கரை கடந்த நட்பு

Written by நூருத்தீன்.

ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர், நிறைய எழுதுவார் என்று அண்ணன் ஜே.எம். சாலியை எனது பால்ய பருவத்திலிருந்து அறிந்திருந்தேன். தாருல் இஸ்லாம் குடும்பம் என்ற வகையிலும் என் தந்தை என்.பி. அப்துல் ஜப்பார் மீதும் அவர்களின் எழுத்தின்மீதும்

அண்ணன் வைத்திருந்த நன்மதிப்பினாலும் அவர்கள் இருவர் மத்தியிலும் அவ்வப்போது கடிதத் தொடர்பு இருந்து வந்தது. என் தந்தையின் நன்மதிப்பிற்கு உரியவர்களில் அண்ணனும் ஒருவர் என்று புரிந்துபோய் அவர் மீது இயல்பான மதிப்பும் அன்பும் எனது உள்ளத்துள் ஏற்பட ஆரம்பித்திருந்தது. பின்னர் முஸ்லிம் முரசு பத்திரிகையிலும் ஆனந்த விகடனிலும் அண்ணனின் எழுத்துகள் வெளிவரும்போது படிப்பது வழக்கம்.

பிறகு 95-ம் ஆண்டில்தான் தனிப்பட்ட முறையில் அண்ணனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது; என் தந்தையின் மரணத்தின் வாயிலாய். தந்தையின் பிரிவு மனத்தளவில் என்னை மிகவும் பாதித்துவிட, அவர்களின் இறுதித் தருணங்களையும் இழப்பையும் கடிதமாக எழுதி முதன் முதலாய் அண்ணனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டேன். அன்பும் நேசமும் சுமந்து வந்தது பதில். ஆறுதலையும் பழைய நினைவுகளையும் அதில் பகிர்ந்திருந்த அண்ணன், முஸ்லிம் முரசு பத்திரிகையில் எழுதிய இரங்கற் கட்டுரையில் எனது கடித வாசகங்களையும் இயல்பாய் இணைத்து விட்டிருந்தார்கள். அப்பொழுது எழுத்து அனுபவம் என்று பெரிதாய் ஏதும் அமைந்திராத எனக்கு வாசகர்களுடன் எனது ஆதங்கத்தை நானே பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்திவிட்டது அண்ணனின் கட்டுரை; மிகவும் இலேசானது மனது. அண்ணனின் நேசமும் பெருந்தன்மையும் எனது உள்ளத்தைத் தொட்ட அனுபவம் அது.

பின்னர் ஆனந்த விகடனில் எனது சிறுகதையொன்று பிரசுரமானது. இளைஞனுக்குரிய எண்ணவோட்டதுடன் மிகச் சாதாரணமாய் எழுதப்பட்டிருந்த அக்கதைக்கு அடுத்த பக்கத்திலேயே அண்ணனின் சிறுகதை. ஒப்பிடுகையில் எழுத்தின் தர வித்தியாசம் ஒருபுறமிருக்க கதைப் பொருளின் போக்கு மற்றொரு உண்மை உரைத்தது. அதற்கேற்ப சில நாட்களில் அண்ணனிடம் உரையாடும்போது -

“இந்த வயதில் இப்படியான கற்பனைகளும் இதைப் போன்ற கதைகளும் எழுதுவது இயல்புதான். மேலும் பல நல்ல சங்கதிகளை யோசிக்கலாம், எழுதலாம்...” என்று உறுத்தாமல், அதட்டாமல், அறிவுரை என்ற சாயலே இல்லாமல் எடுத்துரைத்தார்கள் அண்ணன். எவ்வித பிரதியுபகாரமும் எதிர்பாராத உள்ளார்த்தமான ஆலோசனை, நல்லுபதேசம் அது. தானே அறியாமல் அண்ணன் விதைத்த வித்து, பிறகு என்னுடைய எழுத்தின் திசையையே மாற்றிவிட்டது - முழு முற்றிலுமாய். இத்தகு ஆலோசனை, இதமான வழிகாட்டுதல் அளிப்பதற்கு பெருந்தன்மையான குணமும் நல்ல நோக்கமும் அமைந்திருக்க வேண்டும். அது வெகு இயற்கையாய் அமைந்துள்ளது அண்ணனிடம்.

நீண்ட ஆண்டுகளாய்க் கடிதம், தொலைபேசி மூலமாக மட்டுமே அண்ணனிடம் தொடர்பு இருந்து வந்தது. நான்காண்டுகளுக்கு முன்தான் சென்னையில் சமநிலைச் சமுதாயம் அலுவலகத்தில் அண்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையப்பெற்றேன். “இலக்கிய இதழியல் முன்னோடிகள்” என்ற பெயரில் இலக்கியப் பணிபுரிந்த பழம்பெரும் இஸ்லாமிய தமிழ் மொழி அறிஞர்களை இன்றைய புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் அருமையான கட்டுரைத் தொடர் அது.

நாங்கள் வாழ்வது உலகின் எதிர்முனையில் வெகுதூரத்தில் என்றாலும் என் மீது அண்ணன் உள்ளத்தால் கொண்டுள்ள அன்பு நெருக்கமானது. ‘தோழர்கள்’ என்ற எனது முதல் நூல் வெளியாகிறது, அதற்கு முன்னுரைபோல் ஏதாவது எழுதி வேண்டுமே என்று அண்ணனிடம் கேட்டபோது, உடனே என்னைப் பற்றிய அறிமுகத்தை எழுதித் தந்தார்கள் அண்ணன்.

இன்று அண்ணனின் கட்டுரையை சமரசத்தில் படிக்கும்போது அவரின் எழுத்துலக அனுபவமும் அறிவும் பக்குவமும் பெரிதும் வியக்க வைக்கின்றன. ஒரு மாணவனாய் நான் அவரிடம் கற்க வேண்டியதும் அறிய வேண்டியதும் நிறைய உள்ளன என்பதையே அது உணர்த்துகிறது.

-நூருத்தீன்


பிப்ரவரி 5, 2012 அன்று எழுதிய கட்டுரை. ‘தம்மைப் பற்றிய நூல் ஒன்று வெளிவருகிறது. பதிப்பாளர் பலரிடமிருந்தும் கட்டுரைகள் எழுதி, வாங்கி வெளியிட விரும்புகிறார்’ என்று அண்ணன் கேட்டிருந்தார்கள். அப்பொழுது எழுதி அனுப்பியது இது. அந் நூலின் பெயர் தெரியவில்லை. 


 

நூருத்தீனின் இதர கட்டுரைகள்

 

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker