லியிருந்தபோதினும், அவரை எவரும் குறைகூறியிருக்க முடியாது. ஆனால், “இஸ்லா மார்க்கத்தின் நட்சத்திரம்” என்னும் மிகச் சிறந்த பட்டப் பெயர் படைத்த அவர் இந்த மடாலாய நிர்மாண விஷயத்தில் உண்மையான இஸ்லாமிய நட்சத்திரமாகவே இன்றளவும் சரித்திரத்தில் ஜகத் ஜோதியாய்ப் பிரகாசிக்கின்றார். முஸ்லிம் மன்னர்கள்மீது வீண் பொறாமையால் வயிறு புண்ணாகி, இல்லாததையும் பொல்லாததையும் பச்சைப் பொய்யாகப் புளுகிக்கொண்டிருக்கும் எதிர்மத அறிவிலிகள் இச் சரித்திர சம்பவங்களையெல்லாம் ஏனோ கண்திறந்து பார்க்க மறுக்கிறார்கள்!

அரசவையில் மன்னர் பிரான் இவ்வாறு செல்வத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கையில், அந்தப்புரத்தில் ஷஜருத்துர், கருவுயிர்த்த கடுநோய் மறந்து, தன் சிசுவையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“தாயாரின் மூக்கை அப்படியே உரித்து வைத்திருக்கிறது, பார்த்தனையா?” – இது தோழியொருத்தியின் கூற்று.

“போடீ, பைத்தியமே! சர்வ அங்கமும் சுல்தானைப் போலவே இருக்கிறதை நீ பார்க்கவில்லையா?” – இது மற்றொருத்தியின் சமாதானம்.

இதனையடுத்து அங்குக் குழுமியிருந்த அத்தனை தாதியரும் மாறி மாறித் தங்களுக்குத் தோன்றிய அபிப்பிராயத்தை அச் சிசுவைப் பற்றிப் பிரஸ்தாபிக்கலாயினார்கள். அரசருக்குப் பிறந்த குழந்தை ஆண்டியைப் போலவா இருக்கும்! ஆனால், பெண்கள் கூடிய இடத்தில் இத்தகைய வருணனைகள் பிரசவ அறையில் நிகழ்வது சர்வ சாதாரணம். – அது குடிசையாயிருந்தாலும் சரிதான்; அல்லது ஷஜருத்துர் வாழும் அரண்மனையேயானாலும் சரிதான்!

சற்றுப் பொறுத்து ஸாலிஹ் நஜ்முத்தீன் அங்கே தோன்றினார். அரசரின் வருகையைக் கண்ட அந்த அல்லோல கல்லோலப் பட்டிருந்த பேரிரைச்சல் நிறைந்த அந்தப்புரத்தில் இப்போது நிசப்தம் நிலவியது. கருவுயிர்த்த தம் மனைவியைக் கருணைக் கண்ணுடன் பார்த்துக் கொண்டே தம் அருமைக் குழவியைத் தொட்டு முத்தியிட்டார் நஜ்முத்தீன். அச் சந்தர்ப்பத்தில் அவரதுள்ளத்துள் எழுந்த உணர்ச்சிப் பிரவாகத்தால் தாம் பூமியில் நிற்பதாகவே உணர முடியவில்லை.

ஷஜருத்துர்ருக்கோ, சர்வமும் கனவாகவே காட்சியளித்தன. கண்களை இறுக மூடிக்கொண்டு, தன்வாழ்க்கை வரலாற்றை ஆதிமுதல் சிந்தித்தாள். தன்னையறியாமலே அவள் நைந்துருகி, உவகைக் கண்ணீர் பெருக்கினாள்.

“கண்மணி! ஏன் அழுகிறாய்? மிகவும் சந்தோஷமாயிருக்க வேண்டிய இச் சந்தர்ப்பத்தில் நீ கண் கலங்குவானேன்?” என்று ஸாலிஹ் மிக்க பரபரப்புடன் வினவினார்.

“அவலக் கண்ணீரல்ல; ஆனந்தக் கண்ணீர்!” என்று கண்களைத தன் விரல்கொண்டு தடவிக்கொண்டே வெகு நிதானமாய்க் கூறினாள் ஷஜர். தனக்குப் பிறந்திருக்கும் ராஜகுமாரனைக் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தன் தந்தையோ, அல்லது வளர்ப்புத் தந்தை யூசுபோ. அல்லது அமீர் தாவூதோ, பக்கத்திலிருந்து பார்த்து மகிழும் பாக்கியத்தைத் தான் அடையப்பெறவில்லையே என்னும் சோகமே அவள் கண்களைக் கலக்கிற்று என்பதை ஸாலிஹ் எங்ஙனம் உணர்வார்? அவர் மீண்டும் தம் குழவியின் முகத்தைத் தடவி முத்தமிட்டுவிட்டுப் பாரியைமீது கடைக்கண்ணாலேயே தம் அன்பைச் சொரிந்துவிட்டு வெளியேறினார்.

அன்று மாலையில் அதிக தடபுடலான பெருவிருந்துக்கு எல்லா ஏற்பாடுகளும் பிரமாதமாக நடந்தேறின. பிரமுகர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் அவ் விழாக் களரியில் கலந்து கொண்டனர். அரபு நாட்டுச் சுயம்பாகிகளும், மற்ற நாட்டு அடிமைகளும் சேர்ந்து அன்று சித்தஞ் செய்த விருந்துணவின் நறுமணத்தை மனத்தால் மட்டுமே யூகித்தறிய வேண்டுமன்றி, எழுதி வருணிப்பதால் பயனேற்படப் போவதில்லை. அவ்வளவு மேன்மையான அறுசுவை நிறைந்த நால்வகை உணவாகச் சித்தம் செய்யப்பட்டன. விருந்துண்ண வந்திருந்தோர் வயிறு நிரம்ப உண்ட பின்னர், மன்னரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் நிகழ்ந்தது. அக் குழவிக்கு ‘மன்ஸூர்கலீல்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

அனாதையாகி, அல்லலிற் சிக்கி அவதியுற்றுக் கொண்டிருந்த ஷஜருத்துர்ரின் வாழ்க்கையில் அன்று நிகழ்ந்த பெருநிகழ்ச்சி என்றும் மங்காப் பேரோளியைப் பெற்றுக் கொண்டது. துக்கத்துக்குப்பின் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டவன் இவளுக்கு இப்படிப்பட்ட பேரின்பத்தையெல்லாம் கொடுத்தருளவே போலும், இறந்தகாலத்தில் அத்தனை சங்கடங்களுக்கும் இவளை ஆளாக்கி வைத்தான்! எல்லாம் இறைவனது நாட்டம்.

சுல்தான் வழக்கம்போலே தம் காரியத்தில் கண்ணாயிருந்து வந்தார். முன்னம் ஷஜருத்துர்ருக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணை அவர் மூளையை விட்டு அகலவேயில்லை. அவர் வளர்க்கிற அடிமைப் படையினர் பின்னொரு காலத்தில் சுல்தான்களாகப் போகக்கூடிய அளவுக்கு பலம் பெற்று விடுவார்களென்று அவள் கூறிய வார்த்தைகள் ஒருகால் தீர்க்க தரிசன சக்தியைப் பெற்றுவிடுமோ என்றுகூட அவர் அஞ்சத் தொடங்கினார். இம்மாதிரியான வார்த்தைகளை மூனிஸ்ஸா கூறியிருந்தால், அவர் அவ்வளவு ஏங்கியிருக்க மாட்டார்; அல்லது அவற்றைப் பொருள் பண்ணியிருக்கமாட்டார். ஆனால், ஷஜருத்துர் இப்படிக் கூறியதே அவர் மனத்தை மிக மிக வாட்டமுறச் செய்துவிட்டது. எனவே, அவர் முன்னிலும் பன்மடங்கு அதிக சிரத்தையுடன் தம் அடிப்படையைப் பலப்படுத்த ஆரம்பித்தார். ஆனால், அவர்கள் இஷ்டத்துக்கு எதையும் செய்யவிடக் கூடாதென்பதில் மட்டும் கண்ணுங் கருத்துமாயிருந்துவந்தார்.

‘மம்லூக்’ என்னும் அரபு வார்த்தைக்கு ‘அடிமை’ என்று பொருள். சொந்தமாக்கிக் கொள்ளுதல், அல்லது உரிமையாக்கிக் கொள்ளுதல் என்னும் அர்த்தமுள்ள ‘மலக்கத்’ என்னும் மூலத்திலிருந்து மம்லூக் என்னுஞ் சொல் பிறந்திருக்கிறது. எனவே, யுத்தத்தில் பிடிபட்ட கைதிகளை, அல்லது கிரயங் கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளை மிஸ்ரில் ‘மம்லூக்’கென்று சிறப்புப் பெயரிட்டு மக்கள் அழைத்து வந்தனர். இப்போது மிஸ்ரில் பழைய கால மம்லூக்குகளுடன் இப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட மம்லூக்குகளும் பெருக ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸலாஹுத்தீன் மன்னருக்கு முற்காலத்திலிருந்தே மிஸ்ரில் வளர்க்கப்பட்ட பழைய மம்லூக் அடிமைகள் காக்கேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவ் வடிமைகள் நாளடைவில் எத்துண வன்மைமிக்க அரசியல் கட்சியினராய் உயர்ந்தோங்கி விட்டார்களென்றால், சுல்தானைச் சிருஷ்டி செய்வதும் அழிப்பதுங்கூட அவர்களுக்கு மிக எளிதாயிருந்து வந்தது. அல்லாமலும், அவர்கள் தங்களிஷ்டத்துக்கு நியமித்த சுல்தான்களை கலீபாக்களே கூட அங்கீகரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மம்லூக்குகளிடையே அடிக்கடி பிளவேற்பட்ட போதினும், தங்கள் எல்லார்க்கும் பொதுவாகத் தோன்றும் எதிரியை ஒழித்துக் கட்டுவதில் அவர்கள் முழு ஒற்றுமையுடனேயே இருந்தார்கள். பொதுமக்களுடன் அவர்கள் எப்போதுமே யாதொருவிதச் சமூக உறவோ, சமுதாய சம்பந்தமோ வைத்துக்கொண்டதில்லை; அதற்கு மாறாக அம் மிஸ்ரிகளைத் தங்களுக்குச் சதா கீழ்ப்படியக் கூடியவர்களாகச் செய்துகொண்டு, தங்கள் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு விட்டனர். அந்த மம்லூக்குகளுள்ளிருந்த தலைவர்களே பொருளீட்டி, சிறுகச் சிறுகப் பதவியை அடைந்து, அமீர்களாக உயர ஆரம்பித்தனர். அந்த மம்லூக்குகளின் இன அமைப்பே முரட்டு ஜாதியாகிய காக்கேசிய மக்களாய் இருந்துவந்தமையால், அவர்கள் மிகவும் குரூரம் இழைப்பவர்களாகவும் அதிகமும் பொல்லாதவர்களாகவுமே இருந்தனர். ஓர் ஆங்கிலச் சரித்திராசிரியர் கூட அந்தப் பழைய மம்லூக்குகளின் படிப்படியான வளர்ச்சியை வெகு அழகாக வருணித்து, வாந்திபேதி உண்டுபண்ணும் கிருமிகளுக்கே அவர்களை உவமித்துக் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட அடிமைகளின் வம்சத்தில் உயர்ந்த அமீர்களுள் ஒருவரே ஷஜருத்துர்ரை வாங்கிய தாவூத் ஆவார். அந்த அமீரின் கூட்டத்தினரையே ஸாலிஹ் மன்னர் முன்பு கைது செய்து கொலை செய்தார். அடிமைகளாய் இருந்தவர்கள் அமீர்களாக உயர்ந்து, அரசனுக்கே ஆபத்தை உண்டு பண்ணுவதை எவரே சகிக்க முடியும்? வேலியே பயிரை அழிப்பதென்பது விபரீதச் செயலல்லவா? ஆகவே, அவர் அவர்களை அப்படித் தண்டித்தது ஒருவகையில் சரிதான் என்றாலும், அந்த ஸ்தானத்தில் இப்போது புதிய மம்முலூக்குகளை உற்பத்தி செய்ததை எப்படிச் சரியென்று கூறுவது? எல்லாம் சுயநலமும், அரச பதவியின்மீதுள்ள மோகமுமேதாம்.

காக்கேசிய அடிமைகளுள்ளிருந்து முளைத்த பலம் பொருந்திய அமீர்களை ஸாலிஹ் அழித்துவிட்டாரென்றாலும், அமீராகாத ஏனை அடிமைகள் காஹிராவில் ஏராளமாகவே உயிர்வாழ்ந்து வந்தார்கள். அந்த அடிமைகளை இனி அவர் எப்படி நம்புவார்? அல்லது அவர்களுக்குத்தாம் எப்படி நிஜ விசுவாசம் பிறக்கப் போகிறது? அவர்களுடைய தலைவர்களைக் கொன்ற பின்னர் அவ்வடிமைகளையே தமக்குப் பாதுகாவலராக நியமித்துக் கொள்வது, கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் விழுவதைப் போல் போய் முடியுமன்றோ? எனவேதான், அவர் அமீர்களை அழித்த பின்னர் மங்கோலிய நாட்டிலிருந்தும் துருக்கி தேசத்திலிருந்தம் காசு கொடுத்து வாங்கி வரப்பட்ட தம் சொந்த அடிமைகளைத் தமக்கு ஹல்காவாக நியமித்துக் கொண்டார். ஆகவே, இப்போது மிஸ்ரில் பலமிழந்த பழைய மம்லூக்குகளும், புதிய நியமனம் பெற்ற நவீன மம்லூக்குகளும் நிரம்பியிருந்தனர். இதில் முதல் இனம் அரசரின் பரம அதிருப்திக்கு ஆளாகிக் கிடந்தது; இரண்டாவது இனமோ, சுல்தானின் திருப்தியை மட்டும் பெறவில்லை; அவருக்கு மெய்காப்பாளர்களாகத் திகழும் பெருமையையும பெற்றுக்கொண்டிருந்தது; இதுதான் இரண்டுக்குமுள்ள வித்தியாசம்.

ஷஜருத்துர்ரின் எச்சரிக்கைக்குப் பின் ஸாலிஹ் மிகவும் கவனமாயிருந்து வந்தார். பழைய மம்லூக்குகளை அவர் நேரடியாகப் பகைத்துக் கொள்ளவில்லை. புதிய மம்லூக்குகளையும் அடிமை என்கிற அந்தஸ்திலேயே முற்ற முற்ற வைத்து நடத்திவந்தார். இரு தொகுதியினருமே காஹிராவில் மிசிரமாகவே இருந்தார்கள்.

மன்னர்பிரான் திருவோலக்கத்தில் வீற்றிருந்த ஒரு நாள் மத்தியான்னம் ஷாம் தேசத்திலிருந்து ஒரு விசேஷத் தூதன் வந்து அவர் திருமுன் நின்றான். அவரிடம் தான் கொணர்ந்திருந்த பேழை ஒன்றைத் திறந்து ஒரு திருமுகத்தை எடுத்து மிக மரியாதையாக நீட்டினான். அவர் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். அவர் அதைப் படிக்கப் படிக்க, வதனத்தில் வியப்புக் குறியும், கோபப் பார்வையும், ரோஷம் நிறைந்த ஆத்திரமும் மாறிமாறித் தோன்றின. நிருபத்தைப் படித்து முடித்துவிட்டு, சீறிட்டுப் படமெடுக்கும் நாகப்பாம்மைப்போல் சுற்று முற்றும் ஒரு பார்வை முறைத்துப் பார்த்தார். சிலிர்த்து நிற்கும் தாடி ரோமமும், கோபக்கனல் வீசும் கூரிய பார்வையும், துடிக்கிற உதடுகளும், பற்பறை கொட்டிய எயிறுகளும், பருத்து விரிந்த நாசித் துவாரங்களும உண்மையிலேயே ஆங்கிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் பெரும் கலக்குக் கலக்கிவிட்டன.

“முஹம்மத் ஷாவா வாலாட்டுகிறான்?” என்று பீரங்கியிலிருந்து சீறிக் கொண்டு வரும் வெடிகுண்டைப்போல் சுல்தான் ஒரு கேள்வியை விடுத்தார். அத்தாணி மண்டபத்தில் நிலவியிருந்து அந் நிச்சப்தத்துக்கிடையே இப் பேரொலி எழுந்ததால், அரண்மனையே கிடுகிடுத்து விட்டது.

“யா மலிக்கல் முஸ்லிமீன்! ஆமாம். அவன் உபத்திரவம் சகிக்க முடியவில்லையே!” என்று அந்த ஷாம்தேசத் தூதன் சாந்தமாக விடையிறுத்தான்.

-N. B. அப்துல் ஜப்பார்

Photo courtesy: விக்கிபீடியா

<<அத்தியாயம் 23>> <<அத்தியாயம் 25>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment