கழிவுகள் கழிதலும்...

on .

கிகாலி (Kigali) ஆப்பிரிக்காவின் ருவாண்டா (Rwanda) நாட்டிலுள்ள நகரம். இங்கு ஜுலை 19, 2011 செவ்வாயன்று நடைபெற்ற ஆப்பிரிக்காஸான்

மாநாட்டில் (AfricaSan Conference) 42 மில்லியன் - அதாவது நாலு கோடி இருபது இலட்சம் - அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது பில் கேட்ஸின் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் (Bill & Melinda Gates Foundation). எதற்கு இவ்வளவு பெரிய நன்கொடை?

அங்குள்ள வசதியற்ற மக்களுக்குத் தகுந்த கழிப்பிட வசதி ஏற்படுத்தி, மனிதக் கழிவுகளைத் திறமையான முறையில் சேமித்து வெளியேற்றி, அதிலிருந்து மின்சாரமோ வேறு ஏதேனுமோ உற்பத்தி செய்ய, புதிது புதிதாய் ஏதாவது கண்டுபிடியுங்கள் என்பதற்காக.

உலகத்தில் 260 கோடி மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் அவதியுறுகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். அதன் விளைவு நாள்தோறும் அந்த அத்தனை மக்களின் கழிவும் திறந்தவெளி நிலங்கள், திறந்தவெளி மலக் குழிகள் (ஸ்லம்டாக் மில்லியனரில் பார்த்திருப்பீர்களே) என்று தேங்கிப்போகிறது.

சில ஊர்களில், வீடுகளில் கட்டப்பட்டுள்ள குழிகளிலிருந்து மலக்கழிவுகளைப் பெரிய ‘பீப்பாய்களில்’ (யார் தீர்க்கதரிசனத்துடன் இந்தப் பெயரை கண்டுபிடித்தது?) அள்ளிச்சென்று ஆற்றிலோ வேறு திறந்தவெளியிலோ கொட்டுவது ஒரு தொழிலாகவே நடைபெற்று வருகிறது. அதன் வீச்சமும் மீதமும் அந்தத் தொழிலாளர்களின் உடம்பில், உடைகளில்!

மனித குலம் ராக்கெட்டு, ஸாட்டிலைட்டு என்று வானத்தைப் பெருமையாக அண்ணாந்துப் பார்த்துக்கொண்டே சக மனிதன் மலம் அள்ளுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் அவலம்!

ஆப்பிரிக்காவில் உள்ள நைரோபியில் ஜோஸப் இருங்கு என்பவர் 50 பேர் கொண்ட குழுவாய் வண்டியில் பீப்பாய்களை ஏற்றி மலம் அள்ளிக்கொட்டி அதில் வரும் வருமானத்தில் தம் ஐந்து பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். "இதற்குமுன் மக்கள் ப்ளாஸ்டிக் பைகளில் உபாதையைக் கழித்து தெருவில் வீசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது என் பணியால் தெருவில் அசுத்தம் குறைந்துவிட்டது. ஆனால் நான் இவற்றைக்கொண்டு சென்றுகொட்டும் ஆறு கெட்டுவிட்டது" என்கிறார் அவர். நம் ஊர்களில் கிராமங்களில் இதைப்போல் பல ஜோஸப்புகள்!

இதன் நாற்றம், அருவருப்பு என்பதெல்லாம் ஒருபுறமிருக்க இதனால் விளையும் சுகாதாரக் கேடு இருக்கிறதே மக்களுக்கு மிகப்பெரும் சோதனை அது. ஆண்டுதோறும் ஒன்றரைக் கோடி குழந்தைகள் வயிற்றுப் போக்கு நோயால் இறந்து போகிறார்களாம். தகுந்த கழிப்பிடங்களும் சுகாதார ஏற்பாடுகளும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தால் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று யோசித்திருக்கிறார்கள் இந்த அறக்கட்டளையினர். அதனால் ஆப்பிரிக்காவில் உள்ள ஊர்களில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற இந்த நன்கொடை!

உலக மேம்பாட்டுத் திட்டங்களிலேயே கழிப்பிட சுகாதார திட்டம்தான் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத ஒன்று. எனவே அதற்கு உதவ முடிவெடுத்தோம் என்கிறார் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் இயக்குநர் ஒருவர்.

மூக்கைப் பிடித்துக்கொண்டு "நல்லது நடந்தால் சரி" என்று நாம் ஆமோதிக்கலாம். மேற்கொண்டு கிடைக்கும் சில புள்ளவிபரங்கள் நம் விரல்களை மூக்கிலிருந்து நீக்கி தலையைச் சொறிய வைக்கும். இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் உலக மக்கள் தொகையில் பாதியாம்!

ஏன் இவர்கள் திறந்தவெளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? காற்று வசதிக்காகவா? அப்படியெல்லாம் இல்லை. அறியாமை ஒருபுறம்; அதற்கான அடிப்படைவசதி கூட செய்துகொள்ள முடியாத வறுமை என்ற பெருஞ்சோகம் மறுபுறம். நாள்தோறும் 5 வயதுக்குக் குறைவான ஆயிரம் குழந்தைகளாவது இந்தியாவில் வயிற்றுப்போக்கு போன்ற சுகாதாரக் கேடான நோய்களால் இறந்து போவதாக ஐ. நா.வின் குழந்தைகள் தொண்டு நிறுவனம் அறிவிக்கிறது.

திறந்தவெளி கழிவுகள் கற்பனைக்கும அப்பாற்பட்ட சுகாதாரக் கேடு. பாதுகாப்பான குடிநீர் இன்றியமையாத மக்கள் தேவை. பாதுகாப்பான குடிநீருக்கு முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவு வசதிகள் இன்றியமையாத தேவை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. சுதந்தரம் அடைந்து ஆண்டுகள்தான் அறுபதுக்குமேல் ஆகின்றனவே தவிர இவை இரண்டும் இந்தியா இதுவரை எட்டாத மைல்கற்கள்.

இந்தியா 8 சதவிகித பொருளதார வளர்ச்சியை எட்டியது, 10 சதவிகித பொருளாதார வளர்ச்சியைத் தொட்டது; பிரகாசமான வளமான எதிர்காலம் கண்ணில் படுகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் போகும்போது அந்தப் பொருளாதார வளர்ச்சி என்ன பலனில் சேர்த்தி? வேண்டுமானால் அதிகாலையில் சாலையோரங்களிலும் வயல் வெளிகளிலும் அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருப்பவர் ஐஃபோனில் பேசிக் கொண்டே இணையத்தை வலம் வரலாம். அப்பொழுது தவறிப்போய் அதிலுள்ள கேமராவை ‘ஆன்’ செய்யாமல் இருக்கவேண்டும்.

ஆதங்கத்தில் "பில் கேட்ஸ் ஃபவுன்டேஷன் இந்தியாவை எப்பொழுது எட்டிப்பார்க்கும்?" என்று யாராவது கேட்கலாம். எதற்கு பில் கேட்ஸ்? நம் நாட்டில் அம்பானிகளுக்கும், கொம்பானிகளுக்கும் பஞ்சமா என்ன? கண்ணைக் கட்டும் கோடிகளில் ஊழல் புரியும் அரசியல்வாதிகளிடம் பணத்திற்கு என்ன குறை?

தேவையெல்லாம் அவர்கள் அடுத்தமுறை ஏஸி அறையில் அமர்ந்து இயற்கை உபாதையை நீக்கிக்கொள்ளும்போது இலேசான மனிதாபிமான சிந்தனை.

- நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 ஜூலை 2011 அன்று வெளியான கட்டுரை

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker