06 – தரம் நிரந்தரம்

by நூருத்தீன்

சுயபிம்பம் எனும் சமாச்சாரத்தைச் சென்ற வாரம் பார்த்தோம்.

அதன் விதி — சுயபிம்பம் “தரமானதாக” இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்த விதியும் ஒன்று உண்டு.

சுயபிம்பம் “உண்மையிலேயே” தரமானதாக இருக்க வேண்டும்.

என்ன வித்தியாசம்?

சகிக்கவே முடியாத கேரக்டர் உள்ள ஒருவர் — பொய், புரட்டுவாதம் எல்லாம் மனிதருக்குத் தண்ணீர்பட்ட பாடு. ஆனால் தம்மைப் பற்றி காந்தி, நேரு ரேஞ்சிற்கு மிக உசத்தியாக நினைத்துக் கொண்டு, காந்தி சொல் கேட்டுத் தண்டி யாத்திரைக்கு மக்கள் படை புறப்பட்டுச் சென்றது போல், தம் பேச்சிற்கு ஏற்பவும் மக்கள் ஆடவேண்டும் என்று நினைத்தால், அது அகங்காரம்! “தான்” எனும் அகங்காரம்! FM நேயர்களும் புரியும்படி சொல்வதென்றால் ஈகோ!

ஈகோ உள்ள நிறையப் பேரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஏனெனில் அரசியலில் இதெல்லாம் சகஜமாச்சே!

“தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்” போன்ற சில வார்த்தைகள் அகராதிகளில் உள்ளன. அவை நோய் ஆகும். ஆனால் விசித்திரமான நோய். அந்த நோய் யாரிடம் உள்ளதோ அவரைத் தவிர மற்றவர்கள் தான் அந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள். இந்த “ஈகோ”வாசிகளி்ன ஆசையெல்லாம் மிகவும் எளிதானது.

தாங்கள் மட்டுமே எப்பொழுதும் பேசப்படுபவர்களாக இருக்க வேண்டும்; தம்மைச் சுற்றி நாலுபேர் எதையாவது சொல்லிப் புகழாரமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; செய்தியில், மேடையில் தங்களுடைய பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!

அங்கீகாரத்திற்கு அவர்களின் மனம் ஆலாய்ப் பறக்கும்.

சக மனிதர்கள், அவர்களது நலன் எதுவும் அவர்களுக்கு பொருட்டே இல்லை. இவர்கள் தாம் மேற்சொன்ன இரண்டாவது விதியில் காலியாகிவிடுபவர்கள்!

அதில் பாஸ் ஆக வேண்டுமென்றால், சரியான “அகராதிப் பிடித்த” சொற்களான “தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்”, ஆகியனவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு, கவனமாகத் தூக்கிக் கடாசி விட்டால் போதும். ஆரோக்கியமான சுயபிம்பம் என்னவென்று தெரிந்துவிடும்!

அப்படி நீங்கள் தரமான சுயபிம்பவாதியாகப் பாஸானவுடன் “ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!” என்று கூவுகிறீர்களோ இல்லையோ, சில விஷயங்கள் உங்கள் வாழ்வில் நிகழும். கஷ்டப்பட்டு பாஸ் செய்துள்ளீர்கள் boss. எனவே எல்லாம் நல்ல விஷயம் தான்.

முதலாவது தடுக்கவே இயலாமல் ஆனந்தமான மனநிலை ஒன்று உருவாகி, வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வழிவகுக்கும்.

சாதனை என்றதும் நோபல், ஆஸ்கர், அல்லது நடிகருடன் உரசிக்கொண்டு எடுத்த போட்டோ போன்றவை அல்ல. நாலே முக்கால் நிமிடம் பாட்டுப் பாடினால் பெரிய கோடீஸ்வரனாக ஆகிவிடுவேனா என்று அபத்தமாகவும் கேட்கக்கூடாது.

தன்னலமற்ற எந்தச் சிறு உபகாரமும் கூட சாதனையே! ஏனெனில், சுத்தமற்ற மனங்கள் தன்னலத்தை விடுவதில்லை! தானமோ, தர்மமோ; உழைப்போ, உபகாரமோ; தரமான சுயபிம்பவாதி ஆனந்தமாய்ச் செயல்பட ஆரம்பித்திருப்பான். அந்த முயற்சிகளும் சாதனைகளும் பெருமையையும் மனநிறைவையும் அவனது மனதினுள் உண்டாக்கும்!

ஆயினும்………….

“இதெல்லாம் இருக்கட்டும். நான் ஒன்றும் உத்தமபுத்திரன் இல்லையே! என்னிடம் இன்னின்ன குறைகள் இல்லையா? வெளியில் பகிர்ந்துக் கொள்ளக்கூடியவையா அவை? அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்வோம்,” என்று அடிமனம் சுயவிமர்சனம் ஒன்று வைக்கும்.

மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் பொருந்தி, தரப் பரிசோதனையில் வென்ற மனதல்லவா? எனவே அது தனது சாதனையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாது! இயற்கையாய்க் கூடவே உருவாகியுள்ள தன்னடக்கம் காரணம்.

அடுத்தொன்று நிகழும்.

நம்மைப் பற்றி நமக்கே உருவாகும் நல்லபிமானம்! நம்மை நாமே உண்மையாய் மதித்துக் கொள்ளும் நல்லபிமானம். அதன் தொடர்ச்சியாய் நம்மோடு வாழும் மக்களிடமும் மதிப்பு செலுத்தத் தோன்றும். நாம் நம்மை எப்படி மதிப்போமோ அப்படி மற்றவர்களையும் மதிக்கத் தோன்றும்! தரமான சுயபிம்பத்தின் சரியானதொரு அடையாளம் இது.

இத்தகைய நல்ல சுயாபிமானம் ஏற்பட்டுவிட்டால், மற்றவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அனாவசிய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உற்சாகத்திற்கும் தேவையானதை செய்துகொள்ள மனம் வழிவகுக்கும். செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஆடை வாங்கலாம்! பிடித்தமான உணவு உண்ணலாம்! (அதற்கு முன் டாக்டரிடம் சென்று BP, சர்க்கரை, கொலஸ்ட்ரால் செக்-அப் செய்து கொள்வது உத்தமம்.) டி.வி. கனெகஷனைப் பிடிங்கிவிட்டு புத்தகம் வாசிக்கலாம்! பிடித்த ஊருக்குப் பிரயாணம் செல்லலாம்!

”சாத்தியமா அதெல்லாம்? சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு ஈகோவின் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. ஆனால், என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்; ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். ஆனால் கூடவே ஆரோக்கியமாய்க் குத்துக்கல்லாட்டம் என் மாமியாரும் உண்டு. நான் எப்படி பதில் சொல்லும் நிர்ப்பந்தம் இல்லாமல் என் இஷ்டத்திற்கு எதையும் செய்வது?” என்று மருமகள்கள் யாராவது பின்னூட்டம் இடலாம்.

அதற்கு மாமியார், மாட்டுப்பெண் உறவு குறித்த புத்தகங்கள் கிடைக்கின்றனவா என்று வாசகர்கள் தேடிப்பார்க்க வேண்டியது தான்.

இங்கு சொல்லவந்த செய்தி – தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடனான வாழ்க்கைக்குத் தேவையானதைத் தானாய்ச் செய்ய ஆரம்பித்துவிடும். அதுதான் சாராம்சம்.

மட்டுமல்லாது, அந்த மனிதனின் தரத்தை உலகம் தானாய் உணர ஆரம்பிக்கும். பாராட்டுதல்கள் வரும். தானாய் வரும்!

தன்னைப்பற்றித் தனக்கே நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தம்பட்டமும் ஜால்ராவும தேவைப்படுகின்றன. மனித இனமே தன்னைப் பார்த்து அங்கலாய்க்க வேண்டும் என்று விரும்புகிறான். இதுவோ சுத்தமான மனது. இதற்கெதற்கு பாராட்டும் சால்வையும்?

எனில், பாராட்டு தவறா?

ஜெஸ் லய்ர் (Jess Lair) என்றொரு உளவியலாளர். உளவியல் குறித்த புத்தகமெல்லாம் எழுதியுள்ளார். அதில், “பாராட்டு என்பது மனித ஆன்மாவிற்கு இதமான சூரிய ஒளி போலாகும். அது இல்லாமல் மனிதனால் வளரவோ, பூக்கவோ முடியாது. ஆனால் நாமோ பிறர் மீது குற்றம் குறை சொல்லிச் சொல்லியே, கடுமையான குளிர் காற்றை இறைத்து அவர்கள் வளராமல் உறையச் செய்கிறோம். நம்முடைய சக மனிதர்களுக்குத் தேவையான இதமான பாராட்டுதல்களை அளிக்க ஏதோவொரு விருப்பம் இல்லாமலேயே இருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

பாராட்டு தவறில்லை. அது நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒரு கோப்பை காபிக்குத் தேவையான சர்க்கரை போல் அளவுடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் தவறினால் அதன் பெயர் முகஸ்துதி! முகஸ்துதி தப்பு! தப்பு மட்டுமல்ல பாபமும் ஆகும்!

ஆகவே பாராட்டும் அந்தப் பாராட்டை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதும் தான் நல்லது. மன மகிழ்விற்குத் தேவையானது.

ஏதோ ஒரு நல்ல காரியம் செய்ததற்காக ஒருவர் உங்களுக்கு மனமார நன்றி உரைத்து, உங்களை அளவோடு நேர்மையாய்ப் பாராட்டினால், அதை நளினமாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பாராட்டு சரியான சமாச்சாரத்துக்கா, உண்மையா, முகஸ்துதியா என்பதை உணர்ந்தால் போதும். தீர்ந்தது விஷயம். அதை “நன்றி” சொல்லி ஏற்றுக்கொள்வதுதான் இருவருக்கும் நல்லது.

அதை விட்டுவிட்டு, உங்களிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி நினைத்துக் கொண்டு அதை ஏற்காமல் நிராகரிப்பது முறையில்லை. ஏனெனில் உலகில் குறையேயற்ற மனிதன் என்று யாரும் இருக்கிறார்களா என்ன?

உழைத்துப் படித்து தேர்வில் முதல் இடத்தில் வெற்றியடைந்த உங்களை ஒருவர் பாராட்டும்போது, “அப்படில்லாம் இல்லைங்க. குருட்டு அதிர்ஷ்டம். முதல் மார்க் கிடைத்து விட்டது” என்றுச் சொல்வீர்களோ? அப்படிச் சொன்னால், கேவலப்படுவது உங்கள் உழைப்பாயிற்றே? தவிர, மனதார பாராட்ட முனைந்த அவருக்கும் அதிர்ச்சி.

நீங்கள் குருவியாய்ச் சேகரித்து, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அழகாய் இருக்கிறதென்று மனமார ஒருவர் சொல்லும் போது, “என்னத்தை பெரிய வீடு கட்டிட்டேன்“, என்று சொல்வது முறையில்லையே!

உண்மையிலேயே அழகாய்த் திகழும் ஒரு பெண்ணிடம், “இந்த உடையும் உன் தோற்றமும் ஸூப்பர்; மெய்யாலுமே நீ ரொம்ப அழகா இருக்கே,” என்று தோழி மனதாரப் பாராட்டும் போது, கூச்சமாய் இருந்தாலும் மென்மையாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்வதே முறை. மாறாய், “அப்படியெல்லாம் இல்லை, என் உதடு கொஞ்சம் தடிப்பா இருக்கு. இடுப்பும் பாரேன் பெரிசு,” என்று பதில் அளித்தால் பாராட்டுபவருக்கு ஏற்படும் அதிருப்தி ஒருபுறமிருக்க அடுத்த முறை அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவரின் அத்தனை நிறைகளும் மறைந்து போய், அவரே எடுத்தியம்பிய குறைகள் தான் கண்ணில் பளிச்செனத் தென்படும்.

வேறு யாரிடமாவது அந்தப் பெண்ணை அடையாளம் சொல்ல வேண்டியிருந்தால், “அதாம்பா, உதடு கூட கொஞ்சம் தடிப்பா, இடுப்பு பெரிசா இருக்குமே. அவங்க தான்” என்று அடையாளம் சொல்லுமளவிற்கு ஆகிவிடும்.

பாராட்டுரை என்பது ஒரு அன்பளிப்பு, நன்கொடை. உங்களுக்கு வரும் அன்பளிப்பை அளிப்பவர் முகத்திலேயே நீங்கள் விட்டெறிவது எப்படித் தப்போ, அப்படித் தான் பாராட்டை நிராகரிப்பதும்.

எனவே நேர்மையான பாராட்டுதல்களை, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 16 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment