முள்ளும் நகரும்

Written by நூருத்தீன்.

அது டிசம்பர் 1945. அமெரிக்காவில், மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் (The Manhattan Project) எனும் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட சிகாகோ பல்கலைக்

கழக விஞ்ஞானிகள் கவலையுடன் ஒன்று கூடினார்கள். The Bulletin of the Atomic Scientists என்றொரு பத்திரிகை தொடங்கினார்கள்.

நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டனை வளப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு என்ன கவலை? எதற்கு பத்திரிகை? என்றால்,

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்கா ”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்று சகாயமாய் இரண்டு குண்டுகள் போட்டதே, அணுகுண்டு, அதனை உருவாக்க அமெரிக்கா உருவாக்கிய திட்ட்ததிற்குத் தான் ”The Manhattan Project” என்ற இந்த சங்கேதப் பெயராம். அமெரிக்கா தலைமையில் நடந்த இத்திட்டத்தில் கனடா, மற்றும் பிரிட்டனும் கூட்டு. அமெரிக்கா ராணுவம் தன் பொறுப்பில் இத்திட்டத்தை நிகழ்த்தியது.

திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்கா பட்டாசு வெடித்துக் கொண்டாடவில்லை. அந்தக் குண்டையே போட்டுக் கொண்டாடி விட்டார்கள். ஜப்பான் கை தூக்கி சரணடைய ஒரு வழியாய் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இந்த திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு குழுவினர் தான் அந்த சிகாககோ பல்கலை விஞ்ஞானிகள். தங்களின் பங்களிப்பு வெற்றியடைந்தாலும் ஏதோ கவலை வந்துவிட்டது.

வீட்டில் மனைவியர் திட்டினார்களோ, குட்டினார்களோ தெரியாது. பரிகாரம் முடியாது வேறு ஏதாவது செய்வோம் என்று கூடித் தான் அந்த பத்திரிகை ஆரம்பித்தார்கள். தாங்கள் கண்டுபிடித்து கட்டவிழ்த்து விட்ட விபரீதத்தின் கொடுமையை உலகுக்குச் சொல்லி எச்சரிப்பது அப்பத்திரிகையின் பணி; இரும்பு தின்று சுக்குக் கஷாயம் குடித்துப் பார்ப்பதைப் போல.

இதனிடையே, உலகப் போர் முடிந்தாலும் ஆள் தோட்ட பூபதியும், அயோத்திக் குப்ப வீரமணியும் போல தாதாக்கள் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நானா, நீயா என்று பனிப்போர் தொடங்கி விட்டிருந்தன. அவர்கள் ரேஞ்சுக்கு சைக்கிள் செயினும், சோடா பாட்டிலுமா சேர்ப்பார்கள்? சந்தைக்கு வந்துவிட்ட அணு ஆயுதம் சேர்க்க ஆரம்பித்தார்கள். தான் செத்தாலும் பரவாயில்லை, எதிரி பிழைக்ககக் கூடாது என்ற நல்லெண்ணம் தான்.

பத்திரிகை ஆரம்பித்த விஞ்ஞானிகளுக்கு கவலை அதிகமானது. பயந்து கிடக்கும் உலகத்தை எச்சரித்தாலும் சரி, மேலும் பயமுறுத்தினாலும் சரி என்று புதிய திட்டம் ஒன்று தீட்டினார்கள். அது தான் Doomsday Clock எனப்படும் ”உலக அழிவு நாள் கடிகாரம்”. ஓர் அடையாளச் சின்னம்.

நள்ளிரவு 12 மணி என்பது உலக அழிவு நேரம். அதற்கு இன்னம் எத்தனை நிமிடம் இருக்கும் என்பதை இந்தக் கடிகாரம் குறிப்பிடும். உலகிலுள்ள சூழ்நிலையைக் கொண்டு அது நிர்ணயிக்கப்படும். மாறிவரும் நிலைக்கு ஏற்ப நிமிடங்கள் குறையும், அதிகரிக்கும். இதனை உருவாக்கிய 1947ம் ஆண்டு அந்த நள்ளிரவுக்கு இன்னம் ஏழு நிமிடங்கள் இருக்கின்றன என்று நிர்ணயித்தார்கள்.

1953-ம் வருடம் அமெரிக்காவும் சோவியத்தும் கத்தியை சாணை தீட்டுவது போல் தங்களது அணு ஆயுதத் திட்டங்களை பரீட்சித்துப் பார்க்கத் துவங்கியதும் ரெண்டே நிமிஷம் தான் பாக்கி என்று சொல்லி விட்டார்கள். அதிர்ஷ்ட வசமாக வானிலை அறிக்கை போல் அது பொய்த்து விட்டது. பிறகு அந்தக் கடிகாரத்தின் முள்ளை மேலும் கீழுமாய் இது வரை 17 முறை தள்ளி வைத்து விட்டார்கள்.

இப்பொழுது ஜனவரி 14ந் தேதி பதினெட்டாவது முறையாக முள்ளை ஒரு நிமிடம் பின்னுக்கு இழுத்து நகர்த்தியிருக்கிறார்கள். நள்ளிரவுக்கு 6 நிமிடம் இருக்கிறதாம். மனித குலம் மேன்மையுற்றுவிடும் என்று விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எப்படியாயினும் நள்ளிரவை நோக்கி கடிகாரம் நகர்ந்து கொண்டிருப்பதால் இந்த விஞ்ஞானிகள் சில அவசர பரிந்துரைகள் சொல்கிறார்கள். அமெரிக்காவும். ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைத்தல், நிலக்கரியில் இயங்கும் தொழிற்கூடங்களில் உள்ள பழைய இயந்திரங்களை நீக்கிவிட்டு சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த புதிய இயந்திரங்கள் நிர்மாணிப்பது இப்படி நாம் படித்து ”உம்” கொட்டும் வகையில் பல. பேசிப் பேசி ஏதாவது சாதிக்கிறார்களா என்று நாம் செய்திகளை கவனித்துக் கொண்டிருக்கலாம்.

தோன்றியதைப் போல் இயற்கையாய் உலகம் அழியும். அது வரை பூமி ஆரோக்கியமாய் இருக்க வேண்டாமா? தனி மனிதனாய் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய முடியும். அதற்கு குறைந்த பட்சம் கரியமிலவாயு நம் பங்கிற்கு துப்பாமல் இருப்பது எப்படி என்று நாம் யோசித்தல் நலம்.

ஊர் கூடி முள்ளும் இழுக்கலாம், பின்னுக்கு.
-நூருத்தீன்

வெளியீடு: இந்நேரம்.காம்
தேதி: சனி, 16 ஜனவரி 2010

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker