அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய தட்டுப்பாடு

லகெங்கும் ஊர் அடங்கிவிட்டது. கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பால் வல்லரசு நாடுகளே கைகளை சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, செய்வதறியாது பிசைந்து கொண்டு நிற்கின்றன. சீனாவில் வுஹானாம், அங்கு வைரஸாம் என்று பெட்டிச் செய்தியாகக் கிளம்பிய கொரோனா, பரவிய வேகத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை அந்நாட்டில் பழிவாங்கி, அப்படியே மக்கள் கைகளில் அமர்ந்து பயணம் புரிந்து, உலகத்தையே சுற்றி வளைத்து விட்டது. அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகருக்கு ஜனவரி 15 ஆம் நாள் அதன் முதல் விஜயம் என்கின்றன ஊடகச் செய்திகள்.

அதன்பின், அந்த நபரை Quarantine எனும் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு ஆகியன நடைபெற்று அதை மற்றொரு செய்தியாகக் கடந்துவிட்டு, சீனாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது அமெரிக்கா. ஆனால், வெகு விரைவில் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியல் போல்

ஒவ்வொரு நாடும் முண்டியடித்துக்கொண்டு கொரோனா பாதிப்புப் பட்டியலில் இடம்பெற்று, அந்த வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கையில் இன்று முதல் இடத்தைப் பெற்று நிற்கிறது இத்தாலி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தொகையின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகி, இன்று (மார்ச் 24, 2020) மூன்றாம் இடத்தில் நிற்கிறது அமெரிக்கா.

பிப்ரவரி 29 ஆம் நாள்தான் அமெரிக்காவில் முதல் கொரோனா மரணம். சியாட்டிலின் கிர்க்லேண்ட் (Kirkland) பகுதியில் உள்ள நர்ஸிங் ஹோமில் ஒரு நோயாளி கொரோனாவினால் மரணமடைந்தார் என்று செய்தி வந்தது. அதையடுத்து மரண எண்ணிக்கையும் வைரஸ் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஏறுமுகம்தான். அடுத்து கிடுகிடுவென நிகழ்வுறத் தொடங்கிய முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைளால் இயல்பு வாழ்க்கை சிதைந்து, களையிழந்து, பொலிவிழந்து பேயறைந்த பட்டணம் போல் உள்ளது சியாட்டில்.

முதல் மரணச் செய்தி வந்தவுடனேயே சியாட்டில் நகரிலுள்ள அமேசான், கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி அலுவலகங்களை மூடிவிட்டன.

சியாட்டில் நகரம் அமைந்துள்ள வாஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் ஜே இன்ஸ்லீ (Jay Inslee) பல கட்ட நடவடிக்கைகள் எடுத்து, மளிகை, மருத்துவம், பெட்ரோல் பங்குகள் ஆகியன மட்டும் செயல்படவும் அத்தேவைகள் அன்றி வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வரக்கூடாது என்று அரசாங்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வெளியில் வருபவர் தமக்கு மிக நெருங்கிய உறவினரையே பார்த்தாலும்கூட ஆறடி தூரமாவது தள்ளியே நிற்க வேண்டும். தொட்டால் தீட்டு!

Social distancing, new normal என்ற பதங்களை வீட்டுப்பாடமாக அனைவருக்கும் அறிவித்துவிட்டு வெறிச்சோடிப் போயுள்ளது அமெரிக்கா. அலுவல் நேரங்களில் மூச்சுத் திணறும் நெடுஞ்சாலைகள் பெருமூச்சுவிட்டபடி உள்ளன. முதல் மரணம் நிகழ்ந்து, பெரும் கம்பெனிகள் தங்களது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்து, ஊர் நிலைமை மோசமாகப் போகிறது என்பதை அறிந்தவுடனேயே சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைந்து அள்ளிப்போய் சேகரித்துக்கொண்ட ஒரு பொருள்தான் இந்த அனைத்திலும் ஒரு வேடிக்கை.

அது உணவுப் பொருள் அன்று. டாய்லெட் பேப்பர்! இன்றுவரை அதன் டிமாண்ட் தீர்ந்தபாடில்லை. மேலை நாட்டினருக்கு அவ்விஷயத்தில் மட்டும் தண்ணீரில் கண்டம்! அதென்னவோ, கழுவல் ஒவ்வாமை. துடைத்தெறியும் பேப்பர்தான் அவர்களுக்கு வசதி.

தனிநபர்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் பற்றாக்குறையோ பாதிப்புகளோ ஏற்படாதவாறு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வந்தாலும் கொரோனாவின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது பொருளாதாரம். சிறு வியாபாரிகள், அதன் பல்வேறு ஊழியர்கள் அனைவருக்கும் அந்த பாதிப்பு பெரும் அடி. வாஷிங்டன் மாநிலம் எமெர்ஜென்சி என்று அறிவித்துள்ளதால், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி மக்களுக்குச் சில பல உதவிகளை அளிக்கும். என்றாலும் இந்தத் தாக்கத்திலிருந்து ஊரும் உலகமும் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் இழப்பின் முழு வீரியம் தெரியவரும். முடங்கிப் போயுள்ள வணிகத்தால், சேவைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட எத்தனை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் என்பது கவலையுடனான கேள்விக்குறி.

இச்சோதனையான காலகட்டத்தில் சிலரின் அற மாண்புகள் வெளிப்பட்டு அவர்கள் மனித குலத்திற்கு அளிக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் வியப்பூட்டும் ஓர் ஒளி விளக்கு. அப்படியான புத்தொளிச் செய்தி ஒன்று நேற்று வந்திருந்தது.

மருத்துவப் பணிகளிலும் சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முகக் கவசங்கள் தேவைப்படுகின்றன. உயிர் காக்கும் மருத்துவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்தல்லவா சேவையாற்றி வருகிறார்கள். சியாட்டில் நகரை ஒட்டியுள்ள பிராவிடன்ஸ் மருத்துமனைகளின் மூத்த துணைத் தலைவர் தங்களது மருத்துவமனைக்கு மட்டுமே சுமார் 10 மில்லியன் முகக் கவசங்கள் தேவை என்று கூறுகிறார்.

அமெரிக்காவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்குமாக சுமார் 100 மில்லியன் முகக் கவசங்கள் தேவைப்படலாம் என்பது அவரது கணிப்பு. இந்த அசாதரண தேவைக்கு ஏற்ற விநியோகம் தற்சமயம் இல்லை! அது ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைக்கும் க்ளோரோக்வின் மருந்தைவிட கசப்பான உண்மை.

ஜெஃப் காஸ் (Jeff Kaas) என்பவர் சியாட்டிலின் அண்டை நகரமான மகில்டியோவில் (Mukilteo) நவீன வடிவிலான சோஃபா, படுக்கை, நாற்காலி தயாரித்து விற்பனை புரிபவர். அது அவரது குடும்பத் தொழிலும்கூட. கொரோனா பிரச்னையினால் அவரது தொழிலும் தற்காலிகமாக முடங்கிப் போயுள்ளது. அவருக்கு முகக் கவசப் பற்றாக்குறை பற்றிய தெரிய வந்தது. உடனே செயலில் இறங்கினார் ஜெஃப் காஸ்.

முகக் கவசம் தயாரிப்பதற்கான விவரக் குறிப்புகளையும் அதற்கான தயாரிப்பு விதிமுறைகளையும் மருத்துவமனைத் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அந்தத் தயாரிப்பில் இறங்கிவிட்டார். அவருடைய தொழிற்சாலையின் தையல் இயந்திரங்கள் கவசம் தைக்கத் தொடங்கி விட்டன. தம்முடைய 50 முழுநேர ஊழியர்கள் இரண்டு நாள்களில் 1000 முகக் கவசங்களைத் தயாரிப்பதாகவும் மேலும் 150 தன்னார்வலர்கள் அப்பணியில் இணையப் போவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

‘என்னுடைய வணிகத்தின் எதிர்காலம் இருண்டு போயிருப்பது எனக்குத் தெரியும். நாட்டு நிலைமை சீரடைந்து மீண்டும் வணிகத்தைத் தொடங்கும்போது அது பிழைக்குமா என்பதே சந்தேகம். நிச்சயமற்ற சூழ்நிலையில்தான் இருக்கிறேன். அதை அப்போது பார்த்துக் கொள்வோம்’ என்று அமைதியாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது தம்மிடமுள்ள கைக்காசைப் போட்டு முகக் கவசம் தயாரித்து அளித்துக்கொண்டிருக்கிறார் ஜெஃப் காஸ்.

ஊர் அடங்கினாலும் இத்தகையானவர்களால் நம்பிக்கையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது சியாட்டில்.

-நூருத்தீன்

நன்றி: #MyVikatan

விகடன்.காம் -இல் மார்ச் 25, 2020 வெளியான கட்டுரை

தமிழாக்கம்: நூருத்தீன்


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment