தோழியர் – 14 ஹவ்வா பின்த் யஸீத் (ரலி)

by நூருத்தீன்
14. ஹவ்வா பின்த் யஸீத் (حواء بنت يزيد)

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிற்கு யாத்திரை புரிய வரும் மக்களைச் சந்தித்து இஸ்லாமியச் செய்தியைச் சொல்வது வழக்கமாக இருந்து வந்தது. மக்கத்துக் குரைஷிகளிடம் செய்துவந்த பிரச்சாரம் தேக்க நிலையை அடைந்தபோது, வெளியூரைச் சேர்ந்த அரபுக் கோத்திர மக்களிடமாவது ஏகத்துவச் செய்தியை அறிவிப்போம் என்று விடாது தொடர்ந்து கொண்டிருந்தது அவர்களது முயற்சியும் பிரச்சாரமும்.

அப்படி ஒருமுறை ஒருவரைச் சந்தித்தார்கள் நபியவர்கள். அவர் சார்ந்த முக்கியப் பிரச்சினை ஒன்று இருந்தது. அவர் கொடுமை ஒன்று புரிந்துகொண்டிருந்தார். அதை நிறுத்திக்கொள் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட முக்கியம் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது. அவருக்கும் மீட்சி. பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு. எனவே அவரைச் சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்கள் நபியவர்கள். இஸ்லாமிய அடிப்படையை விவரித்தார்கள். அந்த மனிதருக்கு அது சரியென்றுதான் தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும் காரணம் ஒன்றைச் சொல்லித் தட்டிக்கழித்தார் அவர்.

அப்படியானால் பிரச்சினைக்காவது தீர்வு காண வேண்டுமே என்ற நிலையில், “அக்கொடுமையை மட்டுமாவது நிறுத்திக்கொள்ளேன்” என்று கோரிக்கை வைத்தார்கள் நபியவர்கள். ஒத்துக்கொண்டார் அவர். அவருடைய பெயர் ஃகைஸ் இப்னுல் ஃகதீம்.

oOo

முதல் அகபா உடன்படிக்கை நிறைவேறியதும், நபியவர்கள் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவிற்கு அனுப்பிவைத்திருந்தார்கள். அவரது பிரச்சாரத்தால் மக்கள் இஸ்லாத்தை ஏற்றது ஒருபுறம்; மக்காவிற்குச் செல்ல நேரிட்ட மக்கள் சிலர், நபியவர்களையே நேரடியாகச் சந்தித்து இஸ்லாத்தினுள் நுழைந்தது என்று மற்றொருபுறம்; இப்படியாக மதீனாவில் இஸ்லாம் மிக விரிவாக மீளெழுச்சி பெற்றிருந்தது.

ஆயினும் மதீனாவில் வசித்துவந்த பெரும்பான்மையான மக்களுக்கு நபியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போது அமையவில்லை. இஸ்லாமும் குர்ஆனும் நபியவர்களைப் பற்றி அவ்வப்போது மக்காவிலிருந்து அறியவந்த துளித் துளியான செய்திகளும் என்று, அம்மக்கள் மத்தியில் நபியவர்களைப் பற்றிய கடலளவு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. தகவல் தொழில் நுட்பம் பெருகியுள்ள இக்கால கட்டத்தில், உலகின் எந்த மூலையில் இருக்கும் எவரையும் நொடிப் பொழுதில் காண்பதும் உரையாடுவதும் சாத்தியம்; நமக்குப் பரிச்சயம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க முடிந்தால், அந்த மக்களின் ஆர்வத்தின் முழு வீச்சுப் புலப்படும்.

எனவே, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்தவுடன், மதீனத்து முஸ்லிம்கள் அனைவருக்கும் நபியவர்களை நேரில் சந்திக்கவும் தங்களது இறை நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தெரிவிக்கவும் நபியவர்களது திருக்கரம் தொட்டு, உறுதிமொழி அளிக்கவும் என்று அளவற்ற ஆவல். நபியவர்களின் ஸ்பரிசம் ஏற்படுத்தும் உணர்வு அவர்களுக்கு ஆனந்தம்! இணையற்ற பேரானந்தம்! நபியவர்கள் மதீனா வந்து நுழைந்த சில நாள்களில் மதீனத்துத் தோழர்கள் விரைந்து சென்று, அவர்களைச் சந்தித்து உறுதிமொழி அளித்துக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பெண்களுக்குத் தாங்களும் சென்று நபியவர்களைச் சந்திக்க வேண்டும் என்று பேராவல். ஆனால், ஆண்களின் கூட்டம் நபியவர்களை எந்நேரமும் சூழ்ந்திருக்க, பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு அமையாமலேயே இருந்தது. ஒருநாள் மாலைப் பொழுது. பெண்கள் மூவர் சேர்ந்து முடிவெடுத்தனர். இன்று எப்படியும் நபியவர்களைச் சந்தித்து விடுவது என்று தீர்க்கமான முடிவு.

அது மக்ரிபு, இஷாத் தொழுகைகளுக்கு இடைப்பட்ட நேரம். மூவரும் துணியால் தங்களை அடக்கமாகப் போர்த்திக்கொண்டனர். சென்று நபியவர்களைச் சந்தித்தனர். அவர்களுள் ஒரு பெண் முகமன் கூறினார்.

“யார் நீ?” என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.

“நான் உம்முஆமிர். அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவள்.”

“இவர்கள்?”

“ஹவ்வா பின்த் யஸீது, லைலா பின்த் அல்-குதைம்.”

அன்புடன் வரவேற்றார்கள் நபியவர்கள். “சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முஸ்லிம்கள் என்று தங்களுக்கு உறுதிமொழி அளிக்க வந்திருக்கிறோம். நாங்கள் தங்கள்மீது நம்பிக்கை கொள்கிறோம். தாங்கள் சத்தியத்தைப் புகட்டுகிறீர்கள் என்பதற்கு சாட்சியம் பகர்கிறோம்.”

“உங்களை இஸ்லாத்திற்கு வழிநடத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நான் தங்களது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டேன்.”

உறுதிமொழி அளிக்கும் ஆண்கள் நபியவர்களின் கரம் பற்றி அளிப்பது வழக்கம். எனவே உம்முஆமிர் நபியவர்களின் கரத்தைப் பற்ற நெருங்கினார்.

“நான் அந்நியப் பெண்களின் கரத்தைப் பற்றுவதில்லை” என்று தடுத்தார்கள் நபியவர்கள். “நான் ஒரு பெண்ணுக்குச் சொல்வதும் ஆயிரம் பெண்களுக்குச் சொல்வதும் ஒன்றே.”

அல்லாஹ்வின் இறுதித் தூதரை நேரில் சந்தித்து உறுதிமொழி அளித்தது அப்பெண்களது உள்ளத்தை நிறைக்க, மதீனாவில் நபியவர்களுக்கு உறுதிமொழி அளித்தப் பெண்களுள் முதல் மூவர் என்ற பெருமை அவர்களை அடைந்தது. ரலியல்லாஹு அன்ஹுன்ன.

முஸ்அப் இப்னு உமைரின் பிரச்சாரத்தினால், ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் அவரது குலத்தைச் சேர்ந்த மக்கள் அவரைப் பின்தொடர்ந்து தாங்களும் ஒரேநாளில் இஸ்லாத்தினுள் நுழைந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மூன்று பெண்களுள் ஒருவரான ஹவ்வா பின்த் யஸீது. இவர் ஸஅத் இப்னு முஆதின் சகோதரி மகள். இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தற்காப்பிற்கும் இவரது குலம் எப்பொழுதுமே முன்னணியில் நின்றது.

நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயரும் முன்பே, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹவ்வா ரலியல்லாஹு அன்ஹா அதில் உறுதியடைந்துகொண்டே போக, அவரின் கணவர் ஃகைஸ் இப்னுல் ஃகதீம் மட்டும் இஸ்லாத்திற்குள் வரவில்லை. அவர் ஒரு கவிஞர். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் அவருக்குக் கடுங்கோபம். கோபம் முற்றி, அடி, உதை என்று தம் மனைவியைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இஸ்லாம் என்று வந்தபின் அடியாவது, மிதியாவது என்று அதற்கெல்லாம் அயராமல் ஹவ்வாவின் உள்ளமோ திடம் வளர்த்தது. அது ஃகைஸை மேலும் வெறுப்பேற்ற, ஹவ்வா தொழுது கொண்டிருந்தபோது, அவர் ஸஜ்தாவிற்குச் செல்லும்வரை காத்திருப்பவர், அவர் சிரம் தரையில் பதிந்திருக்கும்போது அவரது தலையைக் கடுமையாகப் பற்றித் திருப்பிவிடுவார். ஏறக்குறைய சிறு அளவிலான மல்யுத்தம்போல் அவராலான அனைத்து தொந்தரவுகளும் கொடுமைகளும் தாட்சண்யமின்றி நிகழ்ந்து கொண்டிருந்தன.

நபியவர்கள் மக்காவில் வசித்துவந்த கால கட்டத்தில் மதீனாவில் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தம் மக்களின் நலனை விசாரித்து அறிவது அவர்களது வழக்கமாய் இருந்தது. எனவே அங்கு முஸ்லிம்களுக்கு நடைபெற்றுவந்த நல்லது கெட்டது எல்லாம் நபியவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஃகைஸின் மனவைி ஹவ்வா அனுபவித்து வரும் இன்னல்களும் அவர்களுக்குத் தெரிய வந்திருந்தன.

இஸ்லாம் மீளெழுச்சி அடையும் முன்பும் மக்காவிற்கு யாத்திரை செல்லும் வழக்கம் அரபுகளிடையே இருந்து வந்தது. ஆனால் அது அவர்கள் கஅபாவில் நட்டு வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்குச் செய்துவந்த அனாச்சாரம் மிகைத்திருந்த வழிபாடு. ஒரு யாத்திரை காலத்தில், அப்படியான உருவ வழிபாட்டிற்கு, ஃகைஸும் மக்கா வந்திருந்தார். அவருடைய மனைவி ஹவ்வாவின் நிலையை நன்கு அறிந்திருந்த நபியவர்கள் ஃகைஸைச் சந்தித்தார்கள்.

அவர் புரிந்துவந்த கொடுமைகளை எதிர்த்து அமையவில்லை நபியவர்களது முதல் பேச்சு. மாறாக ஏகத்துவம், இஸ்லாமிய அடிப்படைகள் என்று இஸ்லாத்திற்கான அழைப்பாகத் துவங்கியது உரையாடல். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இறைத்தூதரின் அடிப்படை நோக்கம். ஏனெனில், முதலாவது அதில் ஃகைஸுக்கான மீட்சி அமைந்திருக்கிறது. அடுத்தது, அவரால் நிகழ்ந்துவரும் பிரச்சினைகளுக்கும் கொடுமைகளுக்குமான தீர்வு அதிலேயே அடங்கியிருக்கிறது.

கவிஞராகிய ஃகைஸுக்கு குர்ஆன் வசனங்களின் உன்னதமும் அச்செய்தியின் உண்மையும் புரியாமல் இல்லை. தெளிவாகவே புரிந்தது. எனினும், “தங்களது செய்தியும் அதன் கருவும் மேன்மையானது; உன்னதமானது; ஆமோதிக்கிறேன். ஆயினும் எங்களது உள்நாட்டுப் போரில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் இப்பொழுது இஸ்லாத்தை ஏற்க முடியாது” என்று பொருந்தாக் காரணம் ஒன்றைக் கூறினார். மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்திற்கு இடையே நடைபெற்று வந்த யுத்தம் பற்றி முன்னரே படித்திருக்கிறோமில்லயா? அதைத்தான் உள்நாட்டுப் போர் என்று அவர் குறிப்பிட்டார். இதில் வினோதம் என்னவெனில், எந்தக் காரணத்திற்காகத் தாம் தற்சமயம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஃகைஸ் கூறினாரோ அதே காரணத்தைத் தெரிவித்துத்தான், ‘இஸ்லாம் எங்களது இந்த உள்நாட்டுப் போருக்கு தீர்வு வழங்கி எங்களை ஒன்றுபடுத்தும் என்று நம்புகிறோம்’ என்று கூறியிருந்தார்கள் மதீனாவிலிருந்து மக்கா வந்து நபியவர்களிடம் முதன்முறையாக உறுதி மொழி ஏற்றுக்கொண்ட மதீனாவாசிகள் அறுவர்.

ஃகைஸிடமிருந்து இஸ்லாத்திற்கு இணக்கமான பதில் இல்லை என்பதை அறிந்ததும், ஹவ்வாவின் பிரச்சினைக்காவது தீர்வு காண்போம் என்று அவரிடம் மற்றொரு கோரிக்கை வைத்தார்கள் நபியவர்கள். “அபூயஸீத்! உன் மனைவி உனது மார்க்கத்தைவிட்டு நீங்கிவிட்டாள் என்ற கோபத்தில் நீ அவளைத் துன்புறுத்துவதாகக் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். அவளைத் துன்புறுத்தாதே.”

இங்கு ஒன்றைக் கவனித்தல் நலம். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவர்களின் முதல் பிரச்சினை, கோளாறு என்பது அல்லாஹ்வின்மீது அவர்களுக்கு இல்லாத நம்பிக்கை. அதுவே பிரச்சினையின் ஆணிவேர். மற்றவை அந்த அவநம்பிக்கையினால் நிகழ்வுறும் எதிர்வினைகள் மட்டுமே. எனவே நீக்கப்பட வேண்டியது அந்தக் களையே. பிற தானாய்ச் சரியாகிவிடும்.

இஸ்லாத்தை நிராகரித்தாலும், நபியவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் ஃகைஸ். தம் மனைவியைத் துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்வதாகச் சத்தியமும் செய்தார். மதீனா திரும்பியவர் தம் மனைவியிடம், “அவர் என்னைச் சந்தித்தார். உன்னிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நீ ஏற்றுக்கொண்ட மதத்தை இனி நீ சுதந்திரமாகப் பின்பற்றலாம்.”

ஃகைஸின் வாக்குச்சுத்தம் மிளிர்ந்தது. ஹவ்வாவின் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஹவ்வாவுக்கு யஸீத், தாபித் என்ற இரண்டு மகன்கள். இருவரும் நபியவர்களின் தோழர்கள் ஆகிப்போனார்கள். இதில் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு உஹதுப் போரில் கடுமையாகப் போரிட்டவர். அதில் அன்று அவருக்குக் கடுமையான காயங்கள். ஏறக்குறைய 12 ஆழமான காயங்கள் அவருக்கு அப்போரில் ஏற்பட்டன. அதெல்லாம் அவரது திடத்திற்கு உரமிடத்தான் உதவின. அதற்கடுத்து நிகழ்ந்த அனைத்துப் போரிலும் யஸீத் முஸ்லிம்களுடன் கலந்துகொண்டார். உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்வுற்ற பாலப் போரில் அவர் உயிர் தியாகி ஆகிப்போனார்.

கட்டிய கணவனே என்றாலும் அல்லாஹ்வின் பொருட்டு கடுந்துன்பம் தாங்கி வாழ்ந்து, சிறந்த மகன்களை இஸ்லாத்திற்கு வழங்கி மறைந்தார் ஹவ்வா பின்த் யஸீத்.

ரலியல்லாஹு அன்ஹா!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 16 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்: Read More

Photo by Haidan on Unsplash

Related Articles

Leave a Comment