சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 16

16. நைசியா

துருக்கியின் புர்ஸா மாகாணத்தில் இஸ்னிக் (Lake İznik) என்றோர் ஏரி உள்ளது. சுமார் 32 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 80 மீட்டர் ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரி. அதன் பண்டைய கிரேக்கப் பெயர் அஸ்கேனியா. அந்த ஏரியின் கிழக்குக் கரையில்தான் நைசியா (Nicaea) நகரம் அமைந்துள்ளது. கான்ஸ்டன்டினோபிள் நகரிலிருந்து பாஸ்பரஸ் ஜலசந்தியைக் கடந்து ஆசியா மைனரில் கால் வைத்தால், அங்கிருந்து தெற்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது நைசியா. அதை நோக்கிக் கையைக்காட்டி ‘அந்நகரை மீட்டுத் தாருங்கள்’ என்று சிலுவைப் படையினரிடம் கூறினார் அலெக்ஸியஸ்.

அன்றிலிருந்து இருபதாண்டுகளுக்குமுன், கி.பி. 1077இல் சுல்தான் சுலைமான் தாம் கைப்பற்றிய பைஸாந்தியப் பகுதிகளில் ரோம ஸல்தனத்தை நிறுவினார்; அதன் தலைநகராக நைசியா நகரை அமைத்துக்கொண்டார் என்பதை எட்டாம் அத்தியாயத்தில் வாசித்தோம். அவரது மறைவிற்குப் பிறகுதான் கிலிஜ் அர்ஸலான் ரோம ஸல்தனத்தின் சுல்தான் ஆகியிருந்தார். சிலுவைப் படை வந்து சேர்ந்த காலத்தில் அவரே ரோம ஸல்தனத்தின் ஆட்சியாளராக இருந்தார்.

ஆசியா மைனரின் மேற்குப் பகுதியில் வலுவாகக் காலூன்றி ஆட்சியும் அமைத்துவிட்ட துருக்கியர்களால் கான்ஸ்டன்டினோபிள் நகருக்கு எப்பொழுதுமே பேராபத்து என்று உணர்ந்த பைஸாந்தியம், நைசியாவை மீட்டுவிடப் பலமுறை முயன்றது. ஆனால், அவை அத்தனையையும் துருக்கியர்கள் முறியடித்துவிட்டனர். இப்பொழுது பரங்கியர்களின் சிலுவைப் படை ஆக்ரோஷத்துடனும் வெறியுடனும் வந்து சேர்ந்ததும் பெரும் தெம்பு அடைந்த அலெக்ஸியஸ், பரங்கியர்களின் போர் வெறியைத் திறம்பட பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். நைசியா நகரின் வடக்கே ஒருநாள் பயணத் தொலைவில் தங்கிக்கொண்டு, ‘அதோ நைசியா செல்லும் பாதை. தேவைப்படும் உதவிப் படையையும் இராணுவ ஆலோசகர்களையும் உங்களுடன் அனுப்பி வைக்கிறேன். செல்லுங்கள். தாக்குங்கள். கைப்பற்றுங்கள்’ என்று சிலுவையால் ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார்.

கி.பி. 1097, மே மாதம் 6ஆம் நாள் நைசியா நகரின் எல்லையை அந்தப் படை வந்து அடைந்தது. ஏறிட்டுத் திகைத்து நின்றது! அந் நகரம் வலுவான பாதுகாப்பு அரணுடன் கம்பீரமாய் நின்றிருந்தது. அதன் கோட்டைச் சுவர் முப்பது அடி உயரத்தில் மூன்று மைல் சுற்றளவிற்கு நீண்டிருந்தது. அச் சுவரின் மேல் நூற்றுக்கணக்கில் கோபுர அரண்கள். படு வலுவான அச் சுவர்களைத் தாக்கி உடைப்பதோ, நொறுக்கித் தள்ளி உள்ளே நுழைவதோ இலேசுப்பட்ட காரியமில்லை என்பது சிலுவைப் படையினருக்குப் புரிந்துவிட்டது. அதனால் முதல் கட்டமாக அந் நகரை முற்றுகை இட்டார்கள்.

நகரின் தெற்கு, கிழக்கு, வடக்கு – முப்புறத்தையும் சுற்றி அமைந்திருந்த வலுவான அரணைச் சிலுவைப் படையினர் சுற்றிவளைத்து முற்றுகை இட்டுவிட்டாலும் அவர்களுக்குப் பெரும் தலைவலி அளித்த விஷயம் ஒன்று இருந்தது. அஸ்கேனியா ஏரி. நைசியாவின் மேற்குப் பகுதி அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்ததால், துருக்கிப் படையினருக்குத் தேவையான உணவு, ஆயுதங்கள், உதவிப்படைகள் அனைத்தும் தடையின்றி வந்து சேரும் நுழைவாயிலாகவும் இயற்கை அரணாகவும் இருந்தது அஸ்கேனியா. எனவே, சிலுவைப் படை விரும்பிய அளவிற்கு அந்த முற்றுகை துருக்கியர்களுக்கு நெருக்கடியையும் அளிக்கவில்லை; அவர்கள் துவளவுமில்லை. ஏறக்குறைய தோல்வியைச் சந்திக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது சிலுவைப்படை.

இதற்கிடையே, சில சில்லரைத் தகராறுகளுக்காக நைசியாவை விட்டுத் தொலைவாய் கிழக்கே சென்றிருந்த கிலிஜ் அர்ஸலானுக்கு விரிவான தகவல் போய்ச் சேர்ந்ததும், ‘ஆஹா! பேராபத்து!’ என்று அப்பொழுதுதான் சிலுவைப் படையின் வீரியத்தையும் வந்திருக்கும் சோதனையின் தாக்கத்தையும் புரிந்துகொண்டார் அவர். வேகவேகமாக நைசியாவுக்குத் திரும்பினார்.

முற்றுகையிட்டிருக்கும் சிலுவைப் படையைத் திடுமெனத் தாக்கும் பிரமாதமான திட்டமொன்று உருவானது. நைசியா நகரின் தெற்கே, அடர்த்தியான மரங்களுடன் செங்குத்தான மலைகள் அமைந்திருந்தன. அவற்றின் மேலிருந்து, முஸ்லிம் படைகள் சரசரவெனக் கீழிறங்கி, எதிரிகள்மீது எதிர்பாராத தாக்குதல் தொடுத்தால், அது சிலுவைப் படையினரை வெகு நிச்சயமாக நிலைகுலையச் செய்யும். அதன்பின் அவர்களை எளிதில் வென்றுவிட முடியும் என்பது கிலிஜ் அர்ஸலானின் திட்டம். அது முஸ்லிம்களுக்கு வெற்றியை அளிக்கும் சாத்தியம் கொண்ட பிரமாதமான திட்டம்தான். ஆனால் –

வாய்ப்புக்கேடாக, முஸ்லிம்களின் உளவாளி ஒருவன் சிலுவைப் படையினரிடம் அகப்பட்டுவிட்டான். அவனை அவர்கள் அடைத்துப்போட்டு, அளித்த சித்திரவதையில் முஸ்லிம்களின் போர்த் திட்டத்தைக் கக்கிவிட்டான், ‘அப்படியா சேதி?’ என எச்சரிக்கை அடைந்த சிலுவைப் படை, அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாட்டுடன் தயாராகிவிட்டது. இவ் விஷயத்தை அறியாத கிலிஜ் அர்ஸலான் தம் படையினருடன் எதிரிகள் எதிர்பாராத தாக்குதல் தொடுக்க மலையிலிருந்து பாய்ந்து வந்தால், அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தயாராக நின்றிருந்தது சிலுவைப் படை. பெரும் எண்ணிக்கையுடன் திரண்டிருந்த அவர்கள் கிலிஜ் அர்ஸலானின் படையினருடன் மோத, கிலிஜ் அர்ஸலான் பின் வாங்கும்படி ஆகிவிட்டது.

பெரும் பாதிப்போ, அதிகமான உயிரிழப்போ இன்றி அவரும் படையினரும் தப்பி விட்டாலும் அவருடைய படையினர் மத்தியில் உளரீதியாக அது தளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதை மிகச் சரியாக யூகித்துவிட்டது சிலுவைப் படை, முஸ்லிம்களின் மனத்தில் அதிகப்படியான கிலேசத்தை ஏற்படுத்த வேண்டும்; விரக்தியைத் தோற்றுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அடுத்து ஒரு காரியம் செய்தனர். இறந்து கிடந்த முஸ்லிம் வீரர்களின் சடலங்களிலிருந்து அவர்களுடைய தலைகளைக் கொய்து, ஈட்டிகளில் செருகி, கோட்டை வாயிலில் ஊர்வலம் நடத்தினர். சில தலைகள் கோட்டைக்குள்ளும் வீசி எறியப்பட்டன.

ஆனால், அதற்கு அடுத்த சில வாரங்களில் முஸ்லிம் படையினர் எதிர்வினை புரிந்தனர். முஸ்லிம்களுடனான சிறுசிறு கைகலப்பில் கொல்லப்பட்ட சிலுவைப் படையினரின் சடலங்கள் கோட்டைச் சுவர் அருகில் கிடந்தன. நீளமான கயிற்றில் இரும்புக் கொக்கிகளைக் கட்டி, கோட்டையின் மேலிருந்து இறக்கி, கொக்கியால் அவற்றைத் தூக்கி, அப்படியே சுவரில் தொங்கவிட்டார்கள். அச்சடலங்கள் அந் நிலையிலேயே அழுகி, பறவைகளுக்கும் பருந்துகளுக்கும் இரையாகின.

கிலிஜ் அர்ஸலானின் தாக்குதலை முறியடித்துவிட்டாலும் நைசியாவின் தற்காப்பைச் சிலுவைப் படையினரின் முற்றுகை ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. ஏரியின் வாயிலாக வெளி உலகுடன் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை முஸ்லிம்கள் பெற்று வந்ததால் அதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் தவித்தனர். எனவே ஏதாவது செய்து கோட்டை அரணைப் பலவீனப்படுத்த வேண்டும், அதன் தற்காப்பை முறியடிக்க வேண்டும், வெறுமே முற்றுகையுடன் நின்றிருந்தால் ஏதும் பெரிய பலன் ஏற்பட்டுவிடாது என்று முடிவெடுத்து, தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தனர்.

முதல் முயற்சியாக ஏணிகள் அமைத்து, ஏறிப் பாய்ந்து, திடீரென்று நகருக்குள் புயலாய்ப் புகுந்துவிடலாம் என்று திட்டமிட்டு முயற்சி செய்து பார்த்தார்கள். அது சரிவரவில்லை. துருக்கியர்கள் அதை எளிதாய் முறியடித்தனர். அடுத்ததாய்க் கவண் அமைத்துக் கோட்டைச் சுவர்களைப் பாறாங்கற்களைக் கொண்டு தாக்கிச் சேதப்படுத்தும் முயற்சி நடந்தது. அதுவும் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. தாக்கும் கற்களைத் தட்டிவிட்டு, பலமாய் நின்றுகொண்டிருந்தது கோட்டைச் சுவர்.

அடுத்தத் திட்டம் உருவாயிற்று. கோட்டையின் மேலே உள்ள முஸ்லிம் வீரர்கள்மீது கவண் கொண்டு கல்லால் தாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் தற்காப்பு மும்முரத்தில் இருக்கும்போது, படையிலிருந்து சிலரைச் சுவரின் அடிப்பகுதிகளுக்கு அனுப்பி, அதைச் சேதப்படுத்த வேண்டும். இது நல்ல யோசனை என்று முடிவெடுத்து, பரங்கியர் அதைச் செயல்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் சுவரை நெருங்க வருபவர்களை, கோட்டையின் மேலிருந்த முஸ்லிம் படை தொடர்ந்து அம்பு வீசித் தாக்கியது. அப்படியும் சமாளித்து அவர்கள் அடிப்பகுதி வரை நெருங்கி விட்டால் அவர்கள்மீது கொதிக்கும் தாரும் எண்ணெயும் கொட்டப்பட்டன. எதிரிகள் கருகினார்கள்.

அந்தத் தாக்குதலைச் சமாளிக்கவும் முஸ்லிம்கள்மீது தாக்குதல் தொடுக்கவும் கருவாலி மரங்களால் ஆன பொறி ஒன்றைச் சிலுவைப் படை தயார் செய்தது. ஆனால் அது நொறுங்கி விழுந்து அந்த விபத்தில் இருபதுபேர் வரை இறந்ததுதான் மிச்சம்.

எப்படியும் சில குழுக்களைக் கோட்டையின் அடிப்பகுதிக்கு அனுப்பியே தீரவேண்டும் என்று மும்முரமாய் யோசித்து, எண்ணெய், தார் ஊடுருவாத சாய்வான வலுவான தற்காப்புக் கூரை ஒன்றை உருவாக்கினார்கள். சிறு சிறு குழுக்களாகச் சிலுவைப் படையினர் அதைத் தலைக்குமேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டனர். மேலிருந்து முஸ்லிம்கள் தொடுத்த தாக்குதலைச் சமாளித்தபடி, இம்முறை அக் குழுக்கள் சுவரின் அடிப்பகுதியை எட்டிவிட்டன. அடுத்து, கிடுகிடுவென்று ஆயுதங்களால் சுவரை நோண்டி, பெயர்த்து, பெரும் பெரும் துளைகளை ஏற்படுத்தி, அவற்றில் கட்டைகளைச் செருகி நிரப்பி, தீயிட்டனர். அந்தளவு சிரமப்பட்டு சாதித்த அந்தக் காரியம் அம் மாபெரும் அரணின் வெகு சிறுபகுதிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியதே தவிர, சிலுவைப் படை எதிர்பார்த்த அளவிற்குப் பெரும் திருப்பம் எதுவும் நிகழவில்லை. அப்படிப் பாதிப்பு அடைந்த அந்தப் பகுதியையும்கூட முஸ்லிம் படையினர் இரவோடு இரவாகச் செப்பனிட்டு விட்டனர்.

இப்படியே மே மாதம் கழிந்து, ஜுன் மாதமும் பிறந்துவிட்டது. ஆயினும் சிலுவைப் படையினரின் முற்றுகையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தொலைவே பாடிவீட்டில் தங்கியிருந்த அலெக்ஸியஸுக்கு இச் செய்திகள் அனைத்தும் வந்து கொண்டிருந்தன. இந்த இக்கட்டைச் சமாளிக்க ஏதாவது செய்து உதவுங்கள் என்று சிலுவைப் படைத் தலைவர்களிடமிருந்து அவருக்குத் தகவல் மேல் தகவல் வந்தது. அதுவரை சிறிய அளவில் மட்டுமே உதவிப்படையையும் இராணுவ ஆலோசகர்களையும் அனுப்பிக்கொண்டிருந்த அலெக்ஸியஸுக்கு இப்பொழுது ஏதாவது பெரிய அளவில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அலெக்ஸியஸின் இராணுவத் தளபதிகளுள் முக்கியமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் டெடிசியஸ் (Taticius). அரபு பாதி, கிரேக்கம் பாதி சேர்ந்து உருவான கலவை அவர். அவருடைய பெற்றோருள் ஒருவர் அரபியர், மற்றவர் கிரேக்கர். அவ்விருவருக்கும் பிறந்த டெடிசியஸ் ஓர் அலி. எதற்குமே கவலைப்படாத இயல்பும் ஆளுமையும் டெடிசியஸுக்கு அமைந்திருந்தன. அவர் சக்ரவர்த்தியின் அப்பட்டமான விசுவாசி.

தீர்வற்ற கடுமையான நிலையை முற்றுகை எட்டியதும் தம் தளபதி டெடிசியஸையும் கிரேக்கக் கப்பல்கள் சிலவற்றையும் அலெக்ஸியஸ் நைசியாவுக்கு அனுப்பினார். கப்பல்களெல்லாம் சரக்கைப்போல் கட்டப்பட்டுத் தரைமார்க்கமாக, பத்திரமாக ஏரிக்குக் கொண்டுவரப்பட்டன, நைசியா நகரின் எதிர்க்கரையில் அவை இறக்கப்பட்டன. கப்பல் படை தயாரானது.

கி.பி. 1097, ஜுன் மாதம் 18ஆம் நாள். பொழுது புலரும் நேரம். பேரொலியுடன் எக்காளங்கள் முழங்க, முரசுகள் அதிர, நைசியாவின் மேற்குப்புற எல்லையை நோக்கி வேகமாக மிதந்து வந்தது அந்தக் கப்பல் படை. சரியாக அதே நேரத்தில், நிலப்பரப்பில் சுற்றி வளைத்திருந்த சிலுவைப் படை தன் தாக்குதலைத் தொடங்க, நாலாபுறமும் வகையாகச் சுற்றி வளைக்கப்பட்டது நைசியா. அதன்பின் சில மணி நேரங்களில் அந் நகரைச் சிலுவைப் படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது. முதலாம் சிலுவைப் போரில் சிலுவைப் படை ஈட்டிய முதல் வெற்றி அது. சந்தேகமே இன்றி, கிரேக்க-பரங்கியர்களின் கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றி. அடுத்து வெகு துரிதமாக டெடிசியஸ் அந்நகரை பைஸாந்தியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

போரில் வெற்றியை ஈட்டும் படையினர் கைப்பற்றிய நகரினுள் புகுந்து கைப்பற்றும் பொருள், செல்வம்தாம் அவர்களின் போர் வெகுமதி. அப்படியான செல்வத்தையும் மனத்தில் வைத்துத்தான் ஐரோப்பியர்கள் பலர் சிலுவைப் படையில் இணைந்திருந்தனர். ஆனால் நைசியா நகரம் உடனே பைஸாந்தியர்களிடம் சென்றுவிட்டதால், சூறையாடும் வாய்ப்பும் போதுமான செல்வமும் பொருள்களும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற பெரும் ஏமாற்றத்தால் சிலுவைப் படையினர் மத்தியில் அதிருப்தியும் முணுமுணுப்பும் எழுந்தன. ஆனால், நைசியா கிடைத்த மிகழ்ச்சியில் வெகு தாராளமாய்ப் பணத்தை வாரி அள்ளி இறைத்து, அவர்கள் அனைவரையும் அப்படியே சாந்தப்படுத்திவிட்டார் அலெக்ஸியஸ்.

அடுத்து என்ன என்று சக்ரவர்த்தி அலெக்ஸியஸ் சிலுவைப் படைத் தலைவர்களுடன் அலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தாக்கியா நகரம் அடுத்த இலக்காகத் தீர்மானிக்கப்பட்டது. பண்டைய சிரியாவின் வெகு முக்கிய நகரம். பைஸாந்தியத்திற்கு நெருக்கமாய் அமைந்திருந்த பகுதியைத்தாண்டி, முஸ்லிம் சுல்தான்களின் பகுதிகளுக்குள் நுழைந்து அந்த முக்கிய நகரைக் கைப்பற்றுவது என்பது சாமான்ய காரியமில்லை என்பதை அறிந்திருந்த அலக்ஸியஸ் முக்கியமான யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

அது?

ஆட்சி-அதிகாரம், கருத்து வேற்றுமை என்று முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஸெல்ஜுக் சுல்தான்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஷீஆ, ஸன்னி எனும் பெரும் பிளவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற யோசனை!

அதை, சாதிப்பது எப்படி?

எகிப்தில் ஆட்சி அமைந்துள்ளதே ஷீஆக்களின் ஃபாத்திமீ கிலாஃபா எனப்படும் உபைதி வம்சம், அவர்களிடம் அனுப்பு தூதர்களை! ஏற்படுத்து அவர்களுடன் கூட்டு உடன்படிக்கை!

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment