The Rare and Excellent History of Saladin - விமர்சனம்

Written by நூருத்தீன்.

 

ஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம்

மீட்டெடுக்கப்பட்டு அது முஸ்லிம்கள் வசமாகியிருந்த காலம் அது. அப்படி அங்கு வந்தவரை, “மன்னர் அழைக்கிறார் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்கள்.

அவரது மார்க்க ஞானத்தையும் எழுத்தாக்கங்ளையும் முன்னமேயே நன்கு அறிந்து அவர்மீது பெரும் நன்மதிப்பு வைத்திருந்தார் மன்னர். அதனால் ஜெருசலம் வந்திருந்த அவரை என்னுடன் தங்கிவிடுங்கள்; பணி புரியுங்கள் என்று அன்பான பலவந்தத்துடன் தம்முடன் அமர்த்திக்கொண்டு படையினருக்குத் தலைமை நீதிபதியாக பதவியும் அளித்துவிட்டார் அந்த மன்னர் - ஸுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. பொறுப்பேற்றுக் கொண்டார் பஹாஉத்தீன் இப்னு ஷத்தாத். கூடவே அவர்கள் இருவர் மத்தியில் தொடங்கி வளர்ந்து உறுதியடைந்தது ஆழமான நட்பு.

மன்னர் ஸலாஹுத்தீன் ஐயூபியின் குணாதிசயங்களுள் ஒன்று, மார்க்க அறிஞர்களை தம்முடன் நெருக்கமாக இருத்திக் கொள்வது. அதனால் குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய மார்க்க சட்டம் ஆகியனவற்றை முறைப்படி பயின்று ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த இப்னு ஷத்தாத்மீது அவருக்கு இயல்பான பாசமும் மரியாதையும் ஏற்பட்டு காழீ அல்-அஸ்கார் என்ற பதவி தானாய் இப்னு ஷத்தாதுக்கு வந்து அமைந்தது.

ஸலாஹுத்தீன் ஐயூபின் வீர வரலாற்றின் இறுதி காலக் கட்டத்தில் 1188ஆம் ஆண்டுதான் இப்னு ஷத்தாத்தின் வாழ்க்கை வந்து இணைகிறது. அதன்பின் 1193ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் மரணத்தைத் தழுவிவிடுகிறார். இந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் வெகு சில மாதங்களைத் தவிர முழுக்க முழுக்க மன்னருடன், போரும் களமும் என்று இணைந்து பணியாற்றிய இப்னு ஷத்தாத் இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்தார்.

ஒன்று ஜிஹாதின் கடமையையும் சிறப்பையும் விவரிக்கும் மிக விரிவான நூல் எழுதியது - இதற்கு அவர் பெயரிடவில்லை. ஆனால் ஸலாஹுத்தீன் ஐயூபிக்கு அது ஒப்பற்ற ஆவணமாக அமைந்துபோனது. சுயநலக் காரணங்கள் மிகைத்த சில முஸ்லிம் மன்னர்களுக்கு ஜிஹாதின் கடமையை நினைவூட்டி, அவர்களது சிந்தையைத் தெளிவுபடுத்தி தம் தலைமையின்கீழ் ஸலாஹுத்தீன் ஐயூபி கொண்டுவர அது துணை நின்றிருக்கிறது.

அடுத்தது, தாம் ஸுல்தானுடன் இணைந்த காலம் முதல் அவர் இறக்கும் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை நாட்குறிப்புப் போல் மிகவும் தெளிவாக, விவரமாகக் குறித்துவைத்து எழுதிய 'அல்-நவாதிர் அல்-சுல்தானிய்யா வஅல்-மஹாஸின் அல்-யூஸுஃபிய்யா' (al-Nawadir al-Sultaniyya wa'l-Mahasin al-Yusufiyya) என்ற நூல். ஸலாஹுத்தீன் ஐயூபியின் வரலாற்றினை தெளிவாய் அறிந்து கொள்ள இந்த நூல் இன்றியமையாத பெரும் ஆவணம்.

பலவீனமான நிலையில் அப்பாஸித் கலீஃபாவின் ஆட்சி அமைந்திருக்க, மூன்றாவது சிலுவைப் போருக்குப் படை திரட்டி வந்த முதலாவது ரிச்சர்டு மன்னனை எதிர்கொள்ள இதர முஸ்லிம் படைகளை அணுசரித்து ஒருங்கிணைத்தது; அதைச் சாதிக்க முஸ்லிம் மன்னர்களுக்குள் நிகழ்ந்த அரசியலைச் சமாளித்தது, போரிட்டது; சிலுவைப் படையினரின் பிரம்மாண்டம், அவர்களது வெறித்தனமான முற்றுகை, தாக்குதல், முஸ்லிம்களின் பதில் தாக்குதல். போர் என்று ஆழமான தகவல்கள் அடங்கிய நூல் இது.

இந்த நூலை இரண்டு பகுதியாகப் பிரித்து எழுதியுள்ளார் இப்னு ஷத்தாத். முதல் பகுதி, மன்னர் ஸலாஹுத்தீனின் பிறப்பு, குணங்கள், பொதுவான நிகழ்வுகள் என்று சுருக்கமான இருபது பக்கங்கள். மீதம் இருநூற்று சொச்சம் பக்கங்கள் ஐந்து ஆண்டுகள் மன்னருடன் தாம் இருந்து கண்கூடாகப் பார்த்த நிகழ்வுகளின் நாள் வாரியான குறிப்புகள்.

ரிச்சர்ட்ஸ் (D.S. Richards) இந்த நூலை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில நூலின் தலைப்பு - The Rare and Excellent History of Saladin. இங்கிலாந்து நாட்டின் Ashgate Publishing Limited இந்த நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். ஸலாஹுத்தீன் ஐயூபின் வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் முக்கியம் என்றாலும் அவரது வரலாற்றை ஓரளவு வாசிக்காமல், அறியாமல் இதை வாசித்தால் பெரிதாகக் கவராது. இன்னும் சொல்லப்போனால் அயர்வளிக்கும். ஆனால் அறிந்துவிட்டுப் படித்தால் சுவாரஸ்யம் உத்தரவாதம். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு நிச்சயமான விருந்து.

-நூருத்தீன்

இதர விமர்சனங்கள்

 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #2 நூருத்தீன். 2014-02-20 18:19
சகோ. ஃபைரோஸ்,

தேடியவரை இதன் eBook விற்பனையில் இல்லை. பின்னர் அறியவந்தால் உடனே தெரிவிப்பேன் ان شاء الله
Quote
0 #1 Ferozkhan 2014-02-20 07:47
Brother is there any link available to purchase as ebook
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker