ருக்னுத்தீன் போர்க்களத்தை விட்டு வெளியேறுகிற நேரத்தில் அந்த மம்லூக் ஓடிவந்து அவர் காதில் குசுகுசுவென்று ஷஜருத்துர் சொல்லியனுப்பிய செய்தியைக் கூறினார். அதற்கப்பாலேதான் ருக்னுத்தீன் முற்சொன்ன சிறு பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு, சிறைச்சாலைக்குள்ளே கைதிகளைப்

போட்டு அடைக்கச் சென்றார். ஆங்குள்ள அலுவல்களை முடிக்குமுன்னே கோழியும் கூவிற்று. என்றாலும், மேற்கொண்டு அரை வினாடியும் தாமதிக்காமல் நேரே கிழக்குவாயில் அருகிற் சென்றார்.

சுல்தானின் கூடாரம் இருளடைந்து கிடந்ததும், உள்ளிருந்து செறுமுகிற ஓசை கேட்டதும் ருக்னுத்தீனைத் திகைக்கச் செய்தன. எனினும், அவர் தைரியமாகத் தங் கையிலிருந்த தீவட்டியைக் கொளுத்திக்கொண்டு உள்ளே புகுந்து பார்த்தார். மூமிய்யாவின் மடிமீது ஷஜருத்துர்ரின் வதனம் புதைந்திருந்ததையும், சுல்தானா தம்மை அறியாமலே புலம்பி அழுது கொண்டிருந்ததையும் கண்ட ருக்னுத்தீனுக்கு ‘ஜிவ்’ வென்றோர் உணர்ச்சி பிறந்தது.

கிறிஸ்தவர்களை வெற்றிகொண்ட இப் புனித தினத்திலே அப்பெரிய செய்தியைக் கேட்கும் பாக்கியம் ஸாலிஹ் மன்னருக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்னும் வருத்தம் அவரை உருக்கிற்று. இப்போது மட்டும் ஸாலிஹ் உயிருடனிருப்பதாயிருப்பின், தாம் இந்தப் பெருஞ் செய்தியைக் கொண்டு வந்திருப்பதற்கு சுல்தானும் அவர் தேவியாரும் தம்மை எப்படியெல்லாம் கண்ணியப்படுத்தி, கெளரவிப்பார்கள்! அப்போது இவர் எவ்வளவு இன்பத்துடன் துள்ளிக் குதிப்பார்! தமீதாவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்குப் பழிவாங்கிய இப்பெரிய வெற்றி எவ்வளவு உளப் பூரிப்பையூட்டும்! அப்போது இப்படிப்பட்ட அழுகையும் சோகமும் துக்கமுமா நிறைந்திருக்கும்? – ருக்னுத்தீனால் சகிக்க முடியவில்லை.

போர்க்களத்தில் எத்தனையோ விதமாகப் பரிதாபகரமாய் உயிரிழந்தவர்களைப் பார்த்துப் பார்த்துப் பக்குவப்பட்டிருந்த அவரது நெஞ்சமும் சஞ்சலமுற ஆரம்பித்து விட்டது. பெரிய பாறாங்கல்லில் நீர்ச் சுனை தண்ணீரைக் கசியச் செய்வதுபோல் அவருடைய கண்களும் அவலத்தைப் பொழிந்துகொண்டிருந்தன.

சுமார் கால் மணி நேரஞ் சென்று ஷஜருத்துர் தலையை நிமிர்த்தினார். எதிரிலே ருக்னுத்தீன் ஜூவாலைவிட்டெரியும் தீப்பந்தத்தைத் தாங்கியவராக நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். பதினைந்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து துக்கத்தால் கிழடு தட்டிப்போய்ச் சுருங்கித் திரைந்து வெளுத்துப்போயிருந்த சுல்தானாவின் வதனம் சுடுகாட்டில் நடமாடும் அலகையின் தோற்றத்தையே நிகர்த்திருந்தது. முன்பெல்லாம் கண்ட ஆடவரும் கணப்பொழுதில் தங் கருத்தைப் பறிகொடுக்கும் வண்ணம் மின்னிக்கொண்டிருந்த பேரெழில் இப்போது எங்கோ ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. கண்ணீரிலேயே ஊறிய கண்களும் இமைகளும், அக் கண்ணீர் வழிந்துவழிந்து சுவடு படிந்திருந்த கன்னங்களும், துடித்துத் துடித்து அயர்ந்துவிட்ட உதடுகளும் பார்க்கப் பயங்கரமாயிருந்தன.

கவிவாணரும் வருணிக்கத் தடுமாறும் எழில் நிறைந்த கூந்தலழகும், வதன சிருங்காரமும், மேனி மென்மையும், அங்க லக்ஷணங்களும் இப்போது எங்கேயோ சென்று அஸ்தமித்து மறைந்துவிட்டன. இருந்த அழகெல்லாம் அடியோடு நீங்கியதுடன், இல்லாத அவலக்ஷணமெல்லாம் இப்போது எங்கிருந்தோ வந்து குடிபுகுந்து கொண்டன. இயற்கை என்பது ஒரு பெண்மணிக்கு எவ்வளவுதான் மிகுந்த வனப்பைக் கொடுத்திருந்தாலும், ஓரளவேனும் அந்தப் பெண் செயற்கையைக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளாவிட்டால், அங்கே அழகு சோபிக்கிறதில்லை. அஃதே போல், அப்பெண்மணி எவ்வளவுதான் இயற்கையழகையும் செயற்கையழகையும் பெற்றிருந்தபோதினும், துயரமே உருவாய் அழுது வடிந்துகொண்டிருந்தால், அங்கே நாம் வருணிக்க முடியாத அருவருப்பு மிகுந்த காட்சியையே காண முடியும். எனவே, சுல்தானாவுக்குரிய அத்தனை லக்ஷணங்களையும் ஷஜருத்துர் பெற்றிருந்தும், சுல்தானையே இப்போது இழந்து விட்டு அழுது வடியும்போது அந்த ராணியின் இலக்ஷணம் வேறு எப்படித்தான் இருந்திருக்கும்?

ஹக்கீமும் இரு அடிமைகளும் அங்கே நன்றாய் உறங்கிக் கொண்டு கிடந்தார்கள். தனிச் சிறைவாசத்தைவிட இந்தக் கொடிய கடுங்காவல் தண்டனை அவர்களுக்குப் பெரிய சங்கடமாயிருந்தது. இஷ்டம்போல் அலைந்து திரிவதை விட்டு விட்டு, அவர்கள் தயிலமிடப்பட்ட பிரேதத்தையும், சதா அழுது வடிகிற ஷஜருத்துர்ரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்து வந்தார்கள். ஷஜருத்துர்ருக்கும் ருக்னுத்தீனுக்கும் இருந்த பொறுமையின்மையைவிட அம்மூவருக்கும் இன்னம் அதிகமான ஆத்திரம் ஜனித்தது. இளவரசர் இந்த நிமிஷமே வந்து, சுல்தான் மாண்ட செய்தியும் பகிரங்கப்படுத்தப்பட்டுத் தங்களுக்கு விடுதலையென்னும் விமோசனமும் கிடைக்காதா? என்று ஏங்கி ஏங்கிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர். நாளாக ஆக, அவர்களுக்கு ஏக்கமே அதிகரித்தது. சுயேச்சையென்னும் விடுதலையில் மனிதன் எவ்வளவு பேராசைகொண்டிருக்கிறான், பாருங்கள்!

ஒன்று, தங்களையெல்லாம் ஒரே வீச்சில் கொன்றுவிட்டாலும் நல்லதாயிற்றே! என்று அவர்கள் நினைத்தார்கள். அல்லது இந்த நரக வேதனையிலிருந்து தங்களை விடுவித்து விட்டாலே போதுமென்று அவர்கள் விரும்பினார்கள். அல்லது தேசப்பிரஷ்டம் பண்ணி வெளியேற்றிவிட்டாலே போதுமே என்றுகூட ஆசைப்பட்டார்கள். சுருங்கச் சொல்லின், அவர்கள் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றாலே போதும் என்று துடியாய்த் துடித்தனர். சுல்தானா மட்டும் தங்கள் மீது கிருபை வைத்து வெளியே ஓட்டிவிட்டால், எங்கேயாவது தூரதேசத்துக்கேனும் ஓடிப்போய் விடலாமே என்று ஆவலுற்றார்கள்.

“சுல்தான் மாண்ட இரகசியத்தை நாம் வெளியிட்டு விடுவோமென்று பயந்துதானே நமக்கு இந்தக் காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது? நமக்கு மட்டும் சுயேச்சை அளித்துவிட்டால், உடலைவிட்டு நம் உயிர் பிரிகிறவரையில் எப்படிப்பட்டவருக்கும் நாம் இந்த இரகசியத்தை வெளியிட மாட்டோமே!” என்று மனத்துக்குள் கூறிச் சலித்துக் கொண்டார்கள்.

அவர்களுக்கு எங்ஙனம் விடுதலை கிடைக்கும்? ஆதலால், இப்போது சோர்வு மிகுதியால் அவர்கள் நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை. சுல்தான் இன்னம் புதைக்கப்படாத பிரேதமாக நீட்டிக் கிடப்பதில் ருக்னுத்தீனுக்கு இருந்த கவலை அவர்களுக்கு எப்படி ஏற்படப்போகிறது?

அந்தச் சேனாதிபதி தம் கையில் பிடித்திருந்த தீவட்டியைக்கொண்டு, அணைந்துபோயிருந்த தேய்ந்த மெழுகுவர்த்தியைக் கொளுத்திவிட்டுப் பந்தத்தைக் கீழே எறிந்துவிட்டார். ஷஜருத்துர் மெல்ல எழுந்து ருக்னுத்தீனை உற்று நோக்கினார்.

“யா ஸாஹிபா! அந்தக் கிறிஸ்தவர்களை யான் உயிருடனே பிடித்து, சிறைச்சாலையுள்ளே போட்டு மூடிவிட்டேன். கிழக்கு வெளுக்கிற நேரமாகி விட்டது; விடி வெள்ளியும் முளைத்துவிட்டது. கோழியும் கூவிவிட்டது; தாங்கள் இப்போது எனக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்?”

ரிதா பிரான்ஸை வென்ற உமது தீரத்தை நான் இந்த ஸல்தனத்தின் சார்பாகவும், இதற்கென்றே உயிர்நீத்த சுல்தானின் சார்பாகவும் மெச்சிப் புகழ்கிறேன்.

“உம்மீது நான் இன்னம் பளுவைச் சுமத்திவைக்க நாடவில்லை; ரிதா பிரான்ஸை வென்ற உமது தீரத்தை நான் இந்த ஸல்தனத்தின் சார்பாகவும், இதற்கென்றே உயிர்நீத்த சுல்தானின் சார்பாகவும் மெச்சிப் புகழ்கிறேன். எனினும், இந்த ஸல்தனத்துக்கு உரியவராகிய தூரான்ஷா இன்னம் சற்று நேரத்தில் இங்கு வந்து சேர்வாராகையால், அவரை வரவேற்க வேண்டிய பொறுப்பை நீர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கொள்கிறேன். மேலும் அவரை அழைத்துக்கொண்டு இந்த இடத்திற்கு வரும்வரை இந்த அசம்பாவிதத்தை அவருக்குத் தெரிவிக்காதீர்.”

“யா மலிக்காத்தல் முஸ்லிமீன்! தாங்களொன்றும் அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். இப்போதே யான் எதிர்நோக்கிச் சென்று, அவரை வழியில் சந்தித்து, இங்கே அழைத்து வருகிறேன்!” என்று ருக்னுத்தீன் கூறிவிட்டு, தம் வாம்பரியின் மீதேறி, கிழக்குவாயில் வழியே வெளியேறினார்.

சில மைல் தூரம் ஷாம் ரஸ்தாவில் அவர் செல்லுமுன்னே பொழுது நன்றாய் விடிந்துவிட்டது. எதிர்த்திசையில் மேகம் போன்ற புழுதிப் படலம் கண்ணக்குப் பட்டது. தூரான்ஷாவும் அவருடைய பரிவாரங்களும் தொடுவானத்தின் தூரத்தில் வந்து கொண்டிருந்ததை அக்காட்சி நிரூபித்தது. ருக்னுத்தீனோ, தம் குதிரையை மெல்லச் செலுத்திக்கொண்டே, இனிமேல் என்னென்ன வைபவங்கள் – கேட்பவர் உள்ளத்தை உருக்கிவிடும் நிகழ்ச்சிகள் – நடக்கப் போகின்றன என்பதை மனக் கண்ணால் சிருஷ்டித்துக்கொண்டே சென்றார். சாவுச் செய்தியை அமரச் சொல்ல வேண்டும். அன்றியும், இளவரசர் சிம்மாசனத்தில் ஏறும் வரையில் யாதொருவித அசம்பாவிதமும் நடந்து விடாதபடி ஆண்டவன் காப்பாற்ற வேண்டும். பஹ்ரீகளுக்கும் புர்ஜீகளுக்கும் இருக்கிற புழுக்கம் நிறைந்த இச் சந்தர்ப்பத்தில், சுல்தானாவும், இளவரசரும், மற்றும் பிரதானிகளும் வெகு தந்திரமாக நடந்துகொண்டாலன்றி, விபரீதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடுமே என்று கவலுற்றார்.

அவர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கொண்டே எதிரே வருகிற இளவரசரை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வடகிழக்கு நோக்கி மெதுவாய்ச் சென்ற ருக்னுத்தீனுக்கும், தென்மேற்குத் திசை நோக்கி விரைவாய்ப் பறந்துவந்த தூரானஷாவின் பரிவாரங்களுக்கும் இடையே இருந்த தொலைவு விரைவாகக் குறைந்து கொண்டே வந்தது. சூரியனும் சிறிது சிறிதாக உச்சி நோக்கி மேலே ஊர்ந்துகொண்டிருந்தான்.

தூரான்ஷா ருக்னுத்தீனை நெருங்க நெருங்க, இவருக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொண்டது. எனினும், இவர் கொஞ்சமும் தளர்வுறாமல், தம் மனமெனுங் குரங்கை இழுத்துப் பிடித்துக் கொண்டார். நேற்றெல்லாம் போர்க்களத்தில் வீரச்செயல்கள் புரிந்த குதிரை இப்போது மிகவும் சோர்வுற்றுப் போய்த் தானே நின்றும் விட்டது. அபின் சாப்பிட்டவன் ஆகாயலோக சஞ்சாரம் செய்வதேபோல், ருக்னுத்தீன் தாம் பூமியில் குதிரை மீது ஆரோகித்திருப்பதும் வானத்தில் பறப்பதும் ஒன்றும் புரியாமல், அசைவற்று நின்றார். சுல்தான் காலஞ் சென்றதுமுதல் இந்த நிமிஷம் வரை சற்றுமே ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்த அவர், உறக்க மிகுதியால் செயலிழந்து காணப்பட்டார்.

இளவரசரோ, தம்மை இவ்வளவு அவசரமாக ஏன் அழைத்தனுப்பினார்கள் என்னும் செய்தியொன்றும் புரியாமல் திமஷ்கை விட்டுப் புறப்பட்டாரெனினும், புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் காஹிராவை நோக்கிக் கிறிஸ்தவர்கள் போரெழுந்து விட்டனரென்னும் செய்தியைக் கேள்விப்பட்டார். இச் செய்தி மட்டும் அவருக்கு முன்னரே தெரிந்திருக்குமாயின், முஹம்மத் ஷாவுக்காக ஆடிக்கொண்டிருந்த வேட்டையை அப்படியே நிறுத்திக்கொண்டு, பத்து நாட்களுக்கு முன்னரே புறப்பட்டிருப்பார்.

சுல்தான் ஸாலிஹ் உயிர்துறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னேயே ஷஜருத்துர் தூரான்ஷாவுக்கு ஆளனுப்பியுங்கூட, அந்த ஆள் திமஷ்குக்குப் போனபோது இளவரசர் ஷாம் தேசத்தின் வேறொரு மூலையில் பதுங்கிக் கிடந்த அந்தக் கயவனாகிய முஹம்மத் ஷாவைத் தேடித் திரிந்துகொண் டிருந்தார். மேலும், ஷஜருத்துர் ஆளனுப்பியபோது, அத் தூதனிடம் சில கடுமையான கட்டளைகளை இட்டனுப்பினார். அஃதாவது, அவன் இளவரசரை நேரில் சந்திக்கவேண்டுமென்றும், சந்தித்த பின்னர் வேறொன்றுங் கூறாமல், தந்தை ஸாலிஹும் சிற்றன்னை ஷஜருத்துர்ரும் அக்கணமே கையோடு கூப்பிட்டு வரச் சொன்னார்கள் என்று மட்டும் சொல்லவேண்டுமென்றும் சுல்தான் வியாதியுற்றிருப்பதாகவோ அல்லது சிலுவை யுத்தக்காரர்கள் காஹிராமீது படையயடுத்து வருவதாகவோ ஒன்றும் தெரிவிக்கக் கூடாதென்றும் அத் தூதனிடம் ஷஜருத்துர் முன்னம் சொல்லி அனுப்பினார்.

எனவே, அவன் தூரான்ஷாவை ஷாமில் தேடிப் பிடிக்கப் பத்துநாட்கள் ஆகிவிட்டபடியால், ஷஃபான் மாத இறுதி வாரம் வரையில் அந்த இளவரசருக்கு ஒன்றுமே தெரியாது. தூதனை அவர் சந்தித்த பின்னரும் அவன் சுல்தானா கட்டளையிட்டு அனுப்பிய விஷயமான, “அவசரமாகக் கூப்பிட்டு வரச் சொன்னார்கள்!” என்னும் செய்தியொன்றைத் தவிர்த்து வேறொன்றும் கூறவில்லை. உண்மையிலேயே இந்நேரம் சுல்தான் காலஞ் சென்று பத்துப் பதினைந்து நாட்களாகிவிட்டன என்பதை அத் தூதனேகூட அறியமாட்டான்.

தூரான்ஷா வேறொன்றையும் சிந்திக்காமல் அதே தூதனிடம், “இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்பதை எனக்கு முன்னால் நீயே போய்த் தெரிவி. நான் பின்னாலேயே வருகிறேன்!” என்று செய்தி சொல்லி அனுப்பிவிட்டு, ஷாம் சிற்றரசரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். முஹம்மத் ஷாவை இவர் கொன்று தீர்த்து விட்டபடியால், வேறு கவலை ஏதிமின்றிக் காஹிரா நோக்கிப் புறப்பட்டாரெனினும், தம்மை சுல்தான் “அவசரமாக” ஏன் கூப்பிட்டனுப்ப வேண்டும் என்னும் காரணம் விளங்காமல் அவர் வழி நடந்தார். அப்போது தான் அவருக்குப் பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன :-

தன் தந்தையை இங்கிருந்து அனுப்புவதற்காக அவர் திமஷ்குக்கு வந்த தினத்தில் அவருக்கும் சுல்தானுக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது. ஒருகால் இப்போது நசாராக்கள் தமீதாவிலிருந்து புறப்பட்டுக் காஹிரா நோக்கிப் படையெடுத்திருக்கக் கூடுமென்றும், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே தம்மை மிஸ்ரில் வைத்துக் கொள்ள விரும்பித் தந்தையும் ஷஜருத்துர்ரும் கூப்பிட்டனுப்பி இருப்பார்களென்றும் –என்னென்னவோ வெல்லாம் எண்ணியவராக வந்துகொண்டிருந்தார். ஆனால், அவர் திமஷ்க் எல்லையைத் தாண்டி வெகுதூரம் வரு முன்னரே மன்ஸூரா என்னும் களத்தில் சென்ற பத்து நாட்களாகப் போர் நடக்கிறது என்ற செய்தியை வழிப்போக்கர்கள் மூலம் தூரான்ஷா கேள்வியுற்றார். இது கேட்டதும், அவர் மனம் பெருஞ்சஞ்சலம் அடைந்துவிட்டது.

“சுல்தான்கள் ஷாமில் இருக்கிற நேரம் பார்த்து ஆண்டவன் ஐயூபிகளுக்குச் சோதனையை விடுகிறானே!” என்று முன்னம் தந்தையாரிடம் இளவரசர் கூறிய வார்த்தைகள் இப்போது கண்முன் வந்து நின்றன. ஸலாஹூத்தீனுக்கும், அவர் தம்பி ஆதிலுக்கும் ஷாமில் மரணம் சம்பவித்ததும், ஸாலிஹ் நஜ்முத்தீன் ஷாமில் இருக்கையில் கிறிஸ்தவர்கள் தமீதாவைக் கைப்பற்றியதும், இப்போது தூரான்ஷா இங்கே இருக்கும்போது காஹிராமீது கிறிஸ்தவர் படையெடுத்திருப்பதும் ஏதோ ஒருவிதக் குழப்பத்தை உண்டுபண்ணின. அன்றியும், அன்று தம் தந்தையிடம் கூறிய “என் மனம் எக் காரணத்தாலோ சாந்தியடையாமல் பதறிக்கொண்டிருக்கிறது,” என்னும் வார்த்தைகள் இப்போது புதுமாதிரியான சஞ்சலத்தைத் தாங்கிக்கொண்டு சட்டென்று அவருள்ளத்தை மோதின. இஸ்லாத்தின் கொள்கைப்படி சகுனம் பார்க்கக்கூடாதென்றாலும், அவருடைய இடது கண்ணும் இடது தோளும் ஓயாமல் துடித்துக்கொண்டிருந்தன. பண்டைக்கால எகிப்தியர்களின் மூடப்பழக்க வழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் இஸ்லாம் வந்த பின்னருங்கூட அறவே தொலையாமையால், தூரான்ஷா தம் அங்கத்தின் துடிப்புக்களுக்கு ஏதேதோ அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்தார்.

அவருக்கு இந்தப் பிரயாணம் மிகமிக நீளமாகவே காணப்பட்டது. கலகக்காரனைக் கொன்றுவிட்ட பெருமையைக்கூட அவர் மறந்துபோய், இனி என்ன பேராபத்து அல்லது பெருஞ்சங்கடம் விளையப் போகிறதோ? என்று ஏங்கிய வண்ணம் வழி நடந்தார். இப்படிப்பட்ட குழம்பிய உள்ளத்துடன் வேகமாய் வந்துகொண்டிருந்த இளவரசர் கண்ணுக் கெட்டிய தூரத்திலே தந் தந்தையாரின் குதிரை நிற்பதையும், அதன்மேல் ஒரு வீரன் அயர்ந்தாற்போல் வீற்றிருப்பதையும் பார்த்தார்.

அருகே நெருங்க நெருங்க, இக் குதிரைமேல் ஆரோகணித்திருப்பவர் சேனாதிபதி ஜாஹிர் ருக்னுத்தீன் என்பதையும், அவர் மெய் சோர்ந்துபோய் அமர்ந்திருக்கிறார் என்பதையும் தூரான்ஷா கண்டுகொண்டார். கண்விழித்தபடியே கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ருக்னுத்தீன் அகலக் கண் திறந்தார். இளவரசரின் பரிவாரங்கள் கூப்பிடு தூரத்திலே வருவதைக் கண்டு மனந் துடித்தார்.

நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு பிறக்கும் புதிய சிசுவை அதிக ஆவலுடன் கைந்நீட்டி ஏந்தும் தாதியேபோல். ஜாஹிர் ருக்னுத்தீன் தம்மிரு கரங்களையும் விரித்த வண்ணம் மெய் துவண்டு குனிந்தார். இளவரசரின் தோற்றத்தைக் கண்ட இக்குதிரையும் கனைத்துக்கொண்டே எதிர் நோக்கி ஆவலுடன் பாய்ந்தது!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 43>> <<அத்தியாயம் 45>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment