முகவுரை

தமிழ் நாட்டு நண்பீர்!

எம்மால் இதற்குமுன் வெளியிடப்பட்டு வந்த “ஜவாஹிருல் புர்க்கான்” என்னும் குர்ஆன் ஷரீபின் தமிழ் மொழிபெயர்ப்பும், அதன் விரிவான வியாக்யானமும் ஒருங்கே கூடியனவாய், நந்திருவேதத்தின் முப்பது பாகங்களுள் முதலிரண்டு பாகங்கள் முடியப் பிரசுரம் செய்யப்பட் டிருக்கின்றன. அவ் வேதத்தின் இறுதிப் பகுதியாகிய முப்பதாவது பாகம் – அம்மயத் என்னப்படுவதும் விரிவான வியாக்யானத்துடன் எம்மால் முன்னம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால், நந் தென்னாட்டு முஸ்லிம் பொதுமக்களின் ஊக்கக் குறைவாலும், இக்காலத்தில் எங்கும் பரந்து காணப்படும் வியாபார மந்தமென்னும் பொருளாதார நெருக்கடியாலும் அம் மொழிபெயர்ப்புவேலை, விரிவான வியாக்யானத்துடன் வெளியிடப்பட வேண்டுவது, இது பொழுது சிறிதே தடைபட்டு நிற்கவேண்டியதா யிருக்கிறது. ஆண்டவன் நாட்டம் நேரும்போது அவ்விரிவான வேலை மீட்டும் அவனுதவி கொண்டு எடுத்துக் கொள்ளப்படுமென்று எல்லார்க்கும் அறிவித்துக் கொள்ளுகின்றேம்.

ஆயின், அதற்கு முன்பே குர்ஆன் ஷரீபின் மூல சுலோகங்களுக்கு மட்டுமேனும் சரியான மொழிபெயர்ப்பை எழுதித் தையார் செய்துகொள்ளலா மென்னும் நல்லெண்ணத்துடனே இவ்வேலை தொடங்கப்பட் டிருக்கிறது. இதற்கு, “குர்ஆன்” தமிழ் மொழிபெயர்ப்பு என்று நாமமிடப்பட் டிருக்கிறது. எம்மால் கூடியவரை, எமதாபீஸ் மௌலவீ ஸாஹிபவர்களின் உதவி கொண்டு ஒழுங்கான தமிழில் சரியான மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருக்கிறது. மூல சுலோகங்களின் முழுத் தாத்பரியமும் நன்கு விளங்குவான் வேண்டி அவசியமான இடங்களில் இம்மாதிரியான ( ) பிறையடை யாளங்களுள் அத்தியாவசியப் பதங்கள் வருவித்துச் சேர்க்கப்பட் டிருக்கின்றன. இன்னமும் அவசியமான இடங்களில் அடிக் குறிப்புக்களாலும் விளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்வண்ணமாக மூல சுலோகங்களின் நேரான – சரியான – மொழிபெயர்ப்பை நந் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க முன்வருவார்க ளாயின், அவர்களது ஊக்கத்தை உறுதுணையாய்க் கொண்டு எம்மால் இம்மொழிபெயர்ப்பு வேலை மேலும் மேலும் நடைபெற்று வரக்கூடுமென்றே எண்ணுகின்றேம். பொதுமக்களும் பிரமுகர்களும் இத்தகைய மூல சுலோக மொழிபெயர்ப்பையேனும் முற்றிலும் ஆதரித்து எமக்கு வேண்டிய எல்லாவித உற்சாகத்தையும் ஊட்டிவைக்கக் கடவார்களாக! யாம் இம் மொழிபெயர்ப்பு வேலையை மேற்கொண்டு நடத்தலாம்; அதனை அச்சிட்டும் வெளிப்படுத்தலாம். ஆனால், பொதுமக்கள் தங்கள் இஸ்லாமிய வேதக்கருத்தை உணர்ந்துகொள்ள ஆவல் மிக்குள்ளவராய் இராமற் போய்விடுவார்களாயின், அப்பால் இத்தகைய சிரமசாத்தியமான வேலையால் யாருக்கென்ன நன்மை விளைதல் சாலும்?

ஆண்டவனுதவிகொண்டும் பொதுமக்களின் ஊக்கத்தைக்கொண்டும் இம் மூல சுலோக மொழிபெயர்ப்பு வேலை முப்பது பாகத்துக்கும் முடிவுபெற்றுவிடுமாயின், அதன்பின்பு விரிவான வியாக்யானத்தை எழுதி வெளியிடலாம்; அதுபோது அந்த அந்த மூலசுலோகத்துக்குமுரிய அரப் ஆயத்தையும் அச்சிட்டுச் சேர்க்கலாம். அவ்விருகாரியங்களும் எப்பொழுதும் எவராலும் செய்து முடிக்கப்படுதல் கூடும். ஆனால், மூலசுலோகங்களின் சரியான – நேரான – கருத்து வேற்றுமையற்ற – செந்தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்துமுடிப்பதே சிரமசாத்தியமான காரியமா யிருந்துவருதலினால், அவ்வேலையையே இப்பொழுது முதன்முதலில் முப்பது பாகங்களுக்கும் செய்துமுடிக்கத் துணிந்து நிற்கின்றேம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்!

அவ்வேகவல்லோனது கருணைகொண்டும், நம்நேயர்களின் ஆசீர்வாதத்தைக் கொண்டும் இம்மொழிபெயரப்புவேலை சீக்கிரம் வெளிவரக்கூடுமென்றே நம்பிக்கை வைக்கின்றேம். இம்முதல் வெளியீட்டில் குர்ஆன் ஷரீபின் முதல் மூன்று அத்தியாயங்கள் – அஃதாவது, மூன்றேமுக்கால் பாகங்கள் – மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுப் பெருமக்களின் போதிய ஆதரவிருக்குமாயின், ஏனைப்பகுதிகளும் இறைவனருளால் சமீபத்தில் வெளியாகலாம்.

வஸ்ஸலாம்.

தங்களூழியன் :
பா. தாவூத்ஷா.

சென்னை
9-4-1938

oOo

வாசிக்க/பதிவிறக்க க்ளிக் செய்யவும்

முன்னுரை
1:001 – 2:046
2:047 – 2:086
2:087 – 2:121
2:122 – 2:155
2:156 – 2:188
2:189 – 2:216
2:217 – 2:245
2:246 – 2:260
2:261 – 2:283
2:284 – 3:029
3:030 – 3:070
3:071 – 3:116
3:117 – 3:154
3:155 – 3:199


இந்த நூலின் ஸ்கேன் நகலை அளித்து உதவிய ‘பழங்காசு’ ப. சீனிவாசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


Related Articles

Leave a Comment