டாலர் தேசம் - ஒரு விமர்சனம்

”நிலமெல்லாம் ரத்தம்“ முடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ”டாலர் தேசம்” ஒரு வழியாய் படித்து முடித்து விட்டேன். எண்ணூற்று சொச்சம்

பக்கங்கள் ஆரம்பத்தில் மலைப்பேற்படுத்தினாலும் ஆரம்பித்தவுடன் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடு சற்றும் அலுப்புத் தட்டாமல் நம்மை அமெரிக்க சரித்திரத்தினூடே பரபரவென்று இழுத்துச் செல்கிறது பா.ராகவனின் எழுத்துத் திறன். குமுதத்தில் மிக நீண்ட தொடராய் வெளிவந்த இந்த அமெரிக்க அரசியல் கட்டுரை தமிழில் நிச்சயமாய் சிறந்ததொரு பதிவு. கிழக்குப் பதிப்பகம் தரமான முறையில் இப்புத்தகத்தை தயாரித்துள்ளனர்.

இந்நூல் பிரபல குமுதம் இதழில் வெளிவந்திருந்தாலும் பா.ராகவனின் மொழி நடையால் மிக விரிவான தமிழ் வாசக வட்டத்தை அடைந்துள்ளது. பல்வேறு புத்தக மற்றும் இணையதள ஆய்வுகளுக்குப் பிறகு நேர்மையானதொரு பதிவாக பா.ரா. இதனை வடிவமைக்க முயற்சித்துள்ளது புரிகிறது. அது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதும் கூட. பல இடங்களில் வசை பாடியிருந்தாலும் அமெரிக்க தேசத்தின் முழு தகுதிக்குரிய வசவு அவர் எழுத்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன். அது எனது ஆதங்கமும் கூட. இத்தேசத்தின் அட்டூழியங்களை பதினொரு வருடங்களாய் உள்ளிருந்து காண்பவனாய் இருக்கின்ற படியால் இது என்னுடைய ஆழமான கருத்து.

அமெரிக்கா உருவான தினத்திலிருந்து 2004 காலகட்டம் வரை எழுதப்பட்டுள்ள இந்நூல் மூன்று பாகங்களாய் பிரிக்கப்பட்டு மூன்றும் “போர்“ களாலேயே தலைப்பிடப்பட்டிருப்பது இத்தேசத்தின் சரித்திரத்தை சட்டென சுட்டிக்காட்டும் அட்டகாசமான ஒன்லைன். தற்கால சரித்திரத்தைப் பேசும் போது மத்திய கிழக்கில் அமெரிக்க அடாவடி சற்று வீரியம் குறைவாய வெளிப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது. தவிர ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களை அமெரிக்க பிரஸ் போல் தீவிரவாத இயக்கமாக அணுகுவது அவர்களின் முழு தரப்பு நியாயங்களையும் முழுக்க வெளிக் கொண்டு வர முடியாமலல்லவா போய்விடுகிறது! ஆனால் அதே நேரத்தில் பா.ரா.வின் மற்ற முக்கிய இரு நூல்கள் ”மாயவலை”யும் ”நிலமெல்லாம் ரத்தம்” ஹமாஸ் மற்றும் இதர அமைப்புகளை சிறப்பாய் அனுகியிருப்பதைக் காணலாம்.

ஈராக் போருக்குப் பின் அங்கு அமெரிக்கா கைதிகளுக்கு நிகழ்த்திய கொடுமைகள் சிறிது விவரிக்கப்பட்டிருந்தாலும் அயோக்கியத்தனத்தில் உலகப் புகழ் பெற்ற “கவுண்டானமோ” சிறை பற்றி ஒரு வரியும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம். அதே போல் அமெரிக்கா இஸ்ரேலிடம் கொண்டுள்ள கள்ளக் காதல் விவரிக்கப்பட்டிருந்தாலும் அதுவும் முழு வீரியத்துடன் வெளிப்படைவில்லை. எத்தனை முறை அமெரிக்கா தனது “வீட்டோ“ அதிகாரத்தைக் கொண்டு இஸ்ரேலை முரட்டுத்தனமாய் ஆதரித்து அநியாயம் புரிந்து வருகிறது என்பதை ஆராய ஆரம்பித்தால் அதுவே பா.ரா. விற்கு மற்றுமொரு நூலுக்கான தீனியாய் அமையக் கூடும்.

அதே போல் முதல் ஈராக் போருக்கும் இரண்டாம் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் தன் வானளாவிய அதிகாரத்தால் அமெரிக்கா எப்படி ஈராக்கின் மேல் பொருளாதார தடையும் எல்லை மீறிய வான்வெளி ஊடுருவல்களையும் நிகழ்த்தியுள்ளது என்பதும் விடுபட்டிருக்கிறது. நூலின் நீளமோ வேறு ஏதோ காரணமாயிருந்தாலும் அது வாசகர்களுக்கு அமெரிக்க அடாவடியை மட்டுப்படுத்தி மறு தரப்பு நியாயத்தை முழுதும் புரிந்து கொள்ள ஏதுவாகமல் செய்துவிடுகிறது.

பா.ரா.வின் ”ஆயில் ரேகை” இவற்றை விரிவாய் அலசியிருக்கலாம். வரவழைத்திருக்கிறேன். அதனைப் படித்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் டாலர் தேசம். பிற தேசத்தில் வாழும் தமிழர்கள் அமெரிக்காவை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே அவர்களும் இப்புத்தகம் வாசிப்பது அவசியம்.

-நூருத்தீன்

e-max.it: your social media marketing partner

Comments   

+1 #4 மகேஷ் 2012-10-28 18:11
டாலர் தேசம் அருமையான புத்தகம்
Quote
+1 #3 அன்புடன் புகாரி 2012-10-28 15:20
அருமையான நூல். வாசித்திருக்கிறேன் நேசித்திருக்கிறேன்

அன்புடன் புகாரி
Quote
+1 #2 nagaraj.a.p. 2011-11-30 09:54
:-) must be read this book ever
Quote
+1 #1 சிவசுப்பிரமணி 2011-05-02 02:13
"நானும் "டாலர் தேசம்" வாசித்தேன்.சுவாரசியமாக அமெரிக்காவின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.பார ாட்டுக்கள் பா.ராகவனுக்கு!!!
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker