ஷஃபான் மாத 3-ஆவது குத்பா

Written by பா. தாவூத்ஷா.

اَلْحَمْدُ للهِ الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

அருளாளனும் அன்புடையோனும் இறுதித் தீர்ப்பு நாளின் எஜமானனுமான றப்புல் ஆலமீனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. அந்த அல்லாஹ்வின் பேரருளும் பெருஞ் சாந்தியும் அழகிய ஆசியும் நம் சத்தியத் திருத் தூதர்  முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கே உரித்தாகுக. சர்வமங்களமும் அவர்களை நம்பியவர்களான உண்மை  மூஃமின்களுக்கே உண்டாகுக; அதன்பின்பு அன்பர்காள்! அறிந்துகொள்வீர்களாக.

தன்னை அடிபணிந்து முடிவணக்கம் புரிவதற்காக மானிட வர்க்கத்தையும் இம் மானிட கோடிகளின் சுகவாழ்வின் நிமித்தம் உலக சம்பத்தையும் அதியற்புதமாய்ச் சிருஷ்டித்தருளிய அல்லாஹுத்தஆலா இச் சர்வ சாதனத்தையுங் கொண்டு மானிடர்கள் இருவிதமான பரிபக்குவத்தையடைய வேண்டுமென்று ஏற்படுத்தியுள்ளான்; ஒன்று, அனுதினமும் அந்த ஆண்டவனைப் பக்தி பூர்வமாய்த் தொழுது துதித்து நாம் ஆத்மபரிசுத்தமும் பாரமார்த்திக நலனும் பெற்றுய்ய வேண்டுமென்பதாகும். மற்றது, இவையனைத்துக்கும் ஜீவாதாரமாக மிகமிக முக்கியமாய் வேண்டப்படும் உலக சாதனத்தைச் சேமித்து வைக்கவேண்டுமென்பதே யாகும். இவையே மன்பதைக்குரிய உஜ்ஜீவிப்பு முறைகளாகும்.

இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த உலக இன்பத்தை முற்றும் துறந்து, அப் பரமாத்வாவையே அந்தியும் சந்தியும் துதித்து முற்ற முற்றிய ஞானியாய் இவ்வுலகத்தையே வெறுத்துவிட வேண்டுமென்பது அல்லாஹ் ரஸூலுக்குப் பிரியமில்லாத போதனையேயாகும். பிரபஞ்சத்தையும் மனைவி மக்களையும் துறந்து துறவியான சன்னியாசம் பூண்டு கொள்வது நம் மார்க்கத்தில் ஆகாத கருமமாகும். இதனால் தான், “இஸ்லாத்தில் சன்னியாசம் கிடையாது,” என்றொரு மேலான வாக்கியமும் காணக்கிடக்கின்றது. அல்லாஹுத் தஆலா இப் பிரபஞ்சத்தை மானிட கோடிகளின் இன்ப சுகத்திற்காகவே படைத்திருக்கிறானல்லது, வீண் மாயா விளையாட்டுக்காகவன்று.

மேலும், “இவ்வுலகத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், உலக வாழ்வின் சுகசம்பத்துக்களும் இதன் இனிய வனப்புக்களுமாகும். அல்லாஹ்வினிடம் இருப்பவை மகாமேலானவையும் என்றும் எஞ்சியிருக்கக் கூடியவையுமாகும். இவைகளை நீங்கள் உய்த்துணர்ந்து பார்க்க வேண்டாமா?” (குர்ஆன் 28:60) என்று அல்லஹுத் தஆலா தன் திருக் குர்ஆனில் உலக வாழ்வின் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றான். எனவே ஒவ்வொரு மனிதனும் பரம்பொருளாகிய அல்லாஹ்வுக்கே வழிபட்டுச் சிரஞ்சாய்த்து ஐங்காலமும் தொழுது வணங்குவதோடு, தன் மனைவிமக்களையும் தன்னையும் காப்பாற்றுவான் வேண்டிப் பொருள் தேடிச் சேமிப்பதும் முக்கியம் அவசியமான ஒரு நற்காரியமே யாகும். ஒவ்வொருவனும் யாசகனாகவோ சோம்பேறியாகவோ இருந்து விடாமல், ஆண்டவன் கொடுத்துள்ள கை கால்களை நன்கு அசைத்துப் பாடுபட்டு, ஏதாவதொரு தொழிலைச் செய்துதான், விறகு வெட்டி விற்றேனும், ஜீவனம் செய்ய வேண்டுமென்று நம் நபிகள் நாயகமும் (ஸல்) கூறியிருக்கிறார்கள். இதற்காக நபி பெருமானாரும் இருமுறை சிரியாவுக்குச் சென்று வியாபாரம் செய்து ஜீவனோபாயம் தேடினார்கள். சஹாபாக்களும் தச்சுவேலை, கருமான்வேலை, நெசவுவேலை, விவசாயம், வியாபாரம் முதலிய பற்பல துறைகளிலும் ஈடுபட்டுத் தங்கள் வாழ்நாட்களைச் செவ்விதாய் நடத்தியுள்ளார்கள். இதுவே ஆண்டவன் கற்பித்துள்ள இயற்கை விதியாகும். ஆண்டவன் மீது நம்பிக்கை மாத்திரம் ”தவக்கல்” என்று மனத்துள் எண்ணி வைத்து விட்டு, நம் அவயவத்தை அசைத்துப் பாடுபடாமலிருந்து விட்டால், நமக்கு ஆகாரம் வானத்தினின்று தானே வந்து வீழ்ந்து விடுமோ?

இப் பிரபஞ்சத்தில் காணப்படும் ஒவ்வொரு புழூ பூச்சி ஐந்து பறவை மிருகம் யாவும் ஊர்ந்து, நகர்ந்து, பறந்து ஓடி உழைத்தே தத்தம் காலக்ஷேபத்தை நடத்தி வருகின்றன. எந்த ஓர் எறும்பும் வீணே வேலை செய்யாமலிருப்பதைக் காணமாட்டீர்கள். மானிடனும் தன் சக்திக்கேற்றவாறு ஏதேனுமொரு தொழிலையோ வர்த்தகத்தையோ பற்றிக்கொண்டு அவசியம் பாடுபட்டுப் புசிக்கத்தான் வேண்டும். எனவே சதா பிச்சையெடுத்து ஜீவனத்தை நடத்துவதென்பது மகா கேவலமான நீசத்தனமுள்ள காரியமேயாகும். ஆனால், யாசகம் புரிய அருகதையுடையவர் நொண்டி, கூன், குருடு, தள்ளாத கிழவர் முதலியவர்களே போலுள்ள சக்தியற்றவற்றவர்களே யாவர்.

ஒருமுறை நம் நாயகமவர்களிடம் (ஸல்) ஒருவன் வந்து பிச்சை கேட்க, அவனிடமிருந்த சாமானை விற்கச் செய்து அவனுக்கொரு கோடாலியை வாங்கித்தந்து, தாங்களே அதற்கொரு கைப்பிடியும் போட்டுக் கொடுத்துக் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்றுப் பிழைத்து வாழும்படி கட்டளை யிட்டார்கள். இதுதான் இஸ்லாத்தின் கட்டளை. பெரிய வியபாரம், அழகிய கைத்தொழில் முதலியவை உலக சுகத்துக்கு இன்றியமையாதனவாகும்.  நம் முஸ்லிம் சமூகம் இதுகாலை ஏனை ஜாதியர்களைக் காட்டினும் கீழ்த்தரத்திலும் ஏழ்மைத் தனத்திலும் அடிமை வாழ்விலுமே அடங்கிக் கிடப்பதற்குக் காரணம், வர்த்தகம் கைத்தொழில் முதலியவற்றில் நம் சாரார் நல்ல அபிவிருத்தியும் போதிய முன்னேற்றமும் அடையாமலிருப்பதே யாகும்.

இவ் விஷயங்களில் அதிகமான முயற்சியெடுத்துக் கொள்ளும் அன்னிய நாடுகள் நம் நாட்டைக் காணச் சிறந்திருப்பதற்கு அவரவர்களின் வாணிப விவசாயப் பேரூக்கமே காரணமாகும். நம் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு சாராரும் இவ்வாறே பாடுபட்டுப் பணந் தேடுவார்களாயின், இவர்களும் ஏனைத் தேயத்தார்களைப் போல மேன்மையடைவதுடன் ஜீவனோபாயத் தொல்லையில் அதிகம் கவலை கொள்ளாமல் தீனுடைய விஷயத்தில் பெரிய பெரிய பக்திமான்களாய் இருப்பார்கள். போதிய ஐசுவரியம் இருந்தால்தான், நம்மீது கடமையான ஜகாத்தென்னும் தான தர்மம் செய்வதும் நெடுந்தூரம் சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவதும் ஏழை எளியார்களின் வறுமையைப் போக்கி அவர்களையும் நம்மைப் போலாக்கி விசுவ சகோதரத் தன்மையை உண்டாக்குவதும் சிறுவர் சிறுமியருக்குக் கல்விச்சாலைகளை  ஸ்தாபிப்பதும் அநாதச் சாலைகளை நிறுவி நிர்வகிப்பதும் மற்றும் பற்பல தர்ம கைங்கரியங்களைப் புரிவதும் இயலக்கூடிய காரியமாகும்.

அல்லாஹ்வைத் திரிகரண சுத்தியோடு துதித்து வணங்குவதற்கு மனத்தில் யாதொரு விசனமும் இல்லாமலிருத்தல் வேண்டுமல்லவா? நாம் போதிய செல்வமுடையவர்களாயிருந்து, அதிகமான வயிற்றுத் தொல்லை இல்லாமலிருந்தால்தான் அது முடியும். எனவே, முஸ்லிம்காள்! நீங்கள் தீன், துன்யா இரண்டிலும் நல்வாழ்வும் திருவருளும் பெறவேண்டுமாயின், அல்லாஹ் ரஸூலுக்கு (ஸல்) அனுதினமும் அடிபணிந்து நடப்பதோடு, உலக சாதனத்தையும் அதிகம் தேடிக்கொள்ளுங்கள். இது வறுமைத் துன்பத்தை விட்டு நீக்கும் வியாபார முறையாகும்.

நமக்கு ஆண்டவன் குர்ஆனில் மற்றொரு வியாபாரத்தையும் கற்பிக்கின்றான்; அதுதான் நம் ஆத்மாவை இறுதிக்கால நரக வேதனையை விட்டு மீட்பிக்கக் கூடியது. அஃதாவது, ”ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள் ! உங்களை மா கொடிய வேதனையை விட்டுக் காப்பற்றக்கூடிய ஒரு வியாபாரத்தைப்பற்றி யான் அறிவிக்கட்டுமா? (அது யாதெனின்) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது திருத்தூதரின் மீதும் நன்னம்பிக்கை கொள்வீர்களாக. மேலும், உங்கள் ஆன்மாக்களைக் கொண்டும், உங்கள் பொருள்களைக் கொண்டும் ஆண்டவன் பாதையில் (ஜிஹாத்) பெரு முயற்சி செய்வீர்களாக: நீங்கள் அறிந்தவர்களாயிருப்பீர்களாயின், இதுவே உங்களுக்கு மகா மேலானதாகும்” -- (குர்ஆன் 61:10,11),

இந்த ஆத்மார்த்த வர்த்தகம்தான் நம்மை ஆண்டவனது சன்னிதானதுக்கும் சுவர்க்கலோகத்துக்கும் அழைத்துச் செல்லும். இதுவே சிறந்த “இபாதத்” தாகும். எனவே, அல்லாஹ்வுக்கு அனுதினமும் வணக்கம் புரிந்து அவனருள் பெறுவீர்களாக. எல்லாம் வல்ல அல்லாஹ் இகபரத்துக்குரிய நற்சாதனத்தை நமக்கருள்வானாக. “ஏ எங்கள்  ரக்ஷகனே! எங்களுக்கு இவ்வுலகின் நன்மைகளையும் இறுதி வாழ்வின் நலன்களையும் அளித்தருள்வாயாக.” ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍِ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَِ


بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: www.the-faith.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker