முன்னுரை

Written by N. B. அப்துல் ஜப்பார்.

Cairoகற்பனையில்லாமல் எந்த ஆசிரியனாலும் கதை எழுத முடியாது. எனவே, ஓர் ஆசிரியன் தீட்டுகிற சொல்லோவியத்திலே நீதிகள் நிரம்பித் ததும்பிய

போதினும், அது வெறும் 'கட்டுக்கதைதானே!' என்னும் ஒருவிதமான பயிர்புப் படிப்பவருள்ளத்துள் எழுந்துவிடுவது இயற்கையே. ஆதலால் கற்பனைக் கதைகளும் காவியங்களும் ஆழிய சிந்தனைக்கு ஆக்கமளிப்பதில்லை.

மெய்யான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒரு கோவையாகத் தொடுத்து மக்களிடையே பரத்துவோமானால், அதை அவர்கள் ஆவலுடன் நிரந்தரமாகப் போற்றுவ தில்லை. ஏனென்றால், கற்பனை யில்லாத வெறும் நிகழ்ச்சிக் குறிப்பு, செய்திப் பத்திரிகை போன்று, ஓர் உருசியுமில்லாமற் போய்விடுகிறது. பழைய தினசரி பத்திரிகையும், கற்பனையற்ற வெற்று நிகழ்ச்சிக் கோவையும் தரத்தில் ஒன்றேயாகி விடுகின்றன.

ஆனால், உங்கள் கரத்திடைப் பிடித்திருக்கும் இந்த சரித்திர உண்மைநிகழ்ச்சிக் கோவைநவீனம் எப்படிப்பட்டவனின் உள்ளத்திலும் திடுக்கத்தையும், நடுக்கத்தையும், சோகத்தையும், துயரத்தையும். நகைப்பையும், வீரத்தையும், இன்பச்சுவையையும் ஊட்டிவிடுவதற்குக் காரணம், இறைவன் படைத்த ஓர் அற்பப் பெண்ணின் இயற்கை வாழ்க்கையில் செயற்கையினும் வியப்புமிக்க நிகழ்ச்சிகள் மலிந்திருந்தமையேயாகும். அற்ப மனிதன் கற்பனைமூலம் சிற்சில நிகழ்ச்சிகளையே கற்பிக்கிறான். ஆனால், அனைத்தையும் படைத்து பரிபாலிக்கிற பரம்பொருளாகிய இறைவ னென்னும் ஏகன் எவரது கற்பனைக்கும் எட்டாத காரியங்களைச் சில சமயங்களில் இயற்றி விடுகிறான். எனவேதான், ஆங்கிலத்தில் Truth is stranger than fiction (மெய்ந் நிகழ்ச்சி பொய்க் கற்பனையினும் அதிசயமிக்கது) என்றொரு பழமொழி வழங்கிவருகிறது. அந்தப் பழமொழிக்கு முழுக்க முழுக்க ஆளாகிக் கிடப்பனவே இச் சரித்திர நவீனத்தில் வரும் கதாநாயகியின் வாழக்கை வைபவங்க ளாகும்.

பல மனிதர்களின் வாழ்வுக் காலத்தில் அதிசயங்களோ அற்புதங்களோ தோன்றுவதே யில்லை. சிலருக்குமட்டும் சில வியத்தகு வின்னியாச சம்பவங்கள் நிகழ்வ துண்டு. ஆனாலும், ஷஜருத்துர் என்னும் பெண்மணியின், கற்பனைக்கும் எட்டாத விசித்திர நிகழ்ச்சிக் கதம்ப வாழ்க்கையை நிகர்த்த அல்லது ஒட்டிய வேறொரு கதாநாயகரின் ஜீவிதத்தை உலக சரித்திரத்தில் நீங்கள் எங்குமே காணமுடியாது. ஏனென்றால், எப்படிப்பட்ட கற்பனாசிரியனின் எந்த வளப்பமிக்க மூளைக்கும் எட்டாத அத்தனை விதமான உண்மை விசித்திரங்களுக்கும் இரையாகிக் கிடக்கும் ஓர் அபூர்வப் படைப்பே ஷஜருத்துர் என்பவ ளாவாள்.

சரித்திர மாணக்க னென்னும் முறையில், பல வீரர்களின் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறுகளை யெல்லாம் நான் நுணுகிப் பயின்றிருக்கிறேன். மிஸ்ர் தேசத்தின் அரசி திலகமாக உயர்ந்த, ஓர் அடிமைப் பெண்ணா யிலங்கிய இந்த ஷஜருத்துர்ருக்கு நிகரான வாழ்க்கை ஓவியத்தை நான் மற்றெவர் வாழ்விலும் கண்டே னில்லை. எனவே, உலக மக்கள் மறந்துவிட்ட ஒரு மாபெரு பெண்ணரசியின் இந்த வாழ்க்கை வரலாற்றை, உள்ளது உள்ளபடியே, மெய்யுடன் பொயயைக் கலக்காமல், என் கற்பனைக்கேற்பச் சரித்திர உண்மை நிகழ்ச்சிகளைத் திரித்துக் கொள்ளாமல், அனைத்துச் சம்பவங்களையும் அப்படியே வடித்துக் கொடுத்திருக்கிறேன், இந் நவீனத்தில். ஏழுவருட நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னேதான் நான் இதை எழுத அமர்ந்தே னாகையால், முரண்பாட்டுடைக் கொள்கை எதுவுமோ, அன்றி இருட்டடிப்புச் செயல் எதுவுமோ அன்றிப் பொய்யான சம்பவம் எதுவுமோ இநத வரலாற்றுத் தொகுப்பில் இடம்பெறவில்லை யென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உணர்ச்சிப் பெருக்கால் நான் புனைந்துள்ள சில வருணனைகள் மிகையென நீங்கள் கருதலாம். ஆனால், இப்பெரிய நாரியர் திலகத்தின் பொய்போலுந் தோன்றும் மெய்யான வாழ்க்கை வரலாற்றை இன்னம் விளக்கமாக வரையும் வல்லமை எனக்கில்லாது போயிற்றே என்னும் ஏக்கமே எனக்குண்டு.

ஷஜருத்துர்
(சரித்திர விசித்திர நாவல்)

முதல் பாகம்
சிலுவை யுத்தங்கள்

ஆசிரியன்:
N.B. அப்துல் ஜப்பார், பீ.ஏ.

இன்று எகிப்து தேசம் ஒரு முஸ்லிம் நாடாக இலங்குகிறதென்றால், இன்றைக்கு ஜமால் அப்துல் நாஸிர் அந்நாட்டின் தலைவராகவும், ஐக்கிய அரப் குடியரசின் ஜனாதிபதியாகவும் திகழ்கிறா ரென்றால், இந்நேரம் சிலுவைக்கொடி பறக்க வேண்டிய அந்நாட்டில் பிறைக்கொடியே பறந்துகொண்டிருக்கிற தென்றால், சென்ற (கி.பி.) பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுமத்தியில் வாழ்ந்திருந்த, ஒரு சாதாரணக் குடியில் பிறந்த அனாதைப் பெண்ணின் இணையற்ற மெய்யான தியாகத்தினால் தான் என்பதை எவரே மறக்க முடியும்? நீங்களே இந்நூலை முற்றிலும் படித்துவிட்டுத் தீர்ப்புக் கூறுங்கள், அந்த ஷஜருத்துர்மட்டும் அந்தக் காலத்தில் தோன்றியிராமற் போயிருப்பின், எகிப்து தேசத்தின் தலைவிதி என்ன கதியாகிவிட் டிருக்குமென்று. பரம வைரிகளாகிய கிறிஸ்தவ ஆசிரியர்களே ஒத்துக் கொள்கிறார்கள், எகிப்து ராஜ்யமென்னும் இஸ்லாமிய ஆட்சிப்பீடம் ஷஜருத்துர் என்னும் பெண்மணி புரிந்த தியாகத்தையே அஸ்திபாரமாகக் கொண்டு நிற்கிறதென்று.

ஆடவராலும் சாதிக்க முடியாத ஒரு பெருஞ்சாதனையை அனைவரின் கண்ணெதிரிலும் சாதித்துச் சென்ற அப்பெரிய பெண்டிர் திலகத்தின் சரித்திரம் குடத்திலிட்ட விளக்காக இருண்டு கிடந்ததை நான் 1941-இல் கண்டேன். குடத்துக்குள்ளிருந்து அவ்விளக்கை வெளியிலெடுக்க முடியாவிட்டாலும், குடத்தைத் தகர்த்தாவது அதன் பேரொளியைத் தமழிகமெங்கும் வீசச்செய்ய முடிவுகட்டினேன். பொறாமைமிக்க சரித்திராசிரியர்களின் விஷம் மிகுந்த பொய்ச்சரடுகளை நீக்கி, அப்பட்டமான சரிதை வரலாற்றை ஏழாண்டுகள் செலவிட்டுக் கண்டுபிடித்தேன். அதை என் மனக்கண்முன் ஓட்டினேன். பித்தனாகிய என் பேனாவில் பிறந்த சொற்களை அச்சுருவாக்கி, இதோ உங்கள்முன் சமர்ப்பித்து விட்டேன். எந்த நாட்டின், எந்த அரியாசனத்தின்மீதும் ஏறியறியாத அத்தனை பண்புகள் மிக்க ஓர் அற்புதப் பிறவியானவளின் மெய்ந் நிகழ்ச்சிகளே பின்னே பொறிக்கப்படுபவை. நான் அவ்வப்பொழுது வரைந்த அத்தியாயங்கள் 1948 முதல் “தாருல் இஸ்லாம்” என்னும் மாதப் பத்திரிகையில் தொடர் நாவலாக வெளிவந்திருக்கின்றன வென்றாலும், முழு நூலுருவாக வெளிவருவது இப்பொழுதே முதற்றடவை யாகும்.

அரப் இலக்கணப்படி, கதாநாயகியின் பெயர் ஷஜரத்-அல்-துர் என்பதாகும். ஆனால், மரூஉ முறைப்படியே அவளுக்கு நாம் பெயரிட்டிருக்கிறோம். “முத்துமரம்” அல்லது “முத்துத்திவலை” என்பதே ஷஜரத்-அல்-துர் என்னும் சொல்லுக்குப் பொருளாம். வீரர் ஸலாஹுத்தீனின் மனைவிக்கும் இதே பெயர் வழங்கிவந்த தென்று தெரிகிறது. அப்பெயர் படைத்தவர் எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கலாம். ஆனால், கேட்போரின் வாயை அகலப் பிளக்கவைக்கும் அதியற்புத வாழ்க்கை வரலாற்றுக்குரிய ஷஜருத்துர் ஒருத்தியே! அந்த ஒருத்தியின் கதையே இது!

 

ஆசிரியன்.

சென்னை-5
10-10-1960

 


சமரசம் பத்திரிகையின் முன்னுரை

 

என்.பி. அப்துல் ஜப்பார் அவர்களின் (இவர் ‘தாருல் இஸ்லாம்’ தாவூத் ஷா அவர்களின் புதல்வர் ஆவார்) இலக்கியச் சாதனைக்கு சிகரமாக அமைந்தது, மிகப்பெரும் வரலாற்று நாவலான ஷஜருத்துர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில் சற்றொப்ப அரை நூற்றாண்டுக்கு முன்பு அவர் எழுதிய இந்த இஸ்லாமிய வரலாற்று நாவல் ஒரு மகத்தான படைப்பாகும்.

இதுபற்றி என். பி. அப்துல் ஜப்பார் சொல்கிறார்: “ஷஜருத்துர் நாவலை நான் எழுத முக்கியக் காரணம் பி.ஏ. வகுப்பில் நான் படித்த ஐரோப்பிய வரலாறு. காரிருளில் மூழ்கி சாதாரண மனித நாகரிகங்கள்கூட அறிந்திராத ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் சிலுவைப் போர்களின் காரணமாக முஸ்லிம்களுடன் கொண்ட தொடர்பினாலேயே அக வெளிச்சம் - புற வெளிச்சம் பெற்றனர். அப்படியிருந்தும் மேனாட்டுக் கிறித்துவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையுமு் இழித்தும் பழித்தும் எழுதி வந்துள்ளனர். அந்த ஆசிரியரின் ஆணவம்தான் என்னை இந்த நாவலை எழுதத் தூண்டிற்று.”

வரலாற்றில் அரியணை ஏறிய முதல் முஸ்லிம் பெண்மணியான ஷஜருத்துரின் தியாக வரலாறுதான இந்தப் புதினம். கற்பனைக் கலப்பின்றி நீண்டதொரு காவியம் போல் அடுக்கடுக்கா வரலாற்று நிகழ்வுகளைத தொடுத்து விறுவிறுப்பும் சுவையும் குன்றாமல் ஷஜருத்துரைப் படைத்திருக்கிறார் என்பிஏ. பல ஆண்டுகள் மறு வெளியீடு காணாமலே இருந்த அந்த மகத்தான வரலாற்றுப் புதினம் இந்த இதழிலிருந்து தொடங்குகிறது.

அப்துல் ஜப்பாரின் அன்பு மகன் நூருத்தீன் தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கிறார். தம் தந்தையின் படைப்புகளையெல்லாம பாதுகாக்கும் முயற்சியில் முனைந்திருக்கிறார். இந்த வரலாற்றுப் புதினத்தின் அத்தியாயங்களை நமக்கு அனுப்பித தந்து உதவியர் அவரே. சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கும் நன்றிகள்.

- பொறுப்பாசிரியர், சமரசம்.

சமரசம் 16-31 ஆகஸ்ட் 2011

<<ஷஜருத்துர் முகப்பு>>     <<அத்தியாயம் 1>>

 


 

ஷஜருத்துர்
(சரித்திர விசித்திர நாவல்)

முதல் பாகம்
சிலுவை யுத்தங்கள்

ஆசிரியன்:
N.B. அப்துல் ஜப்பார், பீ.ஏ.

ஷாஜஹான் புக் டெப்போ,
460, திருவல்லிக்கேணி ஹைரோடு,
சென்னை - 5.

முதற் பதிப்பு (1960)
[பிறமொழியில் பெயர்ப்ப துட்பட, சகல உரிமையும் ஆசிரியர்க்கே சொந்தம். இதி லடங்கிய விஷயத்தை நாடகமாக நடிப்பதோ, அல்லது படக்காட்சியாக எடுப்பதோ அறவே கூடாது.]

விலை ரூ. 6.50


 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #2 அபுஇப்ராஹிம் 2017-11-04 02:13
ஆஹா ! முன்னுரை... கலக்கல் !
Quote
0 #1 Rabiathulbasariya 2017-02-22 02:30
முன்னுரை அசத்தல் .

வரலாற்றில் இருண்ட காலம் என்று இஸ்லாம் வளர்ச்சி யடைந்த காலத்தை ஐரோப்பியர்களால் குறிப்பிட்டு வைத்திருப்பது அவர்களது காழ்புணர்சியை யும்,ஆற்றாமையையும் வெளிபடுத்தவே செய்கிறது .
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker