எல்லங்கா கப்பலில் தமிழ் குத்பாப் பிரசங்கம்

on .

தாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54

குத்பா சொற்பொழிவுகளைத் தமிழில் எழுதி, நூலாக அச்சிட்டு வெளியிட்டார். “குத்பாப் பிரசங்கம்” என்ற அந்த நூல் பற்றிய விளம்பரம்:

“பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலேயே குத்பாவை ஓதி, அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய்மொழியில் புரியக் கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித் திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய்விட்டது.

“தமிழ்நாட்டிலே முதன்முதலாக தமிழ் மொழியில் ‘குத்பாப் பிரசங்கம்’ என்னும் நூலை நாம் 1930 ஜனவரியில் வெளியிட்டுப் பெரும் புரட்சியை உண்டு பண்ணினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த அபூர்வ குத்பா பிரசங்க நூலின் மூன்றாம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது.

“இந்தப் புத்தகத்தைக் கையில் ஏந்தி மின்பரில் ஏறும் இமாம் வேறு எவர் துணையுமின்றி குத்பாவை அழகாகவும், அமைப்பாகவும், அந்தஸ்தாகவும், கேட்பவர் சற்றுமே உறங்க முடியாத படியும் சரளமாக பிரசங்கம் புரியலாம்.

“தற்கால அரசியலுக்கொத்த குத்பாக்களாகச் சில பிரசங்கங்கள் இப்புதிய மூன்றாம் பதிப்பில் சேர்த்து அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.”

இந்த விளம்பரத்திலிருந்தே குத்பாப் பிரசங்க நூலைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மூன்றாம் பதிப்பு வெளி வந்திருப்பது இந்நூலின் சிறப்பையும், இந்நூலுக்கு உலமாக்களிடம் இருந்த வரவேற்பையும் காட்டுகிறது.

உலமாக்களுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் பயன்படும்படி இந்நூல் எழுதப்பட்டிருந்தது. வேறொரு விளம்பரத்தில் தாவூத் ஷா சொல்லுகிறார்:

“இந்த குத்பா பிரசங்கம் ஜும்ஆவில் ஓதுவதற்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணி விட வேண்டாம். இந்தப் பெரிய நூலில் மகா அரிய பெரிய விசயங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு இருப்பதால், இது நம் முஸ்லிம் ஆண், பெண் அனைவருக்குமே சதா பயன்படும். இது மிக நவீன முறையில் எழுதப்பட்டிருப்பதால், நம் சோதர சோதரிகள் லௌகிக வைதிக வாழ்க்கையில் பெரும் பயனும் புத்துணர்ச்சியும் பெறுவர்.

குத்பா தாய் மொழியில் ஓதலாம் என்பதற்கு இதில் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.”

1925இல் தாவூத்ஷா மலேயாவுக்குக் கப்பலில் போனார். பயணத்தின்போது ஒரு வெள்ளிக்கிழமையன்று அவர் கப்பலில் “ஜும்ஆ” தொழுகை நடத்தியதுடன் ஒரு மணி நேரம் தமிழில் குத்பா பிரசங்கமும் செய்தார். இதுபற்றி “தாருல் இஸ்லா”மில் காணப்படும் செய்தி:

“எல்லங்கா”வில் ஜும்ஆப் பிரசங்கம்

13-2-25 வெள்ளியன்று பகல் 1 மணிக்கு எஸ்.எஸ். “எல்லங்கா” கப்பல் காரைக்காலுக்கு எதிரில் நங்கூரம் பாய்ச்சியிருந்தபோது சென்னை “தாருல் இஸ்லாம்” ஆசிரியர் ஜனாப் பா.தாவூத்ஷா சாகிப் “இஸ்லாத்தின் தாத்பரியமும் அதன் தனிப்பட்ட மகிமையும்” என்பதைப் பற்றி ஜும்ஆப் பிரசங்கம் தமிழில் ஒரு மணி நேரம் மிக இனிமையாகச் செய்த பின் அக்கப்பலின் மீதே ஜும்ஆத் தொழுகையும் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: தாவூத் சா இலக்கியம், அ.மா. சாமி

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker