சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 87

by நூருத்தீன்

87. தல் சுல்தான் போர்

ஹமா கொம்புப் போர் வெற்றிக்குப் பிறகு 1175 மே மாதம் டமாஸ்கஸ் திரும்பிய ஸலாஹுத்தீனுக்கு நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த நேர அவகாசம் கிடைத்தது. அவர் வசமாகியிருந்த பகுதிகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். டமாஸ்கஸுக்கு தகீயுத்தீன்; ஹும்ஸுக்கு நாஸிருத்தீன்; ஹமாவுக்கு ஸலாஹுத்தீனின் மாமன் ஒருவர் எனப் பொறுப்பேற்றார்கள். முக்கியமான பகுதியான பால்பெக்கின் தலைமை இப்னுல் முகத்தமுக்கு வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டு டமாஸ்கஸ் கோட்டையை அவர் ஸலாஹுத்தீனிடம் ஒப்படைத்தபோது அவருக்கு முக்கியமான உயர் பதவி அளிக்கப்படும் என்று வாக்களித்திருந்தார் ஸலாஹுத்தீன். அது நிறைவேற்றப்பட்டது.

காழீ அல்-ஃபாதில் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நம்பகமான, வலிமையான, விசுவாசமான ஒருவர் அங்கு தேவைப்பட்டதால் அவர் அங்குச் சென்றுவிட, டமாஸ்கஸில் தமக்கு இணக்கமான இமாதுத்தீன் அல்-இஸ்ஃபஹானியைப் பணியில் அமர்த்திக்கொண்டார் ஸலாஹுத்தீன். நூருத்தீனிடம் காரியதரிசியாக இருந்த இமாதுத்தீன், ஸலாஹுத்தீனிடம் செலுத்திய தாக்கம், அவரது இலக்கியப் பணிகள் போன்றவற்றைத் தனிக் குறிப்பாகப் பின்னர் பார்ப்போம்.

அலெப்போ-மோஸுல் கூட்டணியை எதிர்க்க, ஸலாஹுத்தீன் உதவிப் படை வேண்டி எகிப்துக்குத் தகவல் அனுப்பிய அதே நேரத்தில் அவர் மற்றொரு காரியமும் செய்திருந்தார். அது ஜெருசலத்துடன் தற்காலிக சமாதான ஒப்பந்தம். அதற்கான விலையாகப் பரங்கிய கைதிகளையும் அவர் விடுவிக்க நேர்ந்தது. சங்கடமான போர் சூழ்நிலையில் ஒரே நேரத்தில் இரு தரப்பு எதிரிகளுடன் போரிடுவதைத் தவிர்க்க அதை அவர் ராஜதந்திர நடவடிக்கையாக மேற்கொண்டிருந்த போதினும் அவருடைய உள்மனம் மட்டும் அதில் சமாதானமடையவில்லை. பிற்காலத்தில் அதை கண்டனத்திற்குரிய செயல் என்று தமக்குத் தாமே அவர் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு அது அவரை வருத்தியது.

அதே சமயம் ஜெருசலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்த திரிப்போலியின் ரேமண்ட்டுக்கும் சமாதானத்திற்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. காரணங்கள் இருந்தன. ஜெருசலத்தின் இளவயது புதிய ராஜா நான்காம் பால்ட்வினின் தொழுநோய் முற்றியபடி இருந்தது. அவருடைய வாரிசாகப் புதிய ராஜாவைத் தேர்ந்தெடுத்து ஆளாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள் பரங்கியர்கள்.

நான்காம் பால்ட்வினின் சகோதரி சிபில்லாவுக்கு(Sibylla)ப் பொருத்தமான மணமகனைத் தேடிப்பிடிக்க வேண்டும்; திருமணம் செய்து வைக்க வேண்டும்; அந்தக் கணவரை அரசாள தயார்படுத்தி கிரீடத்தை அவரது தலையில் ஏற்றி வைக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். அதற்கெல்லாம் அவர்களுக்கும் அவகாசம் தேவைப்பட்டது. எனவே ஜெருசலமும் மனமுவந்து ஸலாஹுத்தீனிடம் சமாதானத்திற்குக் கை நீட்டியது.

அவை அப்படியிருப்பினும் ஸலாஹுத்தீன் உளம் வருந்தியதைவிட, பரங்கியர்கள் பலர் ஆத்திரத்தில் கொதித்ததே அதிகம். காரணம், ஜெருசலத்தின் அந்த இணக்கம் ஸலாஹுத்தீனுக்கு அள்ளி வழங்கிய அனுகூலம். டைரின் வில்லியம் அதை அழுத்தந்திருத்தமாக எழுதியுள்ளார். அதன் சாரம்சம்:

‘(அந்தப் போர் நிறுத்த) சமாதான ஒப்பந்தம் நமது நலன்களுக்கு எதிரானது. அந்த மனிதர் உறுதியாக எதிர்க்கப்பட்டிருக்க வேண்டியவர். அவர் வலிமை பெற்று, இன்னும் அதிக அகம்பாவத்துடன் நம்மை எதிர்த்துச் செயல்படுவதைத் தடுக்க இந்த உடன்படிக்கை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நமது ஆதரவு அவருக்குக் கிடைத்துவிட்டது. அவர் நம் மீது நம்பிக்கை வைத்திருந்த போதும், நாளுக்குநாள் நமக்கு எதிராகத்தான் தம் வலிமையைப் பெருக்கிக்கொண்டிருந்தார்.’

அவர் தரப்பு வருத்தம் உண்மையே! ஹமா கொம்புப் போரின் வெற்றியை அடுத்து ஸலாஹுத்தீனின் பலம் சிரியாவில் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு உறுதுணையாக மற்றொரு போரையும் நிகழ்த்தினார் ஸைஃபுத்தீன். அது என்னவென்று பார்க்க மீண்டும் மோஸுலுக்குச் செல்வோம்.

oOo

ஹமா கொம்புப் போர் நிகழ்ந்த நேரத்தில் ஸைஃபுத்தீன் ஸின்ஜாரில் தம் சகோதரர் இமாதுத்தீனை முற்றுகையிட்டிருந்தார் என்று பார்த்தோம். ஸலாஹுத்தீனை சுல்தானாக ஏற்று அவருடன் இணக்கமாகியிருந்த இமாதுத்தீன் அந்த முற்றுகையை எதிர்த்து நின்றார். எனவே ஸைஃபுத்தீனின் படை கடுமையான தாக்குதல் தொடுத்தது. நகரின் சுவர் பல இடங்களில் பிளந்தது. ஏறக்குறைய ஸின்ஜார் நகரை ஸைஃபுத்தீன் கைப்பற்றும் நேரம். அப்பொழுது வந்து சேர்ந்தது ஹமா கொம்புப் போரில் ஸைஃபுத்தீனின் படை அடைந்த அவமானத் தோல்வியின் செய்தி. இதையறிந்து சகோதரர் இமாதுத்தீன் உற்சாகமடைந்து மேலதிக உத்வேகத்துடன் தம்மை எதிர்த்து நிற்பாரே என்ற அச்சம் ஸைஃபுத்தீனுக்கு ஏற்பட, சண்டைக்காரன் காலில் விழுவதில் என்ன தயக்கம் என்று உடனே இமாதுத்தீனிடம் சமாதானம் பேசி, சண்டையை முடித்துக்கொண்டார். ஆனால், ஹமாவில் தமது படை அடைந்த தோல்வியினால் அவரது உள்ளம் மட்டும் சீறிக்கொண்டிருந்தது. இம்முறை தாமே படையெடுத்துச் செல்வது என்று முடிவெடுத்தது.

ஸைஃபுத்தீனின் படைகள் தயாராயின. யூஃப்ரட்டீஸ் நதியை நோக்கி அணிவகுத்தன; கடந்தன; சிரியாவின் எல்லையில் பாடி இறங்கின. அலெப்போவிலிருந்து குமுஷ்திஜின் விரைந்து வந்து அவரைச் சந்தித்தார். கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணக்கம் ஏற்பட இருவரும் நீண்ட பேச்சுவார்த்தை நிகழ்த்தினார்கள். ஸலாஹுத்தீனைத் தோற்கடிப்போம்; எகிப்துக்கு விரட்டியடிப்போம்; வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்பிய அவர்கள், கைப்பற்றும் போர் வெகுமானங்களை எப்படிப் பங்கிட்டுக்கொள்வது என்பதைப் பற்றியெல்லாம் பேசி முடிவெடுத்தார்கள்.

இறுதியில் இளம் மன்னர் ஸாலிஹைச் சந்திக்க அலெப்போவுக்குப் பயணமானார் ஸைஃபுத்தீன். கோட்டை வாயிலுக்கு வந்து தம் சிற்றப்பாவின் மைந்தரைக் கட்டித் தழுவி வரவேற்றார் இளம் மன்னர் ஸாலிஹ். அன்பு, அழுகை, பாசம் என்று அங்கு உணர்ச்சிப் பிரவாகம். குடும்ப உறவுகள் புதுப்பிக்கப்பட்டு, அஸ்-ஸாலிஹ் கோட்டைக்குத் திரும்பிவிட, ஸைஃபுத்தீன் அய்ன் அல்-முபாரகா என்ற இடத்தில் முகாமிட்டார். நாள்தோறும் அலெப்போ துருப்புகள் வந்து அவரைச் சந்தித்தன; திட்டங்கள் மெருகேற்றப்பட்டன; கூட்டணிப் படை உருவானது. அலெப்போவிலிருந்து சுமார் 40 கி.மீ. தெற்கில் இருந்த தல் சுல்தான் (Tell Sultan تل سلطان) பகுதிக்கு அணிவகுத்தார் ஸைஃபுத்தீன். கி.பி. 1070ஆம் ஆண்டு அல்ப் அர்ஸலான் அலெப்போவை முற்றுகையிட அங்கு முகாமிட்டிருந்ததால் ‘சுல்தானின் மலை’ எனப் பொருள்படும் ‘தல் சுல்தான்’ அதன் காரணப் பெயராகி விட்டது.

அலெப்போ-மோஸுல் கூட்டணி அடுத்த போருக்கு தயாராகிறது என்பதை முற்கூட்டியே அறிந்திருந்தார் ஸலாஹுத்தீன். எதிரியின் நகைப்புக்குரிய பிழை அது. அலெப்போவுக்குக் கூட்டணி குறித்தும் ஸலாஹுத்தீனுக்கு எச்சரிக்கை விடுத்தும் தனித்தனிக் கடிதங்கள் எழுதித் தம் தூதுவன் மூலம் அனுப்பியிருந்தார் ஸைஃபுத்தீன். முதலில் அலெப்போ சென்ற தூதுவன் அலெப்போவின் பதில் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு ஸலாஹுத்தீனைச் சந்தித்தவன், ஸைஃபுத்தீன் ஸலாஹுத்தீனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அலெப்போவின் கடிதத்தை அளித்துவிட்டான். அம்பலமானது எதிரிகளின் திட்டம். ஆகவே யெமனில் இருந்து தூரான்ஷாவை உடனே படையுடன் கிளம்பி வரச்சொல்லித் தகவல் அனுப்பிவிட்டு டமாஸ்கஸில் இருந்து தமது படையைத் திரட்டிக்கொண்டு வடக்கே வந்து சேர்ந்திருந்தார் ஸலாஹுத்தீன்.

ஏப்ரல் 21, 1176. கூட்டணிப் படை வந்தடைந்திருந்த நேரத்தில் அப்பகுதியில் ஸலாஹுத்தீனின் படை நீர் சேகரிக்க வந்திருந்தது; அவருடைய படையினர் தனிக் குழுக்களாகச் சிதறியிருந்தார்கள். அவற்றை நோட்டமிட்ட ஸைஃபுத்தீனின் ஒற்றர்கள் ஸலாஹுத்தீன் கிணறுகளுக்கு அருகே தனியே வந்துள்ளதையும் கவனித்துவிட்டார்கள்.

ஸைஃபுத்தீனுக்கு உடனே தகவல் வந்து சேர்ந்தது. அவருடைய பரிவாரத்தினரும் உடனடித் தாக்குதலை அறிவுறுத்தினர். ஸைஃபுத்தீனோ மமதையுடன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கி, “இந்தக் கிளர்ச்சிக்காரனின் அழிவுக்காக நம்மை நாம் ஏன் இந்நேரத்தில் தொந்தரவு படுத்திக்கொள்ள வேண்டும்? எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். அவர் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸலாஹுத்தீனைத் தாக்கியிருக்கலாம்; சுல்தானுக்கும் பெரும் பாதிப்பும் தோல்வியும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறை விதி வேறு விதமாக அமைந்திருந்தது.

ஸலாஹுத்தீனின் படையினர் நீர் அருந்தினர்; குதிரைகளும் குடித்தன. படையினருக்குத் தேவையான நீர் சேகரம் ஆனது . புத்துணர்வுற்றது படை! தல் சுல்தான் மலையின் உயர்வான பகுதிகளை அடைந்து நிலைப்படுத்திக்கொண்டது.

மறுநாள் காலை. தல் சுல்தான் பகுதியில் நடைபெற்றது போர். ஸைஃபுத்தீனின் படை எண்ணிக்கை ஸலாஹுத்தீனின் படையினரை மிகைத்திருந்தது. அவரது துருப்புக்கு முஸஃப்பருத்தீன் குயுக்புரி (Musaffar al-Din Keukburi) என்பவர் தலைமை தாங்கினார். (அன்று ஸலாஹுத்தீனை எதிர்த்துப் போரிட்ட அவர் பின்னர் ஸலாஹுத்தீனின் புகழ் பெற்ற தளபதிகளுள் ஒருவரானது தனிக் கதை).

முதலில் போரின் போக்கு ஸலாஹுத்தீனுக்கு எதிராகத்தான் இருந்தது. அவரது இடப்புற அணி பின்னடைய நேரிட்டது. ஸலாஹுத்தீன் தாமே அங்கு புகுந்தார். வலிமையுடன் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தார். அவ்வளவுதான். அதை ஸைஃபுத்தீனின் படையினர் எதிர்பார்க்கவில்லை. சடுதியில் நிலைமை அடியோடு மாறியது.

படை எண்ணிக்கை அளித்த மமதையோ, போர்த்திறன் குறைவோ, அல்லது இரண்டுமோ – ஓர் ஒழுங்கு முறையின்றி அவர்கள் தாக்கினர். இம்முறையும் அலெப்போ-மோஸுல் கூட்டணி துருப்புகளை வெகு எளிதாகச் சிதறடித்தார் ஸலாஹுத்தீன். நண்பர்கள் ஏதோ விளையாட்டுப் போட்டியில் சண்டை போட்டதைப் போல் வெகு எளிதாக முடிவுற்றது போர். ஸைஃபுத்தீன் பெரும் முனைப்புடன் கிளம்பி வந்ததெல்லாம் வீணாகி, அந்தோ என்றானது.

தோற்றவர்கள் தங்கள் முகாம்களிலிருந்து விழுந்தடித்து ஓடினர். இம்முறையும் ஸலாஹுத்தீன் ஓடியவர்களைத் துரத்தவில்லை. அவர்களைத் துடைத்தெறிய முற்படவில்லை. சென்ற போரைப் போலவே இதிலும் பெருந்தன்மையுடனும் பெரும் தாராளத்துடனும் நடந்துகொண்டார். அவர்களது மனங்களை வென்றெடுப்பதிலேயே குறியாக இருந்தார் அவர். கைதான அதிகாரிகள் கனிவுடன் நடத்தப்பட்டனர்; பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

முகாம்களிலிருந்து ஓடியவர்களுள் ஒருவர் ஸைஃபுத்தீன். தமது கூடாரத்தில் உள்ளவற்றை அப்படி அப்படியே போட்டு விட்டு, தலைதெறிக்க ஓடினார் அவர். கூடாரத்தினுள் ஸலாஹுத்தீனின் படையினர் நுழைந்து பார்த்தபோது அது பறவைகளின் கண்காட்சிக் கூடாரம் போல் காட்சியளித்தது. அழகிய நைட்டிங்கேல் பறவைகளும் புறாக்களும் கூண்டுகளில் நிறைந்திருந்தன. போரில் கைப்பற்றிய வெகுமானங்களை எல்லாம் திருப்பி அளித்துவிட உத்தரவிட்ட ஸலாஹுத்தீன் அப்பறவைகளையும் ஸைஃபுத்தீனிடம் கொண்டு சேர்க்கும்படி கூறி, கூடவே ஓர் அறிவுரையையும் அவருக்குச் சொல்லி அனுப்பினார்.

“நீ மோஸுலுக்குத் திரும்பிச் சென்று உன் பறவைகளுடன் விளையாடிப் பொழுதைப் போக்கு. அபாயமான சூழலில் நீ மாட்டிக்கொள்ளாமல் அது உன்னைத் தடுக்கும்”

அடுத்த நான்கு நாள்களுக்குப் பிறகு அலெப்போவின் வாயில்களை எட்டிய அவர் இம்முறை அதை முற்றுகையிடவில்லை. மாறாக அதைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டார். நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தம் வசம் கொண்டுவர முடிவெடுத்தார். அலெப்போவுக்கு வடகிழக்கே உள்ள மன்பிஜ் நகருக்கு முதலில் அணிவகுத்தார்.

அந்நகரின் படைத்தலைவர் எதிர்ப்பு ஏதும் இன்றி, ‘என்னை விட்டுவிடுங்கள்; என் செல்வத்தை நான் மோஸுலுக்கு எடுத்துச் செல்ல அனுமதியுங்கள். அது போதும். நகரம் உங்களுடையது’ என்று சரணடைந்தார். அவர் தம்மால் எடுத்துச் சென்ற செல்வம் போக, நகரில் இருபது இலட்சம் தங்க நாணயங்கள் மீதமிருந்தன. அவை ஸலாஹுத்தீன் வசமாயின.

மே 1176. அடுத்து அங்கிருந்து அவரது படை அலெப்போவுக்கு வடக்கே உள்ள அஸாஸ் நகரை அடைந்தது. பாடி இறங்கியது. முற்றுகையிட்டது.

அங்கு ஸலாஹுத்தீனின் உயிருக்குப் பேராபத்தாய் வந்து நுழைந்தார்கள் கொலைஞர்கள். முந்தைய ஆண்டு தங்களது திட்டம் தோல்வியில் முடிவடைந்திருந்த போதும் தங்கள் முயற்சியில் மனந்தளராத அஸாஸியிர்கள் மீண்டும் ஸலாஹுத்தீனின் கூடாரத்திற்குள் ஊடுருவினார்கள். ஸலாஹுத்தீனின் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தினார்கள். அது-

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 12 June 2025 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


 

Related Articles

Leave a Comment