ஞான முகில்கள் முன்னுரை

Written by நூருத்தீன்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இஸ்லாம் நாலாபுறமும் பரவிய வேகத்தில் அது சந்தித்த சவால்கள் ஏராளம். பல தரப்பட்ட மக்கள், பலவித பழக்க வழக்கங்கள், இஸ்லாத்திற்கு அந்நியமான நம்பிக்கைகள் என்றிருந்த காலம். இறைவன் அருளிய குர்ஆன் மட்டுமே முழுவதுமாகத்

தொகுக்கப்பட்டு நூல் வடிவில் இருந்ததே தவிர, நபியவர்களின் ஹதீஸ்களுள் பல, அறியப்படாமல் இருந்தன. இஸ்லாமிய ஆட்சி சந்தித்துக் கொண்டிருந்த அரசியல் சவால்களும் கனிசம். குழப்பவாதிகளின் குழப்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியான பல களேபரங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய கல்வி ஞானத்தின்மீது தங்களது கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதில் ஆழப் புகுந்து கற்று, தேறி, School of thought எனச் சொல்லப்படும் இஸ்லாமிய வழித்துறைக்கு வித்திட்ட இமாம்களின் வாழ்க்கை பிரமிப்பான வரலாறு. பல இமாம்கள் இவ்வகையான வழித்துறைக்கு வித்திட்டிருந்தாலும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அஹ்மது (ரஹ்) ஆகியோர் அமைத்துத் தந்தவை மட்டும் வெகு அழுத்தமாக நிலைப்பெற்றுவிட்டன.

அந்த இமாம்கள் உருவாக்கிய வழித்துறையின் சட்ட நுணுக்கங்கள், அவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை ஃபிக்ஹ் துறையைச் சார்ந்த வல்லுநர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுடைய இறை பக்தி, தியாகம், ஞானம், அடக்கம், சிந்தனைப் போக்கு, உயர்குணம் போன்றவற்றை அவர்களது வரலாற்றிலிருந்து வாசகர்களுடன் பகிரும் முயற்சியே ‘ஞான முகில் கூட்டம்’.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாத்திற்கான சவால்களும் அரசியல் பிரச்னைகளும் குழப்பவாதிகளின் குதர்க்கமும் தொடரத்தான் செய்கின்றன. காலத்திற்கேற்ற வகையில் புதிய கோணத்தில் அவை இஸ்லாத்தைத் தாக்குகின்றன என்பதைத்தவிர, அவையெல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று புதிதாய் முளைத்த காளான்களல்ல என்பதற்கு வரலாறு சான்று. எனினும், நம்மைப் போன்ற சாமான்யர்களை அவை கடுமையாகத் தாக்கும்பொழுது நமது கவனத்தை எதில் ஒருமுகப்படுத்தலாம் என்பதற்கு அந்த இமாம்களின் வரலாற்றில் சில சூட்சமங்களும் அடங்கியுள்ளன என்பது என் கருத்து.

ஞான முகில் கூட்டத்தின் முதல் பகுதியாக இமாம் அபூஹனீஃபாவின் வரலாறு (ரஹ்) சமரசம் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அடுத்தடுத்த பகுதிகள் இனிமேல்தான் எழுத வேண்டும் இன்ஷா அல்லாஹ். இந்த முதல் பகுதியை நூலாக வெளியிடலாம் என்று சகோதரர் முஹம்மது அமீன் தெரிவித்தார். ‘அனைத்து பகுதிகளையும் முடிக்க வேண்டுமே,’ என்றதற்கு ‘அந்தந்தப் பகுதிகளை தனித்தனி நூலாக வெளியிடுவோம், வாசகர்களுக்கு எளிதாக இருக்கும், பின்னர் அவற்றைத் தொகுத்து முழு நூலாக வெளியிடலாம்,’ என்று ஆலோசனை அளித்தார். அது சரியெனத் தோன்றி இதோ இந்தச் சிறு நூல்.

கடலில் மூழ்கி முத்தெடுத்து வழங்குபவர்கள் விற்பன்னர்கள். அவர்கள் ஏராளம் உள்ளனர். நானோ, அந்தக் கடல் அலையில் இலேசாகக் கால்களை மட்டுமே நனைத்தவன். அவ்விதம் கால் நனைத்து விளையாடி மகிழும் சிறுவன் தன் மகிழ்ச்சியைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைப் போன்றதே எனது இந்த முயற்சி.

எனது எழுத்து ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும் என் மனைவிக்கும் இத்தொடரை வெளியிட்ட சமரசம் ஆசிரியருக்கும் சகோதரர் முஹம்மது அமீனுக்கும் நிலவொளி பதிப்பகத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இதிலுள்ள பிழைகளை மன்னித்து, உருப்படியானது ஏதுமிருப்பின் அதை ஏற்று அருள் புரிய அல்லாஹ் போதுமானவன். இப்படியொரு பணிக்கு எளியவன் என்னைத் தேர்ந்தெடுத்த அவனுக்கு கண்ணீர் மல்க என் நன்றி - அல்ஹம்துலில்லாஹ்.

-நூருத்தீன்

(ஞான முகில்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை)


நிலவொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந் நூல் அடுத்த வாரம் (29-11-2016) விற்பனைக்கு வருகிறது. இன்ஷா அல்லாஹ்.

தொடர்புக்கு:

நிலவொளி பதிப்பகம்
280/11, Quaidh-e-Millath Road, Triplicane, Chennai - 5.
Phone: 9443568079, 044-64554994
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

விலை: ரூ. 45/-


 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #3 Thoondil Books 2017-01-17 18:56
ஞானமுகில்கள் -1 புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9003120351
Quote
0 #2 katheeja nasik 2017-01-17 05:22
மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கு... எமக்கும் இப்புத்தகம் கிடைக்குமா?
Quote
0 #1 Haroon Rasheed 2016-11-30 05:42
Your translation of the word Islamic School of Thought" as Islamiya Vazhithurai" is commendable. Alhamdulillah.
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker