“தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத்ஷா சுருக்கமாக வரைந்திருந்த தமது வாழ்க்கைக் குறிப்பு.
கி.பி. 1885-இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங் கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே நான் பிறந்தேன். என் 18-ஆவது வயதிலே மெட்ரிகுலேசன் பரிட்சைக்கு போகும் தறுவாயில் என் தந்தையை இழந்தேன்.
1908-ஆவது ஆண்டில் சென்னையில் மணம் புரிந்து கொண்டு, எப்.ஏ. பீ.ஏ. பரிட்சைகளில் தேறினேன். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் முதல்வனாய்த் தேறித் தங்கப் பதக்கமும் பரிசு பெற்றேன். நான் பீ.ஏ. பரீட்சையில் 1912-இல் தேறிச் சின்னாட்கட்குள்ளே என் மதறாஸ் மனைவியை இழந்தேன்.
அப்பால் அவ்வாண்டு ஜூலையில் தென்னார்க்காடு ஜில்லா கலெக்டர் ஆபீசில் மாத நிவேதனம் ரூ.25-இல் ஒரு சாதாரண குமாஸ்தாவகச் சேர்ந்தேன்.
கலெக்டர் உத்தியோகத்துக்குத் தேவையாயிருந்த இலாகா சட்டப் பரீட்சைகளிலெல்லாம் தேறி, 1917-இல் சப் மாஜிஸ்திரேட்டாக உயர்ந்தேன்.
இடையில் 1915-இல், சென்ற மாதம் (1956) இறைவனடி சேரந்துவிட்ட மைமூன் பீவியை – இவருக்கு அது காலை வயது 14 – மறுமணம் புரிந்து கொண்டேன்.
ஒன்பது ஆண்டுகள் வரை யான் சர்க்கார் உத்தியோகம் மிக நல்லமுறையில் வகித்தேன்.
1921-இல் யான் விழுப்புரத்தில் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்த என் அரசாங்க அலுவலை, கிலாபத் இயக்க காரணத்தாலும், இஷா அத்துல் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளிவிட்டு வெளி்யேறினேன். அப்பொழுது என் பெயர் டெபுட்டி கலெக்டர் உத்தியோகத்துக்கு உயர்த்தப்பட வேண்டிய ஜாப்தாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், என் மனைவி 18 வயதே அடைந்திருந்த அப்பெண்மணி – தன் கணவர் சில்லாண்டுகளில் கலெக்டர் பதவியை அடையக் கூடுமெனப் பெருமையடைந்து நின்ற அந் நங்கையர்க்கரசி, எதிர் வார்த்தையொன்றும் பேசாது, இஷாஅத்துல் இஸ்லாத்தில் கொண்டிருந்த இறைவன் பக்தியால் என்னுடன் முற்றும் ஒத்துழைக்கலாயினர்.
அப்பால் என் லண்டன் பிரயாணம் நிச்சயமாயிற்று. 1922 பிப்ரவரியில் யான் நாச்சியார்கோவிலை விட்டுப் புறப்பட்டேன். அதுபொழுது என் இளைய மைந்தன் நசீர் அகமது பிறந்து 28 நாட்களே; என் மனைவி புனிறும் நீங்காது பிரசவ அறையிலே இருந்துவந்தார். என் முதல் மைந்தன் – இரண்டரை வயதே அடைந்திருந்த அப்துல் ஜப்பார் – மிகமிகக் கடுமையான டபுள் நிமோனியா ஜுரத்தால் பிராணாவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவசர நிலையிலே யான் என் மனைவி மக்களை விட்டு, அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டுப் புறப்பட்டேன்.
ஓக்கிங்குக்கு, அஃதாவது வெண்ணிற அப்சரஸ்கள் வதியும் இங்கிலாந்துக்கு, யான் சென்றுவிட்டால், என்னரும் இந்திய மனைவியை மறந்து, இல்லை, துறந்துவிட்டு, வெள்ளை மனைவியொருத்தியை மணந்துகொண்டுவிடுவேன் என்று என் மனைவியை அச்சுறுத்தினர், ஒரு சிலர்; ஆனால், என் பாரியாள் சிறிதும் பயப்படாமல் என்னுடன் ஒத்துழைத்து, என்னைப் பயணப்படுத்தி அனுப்பி வைத்தார்.
ஓக்கிங்கில் காஜா கமாலுதீன் கீழிருந்து இஸ்லாமிய பிரசார வேலையைக் கற்றுக்கொண்டதுடன், ‘இஸ்லாமிக் ரெவியூ’வெனும் உலகப் புகழ்பெற்ற மாசிகையின் துணையாசிரியராகவும் இருந்துவிட்டுத் திரும்பினேன். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் காஜா சாகிபுடன் சென்று அங்கே நிருமிக்க வேண்டியிருந்த மஸ்ஜிதுக்குரிய மனையையும் வாங்கிவிட்டு இந்தியா திரும்பினேன்.
1923 மே மாத முதல் இன்று வரை யான் இச்சென்னையம் பதியில் தங்கி தாருல் இஸ்லாத்தை மிமிக வெற்றியுடனே நடாத்தி வருகிறேன்.
ஒரே இஸ்லாம், பகுத்தறிவுக்குப் பொருத்தமுள்ள இஸ்லாம், சர்வ தாராளமான இஸ்லாம், அபிவிருத்தியடைந்துவரும் இஸ்லாம், உயிருள்ள இஸ்லாம், உயர்வுள்ள இஸ்லாம் என்னும் கொள்கையை அடிப்படையாக்கொண்டே நுங்கள் தா.இ. இன்றும் நடைபெற்று வருகிறது.
இஃதொரு சீரிய செந்தமிழ் முஸ்லிம் மாசிகை. விகட சஞ்சிகையன்று; வேடிக்கைக் கதைப் பத்திரிகை அன்று. இப்படிப்பட்ட பொழுது போக்குக்குரிய வீண்விளையாட்டுச் சஞ்சிகைகளை விரும்பும் வாலிபர்கட்கு இதோபதேசம் புரியும் இஸ்லாமிய உயர்தரச் செந்தமிழ்ச் சஞ்சிகை வேம்பே போல் கசப்பது மெய்தான்.
”இனியவர் என் சொலினும் இன்சொல்லே இன்னார், கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்து, வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும் மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்தும் கொலும்”. மூத்தோர் சொல்லும், முதிர்ந்த நெல்லிக்காயும் முன்னே துவர்க்கும்; பின்னே இனிக்கும் என்பது என் மாதா கூறும் பழமொழி.
பொதுப்படையாய் நோக்குமிடத்து, இற்றை நாள் யுவர்களும் யுவதிகளும் கடவுள் நெறியைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்னுமாறு உலகாயத வாழ்க்கையிலேயே உல்லாசமாய்ப் பொழுது போக்க விழைகிறார்கள்.
முஸ்லிம் வாலிபர்கள் இஸ்லாத்தை – அதிலும் உண்மை இஸ்லாத்தை ஓர்ந்து நடப்பதை விட்டு, தா.இ., ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போல இல்லையே என்கின்றனர். அந்தோ!
நுங்கள் தா.இ. பததிரிகை சென்ற ஒன்றரைத் தலைமுறையாக இத்தமிழ்நாட்டில் எத்துணைப் பெரிய பொருளாதார நெருக்கடியுடனே நடைபெற்று வந்துள்ளது என்பதை உள்ளுணர்ந்தவர்கள் நன்கறிவார்கள். இதனைத் தூக்கிப் பிடிக்க என் மனைவி மைமூனும், என் மகன் அப்துல் ஜப்பாரும் எத்துணைத் தியாகம் புரிந்துள்ளார்கள் என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
எனது உழைப்பிலும், கஷ்ட நஷ்டங்களிலும் அவர்கள் பங்கெடுத்து, மன மகிழ்ச்சியுடனே ஒத்துழைத்துள்ளார்கள். என்னுடன் உத்தியோகம் ஏற்றவர்களுள் பலர் கலெக்டர்களாவும் மற்றும் பலர் டெபுட்டி கலெக்டர்களாகவும் வேலை பார்த்து, இப்பால் ஓய்வெடுத்து உபகாரச் சம்பளம் பெற்று உல்லாசமாக வாழ்கிறார்கள்.
அப்துல் ஜப்பாருடன் சர்க்கார் அலுவலில் ஈடுபட்ட சகபாடிகள் அனேகர் இதுகாலை மாதச் சம்பளம் ரூ.500 அல்லது 600 பெறுகிறார்கள் எனின், எங்கள் பல்லாண்டுகளின் சமூக சேவையால், இறைவன் பாதையில் உழைத்து வருவதன் பயனாக. நாங்கள் நிலபுலங்களோ, வீடு வாசல்களோ வாங்கிவிடவில்லை.
எத்தனை யெத்தனை சிங்கை மான நஷ்ட தாவா! எத்தனை யெத்தனை ஹிபாஜத்துல் இஸ்லாம் எதிர்ப்பு! எத்தனை யெத்தனை மன்னார்குடி கிரிமினல் கேஸ்கள்! இவற்றினையெல்லாம் சமாளித்துத் தாண்டியே வெற்றியுடன் நுங்கள் தா.இ. தன் 38-வது வயதை இதுகாலை எட்டியிருக்கிறது.
-பா. தாவூத்ஷா