பத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்

Written by பா. தாவூத்ஷா on .

இப்பொழுது சமீப காலமாக இந்நாட்டில் நாளொரு பத்திரிகையும், பொழுதொரு பேப்பருமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் சில தம்முடைய

உரிமையை யறியாமல் தாறுமாறாக நடந்து கொள்வதை நோக்க மெத்த வருத்தமுண்டாகிறது. ஆதலின் இவர்களின் நன்மையையுன்னி இதன் கீழ்ச் சில முக்கியமான அம்சங்களைப் பற்றி மேற்கோள் காட்டுவோம்.

ஓரிகான் சர்வகலாசாலையைச் சேர்ந்த மிஸ்டர் சி.வி.டைமெண்ட் என்பவர் சொல்வதாவது: “பத்திரிகைத் தொழிலில் கபட வேடதாரிக்கும், உண்மையைத் திரிப்பவனுக்கும், முன்பின் உளறும் புரட்டனுக்கும், உண்மையை ஒளிப்பவனுக்கும், அயோக்கிய எண்ணமுள்ளவனுக்கும் கிஞ்சித்தும் இடமில்லை. தேச ஜனங்கள் முன்னேற வேண்டுமாயின் பத்திரிகையின் விஷயத்தில் முழுச்சுதந்திரம் கொடுக்கப்படுதல் வேண்டும்.”

இன்னும் “ஒரிகான் கோடு” என்னும் பததிரிகையில் இவ்வாறு காணப்படுகிறது: “ஒரு பத்திரிகையானது சுயநல எண்ணத்துடன் நடத்தப்படுமாயின், அது தனது கடமையில் வெற்றி பெற்றதாகக் கூறுவது முடியாது.”

இன்னும் டீன் வால்டர் வில்லியம்ஸ் என்பவர் தமது நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “தெளிவான சிந்தனையும் தெளிவான சொற்பொழிவும் மெய்யான விஷயமும் பட்சபாதமற்ற தன்மையுமே பத்திரிகைத் தொழிலுக்கு அவசியம் வேண்டத்தக்கன. தாம் மெய்யென்று நம்பியதையே ஒருவர் தம் பத்திரிகையில் எழுதல் வேண்டும். பொது நன்மையின் பொருட்டு அல்லாமல் சமாசாரத்தை மறைப்பது ஒரு சமாதானமற்ற செய்கையாகும். தனது சொந்த அபிப்பிராயத்தை வேறு பத்திரிகைகளில் அன்னார் பிரசுரிப்பதில்லை யென்னும் காரணத்தினால் ஒரு சொந்தப் பத்திரிகையை நடத்த முயல்வது சிலாக்கியமான காரியமன்று.”

ஆனால், பத்திராசிரியர்கள் ஒழுகவேண்டிய முறைதான் இவ்வாறாகக் கூறப்படுகிறதே யல்லாமல், ஒழுகிவரும் முறையானது இவ்வாறு காணப்படவில்லை.

(“தாருல் இஸ்லாம்” நவம்பர், 1924.)

e-max.it: your social media marketing partner