9. பொறாமை கூடாது

Written by நூருத்தீன்.

பகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஸ்பெஷல் சமையல் என்பதால் வீடு முழுவதும் நறுமணமாக இருந்தது. அனைவரின் பசியையும் அந்த

வாசனை தூண்டியபடி இருந்தது.

“கரீம். ஃபிரிட்ஜில் இருந்து நாலு முட்டை எடுத்துத்தா” என்று குரல் கொடுத்தார் அவன் தாயார்.

ஐபேடில் விளையாடிக்கொண்டிருந்தவன் அதை ஒரு கையில் தூக்கியபடி ஓடிவந்தான். அப்படியே ஃபிரிட்ஜைத் திறந்து முட்டையை எடுக்கப் பார்த்தால், டிரேயில் இருந்து இரண்டு முட்டைகள் ‘டப்’ என்று தரையில் விழுந்து உடைந்தன.

“ஐபேடை வெச்சுட்டு எடுக்கக்கூடாதா?” என்று அதட்டினாள் அவன் உம்மா.

சப்தம் கேட்டு கிச்சனுக்கு விரைந்து வந்தார் முஸ்தபா. பயந்துபோய் நின்றிருந்தான் கரீம். “சரி விடு!” என்று சமாதானப்படுத்திவிட்டு, தேவையான முட்டைகளை எடுத்துக் கொடுத்தார். பழைய துணியை எடுத்து தரையைச் சுத்தப்படுத்தினார். அப்பொழுது ஃபிரிட்ஜில் திராட்சைப் பழங்கள் சில கனிந்து இருப்பதைப் பார்த்தார். எடுத்துப் பார்த்தால் அவை கெட்டுப் போகும் நிலையில் இருந்தன.

“கரீம், ஸாலிஹா இங்கே வாங்க” என்று அழைத்தார். பிள்ளைகள் வந்தனர். “மாடியில் பால்கனியில் அணில் வரும் பாருங்க. இந்தப் பழங்களைப் போட்டால் அதுவாவது சாப்பிடும். குப்பையில் கொட்ட வேண்டாம்” என்று கொடுத்து அனுப்பினார். இருவரும் மாடிக்கு ஓடினர்.

சில நிமிடங்கள் கழித்து, கரீம் சிணுங்கியபடி, உர்ரென்ற முகத்துடன் அழுவதற்குத் தயாரான கண்களுடன் இறங்கி வந்தான். பின்னாலேயே ஸாலிஹா ஓடி வந்தாள். “என்ன ஆச்சு?” என்று விசாரித்த முஸ்தஃபாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பிய குரலில் பேச ஆரம்பித்தான்.

“நான் க்ரேப்ஸை போட்டால் அணில் சாப்பிடவில்லை. ஆனால் அக்கா போட்டால் மட்டும் சாப்பிடுது.”

“அடடா! ஏன் அப்படி?” என்று ஸாலிஹாவைப் பார்த்துக் கேட்டார் முஸ்தஃபா.

“அது வந்து, கரீம் அணில் கிட்டே ஓடிப்போய் போட்டான். அணில் பயந்துட்டு ஓடுது. நான் தூரத்திலிருந்து தூக்கிப் போட்டேன். அது எடுத்துடுச்சு டாடி.”

“அப்படீல்லாம் இல்லே. நீயும்தான் கிட்டே போய் போட்டே. ஆனால் அணில் உன்னதை மட்டும் எடுத்துச்சு. என்னதை எடுக்கலே. நான் பார்த்தேன்.”

“இதற்கெல்லாம் யாராவது அழுவாங்களா?” என்று சமாதானப்படுத்தினார் முஸ்தஃபா. ஆனாலும் கரீமின் முகம் வாட்டமாகத்தான் இருந்தது. பிறகு அனைவரும் உணவு உண்டனர். அதன்பின் ஓய்வாக முஸ்தஃபா சோபாவில் அமர்ந்தபோது, அவரது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான் கரீம்.

“உங்களுக்கு ஆதம் நபி காலத்து செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார் முஸ்தஃபா. “உம்” என்றாள் ஸாலிஹா. படுத்தபடி தலையை மட்டும் ஆட்டினான் கரீம்.

“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் பெயர் ஹாபீல். மற்றவர் பெயர் காபீல். அவர்கள் இருவருக்கும் இடையே ஒருநாள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது ஆதம் (அலை) தம் மகன்களிடம் நீங்கள் இருவரும் அல்லாஹ்வுக்குக் காணிக்கை கொடுங்கள் என்று தெரிவித்தார்.”

“காணிக்கை என்றால் என்ன அத்தா?” என்று கேட்டாள் ஸாலிஹா.

“அல்லாஹ்வுக்காகக் காணிக்கை கொடுப்பது என்பது குர்பானி கொடுப்பதைப் போன்றது” என்று பதில் அளித்தார் முஸ்தஃபா.

“குர்பானி என்றால் ஆடு கொடுக்கச் சொன்னாரா?” என்று கேட்டான் கரீம்.

“நாம் ஹஜ்ஜுப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என்று குர்பானி கொடுக்கிறோமே அது மட்டுமே குர்பானி அல்ல. அல்லாஹ்வுக்காக நமக்குப் பிடித்ததை தியாகம் செய்தால், அது எந்த விதத்தில் இருந்தாலும் குர்பானிதான்.

ஹாபீல் ஆடு மேய்ப்பவர். அவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அதில் நல்ல கொழுத்த சிறப்பான ஆட்டைத் தேர்ந்து எடுத்து, அதை அறுத்துப் பலி இட்டார் ஹாபீல். ஆனால் தமது பயிரில் இருந்து மிகவும் மட்டமான நெல் கதிர் கட்டை எடுத்து, காணிக்கை செலுத்தினார் காபீல். அப்பொழுது வானத்திலிருந்து நெருப்பு வந்து ஹாபீலின் காணிக்கையை மட்டும் சாப்பிட்டது. காபீலின் காணிக்கையை அப்படியே விட்டுவிட்டது.”

“வானத்திலிருந்து நெருப்பா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கரீம்.

“ஆமாம். அக்காலத்தில் காணிக்கையை ஏற்றுக்கொள்வது அப்படித்தான் நடக்கும். தன்னுடைய காணிக்கையை நெருப்பு தீண்டவில்லை என்றதும் காபீலுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அவர் ஹாபீலிடம், ‘உன்னுடைய காணிக்கை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடையது ஏற்கப்படவில்லையே’ என்று கேட்டார். அதற்கு ஹாபீல், ‘தனக்கு யார் அஞ்சுகிறார்களோ அவர் அளிப்பதையே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ என்று கூறிவிட்டார். காபீலுக்கு மேலும் கோபம் அதிகமாகிவிட்டது. தன்னுடைய சகோதரன் என்றும் பார்க்காமல் அவர் ஹாபீலைக் கடுமையாகத் தாக்கினார். அதில் ஹாபீல் இறந்துவிட்டார்.”

“அல்லாஹ்வே! இந்த விஷயத்திற்காக அவர் தன் சொந்த பிரதரையே கொன்றுவிட்டாரா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸாலிஹா.

“ஆமாம். கோபமும் பொறாமையும் மிகவும் பொல்லாதது. நம்மைப் பாவம் புரிய வைத்துவிடும். அதனால் நாம் பிறரிடம் பொறாமை கொள்ளக் கூடாது. அல்லாஹ் யாருக்கு என்ன நாடுகிறானோ அதைக் கொடுப்பான். நாம் நம்மால் ஆன முயற்சியை மட்டும் விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுப்பான்.”

பிள்ளைகள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு, “ஓக்கே டாடி. நாங்கள் இனிமேல் பொறாமைப் பட மாட்டோம்” என்றான் கரீம். ஆமாம் என்று தலையை ஆட்டினாள் ஸாலிஹா.

-நூருத்தீன்

புதிய விடியல் - ஏப்ரல் 1-15, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<--முந்தைய அத்தியாயம்-->  <--அடுத்த அத்தியாயம்-->

<--நூல் முகப்பு-->

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Comments   

0 #1 Syed Ferozeji 2019-05-02 16:29
அருமையான கதை.
பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும்.
பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.
தொடரட்டும் உங்கள் பணி.
தங்கள் பணி மேலும் சிறக்க அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker